முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக!

Added : ஏப் 04, 2017
Share
Advertisement
முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக!

ஷாப்பிங் மால் வாசலில், 'கவண்' படத்துக்கான டிக்கெட்களுடன், சித்ராவுக்காகக் காத்திருந்தாள் மித்ரா. தோழியோடு வந்த சித்ரா, 'இவ என் பிரண்ட் துங்கபத்ரா' என்று அறிமுகப்படுத்தினாள்.
''ஆஹா... சித்ரா- மித்ரா- பத்ரா, செம்ம காம்பினேஷனா இருக்கே; படம் போட, நேரமிருக்கு, ஜூஸ் சாப்பிடலாமா?'' என்று கேட்டாள் மித்ரா. மூவரும் நடந்து, ஜூஸ் குடிக்கச் சென்றனர்.
''மித்து... இவளோட காட்டுக்குள்ள போனா, நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம். நம்ம ஊரு சுத்துறது மாதிரி, இவ காடு சுத்திட்டே இருக்கிறவ'' என்றாள் சித்ரா.
''காட்டைப் பத்தி, தெரிஞ்சுக்கிறது இருக்கட்டும்; நம்ம காட்டிலாகா அதிகாரிகளைப் பத்தி ஏதாவது தெரியுமா?'' என்று கேட்டாள் மித்ரா.
''பாரஸ்ட் டிபாட்மென்ட் பத்தி கேக்குறீங்களா... ம்ஹூம்...'' என்று தலையாட்டினாள் பத்ரா.
''எனக்கு காட்டைப் பத்தி அதிகமா தெரியாது; ஆனா, டிபார்ட்மென்ட் நியூஸ், அப்பப்போ வரும்'' என்றாள் மித்ரா. அவளே தொடர்ந்தாள்...
''இப்போ நம்ம மாவட்டத்துல இருக்குற ஆபீசரைப் பத்தி, ரேஞ்சர்கள் எல்லாம் குமுறித் தள்ளுறாங்க. எப்பப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுறாராம்... யாரையும் நம்புறதே கிடையாதாம். சத்தியில இருக்குறப்போ, நல்லா இருந்த ஆபீசர், இங்க வந்து ஏன் இப்பிடி ஆயிட்டார்னு தெரியலைன்னு புலம்புறாங்க''
''அவருக்கு, எப்பவோ கன்சர்வேட்டர் பதவி வந்திருக்கணுமாம்; ஆனா, இன்னும் வரலைங்கிற கோபமாம். புரமோஷன் வந்தா, இங்கேயே உட்கார்ந்துடலாம்னு முயற்சி பண்றாராம். அதுக்காக, கோயம்புத்துாருக்கு அடிக்கடி வந்து போற, டிபார்ட்மென்ட் வி.ஐ.பி.,யையும், அவுங்க குடும்பத்து ஆளுங்களையும் நல்லா கவனிச்சிட்டு இருக்காராம்''
''அவுங்களை எப்பிடி வேணும்னாலும் கவனிச்சிட்டுப் போகட்டும்... தனக்கு வேண்டப்பட்ட சில பேருக்கு, சிவில் காண்ட்ராக்ட் எல்லாம் கொடுத்திருக்காராம். அந்த வேலைக்கும், அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லையாம். நிச்சயமா 'ஆடிட்'ல சிக்குவாருன்னு, டிபார்ட்மென்ட் ஆளுங்க பேசிக்கிறாங்க...''
''நீ சொல்ற விஷயம் தெரியலை மித்து... ஆனா, காட்டு யானைங்க, ஊருக்குள்ள வர்றதை, 'டீல்' பண்ற விஷயத்துல, அவரு ரொம்பவே, 'அசால்ட்'டா இருக்குறாராம். யானை துரத்துற வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு சம்பளமே தரலையாம்; காட்டு யானைக்கு ஏதாவது பிரச்னைன்னா, அதைக் காப்பாத்தவும் பத்து பைசா, 'பண்ட்' ரிலீஸ் பண்றதில்லையாம்...'' என்றாள் சித்ரா.
'அட ராமா... ராமா...' என்ற மித்ரா, ''அக்கா... யானையப் பத்திப்பேசவும், நம்ம கோவில் யானைகளுக்கு, மேட்டுப்பாளையத்துல நடந்த, 'கேம்ப்' ஞாபகம் வந்துச்சு. அதுல, நம்ம அறநிலையத்துறை ஆபீசரு, பல லட்சம் ரூபாய் பார்த்துட்டாராம். இதுவரைக்கும், 'ஜாயின்ட்' ஆபீசர்க்கு இல்லாம இருந்த 'செக் பவர்' கிடைச்சதும் அள்ளீட்டாராம்'' என்றாள்.
இருவருடைய பேச்சையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த பத்ரா, மூவருக்கும் ஜூஸ், 'ஆர்டர்' கொடுத்தாள். இருக்கை பிடித்து அமர்ந்த பின், சித்ரா கேட்டாள்...
''ஏன் மித்து... ரெண்டு மாசத்துல அவரு ரிட்டயர்டு ஆகப்போறாரே தெரியுமா?''
''ஓ, தெரியுமே. அவரோட இடத்துக்கு, சேலத்துல இருக்குற மங்கையர்க்கரசிங்கிற ஆபீசர் வந்தா நல்லதுன்னு, இங்க இருக்குற இ.ஓ.,க்கள் எல்லாம், கமிஷனருக்கு லெட்டர் அனுப்பிருக்காங்களாம். அந்தம்மா, அவ்ளோ நல்ல ஆபீசராம்...'' என்றாள் மித்ரா.
ஜூஸ் வந்தது; நேரத்தைப் பார்த்தபடி, ஜூஸை ருசித்துக்கொண்டே பேசினாள் சித்ரா.
''இ.ஓ.,ன்னு சொன்னதும், நம்மூர் காவல் தெய்வமான அம்மன் கோவிலுக்கு வந்திருக்குற இ.ஓ.,வைப் பத்தி, ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு. பேருல, 'முத்து' வச்சிருக்கிற அந்த ஆபீசர், 'சாமி' சொத்தை அடிக்கிறதுல மகா கில்லாடியாம். இப்பிடியே அடிச்சு அடிச்சு, சேலத்துல சொந்தமா ஒரு கல்வி நிறுவனமே நடத்துறாராம்...''
''அப்பிடின்னா, சீக்கிரமே இங்க காலேஜ் கட்டிருவார்னு சொல்லு''
''நடக்கலாம்... ஏன்னா... அவரு வந்த மூணே நாள்ல மூணு லட்சம் ரூபாய்க்கு, 'செக்' போட்டு காசு எடுத்திருக்காரு; அப்பிடின்னா எவ்ளோ 'தில்'லான ஆளுன்னு பார்த்துக்கோ...''
''இதெல்லாம் என்னக்கா பெரிய 'தில்'லு... நம்ம கார்ப்பரேஷன் சவுத் ஏரியாவுல இருக்குற முக்கியமான ஆபீசரு ஒருத்தரு இருக்காரு. சம்பாதிக்கிறதுல அவருக்கு இருக்குற 'தில்'லு, வேற யாருக்கும் வராது. ஏற்கனவே, சென்ட்ரல்ல செமையா அள்ளித்தட்டிட்டு இருந்த அவரோட, 'திறமை'யைப் பார்த்து தான், தெற்கால அவரை மாத்துனாங்க...''
''ஓ... அந்த ஆபீசரா, அவரு மிகப்பெரிய, 'ரகசிய வியாபாரி' ஆச்சே... ஆளுங்கட்சி ஆளுங்க சொல்றதை செய்யுறதுக்காகவே, அவதாரம் எடுத்தவராச்சே...''
''அவரே தான்... அவரை யாரு சந்திச்சாலும், 'மயிலைப் போய்ப்பாருங்க'ன்னு அனுப்பி விடுறாராம்''
''என்னது... மயிலையா?'' என்று குழப்பமாய்க் கேட்டாள் பத்ரா.
''இதெல்லாம் ஒங்களுக்குப் புரியாது... அங்க ஒரு சாமி இருக்காரு. ஹெல்த் செக்ஷன்ல இருக்குற ஆளு. அவரு தான், அந்த மண்டலத்துல 'ஆல் இன் ஆல்' ஆபீசர்; அவரு மட்டுமில்லை; அவரோட சம்சாரம், பையன் எல்லாருமே, அதே ஆபீஸ்லதான் வேலை பாக்குறாங்க. சவுத்ல எந்த வேலைன்னாலும், 'மயிலு' இல்லாம நடக்காதுன்னா பார்த்துக்கோங்க...'' என்றாள் மித்ரா.
''அப்பிடின்னா, அந்த, 'ரகசிய வியாபாரி' ஆபீசர்ட்ட வேலை நடக்கணும்னா, இந்த மயிலுக்கு காணிக்கை செலுத்தணுமோ?'' என்றாள் சித்ரா.
''கரெக்ட்... அவருக்காக இவரு வாங்குற காசு எல்லாம், அங்க எப்பவுமே நிக்கிற ஒரு ஸ்கூட்டர்ல தான் இருக்குமாம்...'' என்ற மித்ரா, வண்டி நம்பரை கையில் எழுதிக்காட்டினாள்.
''அந்த ஆபீஸ் காம்பவுண்ட்ல இருந்த ரெண்டு சந்தன மரங்களை சத்தமே இல்லாம ராத்திரியோட ராத்திரியா வெட்டி வித்துட்டாங்கன்னு, எனக்கும் கூட ஒரு தகவல் வந்துச்சு...'' என்று சூழல் செய்தி சொன்னாள் பத்ரா. பில்லை கொடுத்து விட்டு, தியேட்டரை நோக்கி நடந்தனர்.
''மித்து... பி.எஸ்.,3 புயல்ல, நீ எதுவும் புது வண்டி, 'புக்' பண்ணலையா...'' என்றாள் சித்ரா.
''இல்லக்கா... அந்த ரெண்டு நாளா, நம்மூர்ல இருக்குற நாலு ஆர்.டி.ஓ., ஆபீஸ் ஆளுங்கதான் அள்ளித் தட்டீட்டாங்க... டீலர்களுக்கு ராத்திரி, பகலா வேலை பார்த்து, பழைய சரக்கை எல்லாம் வித்துக் கொடுத்துட்டாங்க. ரெண்டே நாள்ல பல லட்சம் ரூபா பார்த்துட்டாங்க...'' என்றாள் மித்ரா.
''சரக்கு வித்ததாச் சொன்னியே... நம்மூர்ல, ஆளுங்கட்சி, 'மினிம்மா' ஆளுங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி, மூடுன டாஸ்மாக் 'பார்'கள்ல, எங்க இருந்தோ சரக்கை வாங்கிட்டு வந்து, பகிரங்கமா விக்கிறாங்க. போலீஸ்காரங்க சுத்தமா கண்டுக்கிறதே இல்லை...'' என்றாள் சித்ரா.
''நீ 'பார்' மேட்டர் சொன்னதும், டாஸ்மாக்ல வேலை பாக்குற பா.ம.க., தொழிற்சங்கவாதியோட ரெட்டை வேடம் ஞாபகத்துக்கு வந்துச்சு. மதுக்கடைகளுக்கு எதிரா, அவுங்க கட்சி சார்புல கேஸ் போட்டதுக்கு, எல்லா தகவலும் எடுத்துத் தந்ததே, 'சுந்தரமான' அந்த யூனியன்காரர் தானாம். அவரு... தான் வேலை பாக்குற கடைய மட்டும் மூடாம, காப்பாத்திக்கிட்டாரு'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... எக்சைஸ் ஆபீசர் 'சப்போர்ட்'லதான், அந்தக் கடைய மூடலையாம்... அந்த 'டேஷ்' ஆபீசர், பேமிலியை ஊர்ல விட்டுட்டு, நாலு வருஷமா இங்கதான் ஓட்டல்ல ரூம் போட்டு தங்கிருக்காராம். அவரை 'கவனிக்கிற' கவனிப்புல தான், கலெக்டருக்கே பொய்த்
தகவல் கொடுத்து, அந்த கடைய அவரு காப்பாத்திவிட்டாராம்'' என்றாள் சித்ரா.
''ஒரு பக்கம், மதுக்கடைக்கு எதிரா போராட்டம்; இன்னொரு பக்கம், அதே மதுக்கடையில வேலை பார்த்துட்டு, ராப்பகலா சரக்கு வித்து சம்பாதிக்கிறதா... நல்லாருக்கே இந்த அரசியல் துாய்மை. ஆளுங்கட்சிக்காரங்களுக்கு இதெல்லாம் தெரியாதா?'' என்றாள் மித்ரா.
மூவரும் தியேட்டருக்குள் நுழைந்தனர்; படம் இன்னும் ஆரம்பிக்காததால், மீண்டும் பேச்சு தொடர்ந்தது...
''மித்து... புதுசா 'மாவட்டம்' பதவியைக் கைப்பத்துன எம்.எல்.ஏ., குடியிருக்குற வார்டுல, பயங்கரமான தண்ணிப் பிரச்னையாம். ஆனா, அவரு வீடு இருக்கிற ஏரியாவுல மட்டும், குழாய்ல தாராளமா தண்ணி வருதாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா... இது பரவாயில்லையே. பல ஏரியால, லாரித் தண்ணி வேணும்னு, அதிகாரிகள்ட்ட ஆளுங்கட்சிக்காரங்க கேட்டு வாங்கி, 10 வீடுகளுக்கு தண்ணியைக் கொடுத்துட்டு, மீதித்தண்ணியை அந்தந்த ஏரியாவுல இருக்குற ஓட்டல்களுக்கு வித்து, காசை வாங்கிக்கிறாங்களாம். இந்த அக்கிரமத்துக்கெல்லாம் ஒரு முடிவே வராதா...'' என்று கொதித்தாள் மித்ரா.
அதிர்ந்த இசையோடு திரையில் வெளிச்சம் பரவ, மூவரும் 'சைலன்ட் மோடு'க்கு மாறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X