சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

பாடம் கேட்டவன்

Added : ஏப் 02, 2017
Advertisement
இராமானுஜர் Ramanujar Download

கேட்பது எம்பெருமான் என்று தெரிந்தும் 'கேட்கும் விதத்தில் கேள்' என்று ஒருத்தர் சொல்வாரோ?

சீடர்களுக்கு அது தாங்க முடியாத வியப்பு. 'அதிலொன்றும் தவறில்லை. சிஷ்யபாவம் சரியாகக் கூடாவிட்டால் வித்தை எப்படி சேரும்?' என்றார் அமுதனார். திருவரங்கம் கோயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் அவர். ராமானுஜர் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். புரிதலில் பிரச்னை. பிறகு உடையவரைப் புரிந்துகொண்ட போது தன்னையே அவரிடம் ஒப்படைத்துச் சரண் புகுந்தவர்.

'என்ன சொல்கிறீர் அமுதனாரே! குறுங்குடி நம்பி கேட்ட விதம் சரியில்லை என்றுதான் நீரும் கருதுகிறீரா?''அதிலென்ன சந்தேகம்? நமது வடுக நம்பியைக் கேளும். அவ்வளவு ஏன், உடையவரே திருக்கோட்டியூர் நம்பியிடம் பயிலப் போனபோது என்ன நடந்ததென்று யோசித்துப் பாரும்!''சரியாகச் சொன்னீர். அரையரிடம் பாடம் கேட்கப் போனபோது அவருக்கு மஞ்சள் காப்பு இட்டுக் குளிப்பாட்டி விடுகிற வேலை வரை செய்திருக்கிறார். இதை அவரே என்னிடம் சொல்லியும் இருக்கிறார்!' என்றார் கிடாம்பி ஆச்சான்.அர்ச்சகர் உருவில் பெருமான் சிரித்தான். 'ராமானுஜரே! உமது சீடர்கள் சொல்லுவதே சரி. இதோ வந்தேன் பாரும்!' என்று சட்டென்று தமது பீடத்தில் இருந்து இறங்கி கீழே வந்து அமர்ந்தான். அர்ச்சகர் மூலமாகவே உடையவருக்கு எங்கிருந்தோ ஒரு பீடம் தருவிக்கப்பட்டு அதில் அமர வைத்தான். பவ்யமாகக் கைகட்டி வாய் பொத்தி, 'இப்போது சொல்லும் சுவாமி! எப்படி உம்மால் இம்மக்களைத் திருத்திப் பணிகொள்ள முடிகிறது?'ராமானுஜர் ஒரு கணம் கண்ணை மூடினார். ஆளவந்தாரை மனத்துக்குள் வணங்கினார். தமக்கு போதித்த ஐம்பெரும் ஆசாரிய புருஷர்களை நினைத்துக் கொண்டார். மெல்ல, பெருமானை நெருங்கி அவன் காதுகளில் த்வய மந்திரத்தை ஓதினார்.'நம்பீ, கேள்! உலகத்தாரைக் காப்பாற்றவோ, கரையேற்றவோ என் முயற்சி ஒன்றுமில்லை. அதைச் சாதித்துத் தருவது எம்பெருமான் திருவடியும் திருநாமமும்தான். இதைச் செய்து கொடு என்று கேட்பதற்கு எனக்கு அவன் இருக்கிறான். பக்தியுடன் ஈடுபடும் எக்காரியமும் வெற்றி பெறாமல் போகாது.'ஆஹா ஆஹா என்று பரவசத்தில் திக்குமுக்காடி நின்றது கூட்டம். எப்பேர்ப்பட்ட தருணம்! யாருக்கு வாய்க்கும் இதெல்லாம்? பரமனுக்குப் பாடம் சொல்லும் ஆசாரியரிடம் நாமும் பயில்கிறோம் என்பது எப்பேர்ப்பட்ட நல்லுாழ்! எம்பெருமானே, எமது ஆசாரியரின் பெருமையை நாங்கள் இன்னும் தெளிவாக உணர்வதற்காகவா இப்படியொரு பேரழகு நாடகத்தை நிகழ்த்திக் காட்டுகிறாய்?அத்தனை பேர் மனத்திலும் அதே வினா.'இல்லையப்பா! இப்படியொரு ஆசாரியனுக்காக நான் காத்திருந்த கதை உங்களுக்குத் தெரியாது. உடையவரே, இன்று நாம் உம்முடைய சீடனானோம்!' பணிவுடன் கரம் கூப்பினான் திருக்குறுங்குடி நம்பி.ராமானுஜர் திருக்குறுங்குடி நம்பிக்கு 'ஸ்ரீவைஷ்ணவ நம்பி' என்ற திருநாமம் தந்தார். திருக்குறுங்குடியில் ராமானுஜ மடம் நிறுவ உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
'புறப்படுகிறேன் நம்பி. இங்கிருந்து திருவண் பரிசாரகம். திருவாழி மார்பனைச் சேவித்துவிட்டு நேரே திருவனந்தபுரம். அப்படியே திருவட்டாறு. எடுத்த பணி மிகப் பெரிது. இடரின்றி நிறைவேற எப்போதும் நீ பார்த்துக்கொள்ள வேண்டியது.'சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.ஒவ்வொரு திவ்யதேசமாகச்
சேவித்துக் கொண்டே திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தபோது ராமானுஜருக்கு அங்கே இரண்டு சிக்கல்கள் இருந்தன. கோயிலுக்குச்சென்று சேவிக்கக்கூட விடாமல் வாதத்துக்கு அழைத்துக் கொண்டே இருந்த பண்டிதர் படை ஒரு பக்கம். அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட திருவாராதன முறையை மாற்றி அமைக்கலாம் என்று அவர் நினைத்ததை, நிறைவேற்ற முடியாமல் தடுத்த திருவனந்தபுரத்து அர்ச்சகர் சமூகம் மறுபக்கம்.
உடையவரால் வாதத்துக்கு வந்தவர்களை எளிதில் வெல்ல முடிந்தது. வைணவத்தின் விரிந்த பெரும் பரப்பில் அத்தனை பேரையும் அள்ளி எடுத்து அமர வைக்க முடிந்தது. ஆனால் கோயில் நடைமுறைகளில் அவர் செய்ய விரும்பிய மாற்றங்களை மட்டும் செய்ய முடியவில்லை.
'பத்மநாபா! ராமானுஜர் என்னென்னவோ சொல்கிறார்.
இதெல்லாம் நமது சம்பிரதாயத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன. பக்தியும் சிரத்தையுமே பிரதானம் என்றால் வழிபாட்டு முறை எப்படி இருந்தால் இவருக்கு என்ன? அருள்கூர்ந்து அவரை விட்டுவிடச் சொல்லு. இந்தக் கோயில் எப்போதும் உள்ள வழக்கப்படியே இயங்கட்டும்!'அர்ச்சகர்களும் உள்ளூர் பக்தர்களும் அனந்த பத்மநாபனிடமே முறையிட்டார்கள். அனந்தன் அவர் கள் கட்சியில் இருந்தான். 'ஓய் உடையவரே, உமக்கு இன்னும் ஆயிரம் தலங்கள் காத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தை விட்டுவிடுங்கள். பாவம் ஜனங்கள் அழுகிறார்கள்!' என்று சொல்லிப் பார்த்தான். ம்ஹும். அவரா கேட்கிறவர்? திருவரங்கத்தில் வராத எதிர்ப்பா? வைகானச ஆகமத்தில் இருந்த நடைமுறைகளைப் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி மாற்றப் போய்த்தான் அவரைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அங்கே எதிரிகள் முளைத்தார்கள். இத்தனைக்கும் உடையவர் முன்னிறுத்திய பாஞ்சராத்ர ஆகமம் என்பது அவர் காலத்தில், அவரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. ஆளவந்தாரே உவந்த ஆகம முறை அது.'ஆனால் காஷ்மீரத்து வைணவர்கள் மூலம்தான் இந்த ஆகம முறை பரவலானது என்று சொல்லுகிறார்களே சுவாமி?'உடையவர் சிரித்தார். 'காஷ்மீரத்து வைணவர்களா? நல்ல கதையாக இருக்கிறதே. செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் -- என்று
பாஞ்சராத்ர ஆகமம் சுட்டும் நான்கு வியூக மூர்த்திகளைப் பரிபாடல் போற்றுகிறதே. அப்படியென்றால் சங்க இலக்கிய காலத்திலேயே காஷ்மீரத்து வைணவர்கள் இங்கே வந்துவிட்டார்களா என்ன?'அதற்குமேல் என்ன பேச முடியும்?ஆனால் என்ன சொன்னாலும் திருவனந்தபுரத்துக்காரர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். பள்ளிகொண்ட பத்மநாபனுக்குத் துாக்கம் கெட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தான். அன்றைக்கு இரவு ராமானுஜர் உறங்கத் தொடங்கியதும் அப்படியே துாக்கிக் கொண்டு போய் திருவட்டாறில் போட்டு விட்டான்.காலை விடிகிற நேரம் ராமானுஜர் கண் விழித்ததும் வழக்கம்போல், 'வடுகா...' என்று அழைத்தார். வடுக நம்பி உள்ளிட்ட அத்தனை சீடர்களும் அப்போது திருவனந்தபுரத்தில்தான் இருந்தார்கள். இரவு என்ன நடந்தது என்பது எப்படி ராமானுஜருக்குத் தெரியாதோ, அதே மாதிரி அவர்களுக்கும் தெரியாது.ராமானுஜர் இரண்டாம் முறை அழைத்தார். 'வடுகா...''சுவாமி, இதோ வந்தேன்!' என்று ஒரு குரல் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X