சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

உரை என்றால் இதுதான்!

Added : ஏப் 03, 2017
Share
Advertisement
அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே நம்பி.ஒரு நியாயம் வேண்டாமா? திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரைத் தூக்கி வந்து திருவட்டாறில் போட்டாகி விட்டது. அவரது சீடர்கள் தேடிக்கொண்டு வந்து சேரும்வரை இங்கே அவருக்கு யார் துணை?எம்பெருமான், தானே அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தான். உடையவருக்குப் பிரிய சிஷ்யரான வடுக நம்பியின்
உரை என்றால் இதுதான்! Ramanujar Download

அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே நம்பி.

ஒரு நியாயம் வேண்டாமா? திருவனந்தபுரத்தில் இருந்து ராமானுஜரைத் தூக்கி வந்து திருவட்டாறில் போட்டாகி விட்டது. அவரது சீடர்கள் தேடிக்கொண்டு வந்து சேரும்வரை இங்கே அவருக்கு யார் துணை?
எம்பெருமான், தானே அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தான். உடையவருக்குப் பிரிய சிஷ்யரான வடுக நம்பியின் தோற்றத்தில் அவர்முன் வந்து நின்றான்.
'வடுகா, ஸ்நானம் ஆயிற்றா?'
'ஓ, இப்போதுதான் முடித்தேன்.' என்று எதிரே வந்து அமர்ந்து முகத்தை நீட்டினார் வடுக நம்பி. தினமும் ராமானுஜர்தான் அவருக்குத் திருமண் இட்டுவிடுவது. அன்றைக்கும் குளித்து விட்டுத் திருமண் இட்டுக்கொண்டு, வடுக நம்பிக்கும் இட்டுவிட்டார். ராமானுஜரின் ஈரத் துணிகளை ஆற்றுக்கு எடுத்துச் சென்று துவைத்துக் கொண்டு வந்து ஒரு பாறை மீது உலர்த்தினார் வடுக நம்பி.
'அனந்தபத்மநாபனுக்கு கோயில் நடைமுறைகளை மாற்றுவதில் விருப்பமில்லை போலிருக்கிறது. என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டான் பார்!'
'பரவாயில்லை சுவாமி. திருவனந்தபுரத்தை விட்டுவிடுவோம். திருவட்டாறு ஆதிகேசவன் உமக்காகக் காத்திருக்கிறான், வாருங்கள்'
உடையவர் கோயிலுக்குச் சென்றார். கண் குளிர தரிசித்து, மனம் குளிர சேவித்து மகிழ்ந்தார்.
அன்றைக்குத் திருவனந்தபுரத்திலும் பொழுது விடியத்தான் செய்தது. உடையவரைக் காணாமல் குழப்பமான சீடர்கள் நகரெங்கும் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் இல்லை என்று தெரிந்ததும் பதற்றமானார்கள். அப்படி எங்கே போயிருப்பார் என்று ஊர் ஊராகத் தேடிக்கொண்டே அவர்கள் திருவட்டாறுக்கு வந்து சேர்ந்தபோது வடுக நம்பிதான் அவரை முதலில் பார்த்தது.
'ஆசாரியர் அதோ அங்கே இருக்கிறார் பாருங்கள்!' -சுட்டிக்காட்டிய திசையில் ராமானுஜர் கோயிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
'சுவாமி!' என்று குரல் கொடுத்தபடி வடுக நம்பி ஓடிவர, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ராமானுஜர். ஒரு கணம்தான். சட்டென்று தன்னருகே வந்து கொண்டிருந்த வடுக நம்பியை அவர் திரும்பித் தேட, அங்கே வடுகன் உருவில் இருந்த பெருமான் இல்லை.
அவருக்குப் புரிந்துவிட்டது. 'எம்பெருமானே, இதென்ன லீலை! சீடனாகத் தரையில் அமர்ந்து உபதேசம் கேட்டது போதாதா உனக்கு?
வடுகனாக வேடமேற்று என் காஷாயத்தையெல்லாம் துவைத்து உலர்த்த வேண்டுமா? இந்த அற்பனுக்குச் சேவகம் செய்து எதை உணர்த்த நினைக்கிறாய்?'
உணர வேண்டியவர்களுக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது!
சேர, சோழ, பாண்டிய தேசத்துக் கோயில்கள் அனைத்தையும் சேவித்து முடித்து உடையவர் குழு வடக்கு நோக்கிப் பயணமானது. கோகுலம், துவாரகை, குருட்சேத்திரம், அயோத்தி என்று சேவித்துக் கொண்டே சென்று காஷ்மீரத்தை அடைந்தார் ராமானுஜர்.
மீண்டும் காஷ்மீரம். மீண்டும் அதே மன்னன். மீண்டும் அதே பண்டிதர்கள்.
ஆனால் இம்முறை சரஸ்வதி தேவி தொடக்கத்திலேயே ராமானுஜரைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டாள். பண்டிதர் நிறைந்த சபையில் அவரது பிரம்ம சூத்திர உரை அரங்கேறியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.
அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பீடத்தின் மீதிருந்த சரஸ்வதி தேவியின் சிலை மெல்ல அசைந்தது. அம்மா என்று அலறிப் புடைத்துக் கொண்டு அத்வைத பண்டிதர்கள் பாய்ந்து எழுந்தபோது, அவள் பீடத்தை விட்டு இறங்கி வந்து உடையவர் எதிரே நின்று ஆசீர்வதித்தாள்.
'ராமானுஜரே! உரை என்றால் இதுதான். விளக்கமென்றால் இதுதான். இது வெறும் பாஷ்யமல்ல; ஸ்ரீபாஷ்யம்!'
ராமானுஜர் கைகூப்பி நின்றார். தேவி, தான் வணங்கும் ஹயக்ரீவரின் விக்ரகத்தை ராமானுஜருக்குப் பரிசாக அளித்தாள்.
காஷ்மீரத்து மன்னனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். 'அற்புதம் ராமானுஜரே. அன்று நீங்கள் இங்கு வந்து போதாயண விருத்தியை வாங்கிச் சென்றது முதல் அதே நினைவாகவே இருந்தேன். இன்று உரை எழுதி முடித்துத் திரும்பி வந்து, கலையரசியின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நிகர் யாருமில்லை!'
'மன்னா, நிகரற்றதென்பது எம்பெருமானின் கருணை ஒன்றுதான். நமது பணிகள் அனைத்தும் மணல் துளியினும் சிறிது. இதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயணரின் உரையை அடியொற்றி ஓர் உரை செய்ய வேண்டுமென்பது எனது ஆசாரியரின் கனவு. இன்று அதை எம்பெருமான் நிறைவேற்றியிருக்கிறான். நான் வெறும் கருவி.'
'உமது தன்னடக்கம் இப்படிப் பேச வைக்கிறது. ஆனால் காலகாலமாக இப்பீடத்தில் எத்தனை எத்தனையோ மகா பண்டிதர்கள் வந்து வணங்கியிருக்கிறார்கள். எவ்வளவோ நூல்கள் இயற்றி வெளியிடப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் பிற பண்டிதர்கள்தாம் போற்றவும் தூற்றவும் செய்திருக்கிறார்களே தவிர, தேவி வாய் திறந்ததில்லை. அப்படியொரு அதிசயம் முதல் முறையாக இன்று நடந்தேறியிருக்கிறது. நீர் பெரியவர். அனைவரிலும் பெரியவர்!'
மன்னனின் பரவசமும் உடனடியாக அவன் வைணவத்தை ஏற்று ராமானுஜரின் சீடனானதும் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்குப் பிடிக்காமல் போனது.
'இந்த மனிதர் அபாயகரமானவர். இவரை விட்டு வைப்பது சரியல்ல.'
'உண்மை. காலகாலமாக நம் மக்கள் கடைப்பிடித்து வரும் அத்வைத சித்தாந்தத்தை ஒரு பிரம்ம ராட்சசனைப் போல் எடுத்து விழுங்கி விடுவார் போலிருக்கிறது.'
'மன்னன் வைணவனாகி விட்டான். மட ஜனங்கள் என்ன ஏது என்று யோசிக்காமல் அப்படியே அவனைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள் பாருங்கள்! இப்படியே விட்டால் தேசம் முழுதும் வைணவத்தை ஆராதிக்கத் தொடங்கிவிடும். அதன்பின் அத்வைதிகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டாலும்
வியப்பில்லை.'
அவர்கள் கூடிக் கூடிப் பேசினார்கள். இறுதியில் ராமானுஜரைக் கொல்ல சில துர்தேவதைகளை ஏவலாம் என்று முடிவு செய்தார்கள். மந்திரவாதிகளைப் பிடித்து விஷயத்தைச் சொல்லி, காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தை முடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.
ஏவல், பில்லி, சூனிய வல்லுநர்கள் ஒன்றுகூடி பண்டிதர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முனைந்தார்கள். ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்றன. அக்னி
வளர்த்து, மந்திரங்கள் உச்சரித்து, அவர்கள் ஏவிவிட்ட துர்தேவதைகள் ராமானுஜரைத் தேடிச் சென்றன.
இதோ இதோ இதோ நடந்துவிடப் போகிறது, ராமானுஜர் மண்ணோடு மண்ணாகிவிடப் போகிறார் என்று காத்திருந்த பண்டிதர்கள் அப்படி ஏதும் நடக்காததைக் கண்டு குழம்பிப் போனார்கள்.
'ஏன், என்ன பிரச்னை? ஏவிய சக்திகள் என்ன ஆயின?'
மந்திரவாதிகளை அவர்கள் விசாரித்த கணத்தில், அனுப்பிய துர்தேவதைகள் பிசாசு வேகத்தில் திரும்பி வந்து அவர்களைக் கவ்வின. ஒரு கணம்தான். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அவர்கள் சித்தம் கலங்கி ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வீதியில் இறங்கி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X