பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்| Dinamalar

பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்

Added : மார் 27, 2017 | |
இன்றைய தினம் டீன்-ஏஜ்பெண்களைப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, இரு புறமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இது வீங்கிவிட்டது என்றால், பாதிக்கப்பட்டவர் உணவை விழுங்கும் போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே
பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்

இன்றைய தினம் டீன்-ஏஜ்பெண்களைப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, இரு புறமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இது வீங்கிவிட்டது என்றால், பாதிக்கப்பட்டவர் உணவை விழுங்கும் போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே துாக்கப்படுவதைப் பார்க்கமுடியும்.
தைராய்டு ஹார்மோன்கள் : 'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு ஹார்மோன்களைத் தைராய்டு சுரப்பி சுரக்கிறது. தைராய்டு செல்களில் 'தைரோகுளோபுலின்' எனும் புரதம் உள்ளது. இதில் 'டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டுசெல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனைச் சுரக்கின்றன. இந்தச் செயல்பாட்டை முன்பிட்யூட்டரி சுரப்பி யில் சுரக்கும் 'தைராய்டு ஊக்கி ஹார்மோன்' கட்டுப்படுத்துகிறது.
தைராக்சின் பணிகள் : குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம்.கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்கப்படுத்துகிறது, தைராக்சின். இருதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. உடலில் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், செல்களில் என்சைம்கள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது. இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப, கூட்டியும் குறைத்தும் சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதியோர் வரை, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துல்லியமாக செய்துமுடித்து, உடலைப் பேணிக்காக்கும் உன்னதமான ஹார்மோன், தைராக்சின்.
குறை தைராய்டு : தைராய்டு சுரப்பியில்தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், 'குறை தைராய்டு' எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை: உடல் சோர்வாக இருக்கும். சாதாரண குளிரைக்கூட தாங்க முடியாது. முடி கொட்டும், சருமம் உலர்ந்துவிடும். அரிப்பு எடுக்கும். பசி குறையும்.அதேநேரத்தில் உடல் எடை அதிகரிக்கும். அதிக துாக்கம் வரும். முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, மூட்டுவலி, ஞாபக மறதி, கர்ப்பமாவதில் பிரச்னை... இப்படிப் பல பிரச்னைகள் அடுத்தடுத்து ஏற்படும்.குறை தைராய்டு உள்ளவர்களுக்கு கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோத்துக் கொண்டு பருமனாவதும், சருமம் வறண்டுபோவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும்முக்கியத் தடயங்களாகும்.இந்த அறிகுறிகளை அலட்சியப் படுத்தாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து, ரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.என்ன காரணம்? : அடிப்படையில் உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் 'குறை தைராய்டு நோய்'க்கு முக்கிய காரணம். தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் துாண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது தோன்றும்.அதற்கு 'முன்கழுத்துக்கழலை' குறை தைராய்டு ஒரு 'தன்தடுப்பாற்றல் நோயா'கவும் ஏற்படலாம். எப்படி? குடலை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு ஏற்படுகிறது.இவை தவிர, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுவது, தைராய்டு சுரப்பியை அகற்றுவது, முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைவது போன்றகாரணங்களாலும் குறை தைராய்டு ஏற்படலாம். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்புண்டு.
பரிசோதனைகள் : ரத்தத்தில் T3, T4, TSH ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால்,பாதிப்பின் அளவு தெரியவரும். இத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். இப்போது 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
சிகிச்சை என்ன? : அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக்கழலை நோய்க்கு, அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். அயோடின் கலந்த கடல் மீன் உணவுகளைச் சாப்பிடுவதும் நல்லது.குறை தைராய்டு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி, 'எல் - தைராக்சின்' மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, அது தேவைப்படும் காலம் ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும். நோயாளிகள் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சிகிச்சைக்கு நடுவில் மருந்துகளை நிறுத்திவிடவும் கூடாது. தேவைப்படுபவர்கள் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் மருந்தைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதுதான் குறை தைராய்டு பிரச்சினை மீண்டும் வராமல் தவிர்க்கும் உன்னத வழி!
-டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X