புதுடில்லி: தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தும் வகையில், தமிழக, பா.ஜ.,வில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த, அந்த கட்சி மேலிடம் தயாராகி வருகிறது.
அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா, காலமாகி விட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதியால், முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இந்த இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இன்றி, தமிழக அரசியல் களத்தில் மாறுபட்ட சூழல் நிலவுகிறது.
இத்தகைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில், உ.பி., தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று, வலிமையான கட்சியாக, பா.ஜ., மாறிவிட்டதால், அடுத்த கட்டமாக, தென் மாநிலங்களை நோக்கி, அந்த கட்சி மேலிடத்தின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, தமிழக அரசியலின் மீது, மோடி- - அமித் ஷா கூட்டணியின் பார்வை பதிந்துள்ளது. தமிழகத்துக்கான முதற்கட்ட ஆலோசனை மற்றும் வியூகங்களும் தயாராகி வருகின்றன. இதுவரையில், கட்சியின் தமிழக அரசியல் விவகாரத்தில், மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கும் பணியை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தான் கவனித்து வந்தார். தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டு, தமிழக, பா.ஜ.,வின் மேலிடத்து காதாக, மற்றொரு மத்திய அமைச்சரான, நிர்மலா சீதாராமன் செயல்பட்டு வருகிறார். தமிழ் தெரிந்தவர் என்பதால், 'தமிழக, பா.ஜ., வை என்ன செய்தால் உருப்பட வைக்க முடியும்' என, இவரிடம், மேலிடம் கேட்க, விரிவான அறிக்கையை, சமீபத்தில் தாக்கல் செய்தார். அதில், தலைமை மாற்றம் என்பது தான் முக்கிய காரணமாக இருந்தது. மாறி வரும் அரசியல் களத்துக்கு ஏற்ப, தற்போதைய மாநிலத் தலைமை ஈடுகொடுக்க இயலாதது தான், முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.ஹைட்ரோ கார்பன், மீனவர் பிரச்னை என சமீபத்தில் பற்றியெறிந்த பல பிரச்னைகளை, நிர்மலா தான், டில்லியில் முன்னின்று கவனித்துக் கொண்டார்.இதை, சம்பந்தப்பட்ட அனைவருமே புரிந்து கொண்டுள்ளதால், 'அடுத்த புதிய தலைவர் யார்' என்ற கேள்வி, தமிழக பா.ஜ.,வுக்குள் தீவிரம் பெறத் துவங்கியுள்ளது.
மேலிடத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில், பேச்சு, களப்பணி போன்றவற்றில் தேர்ந்த நபராக, அடுத்த தலைவர் இருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின், தற்போதைய தமிழக பொதுச் செயலராக உள்ள வானதி சீனிவாசனிடம், புதிய தலைமையை ஒப்படைக்க, மேலிடம் தயாராகிவிட்டது. கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்ட பிரசார திட்டங்களை சிறப்பாக செய்து முடித்ததற்கு பரிசாக, இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், கட்சி மேலிடம் கவனத்தில் வைத்துள்ளது. தற்போதைய தமிழக அரசு, நிலையற்றதாக உள்ளது; எப்போது வேண்டுமானாலும், எதுவும் நேரலாம். அப்படி ஏதாவது நிகழ்ந்தால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரது தலைமையிலான ஆட்சியை கவிழ்த்த பழி, பா.ஜ.,வின் மீது விழலாம். அப்படி ஏற்பட்டால், அந்த சமூகத்தினரை திருப்தி படுத்தும் வகையில், அதே சமூகத்தைச் சேர்ந்தவரான வானதியை, கட்சியின் தலைவர் பதவியில் நியமிப்பது சரியாக இருக்கும் என, மேலிடம் நம்புகிறது. தமிழக, பா.ஜ.,வில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கே அதிகமான பொறுப்புகள் வழங்கப்படுவதாக நீண்ட நாட்களாக முணுமுணுப்பு இருக்கிறது; புதிய தலைமை மூலம், இதுவும் மாறும்.
வானதி மட்டுமல்லாமல், மேலும் இருவரது பெயரும், தலைவர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தமிழக தலைவர் தமிழிசையின் சீனியாரிட்டியை மதிக்கும் வகையில், மத்திய பொறுப்பில் ஏதாவது ஒன்றை, அவருக்கு வழங்கவும் வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிந்த பின், தமிழக, பா.ஜ., தலைமை மாற்றம் குறித்து, டில்லியிலிருந்து அறிவிப்பு வரலாம் என, தெரிகிறது.
கூடுதல் பொறுப்பு : தமிழக, பா.ஜ.,வின் புதிய தலைவராக நியமிக்கப் படுபவருக்கு, ராஜ்யசபா, எம்.பி., பதவியும் கூடுதலாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் திட்டங்களை அருகிலிருந்து புரிந்து, குக்கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் எடுத்துச் செல்ல, இந்த பதவி உதவும் என, அமித் ஷா, கருதுகிறார்.