சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

பங்கு போட நீ யார்?

Added : மார் 18, 2017 | கருத்துகள் (3)
Advertisement
பங்கு போட நீ யார்? Ramanujar Download

'உண்மையாகவா! உடையவர் வந்து கொண்டிருக்கிறாரா! சுவாமி நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். பல்லாண்டுக் காலமாக திருவரங்கத்தைத் தாண்டாத உடையவர் இன்று திருமலைக்கு வருகிறார் என்றால் அதை நாம் ஒரு திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்!' என்றான் அனந்தன்.
பெரிய திருமலை நம்பி சிரித்தார். 'உடையவர் திருவரங்கத்தைத் தாண்டவில்லை என்று உனக்கு யார் சொன்னது? சிறிது காலம் அவர் திருவெள்ளறைக்குச் சென்று தங்கியிருக்கிறார். தெரியுமா உனக்கு?' 'இது தெரியாதே. எனக்கு இது செய்திதான்.' 'அநேகமாக நீ அப்போது உடையவரிடம் சேர்ந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். அவரை எப்படியாவது கொன்று தீர்த்துவிட வேண்டுமென்று அரங்க நகரில் சில பேருக்குத் தீராத ஆசை. பிட்சை உணவில் விஷம் வைத்துப் பார்த்தார்கள். கோயிலுக்குள்ளேயே வைத்து முடித்துவிட வேண்டும் என்று கூடிப் பேசினார்கள். அதற்கும் சில முயற்சி எடுத்துப் பார்த்தார்கள்.''ஐயோ, இதென்ன கொடுமை?''அரங்கமாநகரமாக இருந்தால் என்ன? அயோக்கியர்கள் எங்கும் உண்டு.''பாகவத உத்தமரான உடையவரைப் போய் எதற்குக் கொல்ல நினைக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை சுவாமி.''அரங்கனுக்கு அனைவரும் சமம். உடையவருக்கு அதுதான் தாரக மந்திரம். இது பிடிக்காத சாதி வெறியர்கள் வேறென்ன செய்ய நினைப்பார்கள்? ஆனால் வில்லிதாசர், அகளங்கன் மூலம் ஏதோ ஏற்பாடு செய்து உடையவரை வெள்ளறைக்கு அழைத்துச் சென்று விட்டார்.' 'அப்படியா?''ஆனால் ஒன்று. திருவெள்ளறைக்குப் போனாலும் அந்த ஊரை நம்மவர் திருவரங்கமாக ஆக்கிவிட்டார்.அழகிய மணவாளன் விக்கிரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, ஊருக்கு ஒரு ஏரி வெட்டி, நந்தவனம் அமைத்து...'சட்டென்று அனந்தன் பரவசமாகிப் போனான். 'உடையவருக்கு நந்தவனங்கள் மீதுதான் எத்தனை விருப்பம்!''ஆம் அனந்தா! பக்தி செய்ய எளிய வழி பூஜைகள். பூக்களின்றி பூஜை ஏது? தவிரவும் மலர்களில் நாம் நம் மனத்தை ஏற்றி அவன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். நம்மை அவன் ஏற்று அழகு பார்க்க இதைக்காட்டிலும் நல்ல உபாயமில்லை.'பேசியபடியே அவர்கள் நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அனந்தன் தனியொருவனாக உருவாக்கிய நந்தவனம். ராமானுஜ நந்தவனம் என்றே அதற்குப் பெயரிட்டிருந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பூக்கள், பூக்கள், பூக்கள் மட்டுமே. புவியின் பேரெழில் அனைத்தையும் திரட்டி எடுத்து வந்து உதிர்த்தாற்போல அவை மலையில் மலர்ந்து நின்றன. காவல் அரண்போல் சுற்றிலும் மரங்கள். நீர் பாய வசதியாக வாய்க்கால் ஒன்று. நீருக்கு ஆதாரமாக அருகிலேயே ஏரியொன்று.அனந்தன் அந்த ஏரியை வெட்டிக் கொண்டிருந்தபோது அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவன் வெட்டுவான். அவள் மண்ணை அள்ளிச் சென்று கொட்டுவாள். யாராவது உதவிக்கு வருகிறேன் என்றாலும் ஒப்புக்கொள்ள மாட்டான். 'ஐயா, இது என் ஆசாரியர் எனக்கு இட்ட பணி. இந்த நந்தவனத்தையும் இதன் நீர் ஆதாரத்தையும் நானே என் கைகளால் உருவாக்குவதே சரி.''அட, புண்ணியத்தை நீயே வைத்துக் கொள்ளப்பா.கர்ப்பிணிப் பெண் இப்படி மண் சுமந்து கொட்டுகிறாளே, அவளுக்கு உதவியாகவாவது நாங்கள் கூட வருகிறோமே?''எங்களைத் தொந்தரவு செய்யாமல் வேலை பார்க்க விட்டால் மொத்தப் புண்ணியத்தையும்கூட உங்களுக்கே தந்து விடுகிறோம். வேலையில் மட்டும் பங்கு கேட்காதீர்கள்.'தீர்மானமாகச் சொல்லிவிடுவான்.ஒருநாள் அனந்தனின் மனைவிக்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. மண் சுமந்து நடந்ததில் மூச்சிரைத்தது. சோர்ந்து அமர்ந்த நேரம் ஒரு சிறுவன் அவளிடம் வந்தான். 'அம்மா, நீங்கள் இந்த இடம் வரை மண்ணைச் சுமந்து வாருங்கள். இங்கிருந்து நான் கொண்டு போய்க் கொட்டி விடுகிறேன். எதற்கு இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்?''ஐயோ அவருக்குத் தெரிந்தால் சத்தம் போடுவாரே? இந்தப் பணியில் இன்னொருவரைச் சேர்க்கவே கூடாது என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.''நான் உங்களுக்கு உதவ வரவில்லையம்மா. உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உபகாரமாகத்தான் இதனைச் செய்கிறேன்.'அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. உண்மையில் யாராவது உதவினால் நன்றாக இருக்குமே என்று ஏங்கத் தொடங்கியிருந்தாள். அத்தனை அலுப்பு. அவ்வளவு களைப்பு.எனவே அனந்தன் ஏரி வெட்டிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து ஒரு பத்தடி திருப்பம் வரை மண்ணைச் சுமந்து வந்து அந்தச் சிறுவனிடம் கொடுப்பாள். சுமையை அவன் வாங்கிக்கொண்டு போய் ஓரிடத்தில் கொட்டிவிட்டு வந்து கூடையை மீண்டும் தருவான்.இப்படியே நாலைந்து நடை போனது. அனந்தனுக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. மண்ணைக் கொண்டு கொட்டிவிட்டு வர இன்னும் நேரம் பிடிக்குமே? இவள் எப்படி இத்தனை சீக்கிரம் இந்த வேலையைச் செய்கிறாள்?சந்தேகத்தில் அடுத்த நடை அவள் மண்ணெடுத்துப் போனபோது சத்தமின்றிப் பின்னால் போனான். பாதி வழியில் அவன் மனைவியின் தலையில் இருந்த சுமையை ஒரு சிறுவன் வாங்கிக்கொண்டு ஓடுவதைப் பார்த்துவிட்டான்.'அடேய் பொடியனே, நில்!' என்று உரக்க ஒரு கூப்பாடு போட்டான்.திரும்பிப் பார்த்த சிறுவன் நிற்காமல் ஓடத் தொடங்கினான்.'டேய், நீ இப்போது நிற்கப் போகிறாயா இல்லையா? நீ செய்வது பெரிய தவறு. எங்கள் பணியில் பங்கு போட நீ யார்?'அவன் திரும்பிப் பார்த்து சிரித்தான். மீண்டும் ஓட ஆரம்பித்தான்.அனந்தனுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. பொடிப்பயல் என்ன ஓட்டம் ஓடி எப்படி ஆட்டம் காட்டுகிறான்? இன்று உன்னை என்ன செய்கிறேன் பார். 'டேய், மரியாதையாக நின்றுவிடு. எனக்குக் கோபம் வந்தால் உன்னால் தாங்க முடியாது!' 'உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது அனந்தா! முடிந்தால் என்னைப் பிடி.' அவன் இன்னும் வேகமாக ஓடினான். விடாமல் துரத்திக்கொண்டு ஓடிய அனந்தனுக்கு மூச்சிரைத்தது. ஒரு சிறுவனிடம் தோற்கிறோம் என்ற எண்ணம் கடும் கோபத்தை அளித்தது. சட்டென்று குனிந்து ஒரு கல்லை எடுத்தான்.'டேய், பொடியனே!'ஒரு சத்தம். ஓடிக்கொண்டிருந்த சிறுவன் சிரித்தபடி திரும்ப, அனந்தன் கல்லை அவன்மீது விட்டெறிந்தான். சிறுவனின் முகவாயில் பட்டு கல் விழுந்தது. அவன் அப்போதும் சிரித்தபடி ஓடிப் போயேவிட்டான்.களைத்துப் போய் திரும்பிய அனந்தன் மறுநாள் கோயிலுக்கு மாலை கட்டி எடுத்துச் சென்றபோது பெருமாளின் முகவாயில் ஒரு வெட்டுக்காயம் இருப்பதைக் கண்டான். ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
20-மார்-201707:17:21 IST Report Abuse
Manian இந்த கருத்து தாழ்வு,அடிமை மனப்பான்மையால் வருகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அடிபட்ட கல்லை தேடுவது கடினம். எனவே சேவிக்க கல்லு கிடைக்க வில்லை என்றால் ஒரு கடப்பாறையை எடுத்து இதுவே எறியப்பட்டது என்று அந்க்கால மணியக்காரர் சொல்லி இருக்கலாம் அல்வா?என்ன நடக்கிறது என்பன்,கடப்பாரை கனத்துடன் போவானா?. அதுவும் நம்பியின் அடிமை என்பன், மண்ணு வெட்டிக் கொண்டிருந்தவன் கை களைத்து போயிருக்கும் போது, கடப்பாரையை வீசும் பலம் வருமா, ஒரு சிறு பையனை கொலை செய்யவருமா? அதுவும் அவன் ஒரு பிராமணணாக,ராமானுஜச தாசனாக இருந்தவன் கடைப்பாரையை வீசி கொல்வானா? அடுத்ததாக, தமிழ் இலக்கணப்படி,எழுவாய் ஆண்பால் விகுதி பெற்று -ன் என்று வநதால், பயனிலையும் ஆண்பால் விகுதி -ன் என்று தான் முடியும்.எனவே ஆண்டா-ன் வந்தா-ன் என்பது சரியே. ராமானஜனாக இருக்கும் போது இளமையில் ராமானுஜன் கொவிலுக்குப் போனான் என்ருதான் சொன்னார்களே தவிர, பின்னாளில் அவர் மகானாக வருவார் என்பதை திருக்கச்சி நம்பி தூரதிருஷ்டியால் கண்டு, 'ராமானுஜரே நீர் நாளை வருவீர்' என்று ஏன் சொல்லவில்லை. உம்ஐப் பொருத்தவரை,பொறாமையால் ஆசிரியரை குறை சொல்லாதீர்(உமக்கு -ர் விகுதியுடன் மரியாதை தந்ததை பாரீர்).சரித்திர நாவல் எழுதவில்லை. நீங்களே அதை எழுதி உங்கள் சிலவில் பதிப்பிக்கலாமே பா. ராகவன் செய்வது பெரிய புண்ணிய காரியம்.ராமானுஜரை நேரில் காண்பது போல் உள்ளது ஆஸ்திக தொண்டு. நீரோ,ராமானுஜர் மேல் பொறாமை கொண்டு அவரை விஷம் கொடுத்து கொல்லப் பார்த்த வடகலைகலைகளைப் போல் பிதற்ற வேண்டாம். அது ஒரு பக்தனுக்கு செய்யும் அபசாரம். திருவல்லி கேணி பார்த்தசாரதி உம்மை மன்னிக்க மாட்டார்.பெருந்தன்மையுடன் ஒதுங்கி இரும்.அக்காரவடிசில் கல் இருப்பது சரியல்ல.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
20-மார்-201711:56:12 IST Report Abuse
Darmavanஇந்தக் மாதிரி தனிப்பட்டவர் விமர்சனத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-மார்-201709:39:50 IST Report Abuse
Darmavan அனந்தாழ்வான் 'வந்தான்/போனான்' இன்னும் இந்த ஏக வசனம் நிறுத்தப்படாதது வேதனை. 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெரியோர்களுக்கு/பாகவதருக்கு நாம் தரும் மரியாதை.மேலும் இந்த கதை ஒரு தொடர்ச்சி இல்லாமல் கிளைக்கு கிளை தாவும் வகையில் உள்ளது. மேலும் இதில் அனந்தான் பிள்ளை தன் கடப்பாரையை எடுத்து வீசியகத்தான் வரலாறே தவிர கல்லை அல்ல. இன்றும் அந்த கடப்பாரையை திருமலை கோபுர வாசலின் உள் தொங்க விட்டிருப்பதை நாம் சேவிக்கலாம். திருமலை அப்பன் இந்த நிகழ்ச்சியின் போது கோயிலை அப்பிரதக்ஷிணமாக ஓடினார். இது இன்னும் விழாவாக நடைபெறுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X