காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு

Updated : ஏப் 05, 2017 | Added : ஏப் 03, 2017 | கருத்துகள் (598)
 காலாவதி, இந்தி, எதிர்ப்பு , திமுக ,

சென்னை: ‛‛இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்; இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லி, திடீர் என, இந்தி விவகாரத்தை வைத்து, மத்திய அரசை கடுமையாக எதிர்க்கத் துவங்கி இருக்கிறார் தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், தமிழிலும் இந்தியிலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அதாவது, ஆங்கிலம் தவிர்க்கப்பட்டு, இந்தி புதிதாக புகுந்துள்ளது. அதற்கு எதிராகத்தான், மு.க. ஸ்டாலின் பேசத் துவங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து, தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும், இதே விவகாரத்துக்காக மத்திய அரசிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.


பாஜ கருத்து:


இது குறித்து, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறியதாவது:
இளைஞர்களின் சக்தியை எப்படியாவது, தி.மு.க., பக்கம் திருப்புங்கள் என, ஸ்டாலினிடம், சிலர் சொல்லியிருக்கின்றனர். அதற்காக, அவர் கையில் எடுத்திருக்கும் பிரச்னைதான், தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டதை எதிர்ப்பது. இதனால், நாடே தத்தளித்து வருவது போல காட்டி, மத்திய அரசை அவர் எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளை, அனைத்து மாநில வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக வாகன ஓட்டிக்ளைத் தவிர மற்றவர்களுக்கு, சரியான வழிகாட்டுதல் தேவை என்றால், அவர்களுக்குத் தெரியாத தமிழ் மொழியில் மட்டும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருந்தால், அவர்களால் எதையும் அறிய முடியாது. அதனால்தான், மைல் கற்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டன.
அதற்காக, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி, ஆங்கிலம் தவிர, தமிழ் மொழிக்கென்று, தனியான மைல் கல்கள் வைக்கப்பட்டு, வழி நடத்தப்படுகின்றனர். இதே நிலை, அந்தந்த மாநில மொழிக்கென்று, தனியான மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, தமிழ் மொழிக்கே ஆபத்து ஏற்பட்டு விட்டது போல, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறி வருவது சரியல்ல.


குடும்பத்தின் நிலை:


இந்தி மொழியை எதிர்க்கிறோம் என்று சொல்கின்ற குடும்பத்தின் நிலை என்ன? டில்லியில் இருந்து அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதற்கு இந்தி தெரிந்தாக வேண்டும் என்று சொல்லித்தான், கருணாநிதி, மாறனை டில்லி அரசியலுக்கு அனுப்பினார். அதே காரணத்துக்காக அவர் மகன் தயாநிதி, மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்படி இவர்களுக்கு டில்லி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதன் முழுப் பின்னணியும், அவர்களுக்கு, இந்தி தெரிந்திருந்ததுதான்.


இந்தி தெரியும்ஸ்டாலின் குடும்பத்திலும் பலருக்கும் இந்தி தெரியும். ஆக, அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் இந்தியை படித்து பயன்படுத்துவர். மற்றவர்கள் இந்தியை கற்க இவர்கள் விடமாட்டார்கள். இதென்ன அரசியல்?இவர்களைப் போலத்தான், இப்போது, அரசியலில் வாய்ப்பு காத்திருக்கும் திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களும் இந்தி பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.உண்மையைச் சொல்லப் போனால், இவர்களின் இந்த இந்தி எதிர்ப்பை மக்கள் ரசிக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. ஆனாலும், அதை வெற்று அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


வேலை போச்சு:


இந்தி எதிர்ப்பு என்பதே காலாவதியான கொள்கை. இன்னமும் அதைப் பிடித்துக்கொண்டு திமுக தொங்கிக்கொண்டு இருக்கிறது.இந்தி கற்காததால் இரண்டு தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு பறி போனது. தமிழகத்தைத் தாண்டி இவர்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. திறமை இருந்தும் இந்தி தெரியாததால், ஒரு வட்டத்துக்குள் முடங்கி விட்டனர். நமது எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டும் என்றால், இந்தி கற்பது நல்லது. அப்போது தான் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கலாம்.


முன்னேறி விட்டதா தமிழ்?மைல் கல்லில் இந்தியில் எழுதுவதால் மட்டும் தமிழ் அழிந்து விடுமா? தமிழர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்பதால் மட்டும் தமிழ் அழியுமா? இந்திய கற்காததால் எந்த விதத்தில் தமிழ் வளர்ந்து விட்டது? இவர்கள் எதிர்ப்பதால் மட்டும் இந்தி அழிந்து விடப்போகிறதா?
1960களில் ஓட்டுகளைப் பெறுவதற்காக இந்தி எதிர்ப்பு கொள்கையை திமுக பயன்படுத்தியது. அதோடு இலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.இனிமேலும் இந்தி எதிர்ப்பைக் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. இக்கால ‛வாட்ஸ்ஆப்' இளைஞர்கள் ரொம்ப தெளிவாகவே இருக்கின்றனர்.


சிந்தனை மாறுமா?


இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காக நடை, உடை, பாவனைகளை ஸ்டாலின் மாற்றினார். ஆனால் வெளித்தோற்றத்தை மாற்றியதால் மட்டும் எந்த பயனும். இளைர்களுக்கேற்ப அவரது சிந்தனையும் மாற வேண்டும்.
‛‛தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி அல்லது வேலை பெறக்கூடிய வேறு ஏதாவது மொழியை கற்றுக்கொள்ளுங்கள்'' என்று மட்டும் கூறினால், இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை ஸ்டாலின் பெற முடியும். வைகோ, திருமாவளன், அன்புமணி போன்றவர்களின் அறிக்கையை படித்துக்கொண்டு இருந்தால், ஸ்டாலினால் மாற்றத்தை கொண்டு வர முடியாது.
அனைத்து நாடுகளிலும் அனைத்து துறைகளிலும் மாற்றம் வந்துகொண்டு இருக்கிறது.நேற்று இருந்த கொள்கை இன்று இல்லை. இன்றைய கொள்கை நாளை இருக்காது.
நிலைமை இப்படி இருக்க, திமுக மட்டும், இந்தி எதிர்ப்பு என்ற பத்தாம்பசலி கொள்கையை கைவிட மறுப்பது, வெட்டி வேலையாகவே அமையும்.இந்தியை எதிர்க்கும் இந்த அரசியல்வாதிகளால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களால் நாடு பின்னோக்கி போனது தான் மிச்சம். இதை இக்கால இளைஞர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.


இழப்பதற்கு என்ன இருக்கிறது?மைல் கல்லில் தமிழ் இல்லாமல் இருந்தாலாவது எதிர்க்கலாம். அதில் தான் தமிழ் இருக்கிறதே. கூடுதலாக ஆங்கிலத்திற்குப் பதில் இந்தி இருக்கிறது. இதில் இவர்களுக்கு என்ன பிரச்னை?
கூடுதல் தகுதியாக தமிழன், இந்தி படிப்பதால் அவனது தகுதி தானே உயரும். இதனாலேயே அவர் தமிழை மறந்து விடுவாரா? இதில் தமிழன் இழப்பதற்கு என்ன இருக்கிறது?
திமுகவில் உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் ஒரு முறை குறிப்பிட்டார். இதுவே, அவரது தந்தையான கருணாநிதியின் கொள்கையில் இருந்து பெருமளவு வித்தியாசப்பட்டது. அதே போல், மனைவியுடன் கோயில்களுக்கும் செல்கிறார் ஸ்டாலின். இதுவும் கருணாநிதியின் நடவடிக்கையில் இருந்து மாறுபட்டது.இதை யாராவது விமர்சனம் செய்தார்களா? எதிர்ப்பு தெரிவித்தார்களா? இதனால் மற்ற மதத்தினரின் ஓட்டு திமுகவுக்கு கிடைக்காமல் போய்விட்டதா?


மாறாத ஓட்டு:உதயசூரியனுக்கு ஓட்டளித்தவர்கள் வேறு யாருக்கும் ஓட்டளிக்க மாட்டார்கள். இதுவும் ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். திமுகவுக்கு கிடைக்கும் ஓட்டுகளை அதிகப்படுத்த வேண்டுமானால், அவர் பொதுவானவர்களின் ஓட்டுக்களையும் பெற வேண்டும். இதற்கு அவர் செய்ய வேண்டியது, அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்படுவது தான்.
வெறும் இந்தி எதிர்ப்பும், இந்துக்கள் எதிர்ப்பும் பொதுவானவர்களின் ஓட்டுக்களைப் பெற்றுத் தராது.


தேவை வித்தியாசமானது


இக்கால இளைஞர்களின் தேவை வித்தியாசமானது. அவர்களுக்கு தேவை நல்ல வேலை. தரமான வாழ்க்கை. மேலும் மேலும் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே, ஒரு அரசின் பணி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது தான். பின்னோக்கி இழுப்பது அல்ல!

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X