சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

காஷ்மீரக் கனி

Added : மார் 26, 2017
Share
Advertisement
காஷ்மீரக் கனி Ramanujar Download

'ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற கிரீடங்களைச் சேர்த்துக் கொண்டே போகிறார்கள். இவர் உயர்வு, அவர் மட்டம் என்று ஒருத்தரைக்கூடத் தரம் பிரிக்க முடியாதபடி அத்தனை பேருமே எப்பேர்ப்பட்ட ஞானஸ்தர்களாக விளங்குகிறார்கள் பாரும்!'

பெரிய நம்பியிடம் அரையர் சொல்லிக் கொண்டிருந்தார்.
'உண்மைதான் அரையரே. முதலியாண்டான் ஆகட்டும், கூரத்தாழ்வான் ஆகட்டும், அருளாளப் பெருமான் எம்பெருமானாராகட்டும், எம்பாராகட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறார்கள். உடையவரைத் தவிர வேறு நினைவே இன்றி எப்போதும் அவரது சொற்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதால் இப்படியாகிறது என்று நினைக்கிறேன்.'
'ராமானுஜரும் சொல்லித் தருவதில் சளைப்பதேயில்லை. மடத்துக்குச் சென்றால் இருபத்தி நாலு மணி நேரமும் ஏதாவது ஒரு வகுப்பு நடந்து கொண்டேதான் இருக்கிறது.'
'அவரது நேரத்தை சீடர்களும் பக்தர்களும் முழுதாக உண்டு கொண்டிருக்கிறார்கள். என் கவலையெல்லாம் அவர் எப்போது பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதப் போகிறார் என்பதுதான்!'சொல்லிவிட்டு ஏக்கத்துடன் எங்கோ வெறித்துப் பார்த்தார்
பெரிய நம்பி. ஆளவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகள் ராமானுஜருக்காக இன்னமும் காத்திருப்பதை அவர் நினைக்காத நாளே இல்லை. சந்திக்கும்போதெல்லாம் அதைக் குறித்து நினைவுபடுத்த அவர் தவறுவதும் இல்லை.
'சுவாமி, எனக்கும் அதே யோசனைதான். ஆனால் பிரம்ம சூத்திர உரைக்கு அடிப்படை நூலாக நமக்குத் தேவைப்படுவது போதாயண விருத்தி (விருத்தி என்றால் உரை). இங்கே அந்நூலோ, பிரதியோ கிடையாது. வடக்கே எங்கோ ஒரு பிரதி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். தேடிச் செல்லுவது பெரிதல்ல. ஆனால் கிடைக்க வேண்டுமே?' என்பார் உடையவர்.
பெரிய நம்பிக்கும் அது தெரியும். ஆளவந்தாரின் ஆசையே அதுதான். பிரம்ம சூத்திரத்துக்கு போதாயண மகரிஷியின் உரையை அடியொற்றி ஓர் எளிமையான உரை செய்ய வேண்டும். அவர்தான் வியாசரின் மனத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு உரை எழுதியவர் என்பது ஆளவந்தாரின் கருத்து. இறப்பதற்குமுன் பல சமயம் தமது சீடர்களிடம் அது பற்றி அவர் பேசியிருக்கிறார்.
'திரமிடர் என்றொருவர் எழுதியிருக்கிறார். குஹதேவர் என்ற ரிஷி எழுதியிருக்கிறார். டங்கர் என்று மற்றொருவர் பாஷ்யம் (உரை) செய்திருக்கிறார். நமக்குத் தெரிந்து இவ்வளவு. தெரியாமல் இன்னும் சிலர் இருக்கலாம். ஆனால் எத்தனை உரைகள் இருந்தாலும் போதாயணரின் உரையே சிறப்பு. அதனை அடியொற்றி ஓர் எளிய உரை செய்யப்பட வேண்டும்!'
கி.மு. நான்காம் நூற்றாண்டில் வசித்த (எட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்வார்கள்) போதாயணர் அடிப்படையில் ஒரு கணித வல்லுநர். யாக குண்டங்கள், யாக மேடைகள் அமைப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவுகள் சார்ந்து முதல் முதலில் ஆய்வு செய்
தவர். செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகளை வர்க்க - வர்க்க மூலமின்றிக் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்தவர். சூத்திரங்களின் சக்கரவர்த்தி. சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லுவது. வேதங்களின் இறுதிப் பகுதியில் வருகிற உபநிடதங்களின் சாரமே பிரம்ம சூத்திரம். இதை வேதாந்த சூத்திரம் என்றும் சொல்லுவதுண்டு. உபநிடதங்களின் உள்நுழைந்து புரிந்துகொள்ள பிரம்ம சூத்திரமே சரியான வாயில். பிரம்ம சூத்திரத்தை சரியாக விளங்கிக் கொள்ளத்தான் போதாயணரின் உரை.
போதாயணரின் உரை அடிப்படையில்தான் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத வேண்டும் என்று ஆளவந்தார் கருதியதற்கு அடிப்படைக் காரணம், போதாயண விருத்தி, விசிஷ்டாத்வைத அடிப்படையில் அமைந்தது என்பது. ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவைப் பேசுவதல்லவா அடிப்படைத் தத்துவம்? அதை விளக்கும் நூலும் சரியான விதத்தில் அமைய வேண்டுமென்பது அவரது கவலை.
ராமானுஜரும் பெரிய நம்பியும் இதைப் பற்றிப் பல சமயம் பேசியிருக்கிறார்கள். அரையர் பேசிவிட்டுப் போன பிறகும் பெரிய நம்பி ஒரு சமயம் உடையவரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசினார்.
'ஒரு தகவல் கிடைத்திருக்கிறது சுவாமி. காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பதாகத் தெரிகிறது. இங்கிருந்து அங்குள்ளவர்களைத் தொடர்பு கொள்வதென்பது சாத்தியமில்லாத காரியம். நேரில் போனால் ஒருவேளை அதைக் காண முடியலாம்' என்றார் ராமானுஜர்.
'காஷ்மீரமா! அடேயப்பா, அது வெகு தொலைவில் உள்ள இடமாயிற்றே.'
'ஆம். பல்லாயிரக்கணக்கான காதங்கள் என்கிறார்கள். ஆனால் நமக்கு போதாயண விருத்தி வேண்டுமென்றால் அங்கே போய்த்தான் தீரவேண்டும்.'
'யாரையாவது அனுப்பிப் பார்க்கலாமா சுவாமி?'
'அது சரியாக வராது நம்பிகளே. நானே நேரில் போகலாமென்று இருக்கிறேன்.'
முடிவெடுக்கிறவரைதான் யோசனை. தீர்மானம் வந்துவிட்டால் அடுத்தக் கணம் செயல்தான். ராமானுஜரின் இந்தக் குணம் பெரிய நம்பிக்கு நன்றாகத் தெரியும். எனவே, 'எப்போது?' என்று கேட்டார்.
'இதோ புறப்பட வேண்டியதுதான். கூரத்தாழ்வானைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். உதவிக்கு ஒரு சில சீடர்கள் போதும். நீங்கள் உத்தரவளித்தால் நாளையே கிளம்பி விடுவேன்!' என்று சொன்னார்.
ராமானுஜர் புறப்பட்ட செய்தி அவரைக் காட்டிலும் வேகமாக தேசமெங்கும் பரவியது. பயணத்தைவிட அதன் நோக்கம் பலருக்குக் கவலையளித்தது. ஏற்கெனவே அத்வைதத்துக்கு எதிரான சித்தாந்தம் ஒன்றை முன்வைத்துப் பரப்பிக் கொண்டிருக்கிற சன்னியாசி. இப்போது பிரம்ம சூத்திரத்துக்கும் விசிஷ்டாத்வைதம் சார்ந்து ஓர் உரை எழுதிவிட்டால் அத்வைத சித்தாந்தத்துக்கு அது பெரிய அச்சுறுத்தலாகிவிடுமோ?
'முடியாது. சாரதா பீடத்தில் போதாயண விருத்தி இருப்பது உண்மையென்றால் அது ராமானுஜர் கரங்களுக்குக் கிடைக்கக் கூடாது!' என்று ஆங்காங்கே பல அத்வைத சித்தாந்திகள் கூடிப் பேசினார்கள். ஆனால் சாரதா பீடத்தை எப்படித் தொடர்பு கொள்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆதி சங்கரர் அங்கொரு பீடம் அமைத்த விவரம் தெரியும். அத்வைத சித்தாந்தத்தைப் பரப்புகிற திருப்பணியில் அவர்கள் முனைப்புடன் இருக்கிற விவரம் தெரியும். அங்கே போதாயண விருத்தி இருப்பதும் அது விசிஷ்டாத்வைத ரீதியில் எழுதப்பட்ட விளக்கம் என்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.
எப்படித் தடுப்பது?
அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜர் காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். கிட்டத்தட்ட நுாறு நாள் பயணம். நடுவில் அவர் எங்கும் தங்கவில்லை. சற்றும் நேர விரயம் இல்லை. ஒரே நோக்கம். ஒரே சித்தம். வழியில் கூரத்தாழ்வானிடம் ஒரே ஒரு விஷயம் சொல்லியிருந்தார்.
'போதாயணரின் உரை நம் கைக்குக் கிடைக்கிறதோ இல்லையோ. காண முடிந்த கணத்தில் ஒருமுறை வாசித்தேனும் பார்த்துவிட வேண்டும்!'
அது எத்தனை அவசியமான கட்டளை என்பது காஷ்மீரத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X