திறனாய்வு முன்னோடி தி.க.சி.,| Dinamalar

திறனாய்வு முன்னோடி தி.க.சி.,

Added : மார் 24, 2017 | |
குற்றங்களை பொறுத்துக் கொள்வதும், சிறுமைகளோடு சிரித்து பழகுவதும், தீமைகளோடு கை குலுக்குவதும், வாழ்க்கை சாமர்த்தியங்களாக வர்ணிக்கப்படுகின்ற கால கட்டத்தில், இவற்றை எதிர்த்து யார் போர்க்கொடி துாக்கினாலும், வாழத்தெரியாதவன் என்ற சாயம் பூசப்படுகிறது.இந்த கரையான்களுக்கு நடுவில் அழிக்க முடியாத நெருப்பாகவும், எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதராகவும்,
திறனாய்வு முன்னோடி தி.க.சி.,

குற்றங்களை பொறுத்துக் கொள்வதும், சிறுமைகளோடு சிரித்து பழகுவதும், தீமைகளோடு கை குலுக்குவதும், வாழ்க்கை சாமர்த்தியங்களாக வர்ணிக்கப்படுகின்ற கால கட்டத்தில், இவற்றை எதிர்த்து யார் போர்க்கொடி துாக்கினாலும், வாழத்தெரியாதவன் என்ற சாயம் பூசப்படுகிறது.இந்த கரையான்களுக்கு நடுவில் அழிக்க முடியாத நெருப்பாகவும், எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதராகவும், தவறான வாழ்க்கையை தேடாமல் தவறானவர்களோடு சேராமல், நிறையோடு வாழ்ந்த மாமனிதர், எழுத்திலும், பேச்சிலும் துணிவு, மனித நேயத்தில் பணிவு, எளிமை கொண்டவர். தமிழில் நவீன முற்போக்கு இலக்கிய திறனாய்வாளர்களில் தம் திறனாய்வு மூலம் இலக்கிய வளர்ச்சிக்கும், இலக்கிய திறனாய்வுக்கும் வழிகாட்டியாக அமைந்தது மட்டும் அல்லாமல், முற்போக்கு இலக்கிய படைப்பாளிகள் பலர் உருவாவதற்கும் காரணமாக விளங்கியவர் தி.க.சி., என்ற தி.க.சிவசங்கரன்.
இளம்பருவம் : தி.க.சி., திருநெல்வேலியில் 1925 மார்ச் 30-ல் கணபதியப்பன்-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். ஆறு வயதில் தந்தையையும், ஏழு வயதில் தாயையும் இழந்த இவரை காந்திய நுால்களும், நுாலகங்களும் தனிமையின் தவிப்பில் இருந்து கை துாக்கி விட்டன. காந்தியத்தில் தொடங்கி, மார்க்சியத்துக்குள் நுழைந்து கடைசி வரை அங்கேயே நிலை பெற்றார். நெல்லை மண்ணுக்கு தாமிரபரணி நிலவளம் தந்ததுபோல், நவீன இலக்கிய செழுமைக்கு திறனாய்வு வளம் அமைத்து தந்தவர் தி.க.சி., பள்ளி கல்வியை திருநெல்வேலி மந்திரமூர்த்தி பள்ளியிலும், கல்லுாரி கல்வியை ம.தி.தா., இந்து கல்லுாரியிலும், துாய சவேரியார் கல்லுாரியிலும் பயின்றார்.
எழுத்து வாழ்க்கை : பதினெட்டு வயதிலேயே அவருடைய எழுத்து வாழ்க்கை தொடங்கி விட்டது. வல்லிக்கண்ணன் நடத்திய 'இளந்தமிழன்' என்ற கையெழுத்து இதழில் எழுத தொடங்கினார். நாரண துரைக்கண்ணனின் பிரசன்ட விகடனில் முதல் சிறுகதையை எழுதினார். தொடக்கத்தில் கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனம் எழுதி கொண்டிருந்த தி.க.சி.,யை இலக்கிய விமர்சனம் எழுத துாண்டி ஆற்றுப்படுத்தியவர் பேராசிரியர் நா.வானமாமலை.தி.க.சி.,யின் முற்போக்கு, மார்க்சிய அணுகு முறையிலான ஆய்வுக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் நா.வானமாமலை, ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோராவர். தி.க.சி.,யின் இலக்கிய குருவாக அமைந்தவர் வல்லிக்கண்ணன். மானசீக குருவாக ஏற்று கொண்டவர் பாரதியார். 19 ஆண்டு காலம் 'தாம்கோஷ்' வங்கியில் காசாளராக பணியாற்றினார். அங்கே தொழிற்சங்க பணியில் ஈடுபட்டதால், பல ஊர்களுக்கு மாறுதலாகி கடைசியில் அந்த வங்கி பணியிலிருந்தே விலகி விட்டார். அதன்பின் 25 ஆண்டு சென்னையில் சோவியத்நாடு செய்தி துறையில், மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பல இதழ்களில் 60 ஆண்டுகளாக கட்டுரை மற்றும் சிறுகதைகளை எழுதினார்.தாமரை இதழில் பணியாற்றியபோது, பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். அவர் பொறுப்பாசிரியர் நிலையில் வெளியான தாமரையின் 100 இதழ்கள் இன்றளவும் இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த மதிப்பிற்குரியதாக இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது : இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதம் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதம் எழுதுவது அவரது முக்கியமான இலக்கிய செயல்பாடுகள். இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். இவரது மதிப்புரைகளும், கட்டுரைகளும், தி.க.சி., கட்டுரைகள் என இருபகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம், எழுத்தாளர். அண்மையில் இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. தந்தை வழியில் தனயனும் இந்த விருதை பெற்றது, இலக்கிய உலகில் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
நிறை வாழ்வு : தி.க.சி., பெரும்பகுதி நேரத்தை புதிதாக வெளிவரும் நுால்களை வாசிப்பதிலும், புதிய படைப்பாளர்களை வாழ்த்தி, பாராட்டி எழுதி அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் செலவிட்டார். அத்துடன், முற்போக்கு இலக்கிய இயக்கங்களுக்கு ஆலோசனை வழங்குதல், வழிகாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டவர். ஓர் இலக்கியவாதி, தம் சொந்த வாழ்க்கை குறித்தும், எழுத்து வாழ்க்கை குறித்தும் பெரும்பாலும் மன நிறைவு கொள்வது இல்லை. ஆனால், தி.க.சி., எனது இலக்கிய வாழ்க்கை நிறை வாழ்வுதான் என கருதுகிறேன் என்றார்.
இலக்கிய நோக்கம் : எனது இலக்கிய சிந்தனைகளும், களப்பணிகளும், சமுதாய விழிப்புணர்வுக்காகவும், மனித குல மேன்மைக்கும் உரியது. நான் தொடர்ந்து எழுதி வருகின்ற கடிதங்களும், குறிப்புகளும் எனக்கு மன நிறைவை அளிக்கின்றன எனக் கூறியுள்ளார். தி.க.சி., இடது சாரி அரசியல் ஒன்றின் நிலைப்பாட்டிலும், அதன் கலை இலக்கிய அமைப்பிலும் அங்கம் வகித்தாலும், மற்ற அரசியல் இயக்கத்தையோ, அதன் கலை இலக்கிய அமைப்பையோ வெறுப்புடன் பார்ப்பது இல்லை. அவற்றின் முற்போக்கு நோக்கத்துடன் கூடிய செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதும், ஆலோசனை வழங்குதலும் ஒரு முற்போக்காளனின் கடமை என்று கருதி, அந்த பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தது அவரது தனித்தன்மை வாய்ந்த குணம்.''கலை இலக்கிய துறையில், ஒரு பரந்து விரிந்த ஐக்கிய முன்னணி அமைப்பதும், அதை கொண்டு நசிவு இலக்கியத்தை எதிர்த்து போராடுவதும் எனது லட்சியம்'' என்று வாழ்ந்தவர்.முதுமையையும் நோய் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், முற்போக்கு கொள்கையில் ஈடுபாடும், அதன் சமுதாய மாற்றத்தில் கொண்ட அக்கறையிலும் முற்போக்கு இயக்க இலக்கிய நிகழ்வுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளும் அவரின் சமூக இலக்கிய அக்கறை, முற்போக்கு இயக்கத்தினர் அனைவரும் ஏற்று போற்ற வேண்டிய ஓர் உயரிய பண்பாகும்.2014 மார்ச் 25-ல் இயற்கை எய்தினார். இவரது மறைவு இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்று சொல்வதுண்டு. அப்படி இலக்கிய உலகில் இவர் எழுதிய திறனாய்வு கட்டுரைகள் வருங்கால இளைய தலைமுறையினருக்கு புதிய இலக்கியங்களை படைக்கவும், படைக்கப்பட்ட இலக்கியங்களை திறனாய்வு செய்து பல்கலையில் முனைவர் பட்டங்கள் பெறுவதற்கும் வழிவகுப்பதாக அமையும்.
-மகா.பாலசுப்பிரமணியன்செயலர் , வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை, காரைக்குடி. 94866 71830

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X