சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

மலையில் இருப்பவன் யார்?

Added : ஏப் 05, 2017
Share
Advertisement
'என்ன பிரச்னை?' என்றார் ராமானுஜர். சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரச்னை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது.காலக் கணக்கு கண்டறியப்பட முடியாத காலம் தொடங்கி இருந்து வருகிற கோயில். தொண்டைமான் என்ற பல்லவ குலத்து மன்னன் ஐந்தாம் நுாற்றாண்டுத் தொடக்கத்தில் வேங்கடவனுக்குக்
மலையில் இருப்பவன் யார்? Ramanujar Download

'என்ன பிரச்னை?' என்றார் ராமானுஜர். சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரச்னை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதில் சிக்கல் இருந்தது.

காலக் கணக்கு கண்டறியப்பட முடியாத காலம் தொடங்கி இருந்து வருகிற கோயில். தொண்டைமான் என்ற பல்லவ குலத்து மன்னன் ஐந்தாம் நுாற்றாண்டுத் தொடக்கத்தில் வேங்கடவனுக்குக் கைங்கர்யங்கள் செய்திருப்பதில் ஆரம்பித்து வரலாறு விரியத் தொடங்குகிறது. ஐந்தாம் நுாற்றாண்டு முழுதுமே பல்லவர்கள் திருமலையப்பனின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிறகு சோழர்கள் வந்தார்கள். அடுத்த ஐந்நுாறு ஆண்டுகளில் ஆட்சிகளும் மன்னர்களும் மாறினா லும் கோயில் கைங்கர்யங்களில் எந்தக் குறைவும் வைத்ததில்லை. ராஜேந்திர சோழன் காலத்தில் கோயிலில் இருபத்தி நான்கு விளக்குகள் தடையின்றி எரிய எண்ணெய் தர ஒப்புக்கொண்ட வணிகர்கள், தம் வார்த்தை தவறியதற்காக இழுத்து வைத்து பெரிய விசாரணையே நடத்தியிருக்கிறான். அவர்களது உரிமையை ரத்து செய்து தண்டித்திருக்கிறான். அப்புறம் வந்தவர்கள் காலத்திலும்
கோயில் காரியங்களில் குறையேதும் ஏற்பட்டதில்லை.
சட்டென்று ஒருநாள் எங்கோ ஒரு கல் உதிர்ந்து எல்லாம் கலையத் தொடங்கியதுதான் ஏனென்று யாருக்கும் புரியவில்லை. பெருமானுக்குப் பூஜைகள் நின்று போயின. உற்சவங்கள் இல்லாமல் போயின. தினமும் செய்யப்படுகிற நித்தியப்படியே காணாமல் போனது.'ஆச்சரியமாக இருக்கிறதே?' என்றார் ராமானுஜர். வந்திருந்த துாதுவர்கள், மன்னன் கட்டிதேவ யாதவன் கொடுத்தனுப்பியிருந்த ஓலையை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப்
பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். பிரச்னை மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. ஆகம முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த கோயில் நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத சில அர்ச்சகர்களால் வந்த சிக்கல் அது. மன்னன் கூப்பிட்டு அவர்களைக் கண்டிக்கப் போக, கோபித்துக் கொண்டு கோயிலை விட்டுப் போனார்கள்.
பூஜைகள் நின்றன. திருவாராதனம் நின்றது. பெருமானுக்கு அமுது செய்விக்க ஆளற்ற சூழ்நிலை உண்டானது. யாரும் வராத கோயில் படிப்படியாகத் திருமலை யில் இருந்த சில சிவாசாரியார்கள் வசம் போனது. அவர்கள் தமது வழக்கப்படி கோயிலில் பூஜைகள் செய்யத் தொடங்கியபோது வைணவர்கள் கொதித்துப் போனார்கள்.'அதெப்படி ஒரு வைணவ ஆலயத்தில் சிவாசாரியார்கள் பூஜை செய்யலாம்?'
'சரியப்பா. வைணவ அர்ச்சகர்கள் விட்டுச் சென்ற தலம்தானே இது? பூஜையே இல்லாமல் கதவு சாத்தப்பட்டிருப்பதை விட இது பரவாயில்லை அல்லவா?'
'அதெல்லாம் முடியாது. திருமலையப்பனை ஒரு சைவக் கடவுளாக்குவதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.' எதிர்ப்புகளும் மறுப்புகளும் வலுக்கத் தொடங்கின. சண்டை பெரிதானது. கோயில் யாருடையது என்ற வினா, உள்ளே இருக்கும் மூர்த்தி யார் என்பதில் போய் நின்றது. 'வேங்கடவனின் தாழ் சடையும் நீள்முடியும் வேறு எந்த வைணவக் கோயில் அர்ச்சாமூர்த்திக்கும் இல்லை. அவை சிவச் சின்னங்கள் அல்லவா? வேங்கடவன் வேறு யாருமல்ல; சிவபெருமானே' என்றது ஒரு தரப்பு.'யார் சொன்னது? சைவரும் அல்லாத, வைணவரும் அல்லாத சமணரான இளங்கோவடிகள், பெருமான் கையில் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பதை வருணித்திருக்கிறார். பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி என்ற வரியைச் சிந்தித்துப் பாருங்கள். எத்தனையோ நுாற்றாண்டுகளுக்கு முன்னர் இளங்கோவடிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இது உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? எந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு சங்கு சக்கரம் இருக்கிறது?'
'சமணர் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. கோயிலில் வில்வ அர்ச்சனை உண்டா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில். சிவனுக்குத்தான் வில்வத்தில் அர்ச்சனை செய்வது வழக்கம். எந்த விஷ்ணு கோயிலில் வில்வார்ச்சனை நடக்கிறது? இது சிவன் கோயில்தான்!''அட எம்பெருமானே! ஆதித்யவர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ: என்று ஸ்ரீசூக்தம் சொல்கிறதே. வில்வம் மகாலஷ்மிக்கு உரியது சுவாமி! மகாலஷ்மி தனியாகவா இருக்கிறாள்? அவள் விஷ்ணுவின் மார்பில் உறைபவள். வில்வ அர்ச்சனை இங்குதான் வெகு பொருத்தம்.'
'வேத காலத்தில் சைவ வைணவப் பிரிவுகள் ஏதும் கிடையாது. கோயில் நடைமுறை என்று உருவானதன்பின் சிவாலயங்களில் மட்டும்தான் வில்வார்ச்சனை நடக்கும். நாம் அதைத்தான் அனுசரிக்க வேண்டும்.''இது விதண்டாவாதம். பத்து ஆழ்வார்கள் திருமலையப்பனைப்
பாடியிருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்?' 'ஆழ்வார் பொய் சொல்ல மாட்டார் என்றால், பொன் திகழும் மேனி பிரிசடையம் புண்ணியனும் என்ற பொய்கையார் வரிக்கு என்ன அர்த்தம்? திருமாலை சிவனாக அல்லவா அவர் போற்றித் துதித்திருக்கிறார்?' 'சுத்தம். நீ படைத்த சிவனின் உருவம் உனக்கும் பொருந்துகிறதே என்று ஆழ்வார் அதில் வியப்புத் தெரிவிக்கிறார் ஐயா!'வாதங்கள் இவ்வாறு ஒரு பக்கம் சூடு பிடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அது சிவனுமல்ல; விஷ்ணுவும் அல்ல; மலைக் காவல் தெய்வமான காளிதான் என்று ஒரு தரப்பினர் கொடி பிடித்தார்கள். புராதனமான கோபுரமொன்று திருமலை செல்லும் வழியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, 'அதைக் காளி கோபுரம் என்றுதானே காலம் காலமாக அழைத்து வருகிறோம்? விஷ்ணு கோயில் உள்ள தலத்தில் காளி கோபுரம் எப்படி வரும்?' என்று அவர்கள் கேட்டார்கள். 'ஐயா அது காளி கோபுரமல்ல. காலி கோபுரம். காலி என்றால் காற்று.' என்று எதிர்த்தரப்பு பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
மன்னனின் ஓலை இந்த விவகாரத்தை விளக்கமாக எடுத்துச் சொல்ல, ராமானுஜர் பொறுமையாக அதைப் படித்து முடித்தார். அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவேஅவர் வேறொரு தீவிரமான யோசனையில் இருந்தார்.
சிதம்பரத்தில் கோயில் கொண்டு இருந்த கோவிந்தராஜப் பெருமாள் விக்கிரகத்தை சோழ மன்னன் குலோத்துங்கன் துாக்கிக் கடலில் எறிந்திருக்க, பக்தர்கள் அதை உடையவரிடம் எடுத்து வந்து சேர்த்திருந்தார்கள். 'தில்லையில் கோவிந்தன் மீண்டும் குடிகொள்ள ஏதா
வது செய்யுங்கள்' என்று கேட்டிருந்தார்கள். இது அவர் பாரத யாத்திரை புறப்படுவதற்கு முன்னரே நடைபெற்ற சம்பவம்.சிதம்பரத்தில் மீண்டும் எப்படி கோவிந்தராஜர் விக்கிரகத்தைக் கொண்டு வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தவர் மனத்தில் சட்டென்று திருமலை அடிவாரத்தில் தான் கண்ட புராதனமான வைணவ ஆலயம் ஒன்று நினைவுக்கு வந்தது. பல்லாண்டு காலமாகக் கேட்பாரற்றுக் காட்டுக்குள் இருந்த கோயில். சிதம்பரம் கோவிந்தராஜனைத் திருமலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தால் என்ன?
மன்னன் கட்டிதேவனிடம் பேசி அதற்கு முயற்சி எடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் திருமலையிலேயே பெரும் சிக்கல் என்பது தெரியவந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X