கடலூருக்கு போகுது ஏ.சி., கணக்குல வராத 'ஓசி!'

Added : மார் 28, 2017
Share
Advertisement
கடலூருக்கு போகுது ஏ.சி., கணக்குல வராத 'ஓசி!'

மதிய வெயில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தது. வெளியே தலை காட்டாமல், வீட்டுக்குள், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த சித்ரா, மின் விசிறியின் வேகத்தைக் கூட்டியபடியே கேட்டாள்...
''எப்பிடி மித்து... ஒங்க வீட்டுல மட்டும், இவ்ளோ குளுகுளுன்னு இருக்கு?''
''அக்கா! இது ஏர் கண்டிஷன், 'சில்' கிடையாது. வீட்டைச் சுத்தி, தாத்தாவும், அப்பாவும் வளர்த்த மரங்களோட மகிமை. ஏற்கனவே கொதிக்கிற பூமியை, நாம வேற ஏ.சி.,யைப் போட்டு, சூடேத்தணுமா?'' என்றாள் மித்ரா.
''சிட்டியில கொடூரமா அடிக்குது வெயிலு; ஆனா, கார்ப்பரேஷன்ல மட்டும், 'ஐஸ் மழை' பெய்யுது,'' என்றாள் சித்ரா.
''அங்க எப்பவும் ஜால்ரா புயல் தான அடிக்கும். இப்போ என்ன புதுசா ஐஸ் மழை?'' என்றாள் மித்ரா.
''பூவை பூவுன்னும் சொல்லலாம்; புய்ப்பம்னும் சொல்லலாம்... அதே மாதிரித்தான். நம்ம இளந்தாரி ஆபீசருக்கு, 'வாட்ஸ் ஆப்' குரூப்கள்ல போடுற பாராட்டு, கை தட்டுக்கு ரெண்டு பேரும் வச்சுக்கலாம்...'' என்றாள் சித்ரா.
''அடேங்கப்பா! அப்பிடிப் பாராட்டுற அளவுக்கு என்ன பண்ணீட்டாராம்?'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன் வரலாறுலயே இல்லாத அளவுக்கு, 13 கோடி ரூபாய்க்கு உபரி பட்ஜெட் போட்டுட்டாராம். அதுக்கு தான், இந்த பாராட்டுப் பத்திரமெல்லாம்...'' என்றாள் சித்ரா.
''அது சரி... ஊருக்குள்ள ஏதாவது வேலை நடந்தால் தான, காசு செலவாகும். ரயில்வே ஸ்டேஷன் முன்னாலயும், ஜி.எச்., முன்னாலயும், 'சப் வே' அல்லது, 'ஸ்கை வாக்' போடணும்னு, ஊரே கேக்குது. அதைப் போடுறதுக்குக் கூட வழியில்லை; ஊருக்குள்ள அழகா இருந்த ரேஸ்கோர்ஸ்சும், நாறிப்போய்க் கெடக்குது. ரோடெல்லாம் குழி, வீதியெல்லாம் குப்பை, பாதி 'ஸ்ட்ரீட் லைட்' எரியுறதில்லை...'' என்று அடுக்கினாள் மித்ரா.
''வரி வாங்குன காசு மட்டுமில்லை மித்து... ஸ்மார்ட் சிட்டிக்கு, சென்ட்ரல் கவர்மென்ட் கொடுத்த, 200 கோடி ரூபா பணமும், பேங்க்ல சும்மாவே கெடக்குது. அதுக்கும் பல கோடி ரூபா வட்டி வருது. வேலை எப்போ ஆரம்பிக்கும்னு தெரியலை. அப்புறம் ஏன் உபரி பட்ஜெட் வராது?'' என்று பதிலுக்குக் கொட்டினாள் சித்ரா.
''அக்கா... நம்ம கார்ப்பரேஷன் ஆபீசருக்கு, கலெக்டர் 'பேனல்' வந்து அதுக்குரிய சம்பளமும் வந்திருச்சாம். ஆனா, 'ஸ்மார்ட் சிட்டி' வேலையத் தொடங்குன பிறகு, கலெக்டராப் போடுறதா, சீப் செகரட்டரி மேடம் சொல்லீட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''இப்பல்லாம் கார்ப்பரேஷன்ல, ஏதாவது ஒரு மேடம் சொன்னாத்தான் வேலை நடக்குது...'' என்று மொட்டையாய் நிறுத்தினாள் சித்ரா.
''அங்கயே, பல, 'மேடம்'களோட ஆதிக்கம் இருக்கே. நீ சொல்றது எந்த மேடத்தை?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள 'சிம்பிள்'ஆக வலம் வர்ற ஒரு என்.ஜி.ஓ.,மேடம் தான். குளங்களைக் காப்பாத்துறதுக்காக உழைக்கிற சில இளைஞர்கள், 'வெள்ளலூர் வாய்க்கால்ல, ஏகப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கெடக்குது, அதைத் தூர் வாரணும்'னு, உள்ளூர் ஆபீசர் தொடங்கி, கோயம்புத்தூருக்கு வந்த சி.எம்., வரைக்கும் 'பெட்டிஷன்' கொடுத்துப் பார்த்தாங்க, வேலையே நடக்கலை'' என்று இழுத்தாள் சித்ரா.
''அந்த மேடம் சொன்னதும் நடந்திருச்சா?'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... அவுங்கள்ட்ட சொன்னதும், வேலை ரொம்ப 'சிம்பிள்'லா முடிஞ்சிருச்சாம். அவுங்க சொன்ன மறுநாளே, அந்த வாய்க்கால் எல்லாம், 'க்ளீன்' ஆயிருச்சு. இதே ஆபீசர்ட்ட, 'வாலாங்குளம் கரையில இருக்குற கடைகளை எடுங்க, அவுங்க தான் அந்த குளத்துல பாலித்தீன் குப்பைகளையும், மத்த குப்பைகளையும் அதிகமா கொட்றாங்கன்னு பல பேரு சொல்லியும் ஒரு வேலையும் நடக்கலை'' என்றாள் சித்ரா.
இருவருக்கும், அவித்த கடலையும், கண்ணாடி டம்ளர்களில் மோரும் கொண்டு வந்து வைத்தாள் மித்ராவின் அம்மா. கடலையை கொரித்துக் கொண்டே கேட்டாள் மித்ரா...
''அக்கா, பட்ஜெட் புத்தகத்துல ஜெ., படம் போட்டு, 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா'ன்னு போட்டிருந்துச்சே, பார்த்தியா?''
''பார்த்தேன்... இதெல்லாம் நான் ஆளுங்கட்சி ஆளுன்னு, 'தண்டோரா' போடுற வேலை...''
''ஆளுங்கட்சின்னு சொன்னதும் தான் ஞாபகம் வந்துச்சு. ஆளுங்கட்சி ஆளுங்க யாரு பேரையாவது சொல்லிட்டு, இருபது வருஷமா, இதே மாவட்டத்துல வேறவேற ஆபீசுல ஆர்.டி.ஓ.,வா இருந்து, பேருக்கேத்த மாதிரி, 'காசு பணம் துட்டு மணி மணி'ன்னு சம்பாதிச்ச ஆபீசரை, கடலூருக்கு தூக்கி அடிச்சிட்டாங்க தெரியுமா?''
''அது தான் ஒனக்குத் தெரியுமா... அவரால, ஆளுங்கட்சியில முக்கியமான ஆளைப் பிடிச்சும், டிரான்ஸ்பரைத் தடுக்க முடியலையாம்''
''நான் சொல்ல வந்த மேட்டர் அதில்லை... இங்க இருந்து, 'டிரான்ஸ்பர்' உறுதின்னு தெரிஞ்சதும், கோவைப்புதூர் ஆபீசுக்கு, 'ஸ்பான்சர்'கள்ல வாங்குன டேபிள், ரோலிங் சேரு, ஸ்பிளிட் ஏ.சி., எல்லாத்தையும் அவரு எடுத்துட்டுப் போயிட்டாராம்''
''ஆர்.டி.ஓ.,ன்னாலே 'தில்'லு தான்... சிங்காநல்லூரு பஸ் ஸ்டாண்ட்ல, தினமும் ராத்திரி பத்து மணிக்கு மேல, ரெண்டு, மூணு ஆம்னி பஸ்கள், திருச்சி, மதுரைக்குப் போகுது. எதுக்குமே 'பர்மிட்' கிடையாது. அதனால, கவர்மென்ட் பஸ்களுக்கு பயங்கர 'லாஸ்' ஆகுது. போலீஸ்காரங்க 50, 100ன்னு வாங்கிட்டு, அனுப்பிர்றாங்க. விசாரிச்சா, அதெல்லாம் ஆர்.டி.ஓ.,க்களே பினாமிக பேர்ல ஓட்டுற வண்டிகளாம்...''
சேனலை மாற்றினாள் மித்ரா. அதில், 'கந்தசாமி' விக்ரம், கடுமையாக 'ரெய்டு' நடத்திக் கொண்டிருந்தார்.
''இதைப் பார்த்தா, நம்ம ஊருல நடக்குற 'ஐ.டி.,ரெய்டு'க தான், ஞாபகம் வருது. ஒரே மாசத்துல, 200 இடங்கள்ல, 'ரெய்டு' நடந்திருக்குன்னு சொல்றாங்க. ஆனா, எங்க என்ன எடுத்தாங்க, யார் யாரு வரி ஏய்ப்பு பண்ணுனாங்கன்னு ஒரு தகவலும் வெளிய வர்றதில்லை...''
''அது பரவாயில்லை மித்து... நம்மூரு ஏர்போர்ட்ல, 'பாரின் சிகரெட்'களை கஸ்டம்ஸ் ஆபீசர்க, அடிக்கடி பிடிக்கிறாங்க; பல லட்ச ரூபா அபராதம் விதிக்கிறாங்க. அங்க பிடிச்சதும், 'கமர்சியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்'ல இருந்து, ஏதாவது ஒரு ஆபீசர் வந்து, அபராதத்துல அவுங்களோட வரியை வாங்கிக்கிறாங்க. ஆனா, சிட்டிக்குள்ள 'பாரின் சிகரெட்' விக்கிற எந்தக் கடையிலயும் இவுங்க ஒரு 'ரெய்டு' கூட நடத்துறதே இல்லை'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல கமர்சியல் டாக்ஸ் ஆபீசருங்க கில்லாடிகளாச்சே... அதுலயும் இப்போ இருக்குற 'ஜாயின்ட்' ஆபீசர், சம்பாதிக்கிறதுல வித்தகனாம்'' என்றாள் மித்ரா.
'டிவி'யில் காமெடி சேனலில், 'செத்தான்டா சேகரு' என்று சூரி, காதைக் கடித்துக் கொண்டிருந்தார். அடுத்த காட்சியில், காக்கி உடையில், கோவை சரளாவிடம் கர்ஜித்துக் கொண்டிருந்தார் வடிவேலு.
''மித்து... இதே மாதிரி, செல்வபுரத்துல ஒரு காமெடி இன்ஸ் இருக்காராம். அவரை 'டம்மி'யா வச்சிட்டு, அங்க இருக்குற எஸ்.ஐ., ஒருத்தரும், உளவுத்துறை போலீசும் சேர்ந்து, ஏரியா முழுக்க கட்டப் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காங்க. அந்த எஸ்.ஐ., தான், இதுக்கு முன்னாடி வெரைட்டிஹால் ரோடு ஸ்டேஷன்ல இதே வேலையத் தான் பண்ணிட்டு இருந்தாரு'' என்றாள் சித்ரா.
''அக்கா... நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்... எம்.பி., எலக்ஷன்ல குன்னூருக்கு பணம் கடத்துன அந்த ஏ.சி.,யோட ஏரியாவுல, போதை மாத்திரைப் புழக்கம் அதிகமா இருக்காம். முத்தண்ணன் குளம் பக்கத்துல, ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு மானாவாரியா 'சப்ளை' ஆகுதாம். அவுங்கள்ட்டயும், ஒரு நம்பர் லாட்டரி, திருட்டு விசிடி எல்லாத்துலயும், அந்த 'டேஷ்' ஆபீசர், அள்ளித் தட்டுறாராம்'' என்றாள் மித்ரா.
''நேர்மையான ஆபீசர்களுக்கு, ஊருக்குள்ள வேலையே இல்லை மித்து... ஹெல்த் டிபார்ட்மென்ட்ல இருக்குற 'டெபுடி' மேடம், டிரான்ஸ்பர், பி.எப்., வாகன பராமரிப்பு, டீசல் செலவுன்னு எல்லாத்துலயும் ஏகமா காசு பறிக்கிறாங்களாம். யாராவது கேட்டா, 'நானே பெரிய தொகை கொடுத்து தான் இங்க வந்திருக்கேன்; அதை எப்பிடி எடுக்கிறது'ன்னு நியாயம் கேக்குறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''இவுங்களாவது, பணத்தைக் கொடுத்து, இங்க டூட்டி வாங்கிட்டு வந்திருக்காங்க. ஆனா, நம்ம டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல 'பப்ளிசிட்டி' வேலையப் பார்க்க வேண்டிய மேடம், பெரிய ஆபீசர்களுக்கு பணத்தைக் கொடுத்துட்டு, டூட்டிக்கே வராம இருக்காங்க...'' என்றாள் மித்ரா.
''மித்து... அதே கார்ப்பரேஷன்ல இருக்குற கேன்டீன்ல போடுற சாப்பாடு, படு கேவலமா இருக்காம். யாரும் சாப்பிடாததால, பன்றிகளுக்குக் கொட்றாங்களாம்...'' என்றாள் சித்ரா.
தனது 'லேப்-டாப்'பைத் திறந்த மித்ரா, எதையோ காண்பிக்க, இருவரும் பேச்சை நிறுத்தி அமைதியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X