நாமிருக்கும் நாடு நமது என உணர்வோம்!| Dinamalar

நாமிருக்கும் நாடு நமது என உணர்வோம்!

Added : ஏப் 08, 2017 | கருத்துகள் (1)
Share
நாமிருக்கும் நாடு நமது என உணர்வோம்!

தமிழகத்தின் முதல்வராக, மூதறிஞர் ராஜாஜி இருந்த நேரம்; அவர் அலுவலக அறை வாசலில், நிறைய காங்.,- எம்.எல்.ஏ.,க்களும், ஓரிரு கம்யூனிஸ்ட் - எம்.எல்.ஏ.,க்களும் காத்திருந்தனர். திராவிட இயக்கத்தினர் சட்டசபையில் நுழையாத காலம் அது.
எம்.எல்.ஏ.,க்களை அறைக் குள் வருமாறு ராஜாஜி அழைத் தார். உள்ளே நுழைந்ததும், அவர்களை அமரச் சொன்னார். அவர்களை ஏறிட்டுப் பார்த்து, 'என்ன விஷயம்... இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களே... ஏதாவது, முக்கியமான விஷயமா...' என்றார்.
எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர், ராஜாஜியின் கையில் ஒரு கவரை கொடுத்தார். வாங்கிய ராஜாஜி, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்து பார்த்தார். 'ரொம்ப சந்தோஷம்... நல்ல விஷயம் தான்... சென்னை நகரை அழகுபடுத்தி, சுத்தமான நகராக மாற்ற வேண்டும்... வெரி குட்... அதற்காக, லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு போய் பார்த்து வர அனுமதி கேட்டுள்ளீர்கள்.
'நம் நகரம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை மதிக்கிறேன். ஆனால், அதற்காக லண்டன், நியூயார்க் எல்லாம் போக வேண்டியதில்லை. நம் மதுரை நகருக்குப் போக, டிக்கெட் வாங்கித் தருகிறேன்.
'மதுரை எப்படி இருக்கிறது என, பார்த்துவிட்டு, சென்னையை அழகாக வைத்துக் கொள்ளலாமே...' என்றார், ராஜாஜி.
வெளியே வந்த, எம்.எல்.ஏ.,க்களின் முகம், காற்றுப்போன பலுான் மாதிரி இருந்தது. ராஜாஜியிடம் அனுமதி பெற்று, அரசு செலவில் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.
உண்மை தான். பல ஆண்டுகளுக்கு பின், எதற்கோ மதுரை சென்ற போது, ராஜாஜி சொன்ன உண்மை விளங்கியது. அதற்கு பின், பல ஊர்களுக்கு சென்றிருந்தாலும், சேலமும், கோவையும் தான் சுத்தமாக இருந்தன. சென்னை இன்னமும் நரகமாக இருப்பதற்கு என்ன காரணம்?
நகரத்தை நிர்வகிக்க மேயர்; அவருக்கு கீழே, நகர கமிஷனர்; நுாற்றுக்கணக்கான அதிகாரிகள்; அவர்களுக்கும் கீழே, ஆயிரக்கணக்கான ஊழியர்கள்; 200 வார்டுகளின் கவுன்சிலர்கள் என இருந்தும், இன்னும் சென்னை நாறி கொண்டு தான் இருக்கிறது.
அரசு அதிகாரிகளும், நிர்வாகிகளும் மெத்தனமாக இருப்பதால், சாதாரண மக்கள், 'இது, நம் நகரம்' என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர். நுாற்றுக்கு தொண்ணுாற்றி ஒன்பது பேருக்கு, 'ராமன் ஆண்டால் என்ன... ராவணன் ஆண்டால் என்ன' என்ற மனப்பான்மை தான் உள்ளது.
காவல் துறையை எடுத்துக் கொண்டால், பல, ஐ.ஜி.,க்கள், அவருக்குக் கீழே, பல துணை, ஐ.ஜி.,க்கள், கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உதவி இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், சாதாரணக் காவலர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பணி புரிகின்றனர். ஆனாலும், திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு நடக்காத நாட்களே இல்லை.
என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்... அந்தச் செய்திகளைப் படித்து விட்டு, 'நாடே, கெட்டுப் போய் விட்டது சார்...' என, 'கமென்ட்' அடித்து கொண்டிருக்கிறோம்.
அண்மையில், நான் ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்துக்கு, மூன்று மாதம் போய் வந்தேன். அந்த நாட்டு போலீசார், பொதுமக்கள் நடந்து கொண்ட விதம், எனக்கு ஆச்சரியமூட்டியது.
அங்கும், 'டிராபிக் சிக்னல்'கள் உண்டு. போலீஸ்காரர்கள் இல்லாவிட்டாலும், கார்கள், பேருந்துகள், லாரி ஓட்டுபவர்கள், சிக்னல்களை எப்படி மதிக்கின்றனர் என, தெரிந்த போது, மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஜெர்மனியில், பச்சை விளக்கு எரியும் போது மட்டுமே வண்டிகள் ஓடுகின்றன. ஆரஞ்சு விளக்கு எரியும் போதே, கோடுகளை தாண்டாமல் வண்டிகள் நிற்க ஆரம்பிக்கின்றன. சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளின் முன் சக்கரங்கள், மஞ்சள் கோட்டை தாண்டுவதில்லை.
மஞ்சள் கோட்டை தாண்டி, 1 அங்குலம் முன் வந்து நின்றாலும், கேமராக்கள், அது யார் வண்டி என, படம் பிடித்து, அருகே உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்ல, மறு நாளே அந்த வண்டியின் ஓட்டுனருக்கு, 'கோர்ட் சம்மன்' அனுப்பப்படுகிறது.
சாலைகள் அனைத்துமே, அன்று தான் அமைத்த மாதிரி பளிச்சென்று உள்ளன. ஒரு பொத்தல் கூட பார்க்க முடியவில்லை. கேட்டால், 1941க்கு முன், ஹிட்லர் போட்ட சாலைகள் என்கின்றனர்.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு, நம்ம ஊர் தலைவர்கள் போல, லஞ்சம் வாங்கத் தெரியாது போலிருக்கிறது. 70 - 80 ஆண்டுகளுக்கு முன் போட்ட சாலைகள் என்பதை, நம்பவே முடியவில்லை. அத்தனை அற்புதமான சாலைகள். அவற்றில், குப்பை, துாசிகளே கிடையாது.
நான் பார்த்துக் கொண்டே இருந்த போது, மூதாட்டி ஒருவர் அழைத்து வந்த நாய், பாதையில் மலம் கழித்து விட்டது. உடனே அந்த மூதாட்டி, தன் கைப்பையிலிருந்து காகிதத்தை எடுத்து, மலத்தை வாரி, குப்பைத் தொட்டியில் போட்டு, தான் வைத்திருந்த பாட்டில் தண்ணீரில், புல்வெளியில் கை கழுவி சென்றார். நம்ம ஊரில் இப்படி எங்காவது பார்க்க முடியுமா?
பிரான்சிலும் அப்படியே... சாலை, வண்டிகள், ரயில்கள் அனைத்துமே, புதியன போல சுத்தமாக இருக்கின்றன.
சென்னை நகரம் இப்படி மாறுமா?
அண்ணா சாலையும், பாரீஸ் கார்னரும் குப்பையாகவே இருக்கின்றன. வட சென்னையில், ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளிலும் குப்பையும், அழுக்கும் தான் அதிகம்.
காசிமேடு அருகே, மாநகராட்சி, கழிப்பறை கட்டியுள்ளது. அதை யாரும் பயன்படுத்துவதில்லை. பொழுது விடியும் முன் பார்த்தால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பிளாட்பாரத்திலேயே மலம் கழிக்கின்றனர். வண்ணாரப்பேட்டையிலும், இதே நிலை தான்.
சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போதே மாநகரப் பேருந்துகளும், ஆட்டோக்களும் வேகமாக கடந்து செல்கின்றன. பல சமயங்களில் போலீஸ் வேனும் பறக்கும். சட்டத்தை பராமரிக்க வேண்டியவர்களே, சட்டத்தை மீறினால் என்ன செய்வது...
வட சென்னையில், நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் வீடு கட்ட முயன்றேன். அதற்கான வரைபடங்களோடு சென்ற போது, அந்த அதிகாரி, 1,000 ரூபாய் கேட்டார். 'ஏன்?' என, கேட்டபோது, 'எம்.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பி கையெழுத்து வாங்க வேண்டும். நீங்கள் அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள். நான் ரெடி பண்ணி விடுகிறேன்' என்றார்; நான் நம்பி கொடுத்தேன்.
அடுத்த வெள்ளிக்கிழமை... அவர் மேஜை எதிரில் உட்கார்ந்திருந்தேன். நீண்ட நேரமாகியும், அந்த அதிகாரியை காணவில்லை. ஒரு பியூன், என்னிடம் வந்து, 'யாரை பார்க்கணும்...' என்றார்... பெயரை சொன்னேன்; சிரித்தார்.
'அவர் போன செவ்வாய் கிழமையே தாம்பரத்திற்கு, 'டிரான்ஸ்பர்' வாங்கி போய் விட்டார்' என்றார். என்ன அநியாயம் இது... அடுத்த வாரம் இந்த ஊரில் இருக்க மாட்டோம் என தெரிந்தே, என்னை ஏமாற்றியிருக்கிறார், அந்த பில்டிங் இன்ஸ்பெக்டர். இப்படி பலர், பல நகராட்சிகளில். வெட்கமில்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு வேலை விஷயமாக, எங்கள் பகுதி நிர்வாகிகள் சிலரோடு, கமிஷரைப் பார்க்க போனேன். நகராட்சி கமிஷனர் அறைக்கு முன், பெரிய ஹாலில் உட்கார்ந்திருந்தோம். என் விசிட்டிங் கார்டை பியூனிடம் கொடுத்து, கமிஷனரிடம் காட்டச் சொன்னேன்.
ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்த பியூன், 'கொஞ்சம் இருங்க... சார் உங்களை கூப்பிடறேன்னு சொன்னார்' என்றார். அப்போது ஒரு வெட்கக்கேடான சம்பவம் நடந்தது.
நகராட்சி கான்ட்ராக்டர் ஒருவர், ஹாலுக்கு வந்தார். அவரை அனைவருக்கும் தெரியும். அவர்களில் ஒருவர், 'சார்... எங்க நகர்ல, மொதல் மெயின் ரோடே, குண்டும், குழியுமா இருக்குது. சின்ன மழை பெஞ்சா கூட மறுபடி ரோடு பள்ளமாயி, சைக்கிள் கூட போக முடியலை' என்றார்.
அந்த கான்ட்ராக்டருக்கு வந்ததே கோபம். 'யோவ்... உங்க ஏரியாவுல ரோடு போடுற கான்ட்ராக்ட் பேப்பரை கமிஷனர் கையெழுத்துக்காக ஒரு வாரம் முன்னாடியே, உள்ளே குடுத்துட்டேன்யா... அது மட்டுமில்ல... கமிஷனருக்கும், 2 பர்சென்ட் குடுத்தாச்சு... அவன் இன்னும் கையெழுத்து போடலைன்னா, நான் இன்னா செய்றது... கமிஷனரை பார்க்க உள்ளே போற இல்லே... அவன் கிட்டயே கேளு...' என்றார்.
அதிர்ந்து விட்டேன் நான். ஒரு மாநகராட்சி கமிஷனர் லஞ்சம் வாங்கிக் கொண்டதை பகிரங்கமாக, 100 பேர் முன் சத்தம் போட்டு, கான்ட்ராக்டர் சொல்கிறார் என்றால், கமிஷனரின் அயோக்கியத்தனம் எந்த அளவுக்கு இருக்கும்?
இந்த மாதிரியான அவலங்கள், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடக்கிறது. எந்த தார் சாலையும், சிறு மழைக்கு கூட தாக்கு பிடிப்பதில்லை. சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி என, எல்லா நகரங்களிலும் இப்படி தான்.
ஆனால், குடிசையில் வாழ்ந்த கவுன்சிலர், இப்போது மாளிகையில் வாழ்கிறார். நடந்து போன அந்த நபர், இன்று, 'இன்னோவா' காரில் போகிறார். அவர் வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனால், 220 சவரன், 300 சவரன் போகிறது.
ஐந்தாண்டுகளாக, தொகுதிக்கும், மக்களுக்கும் ஏதும் நல்லது செய்யாத கவுன்சிலரும், எம்.எல்.ஏ.,வும், அடுத்த முறையும் நின்று ஜெயிக்கின்றனர்.
தெருவை நாறடிக்கும் நகராட்சியையும், நம்மால் ஜெயித்த கவுன்சிலரையும், நாம் கேள்வி கேட்போம்.. பதில் இல்லை என்றால், மேலதிகாரிகளுக்கு புகார் கொடுப்போம்... அதற்கும் மசியவில்லை என்றால், புகைப்படம் எடுத்து, நாளிதழ்களுக்கு அனுப்புங்கள். அவர்கள் பிரசுரம் செய்த பின், அரசு நடவடிக்கை எடுக்கும்.
விமானத்தில் தவறாக நடந்து கொண்ட, சிவசேனா எம்.பி.,யை, எந்த விமான நிறுவனமும் விமானத்தில் ஏற்ற அனுமதிக்கவில்லை. காரிலேயே, மும்பையிலிருந்து, டில்லிக்கு சென்றுள்ளார். இதை செய்ய முடிந்தது என்றால், ஜனநாயகம் வாழ்கிறது என்று அர்த்தம். வாருங்கள், ஜனநாயகத்திற்காக உழைப்போம். நாமிருக்கும் நாடு, நமது என்பதை உணர்வோம்!
இ - மெயில்:bsr43@yahoo.com - பா.சி.ராமச்சந்திரன் -மூத்த பத்திரிகையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X