பணம் தரும் படிப்புகள் | Dinamalar

பணம் தரும் படிப்புகள்

Added : மார் 29, 2017
பணம் தரும் படிப்புகள்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை மேற்கொண்டு என்ன படிக்க வைக்க வேண்டும் என்பது தான் இப்போது பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான படிப்புகள் சந்தையில் நிறைந்து கிடக்கின்றன. அத்தகைய படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்ன படித்தால் வேலை கிடைக்கும்? எதிர்காலம் சிறப்பாக அமையும்? என்ற கேள்விகளை எடுத்துக் கொண்டு பெற்றோர் ஆலோசனைக் கேட்கிறார்கள்.ஏதோ ஒரு படிப்பை படித்து விட்டு அதற்கேற்ற வேலையைத் தேடுவதால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது.இதற்கு மாற்றாக சந்தையில் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் போதும். பெற்றோர்களின் மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
ரோபோ மயமாகும் துறைகள் : பெரிய நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை ஒரு நொடியில் கூண்டோடு வெளியில் அனுப்பி விட்டு அதற்கு பதிலாக நவீன கம்ப்யூட்டர்களை பணியில் அமர்த்தி விடுகின்றன. இன்னும் அட்வான்ஸாக போய்க்கொண்டு இருப்பவர்கள் மனிதர்களே இல்லாத நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு உருவாக்கி வருகின்றனர். இந்த வகை நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தி வருகின்றன.எங்கும் இயந்திரமயமாக்கல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பதி லட்டு தயாரிப்புகூட இயந்திரமாகி விட்டது. பிலிம்ரோல் பேக்டரி தயாரிப்பை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.வேலை வாய்ப்புக்கு அறிவியல் முன்னேற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும் கூட இன்னொரு பக்கம் மனித வளத்திற்கான மிகப்பெரிய தேவை இருந்து கொண்டே இருக்கிறது.காரணம், தேவைப்படும் பணிகளுக்கான மனிதவளம் உருவாக்கப்படவே இல்லை. ரேஸ் குதிரைகளை மட்டும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் உலகத்திற்கு தேவை போர்ப்படைக் குதிரைகளும், பாரம் இழுக்கும் குதிரைகளும் தான்.தேவையான மனித வளம் எதுசில ஆச்சரியமான உதாரணங் களை பாருங்கள். அலைபேசிபார்ப்பவர்களின் எண்ணிக்கை யும், கம்ப்யூட்டர், லேப்டாப்இவற்றோடு பணிபுரிகிறவர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் கண்பார்வை பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்போகிறது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் கண்மருத்துவத்துறை ஏராளமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கப்போகிறது. அது போல ஆப்டிகல் பிஸினஸ் செய்பவர்களும் கோடிகளை குவிக்கப்போகிறார்கள்.
ஏ.டி.எம். படிப்புகள் : பணமில்லா பரிவர்த்தனை, இன்னும் தீவிரப்படுத்தப்படும். எதிர்காலத்தில் முழுமையாக பணமில்லா பரிவர்த்தனை கொண்டு வரப்படும். இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளும், இன்னும் லட்சக்கணக்கான ஏ.டி.எம்., மெஷின்களை நிறுவப்போகின்றன. எனவே இந்த ஏ.டி.எம்., மெஷின்களை, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு கண்ட்ரோல் இன்ஜினியர்கள் தேவை அதிகரிக்கும். “எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்” படிப்பில் பொறியியல் பட்டம் படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இத்துறையில் காத்துஇருக்கிறது. இன்ஜினியரிங்மெக்கானிக்கல், சிவில், பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களை ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கின்றன. பொறியியல் பட்டங்களோடு கூடுதலாக ஜப்பான் அல்லது ஜெர்மன் மொழியை ஓரளவு எழுதப்படிக்க தெரிந்தால் போதும். அந்தந்த நாடுகள் நடத்தும் மொழித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நல்ல சம்பளத்துடன் வேலைக்கு போய் விடலாம்.
மாற்று மருத்துவம் : மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் பல் மருத்துவத்திற்கு வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. அதே சமயம் சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. அது போலவே ஸ்பீச் தெரபி, ஹியரிங் தெரபி போன்ற படிப்புகளுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் போன்ற படிப்புகளை பெண்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள். தமிழ் கலாசாரத்தில் வளரும் பெண்களுக்கு இவ்வகை படிப்புகள் ஒத்துவருவதில்லை. ஏனெனில் இவை ஆராய்ச்சி படிப்புகள். தொடர்ந்து பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்ட ஆய்வு வரை முடித்தால் தான் இத்துறைகளில் பெண்கள் சாதிக்க முடியும். ஆனால் அப்படி படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை.
அசரடிக்கும் ஆங்கிலம் : பி.ஏ., ஆங்கிலம் படிப்பதை ஏதோ மொழி சார்ந்த படிப்பு என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் பி.ஏ., ஆங்கிலம் என்பது அறிவியல் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை எப்படி பயன்படுத்துவது என்ற மேனுவல் தயாரிக்க ஆங்கிலம் படித்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.எலக்ட்ரிக் ஸ்டவ் கண்டுபிடிக்கிறார்கள், வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்டவ்வை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எழுதி சிறிய புத்தகமாக்கி தருவதற்கு ஆங்கிலம் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு டெக்னிகல் ரைட்டர்ஸ் என்று பெயர்.
உளவியல் படிப்புகள் : உளவியல் படிப்புகளுக்கு உற்சாகமான வரவேற்புள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான உளவியல், மருந்துகளைப் பற்றிய உளவியல். கல்வி உளவியல், ஆகிய படிப்புகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு டாக்டர்களை விட அதிக டிமாண்ட் இருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் தேவைப்படுவதால் உளவியல் படிப்பு படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையில் ஏக கிராக்கி.
பொருளாதாரம் : தேசிய திட்டக்குழு, மாநில திட்டக்குழு, மத்திய ரிசர்வ் வங்கி போன்றவற்றில் பொருளாதாரம் படித்தவர்களுக்கு தேவை உள்ளது. எம்.பி.ஏ., பொருளாதாரம் படிப்பது நல்ல எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்;ஆனாலும் இன்று பொருளாதாரம் படிப்பதற்கு பிளஸ்டூ அளவில் ஏதேனும் ஒரு கணித பாடத்தை படித்திருக்க வேண்டும் என்று கல்லுாரிகள் எதிர்பார்க்கின்றன. எனவே பத்தாம் வகுப்பிற்கு பிறகு 'பியூர் ஆர்ட்ஸ்' வகுப்பில் சேராமல் கணித பாடம் இருக்கிற படிப்புகளில் சேருவது நலம். பொருளாதாரம் படிப்பவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்புகள் உண்டு.
ஆடிட்டிங் படிப்புகள் : சி.ஏ., படிப்புக்கு நிகரானது சி.எம்.ஏ., படிப்பு (சர்ட்டிபைடு மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட்) சி.ஏ., படிப்பிற்கு நிகரான வேலை வாய்ப்பு இந்த படிப்புக்கும் கிடைக்கும்.அனிமேஷன், டிசைன்ஸ், கிராபிக்ஸ், போன்ற துறைகளில் பட்டம், பட்டயம் படிப்பவர்களுக்கு சினிமா, டி.வி. மட்டு மல்லாமல் (பள்ளி, கல்லுாரி பாடங்களை தயாரிப்பதில்) கல்வித்துறையில் உடனடி வேலைவாய்ப்புகள் உள்ளன.கப்பல் துறையில் மெயின்டனன்ஸ் வேலை பார்க்க விரும்புபவர்கள் மரைன் சயின்ஸ் படிக்க வேண்டும். கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய விரும்புபவர்கள் நாட்டிகல் சயின்ஸ் படிக்க வேண்டும்.
சைபர் செக்யூரிட்டி : நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி திருடுவதும், நவீன தொழில் நுட்பங்களையே திருடுவதும் தற்போது அதிகரித்து வருவதால் இவற்றை தடுப்பதற்கான பணியிடங்கள் பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.எஸ்சியின் புதிய வரவான சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கு இந்த துறையில் கைமேல் பலன் கிடைக்கும்.
ராணுவ ரகசியம் : ராணுவத்தில் வேலைஎன்றாலே நாம் உடற்தகுதி திறன், கண்பார்வை திறன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை நிலை அப்படியில்லை. சிப்பாய் வேலைகளுக்குத் தான் உடல்தகுதி அவசியம். மற்றபடி தொழில் நுட்பம், மேலாண்மை சார்ந்த பணிகளுக்கு உடல்திறன், பார்வை திறன் போன்றவற்றை பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.பிளஸ்டூ படிப்பிற்கு பிறகு எஸ்.எஸ்.பி. தேர்வில் வெற்றி பெற்று 4 அல்லது 5 ஆண்டுகள் படித்த பின்பு ராணுவத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடலாம்.நர்ஸிங், இன்ஜினியரிங்;, மருத்துவம் ஆகிய படிப்புகள் ராணுவ நிறுவனங்களால் வழங்கப் படுகின்றன. இங்கு படிக்கும் போதே பாக்கெட் நிறைய உதவித் தொகையும் வழங்குகிறார்கள்.சந்தையில் கிடைக்கிற வேலை களுக்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்து, அந்த படிப்பை படிப்பது உடனடிவேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும். ஏதோ ஒரு படிப்பை படித்து விட்டு அதற்கேற்ப வேலை தேடுவது என்று இனிவரும் தலைமுறை இளைஞர்கள் இருக்கக்கூடாது.முக்கியமாக ஒன்று. என்ன படித்தாலும் சரி, எதிர்கால உலகத்தை எப்படி கையாள்கிறோம் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் படிப்பையும், வேலையையும் விட வாழ்க்கை முக்கியமானது.
-முனைவர். ஆதலையூர்சூரியகுமார், எழுத்தாளர் மதுரை. 98654 02603

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X