விபத்துகளுக்கு காரணம் விதியா, மதி மயக்கமா?| Dinamalar

விபத்துகளுக்கு காரணம் விதியா, மதி மயக்கமா?

Updated : மார் 25, 2017 | Added : மார் 25, 2017 | கருத்துகள் (2)
விபத்துகளுக்கு காரணம் விதியா, மதி மயக்கமா?

உலகில் நிகழும் போர், பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், புயல், 'சுனாமி' மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மிஞ்சி விட்டது, சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள்.
சமீபத்திய புள்ளி விபரப்படி, உலக அளவில், ஆண்டிற்கு, 12 லட்சம் பேரும், ஒரு நாளுக்கு, 3,287 பேரும், இந்தியாவில், ஆண்டிற்கு, 1.46 லட்சம் பேரும், ஒரு நாளுக்கு, 400 பேரும், சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தில், ஆண்டிற்கு, 15 ஆயிரத்து, 642 பேரும், ஒரு நாளுக்கு, 44 பேரும், சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றனர். அதாவது, உலக அளவில் நடக்கும் சாலை விபத்து மரணங்களில், 12 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில், 11 சதவீதம், தமிழகத்தில் நிகழ்கிறது.
இது, மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தி மட்டுமின்றி, ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விழித்தெழுந்து, செயல்பட வேண்டிய தருணம்.
தங்களின் ரத்த சொந்தத்தை இழந்த உறவினர்கள் வேண்டுமானால், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, விதியின் செயல், காலத்தின் கோலம் என, தங்களை தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களும், சமூக பொறுப்புள்ள அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அப்படி இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இந்த சீர்கேட்டை களைய, ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்துகள் அனைத்துமே, ஓட்டுனர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் தான் நிகழ்கின்றன; திறமையான ஓட்டுனர் கூட, திறமையற்ற ஓட்டுனரை சாலையில் எதிர்கொள்ளும் போது, விபத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.
ராணுவம், காவல் துறையில் இருப்பவர்களுக்கு, உயிரைக் கொல்லும் ஆயுதங்கள் வழங்கப்படுவதால் தான், இந்த துறையினருக்கு ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பயிற்சியின் போது, ஒழுக்கத்தைக் கற்று கொடுத்த பின், மூன்று மாதங்கள் கழித்து தான், பயிற்சிக்காக, ஆயுதம் வழங்கப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் இயந்திர வாகனங்கள் அனைத்துமே, உயிரை கொல்லும் ஆயுதம் போன்றவை தான். முறையாக கையாளா விட்டால், இயக்குபவர்கள் அல்லது சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவிகளின் உயிரைக் குடித்துவிடும். எனவே, ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரின் ஆயுதங்களை விட, ஆபத்தானது, சாலையில் ஓடும்
வாகனங்கள்.
வாகனங்களை கையாளும் ஓட்டுனர் அனைவருமே, அதை கையாள தகுதியானவர்கள் தானா என, அவர்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்கும் போது, சோதனை செய்தாலும், அந்த சோதனை, உத்திரவாதமானது இல்லை. காரணம், அவர்கள் அப்படித் தகுதி இல்லாமல் போவதற்கான தற்காலிக காரணங்கள் அவ்வப்போது எழவோ அல்லது அவர்களாக ஏற்படுத்திக்
கொள்ளவோ வாய்ப்பிருக்கிறது.
வாகனம் ஓட்டும் ஒருவருக்கு, அவரின் ஐந்து புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்துடன் இருப்பதுடன், அமரும் இருக்கை எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்றி, சோர்வுற்று, ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் உடல் ஏங்கி கொண்டிருக்கும் போது, வாகனத்தை ஓட்டுவது மிக ஆபத்தானது.
ஓட்டுனராக இருப்பவர்கள், தங்களின் எஜமானரிடம் சொல்ல தயங்கினாலும், எஜமானராக இருப்பவர்கள், தங்கள் ஓட்டுனரின் நிலைமையை
அறிந்திருக்க வேண்டும்.
தன்னை போலவே சமமான உரிமையுள்ள, சக சாலை உபயோகிப்பாளர்களிடம் வரம்பு மீறி பேசி, மனதையும், உடலையும், காயப்படுத்தி கொள்ளக் கூடாது.
மொபைல் போனிலும், வாகனத்தில் பயணிப்பவர்களிடமும் பேசிய படியே வாகனம் ஓட்டுவது, பல விபத்துகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.
முகத்தில் மறைப்பு கட்டிய குதிரை போல, சாலையின் நேர் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், சாலையின் இருபுறமும் கவனிப்பதோடு, தேவைப்பட்டால் பின்புறமும் பார்க்க வேண்டும். பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை கவனிக்க
தவறுவதாலேயே
நிகழ்கின்றன.
அசாதாரணமான வாடை, வாகனத்திலிருந்து வருவதை மூக்கால் உணர்ந்து, எரிபொருள் கசிகிறதா, மின் கசிவால், மின் கம்பி கருகுகிறதா என, கணிக்க வேண்டும்.
வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிவதும், வாகனத்துக்குள், 'ஏசி'யை போட்டு துாங்கியவர்கள், உயிரிழப்புக்கு ஆளாவதையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். கவனத்தோடு, வாகனத்தை பராமரிப்பதோடு, நம் மன நிலையையும் பராமரித்து வந்தால், இந்நிகழ்வுகளை நிச்சயம் தவிர்க்கலாம்.
வாகனத்திற்குள், வழக்கத்துக்கு மாறாக வரும் அசாதாரண ஒலி, வாகனத்தின் திடீர் பழுதையும், வெளியே வரும் அசாதாரண சத்தம், வெளிச்சூழ்நிலை பற்றிய எச்சரிக்கையையும் நமக்கு கொடுக்கிறது. எனவே, மொபைல் போனுக்கும், உடன் பயணிப்பவர்களுக்கும் செவி சாய்த்தால், ஓட்டுனரின் கவனம் சிதறி, விபத்துக்கு வழி வகுக்கும்.
ஐந்து புலன்களையும், மயங்க செய்யும் மது அல்லது மற்ற போதைப் பொருளை உட்கொண்டு, வாகனத்தை செலுத்துவது, ஓட்டும் நபருக்கு மட்டுமில்லாமல், மற்ற அப்பாவி சாலை உபயோகிப்பாளர்களுக்கும், எத்தனை ஆபத்து என்பதை பிறர் சொல்லி தான், நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. சட்டம் போட்டு தான், அதை தடுக்க வேண்டும் என்பதும் இல்லை.
இயந்திர வாகனத்தை மட்டுமில்லாமல், மிதிவண்டியை கூட, ஓட்டுவதற்கு பழக துவங்கும் போது, பயத்தின் காரணமாக, கையும், காலும், ஒத்துழைக்க மிகவும் சிரமப்படும். பழகி விட்ட பின், அது மூளையின் செல்களில் பதிவாகி விடுவதால், ஒரு அனிச்சை செயல் போல் ஆகி விடுகிறது.
அதை ஆங்கிலத்தில், 'ப்ராக்டிஸ்டு ஈஸ் செகண்ட் நேச்சர்' என, சொல்வர். அந்த அனுபவம், ஓட்டுபவர்களுக்கு ஒரு போலியான அசட்டுத் துணிச்சலை உருவாக்கிவிடும். பயம் தெளிந்து, தான் ஒரு அசாத்திய திறமையை அடைந்து விட்டதாக நம்ப வைத்துவிடும். மிகத் திறமையான ஓட்டுனர் என்ற எண்ணத்தால் ஏற்படும் பொய்யான பாதுகாப்பு எண்ணம், முழுவதும், உத்திரவாதமான பாதுகாப்பு இல்லை.
எதிர்பாராத ஒரு சின்ன இடையூறு ஏற்பட்டாலும், நிலை குலைந்து, விபத்து ஏற்பட்டு விடும். சாலையில் போக்குவரத்து இல்லாமல் இருக்கும் சமயங்களிலும், இரவு நேரங்களிலும், தவறான பாதுகாப்பு எண்ணம் ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டு, விபத்துக்கு வித்திட்டு விடுகிறது. அங்கு, அனுபவமும், அசட்டு துணிச்சலும், கை கொடுக்காது.
இதெல்லாம் நீங்கலாக, விபத்தில் மடியும் இளைஞர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு, அவர்களிடம் காணப்படும் மன இயல்பான, எதையாவது செய்து, மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்க வேண்டும் என்ற ஆர்வமே காரணம்.
தாங்கள் செய்யும் சாகசத்தை, பலர் பார்த்து, ரசிப்பதாகவும், வியப்பதாகவும், தவறாக கற்பனை செய்து, இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டிச் செல்வது ஆபத்தானது. அதுபோல, எச்சரிக்கையை புறக்கணித்து, கடலில் ஆழத்துக்கு சென்று, அலைகளுக்கு பலியாகும் சம்பவங்களும், தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிகழ்வுகளை பத்திரிகைகள் வெளியிடுவது பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்ல; மற்றவர்களுக்கு, படிப்பினையை ஊட்டுவதற்காக என்பதை இளைஞர்கள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்வதில்லை.
போக்குவரத்து வாகனங்களின் இயக்கம், இயந்திரத்தால் நிகழ்கிறது. அதை இயக்கி, வேகத்தை அதிகப்படுத்துவதில், ஓட்டுனரின் திறமை ஏதும் இல்லை. அது, அந்த இயந்திரத்தை தயார் செய்தவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய பெருமை. அதை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, விபத்து நிகழாமல் பார்த்து கொள்வதில் தான், ஓட்டுனரின் திறமை உள்ளது.
அப்படி, திறமையை காட்டுவதற்கு, பிரத்யேகமான இடங்கள் மற்றும் மைதானங்கள் இருக்கின்றன. அங்கே, தங்களின் திறமையை காட்ட வேண்டுமே தவிர, பொது போக்குவரத்து சாலைகள், அதற்கான இடமில்லை. மீறி உபயோகிப்பது, சட்டப்படி குற்றம்.
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் அப்பாவிகளின் ரத்த சொந்தங்கள், அதை, விதியின் விளைவென்று நினைத்து, ஆறுதல் அடைந்தாலும், அதற்கு பின்னணியில், யாரோ ஒருவரின் மதி மயக்கமே காரணமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
- எம்.கருணாநிதி -காவல் துறை கண்காணிப்பாளர் (பணிநிறைவு)

இ-மெயில்: spkaruna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X