சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

இருளும் தனிமையும்

Added : மார் 25, 2017
Advertisement
இருளும் தனிமையும் Ramanujar Download

கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு அவரும் பிற சீடர்களும் திருவரங்கம் வந்து சேர்ந்தபோது அவரது அம்மா தனது மருமகளை அழைத்துக்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து வீடு பார்த்துக் குடியேறியிருந்தாள்.

'எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள்?' என்று கோவிந்தன் கேட்டார்.'நல்ல கதையாக இருக்கிறதே. இன்னும் எத்தனை நாளைக்கு நீ உன் மனைவியைத் தனியே விட்டுவிட்டு குருகுலவாசம் செய்து கொண்டிருப்பாய்? திருமணம் என்று ஒன்று நடந்துவிட்டது. இல்லற தருமம் என்று ஒன்று இருக்கிறது. நேற்று வரைக்கும் தாய்மாமன் வீடு, இன்றைக்கு உடையவர் மடம். நாளைக்கு என்ன செய்வாய் என்று யாருக்குத் தெரியும்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஒழுங்காக உன் மனைவியோடு குடும்பம் நடத்துகிற வழியைப் பார்' என்றாள் அம்மா.கோவிந்தன் யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்து, 'சரி அம்மா. கொஞ்சம் பொறுங்கள். இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன். சில நாள் போகட்டும்' என்று சொல்லிவிட்டு அப்போதைக்குத் தப்பித்துப் போனார்.

சில நாள்கள் பொறுத்திருந்துவிட்டு அம்மா மீண்டும் அந்தப் பேச்சைத் தொடங்கியபோது, 'ஓ, அதற்கென்ன? இருளும் தனிமையும் இருக்கும்போது அவள் வரட்டும்' என்று சொல்லிவிட்டு மடத்துக்குப் போய்விட்டார்.கோவிந்தனின் தாயாருக்கு மகிழ்ச்சியானது. மகன் ஒப்புக்கொண்டு விட்டான். இனி நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான். உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அவள் பார்த்த நல்ல நாள்களிலெல்லாம் கோவிந்தனைப் பிடிக்க முடியாமல் போனது. இருட்டிய போதெல்லாம் அவர் யாருடனாவது சத்விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார். எப்போது உறங்குகிறார் என்றே வீட்டில் அவரது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரியாது. தனித்திருக்கும் பொழுதுகள் பெரும்பாலும் பகலாக இருந்தது.என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று பல நாள் அவள் யோசித்துக்கொண்டே இருந்தாள். மகனிடம் பலவிதமாகப் பேசிப் பார்த்தும் பயனில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி ஒருநாள் ராமானுஜரிடம் போய் நின்றாள்.'நீங்கள் தருமம் அறிந்தவர். கோவிந்தன் செய்வது முறையா?''சரி தாயே. நான் பேசுகிறேன்' என்று மட்டும் சொல்லிவிட்டு கோவிந்தனை அழைத்தார் உடையவர்.

'சுவாமி...''உமது மனைவி காத்திருக்கிறாள். ஒரு நல்ல நாள் பார்த்து அவளிடம் போய்ச் சேரும். இது நமது உத்தரவு.'அதற்குமேல் என்ன பேசுவது? கோவிந்தன் அமைதியாகத் திரும்பிவிட்டார்.பரபரவென்று வேலை நடந்தது. கோவிந்தனின் தாயார் உடனடியாக ஒரு நாள் பார்த்தார். இருளும் தனிமையுமான பொழுது. தனது மருமகளை அழைத்து அறிவுரைகள் சொல்லி, அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்தாள்.'உட்கார்' என்றார் கோவிந்தன்.அவள் அமர்ந்ததும், 'நீ திருப்பாவை வாசித்திருக்கிறாயா?'
'இல்லை சுவாமி.''நமது உடையவருக்குத் திருப்பாவை ஜீயர் என்று இங்கே பெயர். அதன் ஒவ்வொரு சொல்லிலும் அவர் தோய்ந்தவர். ஆண்டாளின் மிகக் கனிந்த பக்தியே காதலாக உருப்பெறுகிறது.''ஓ. எப்படியாவது கற்கிறேன்.''கற்றால் போதாது பெண்ணே. அந்த பக்தியைப் பயில வேண்டும். இவ்வுலகில் நாம் பக்தி செய்யவும் நேசம் கொள்ளவும் சீராட்டவும் தாலாட்டவும் தகுதியான ஒரே ஒருவன், எம்பெருமான் மட்டும்தான். பரமனிடம் கொள்ளும் பக்திதான் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான நேசமாக விரிவு கொள்ளும்.'அவளுக்குச் சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சரி பேசி ஓயட்டும் என்று காத்திருந்தாள்.கோவிந்தன் நிறுத்தவில்லை. ஆண்டாளில் ஆரம்பித்து அத்தனை
ஆழ்வார்களைப் பற்றியும் பேசினார்.
திருமலையில் நம்பியிடம் தான் பயின்ற பாடங்களை விரிவாகச் சொன்னார். ராமாயணம். ஆ, அது எத்தனை பெரிய மகாசமுத்திரம்!'தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடும் இடம் ஒன்று உண்டென்றால் அது ராமசரிதம்தான். ஒருநாள் உனக்கு ராமாயணம் சொல்ல ஆரம்பிக்கிறேன். கேட்கிறாயா?'வேறு வழியின்றி அவள் தலையாட்டினாள்.'திருமலை நம்பி ராமாயணத்தில் கரை கண்டவர். ஆளவந்தாரிடம் பயின்றவர்களிலேயே அவர் மட்டும்தான் ராமாயண விற்பன்னர். அதை சரியான விதத்தில் உள்வாங்குவது பெரிய காரியம். அது வெறும் கதையல்ல பெண்ணே. மனித குலத்துக்கே அருமருந்தான தத்துவப் பெரும் திரட்டு.'அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. 'நான் படுத்துக் கொள்ளட்டுமா?' என்று கேட்டாள்.'ஒ, தாராளமாக. துாக்கம் வரும்போது துாங்கிவிடுவதுதான் நல்லது. நீ படு' என்றார் கோவிந்தன்.மறுநாள் விடிந்ததும் கோவிந்தனின் அம்மா, தனது மருமகளை அழைத்து ஆர்வமுடன் கேட்டாள், 'நேற்று என்ன நடந்தது?''அவர் எனக்கு ராமாயணம் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்னார்.'
'என்னது? ராமாயணமா? விடிய விடிய நீ கேட்ட ராமாயணம் அதுதானா!'அவள் பதிலேதும் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்து போய்விட்டாள். கோவிந்தனின் அம்மாவுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. இவன் சரிப்பட மாட்டான்.மீண்டும் ராமானுஜரிடம் போய் நின்றாள்.ராமானுஜர் கோவிந்தனை அழைத்து விசாரித்தார். 'நேற்றிரவு என்ன நடந்தது?''சுவாமி, நீர் சொன்னதை நிறை வேற்ற வேண்டுமென்றால் எனக்கு இருளும் தனிமையும் தேவை. அது எனக்கு அமையவில்லை.''என்ன சொல்கிறீர் கோவிந்தப் பெருமானே? இரவு தனியாக நீங்களும் உமது பத்தினியும் மட்டும்தானே அறைக்குள் இருந்தீர்கள்?''யார் சொன்னது? எங்குமுள்ள எம்பெருமான் அங்கும் இருந்தான். அவன் இருந்ததால் இருள் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அவன் இருக்கும்போது நான் எப்படி உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியும்?'பேச்சற்றுப் போனாள் கோவிந்தனின் தாய். ராமானுஜருக்கு
கோவிந்தனின் மனம் புரிந்துவிட்டது. கொஞ்சம் அவகாசம் எடுத்து, அந்தப் பெண்மணியிடம் விரிவாகப் பேசினார். கோவிந்தனின் மனைவியையும் ழைத்துப் பேசினார். 'அம்மா! உன் கணவர் வேறு விதமான மன நிலையில் உள்ளார். இல்லற தருமத்தைக் காப்பது அவருக்கு சிரமம். நீதான் புரிந்துகொள்ள வேண்டும்.'கஷ்டமாக இருந்தாலும் அவளுக்குப் புரிந்தது. துக்கமாக இருந்தாலும் ஏற்றுத்தான் தீர வேண்டும்.ஒருநாள் அது நடந்தது. உடை
யவர் கோவிந்தனுக்குத் திரிதண்டமும் காஷாயமும் அளித்து சன்னியாச ஆசிரமத்துக்கு வாயில் திறந்து வைத்தார்.'உமக்கு என் பெயரையே தருகிறோம். இனி நீரும் எம்பெருமானார் என்றே அழைக்கப்படுவீர்!' என்றார் உடையவர்.'அது தகாது சுவாமி. தங்கள் உயரம் எங்கே, நான் எங்கே? நான் தங்கள் பாதம் தாங்கியாகவே இருக்க விரும்புகிறேன். தங்கள் பெயரைச் சுமக்குமளவுக்கு எனக்குத் தகுதியில்லை.''சரி. பெயரைச் சற்று சுருக்கலாம். ஆனால் மாற்ற இயலாது. நீர் இனி எம்பார் என அழைக்கப்படுவீர்!' என்றார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X