சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

அன்பின் பரிசு

Added : மார் 22, 2017 | கருத்துகள் (1)
Advertisement
அன்பின் பரிசு Ramanujar Download

பூத்துப் பரந்திருந்தது நந்தவனம். பசுமைக்கு இடப்பட்ட வண்ணமயமான கிரீடங்களாகக் காண்கின்ற இடமெல்லாம் பூக்கள். அது மலையின் மகிழ்ச்சி. அனந்தனின் பக்தியின் விளைவு.
'சுவாமி, இந்த நந்தவனத் துக்குத் தங்கள் பெயரைத்தான் இட்டிருக்கிறேன். பக்கத்திலேயே சிறியதாக ஏரியொன்றையும் வெட்டியிருக்கிறேன். எனக்கு நீர் ஆதாரம் என்றால் இந்த வனத்துக்கு நீரே ஆதாரமல்லவா?'ராமானுஜர் புன்னகை செய்தார். 'அனந்தாழ்வான், உன்னை வளர்த்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன். உன் மனம் போலவே மலர்ந்திருக்கிறது இந்த நந்தவனம். பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் தவறாது நடக்க இது என்றென்றும் மலர்ந்து கிடக்கட்டும்!' என்று ஆசீர்வதித்தார்.அன்று மதியம் உண்டு முடித்து, சிறிது ஓய்வெடுத்த பின்பு, 'கிளம்பலாமா?' என்றார் ராமானுஜர்.'அடடா, திவ்யதேசத்துக்கு வந்தால் மூன்று நாள்களாவது அங்கு தங்கியாக வேண்டும் என்பது சாஸ்திரம். இன்றே கிளம்பக்கூடாது ராமானுஜரே!' திருமலை நம்பி தடுத்தார்.'தங்க வேண்டும்தான். ஆனாலும் வானவர்களும் முனி சிரேஷ்டர்களும் வந்து உலவுகிற இடம் இது. கால் வைக்கிற கணமெல்லாம் உறுத்துகிறதே.''இருக்கட்டும் உடையவரே. ஆதிசேஷனின் அம்சமான தாங்கள் எந்த வானவருக்கும் கீழானவரல்லர்.''அபசாரம். திருமலையில் உள்ள அனைவரிலும் சிறியவன் என்று நீங்கள் உங்களைச் சொல்லிக் கொண்டீர்கள். அப்படியென்றால் உங்கள் மாணவனாகிய நான் யார்?''அதெல்லாம் முடியாது. நீங்கள் இன்றே புறப்படுவது நடக்காது. மூன்று நாள்களாவது இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்!' என்று தீர்மானமாகச் சொன்னார் பெரிய திருமலை நம்பி.வேறு வழியின்றி ராமானுஜர் மூன்று தினங்கள் திருமலையில் தங்கினார். 'சுவாமி, நான் இங்கே வந்ததன் நோக்கம் அனந்தாழ்வானின் நந்தவனத்தைக் கண்டுசெல்வதும் திருவேங்கடமுடையானைச் சேவித்துச் செல்வதும் மட்டுமல்ல.''பிறகு?''நமது ஆசாரியர் ஆளவந்தாரிடம் இருந்து ராமாயணத்தை முற்று முழுதாகக் கற்றுத் தேர்ந்தவர் தாங்கள். தங்களிடம் ராமாயணப் பாடம் கேட்க வேண்டுமென்பது என் விருப்பம்.'பெரிய திருமலை நம்பி புன்னகை செய்தார்.'பெரிய நம்பியிடம் பாடம் கேட்டேன். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டேன். திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பயின்றேன். திருமாலிருஞ்சோலைக்குப் பெருமை சேர்க்கும் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி அறிந்தேன். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவரான தங்களிடம் ராமாயணமும் பயின்றுவிட்டால் பிறவிப் பயனடைவேன்.'சிறு வயதில் ராமானுஜருக்குச் சில பாசுரங்களும் சுலோகங்களும் கற்றுத் தந்தது பெரிய திருமலை நம்பியின் நினைவுக்கு வந்தது. எத்தனை வருடங்கள் கழித்துக் காலம் மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறது! இன்று ராமானுஜர் அன்று கண்ட இளையாழ்வான் அல்ல. துறவிகளின் அரசரெனப் போற்றப்படுகிறவர். வைணவ தரிசனத்தை வழிநடத்த இவரே சரியென ஆளவந்தார் தேடிப் பிடித்து அடையாளம் காட்டிப் போனது, சீடர்களான தங்களில் ஒருவரையல்ல. ராமானுஜரைத்தான். அது எத்தனை சரி என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நுாறு நுாறாக, ஆயிரம் ஆயிரமாக, ஊர் ஊராக, கிராம நகரங்களாக மக்கள் அவரை அண்டித் தாள் பணிந்து கொண்டிருக்கிறார்கள். மன்னர்கள் வரிசையில் வந்து வணங்கி ஏற்கிறார்கள். அவர்கள் தத்துவம் முற்றிலும் புரிந்து வருகிறவர்கள் அல்லர். இம்மனிதர் சத்தியமன்றி இன்னொன்றைப் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் வருவது. இது அனைவருக்கும் சாத்தியமல்ல. வேறு யாருக்குமே சாத்தியமல்ல. அவர் ஒரு சக்தி. ஒரு பெரும் விசை. இது நிகழவேண்டும் என்று இருக்கிறது. அதனால் நிகழ்கிறது.பெரிய திருமலை நம்பி அன்போடு ராமானுஜரின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். 'ராமாயணம்தானே? தொடங்கி விடலாம்!'மூன்று நாள்களுக்குப் பிறகு மலையடிவாரத்தில் இருந்த பெரிய திருமலை நம்பியின் இல்லத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.'கோவிந்தப் பெருமானே!' நம்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.'சுவாமி!' என்று ஓடி வந்த கோவிந்தன், உடையவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்.ராமானுஜர் புன்னகையுடன் நெருங்கி, 'எப்படி இருக்கிறீர் கோவிந்தப் பெருமானே?''ஐயோ அபசாரம்! தாங்கள் என்னை இப்படி மரியாதையாக அழைப்பது அடுக்காது.''வயது முதல் ஞானம் வரை அனைத்திலும் நம் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரான நம்பிகளே தங்களை அப்படி அழைக்கிறபோது நான் மட்டும் வேறெப்படி அழைப்பேன்?' என்றார் ராமானுஜர்.விந்திய மலைக்காட்டில் கடைசியாகக் கண்ட கோவிந்தன். அண்ணா அண்ணா என்றுஎன்றும் எப்போதும் பின்னால் வந்தவன். சட்டென்று ஒருநாள் காணாமல் போய்விட்டான். ஆனால் ராமானுஜர் அவனை என்றைக்குமே நினைக்காதிருந்ததில்லை. காளஹஸ்தியில் அவனைச் சந்தித்து மனம் மாற்றி அழைத்துவர அவர் பெரிய திருமலை நம்பியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், அருகே இருக்கிறார் என்பது அல்ல. சிலரால்தான் சில காரியங்கள் முடியும். கல்லைத் தகர்ப்பதினும் கடினம், சில வைராக்கியங்களை வெல்வது. திருமலை நம்பிக்கு அது எளிது. அதனால்தான் கோவிந்தனைத் தடுத்தாட்கொள்ள அவரை அனுப்பி வைத்தார். மருமகனுக்குத் தெரியாதா தாய்மாமன் சுபாவம்?'சுவாமி, கோவிந்தப் பெருமான் தற்போது எப்படி இருக்கிறார்?' தனியே இருக்கும்போது உடையவர் கேட்டார்.'என்னத்தைச் சொல்ல? அவர் ஒரு வைராக்கிய சிகாமணி. உலகப்பற்று என்பது அறவே இல்லாத ஜீவன். சிவஸ்மரணையில் இருந்து விடுபட்டு எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டது மட்டும்தான் ஒரே மாற்றம். மற்றபடி அவரது அலாதியான சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.''நல்ல விஷயம்தானே?''நாமெல்லாம் வைணவம் இன்னதென்று அறிந்து ஏற்றவர்கள். அவர் இயல்பிலேயே அதுவாக இருக்கிறவர். அது தெரியுமோ உமக்கு?''அப்படியா!''ஒருநாள் பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துக்கொண்டு அதன் வாயில் கையைவிட்டு என்னவோ செய்து கொண்டிருந்தார். பதறிப் போய் விசாரித்தால் பாம்பின் வாயில் முள் தைத்திருக்கிறது. அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். விளைவை எண்ணாமல் துயர் துடைத்தல் அல்லவா வைணவ தர்மத்தின் உச்சம்? அவர் அங்கேதான் வாசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் பெரிய திருமலை நம்பி.ராமானுஜர் புன்னகை செய்தார்.ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார். கணப் பொழுதில் ஒரு முழு வருடம் ஓடி மறைந்த தருணத்தில் காலட்சேபம் முடிந்திருக்க, கிளம்பலாம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.'ஆம். கிளம்பத்தான் வேண்டும். உம்மை நிரந்தரமாக இங்கே பிடித்து வைக்கவா முடியும்? ஆனால் உமக்கு என் அன்பின் பரிசாகக் கொடுத்தனுப்ப என்னிடம் எதுவுமே இல்லையே?' வருத்தத்தோடு சொன்னார் நம்பி.ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். 'கோவிந்தனைக் கொடுத்து விடுங்களேன்!'
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meiyappan Nachiappan - chennai ,இந்தியா
23-மார்-201717:01:29 IST Report Abuse
Meiyappan Nachiappan அற்புதம். ராமாநுஜரைப் படிக்க படிக்க மனம் மிகவும் மேன்மையடைகிறது. நல்லதையே நினைக்கத் தூண்டுகிறது. முன் ஜென்மத்துக் பாவமெல்லாம் குறைவதுபோல தோன்றுகிறது. எல்லாம் அந்த எம்பெருமானின் அருள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X