கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டுங்கள்

Added : மார் 28, 2017 | கருத்துகள் (1) | |
Advertisement
சீமைக்கருவேல மரத்தை வேரறுப்போம்! “உன் கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு; உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு. வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு; தோல்வியடைந்தால் கறி வேப்பிலை மரம் நடு. சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு. கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு. எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு. பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.
கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டுங்கள்

சீமைக்கருவேல மரத்தை வேரறுப்போம்!
“உன் கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு; உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு. வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு; தோல்வியடைந்தால் கறி வேப்பிலை மரம் நடு. சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு. கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு. எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு. பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு. சந்தோஷமாக இருக்கும்போது வேப்பமரம் நடு. வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு”ஆங்கிலேயர் இந்தியாவிற்கு விடுதலைக் கொடுத்து செல்லும்போது, இந்தியாவின் இயற்கை வளத்தை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், நாடுமுழுவதும் சீமைக் கருவேல மரத்தின் விதைகளை துாவிவிட்டனர் என்ற கருத்து உண்டு. முதன் முதலில் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் கடப்பா விலுள்ள கமலாபுரத்தில்தான் இவை விதைக்கப்பட்டன. தங்களது தனிப்பட்ட தேவைக்காகவும், தொடர்வண்டி தடங்களுக்காகவும், கப்பல் கட்டுவதற்காகவும் சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற மரங்களை கணக்கில்லாமல் ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். மண் அரிப்பைத் தடுத்தல், தரிசு நில மேம்பாடு, விறகு தட்டுப்பாட்டினைச் சமாளித்தல் போன்ற காரணங்களைக் கூறி சீமைக்கருவேல மரங்களை நாட்டில் பரப்பினார்கள். இயற்கையிலேயே மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மையையும் எந்த வறட்சியையும் தாங்கும் தன்மையையும் கொண்ட இந்த தாவரம், காடு, கண்மாய், குப்பைமேடு, சாலையோரம் என தமிழகம் முழுக்கப் பரவிவிட்டது. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே இது 'சீமை' கருவேலமாயிற்று.
வேலிக்காத்தான் : சீமைக் கருவேலம் என்றும் வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது, வேளாண் நிலங்களையும் பிற வாழ்வாதாரங்களையும் சேதப்படுத்தக்கூடிய ஒரு கொடிய தாவரம். தமிழக கிராமங்களின் நிழல் தரும் சின்னமாக ஒரு காலத்தில் கருவேல மரங்கள் இருந்தன. 1950-களில் காங்கிரஸ் ஆட்சியின் போது விறகுக்காகவும் விளை நிலத்தை சுற்றி வேலியாகவும் அமையும் என்ற நோக்கில் விதைகள் துாவி பரப்பப்பட்ட, சீமைக்கருவேல மரங்கள் இன்றைக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் இருப்பையே காலி செய்யும் எமனாகிவிட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து, இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள் மரம் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத்தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் வேரோடு பிடுங்கிஎறியப்பட்டு, இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இவை விளை நிலங்களில் 25 விழுகாட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது.
வேலியே பயிரை மேய்ந்தது : எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு, தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால், நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது. வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் மிக அதிகமாக இவை வளருகின்றன. அமெரிக்காவில் கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிக்கப்பட்டிருக்கும். அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு உண்டு.எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல், உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் மழைநீரை உறிஞ்சிகிறது.
பாதிப்புகள் : கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் “மலடாக” மாறும் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே இதன் மீது எந்த பறவையும் கூடு கட்டுவது இல்லை.நிழல் மரமாகவோ, கனிமரமாகவோ, கதவு, ஜன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களை செய்வதற்கோ, எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும், அடியுரமாக இடுவதற்கோ குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக் கூட பயன்படுவதில்லை. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவகாலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்றது. பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுஉள்ளன. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் உண்டு.
விசேஷ குணங்கள்
1.தண்ணீரைத் தேடி எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் பயணிக்கவல்லவை.2. இவை பகலில் குறைவான ஆக்ஸிஜனையும் இரவில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடையும் வெளிவிடுபவை. அதனால் வளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவிற்கு ஆபத்து உள்ளது.3. நீர் நிலைகளில் நீரின் நிறமே மாறிவிடும் நிலை உள்ளது.4.இவற்றை அகற்றிய 4 வருடங்களிலிருந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் அந்த மண் பழைய நிலையை அடைகின்றது.இந்த மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.5. இந்த மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மற்ற மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டுவதை தவிர்க்கின்றன.6. விறகுக்காக பயன்படுத்தப்படும் இதன் புகை புற்று நோயை உண்டாக்கும். இதன் புகை 14 சிகரெட் புகைப்பதற்கும் சமம் என்று எச்சரிக்கை தகவலும் வந்துள்ளது.7. காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகின்றன.எனவே இதை அகற் றிவிட்டு அந்த இடத்தை தீ வைத்தால் தான் இது மீண்டும் வளராமல் இருக்கும். இதனுடைய விதை 1 வருடம் வரையிலும் வீரியத்துடன் வளரும் தன்மை உடையதாக இருக்கும். எனவே தான் இப்போது அகற்ற ஆரம்பித்தால் தான் இன்னும் 5-8 வருடங்களுக்குள் முழுமையாக அகற்ற முடியும்.
எப்படி அழிப்பது : இயந்திரங்களைக் கொண்டு இம்மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்கலாம். ஆசிட் அல்லது வேறு வகையான முயற்சிகள் மண்வளத்தை கெடுக்கும். பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இடத்தில், நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேல மரங்கள் முளைத்து விடாமல் அழிக்கப்படுகிறது. இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே நிகழ்கிறது. ஆனால் இந்த மனநிலை முற்றிலும் தவறு. முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம்.
நீதிமன்ற ஆணை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே அனைவரும் ஒன்றுபட்டு, வறட்சிக்கு வழிகாட்டும், சீமைக் கருவேல மரங்களை வேரறுப்போம்!
த.ரமேஷ், பேராசிரியர்ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை

98944 46246

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mohan Thangasamy - Chennai,இந்தியா
28-மார்-201709:17:02 IST Report Abuse
Ram Mohan Thangasamy இப்பொழுதாவது மக்களிடையே விழுப்புணர்ச்சி வந்ததே மகிழ்ச்சி. இதே போல ஆகாய தாமரை என்ற செடியையும் முற்றிலும் அகற்ற வேண்டும். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இது நிறைய வளர்கிறது. கட்டுரை சிறப்பு. நன்றி வணக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X