"மார்ச் மாதம் என்றாலே, மகளிர் மாதம் போல. மாவட்டம் முழுவதும், மகளிர் தினவிழா அமர்க்களமாக கொண்டாடீட்டாங்க பார்த்தியா,'' என்று கூறியபடியே வந்தாள் சித்ரா.
""ஆமா. மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, விளையாட்டு துறை, போலீஸ் துறைன்னு, நம்ம மாவட்டத்தில், முக்கிய தலைமை பொறுப்புகளில் பெண்கள் இருக்காங்க. சிறப்பாக நடக்காம இருக்குமா என்ன?'' என்றாள் மித்ரா.
""ஆனா, மாநகராட்சி நிர்வாகத்தில் ஒரு பெண் அதிகாரி இல்லாம போயிட்டாங்க,,'' என்று சித்ரா கூறினாள்.
""ஏன், மாநகராட்சி சார்பில் விழா நடக்கவில்லையா,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம் பிரச்னை இல்லை. மகளிர் தினம் முன்னிட்டு, தன்னார்வ அமைப்பினர், 200 பேர், நகரை துப்புரவு செய்ய அனுமதி கேட்டிருக்காங்க. ஆனா, வழக்கம் போல், மாநகராட்சி எந்தவொரு பதிலும் இல்லை. இதனால தன்னார்வலர்கள் மனசு நொந்து போயிட்டாங்க,'' என்று புகார் வாசித்தாள் சித்ரா.
""மிரட்டல் புகாரை பத்தி போலீஸ் விசாரிக்காம, தாக்குதல் வரை போன விஷயம் தெரியுமா,'' என்று மித்ரா வினவினாள்.
""என்ன விஷயம்; எங்கே நடந்தது,'' என, ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.
""வேலம்பாளையம் போலீஸ் லிமிட்டில், ஜன்னல் வைக்கிறது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், தன் பக்கத்து வீட்டுக்காரரான முதியவரை மிரட்டி, தாக்கியிருக்காரு. இது சம்மந்தமாக புகார் கொடுக்க போனா, இதெல்லாம் ஒரு பிரச்னையான்னு கேட்டு, போலீஸ்காரங்க திருப்பி அனுப்பியிருக்காங்க. இதனால இன்னும் தெம்பான தி.மு.க., நிர்வாகி, முதியவரின் கடையையும் சூறையாடியிருக்கார்.
அப்புறம் தான், போலீசார் விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க,'' என்று மித்ரா விவரித்தாள்.
""இடைத்தேர்தலால, அரசியல்வாதிங்க பரபரப்பா இருக்காங்க. போராட்டம் நடத்திட்டு இருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தான், வருத்தமா இருக்காங்க,'' என்று, அரசியல் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஏன், திட்ட இயக்குனர் "ரிலீவ்' ஆனதுக்காக வருத்தப்படறாங்களா,'' என்றாள் மித்ரா.
""ஆமா. கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல காத்திருப்பு போராட்டம் நடந்தப்போ, திட்ட இயக்குனராக இருந்த குருநாதன், நேரில் வாழ்த்தியிருக்கார்.
""அடுத்த நாள், சென்னையில் பெருந்திரள் முறையீட்டுக்கு போனப்ப, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிலர், "எங்க போராட்டத்துக்கு பி.டி., ஆதரவு தெரிவிச்சிருக்காரு; போராட்டம் வெல்லும்'னு உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்காங்க. இந்த தகவல் பரவி, அதிகாரிக்கு வினையாகிடுச்சு. அடுத்த சில மணி நேரத்தில, அதிகாரிக்கு "ரிலீவ்' ஆர்டர் வந்திருச்சு. "பலிகடா' ஆன அதிகாரி, இப்ப "வெயிட்டிங் லிஸ்ட்'ல இருக்காரு,'' என்றாள் சித்ரா.
""எப்படியோ, சொந்த பேச்சுல, தனக்குத்தானே சூனியம் வெச்சுக்கிட்டாருன்னு சொல்லு. பலிகடான்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.
பலரோட எதிர்ப்பை மீறி, தெற்கு தாலுகா ஆபீஸ் கட்டி முடிச்சுட்டாங்க. திறப்பு விழாவும் கமுக்கமா முடிச்சிட்டாங்க. ஆனாலும், எதிர்ப்பு வர்றதாலையும், மயான இடத்தில் ஆபீஸ் இருக்கறதாலையும், "கிடா' வெட்டி பரிகாரம் பண்ணியிருக்காங்க'' என்று மித்ரா கூறினாள்.
""தாலுகா ஆபீஸ் விவகாரத்துல, முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் தானே ஜெயிச்சாரு?,'' என்று கேட்டாள் சித்ரா.
""தி.மு.க., கவுன்சிலர் வார்டுங்கறதால சொல்றயா?''என்றாள் மித்ரா.
""ஆமா. கே.செட்டிபாளையம் மெயின் ரோடு பக்கமாக தெற்கு தாலுகா ஆபீஸ் கட்றதுக்கு இடஞ்சல் செஞ்சது, 37வது வார்டு கவுன்சிலரின் கணவர் தான். கலெக்டர் வேற இடம் கேட்டப்ப, செவந்தாம்பாளையத்துல இடத்த காண்பிச்சு, அங்க தாலுகா ஆபீஸ் கட்ட வச்சதும் அவர்தான். அ.தி.மு.க., என்னதான் "பவர்'ல இருந்தாலும், தாலுகா அலுவலகம் அமைக்கற விஷயத்துல, "மாஜி' தி.மு.க., கவுன்சிலர் கணவர்கிட்ட தோத்து போயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""அதிருக்கட்டும். நாளைக்கு காலை, ஏழு மணிக்கு ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலுக்கு வந்திடு. தெலுங்கு வருஷ பிறப்பில் இருந்தாவது, நம்மூருக்கு
நல்லது நடக்கட்டும்னு வேண்டிக்கலாம்,'' என்று மித்ரா கூறியவுடன், ""ஓ.கே., நான் கௌம்புறேன் மித்து,'' என்று சொல்லி விட்டு, வண்டியில் பறந்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE