த்வயக் காப்பு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

த்வயக் காப்பு

Added : ஏப் 09, 2017 | கருத்துகள் (8)
த்வயக் காப்பு Ramanujar Download

ஒரு மேகத்தைப் போல் நின்று நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது காவிரி. கரையோர மரங்கள் காற்றை நெம்பித் தள்ளும் விதமாக ஆடிக் கொண்டிருக்க, அண்ணாந்து பார்த்துவிட்டு, 'இன்றைக்கு மழை வரும் போலிருக்கிறதே!' என்றார் பெரிய நம்பி.

'நாங்கள் கிளம்பும்போது திருமலையில் நல்ல மழை. ஒரு பெரிய காரியம் சிறப்பாக நடந்தேறியதால் அதை அனுபவித்துக்கொண்டு நனைந்தபடியே கிளம்பி விட்டோம்.' என்றார் ராமானுஜர்.'ஒன்றல்ல, இரண்டு என்று சொல்லுங்கள் சுவாமி. திருமலையப்பனின் அடையாளச் சிக்கல் தீர்ந்தது என்றீர்களே, அது அளிக்கும் நிம்மதி மகத்தானதாக உள்ளது. உண்மையில் சொல்லுவதென்றால் எனது நுாறாவது பிறந்த நாளில் இதைக் காட்டிலும் ஒரு நற்செய்தி
கிடைத்திருக்க முடியாது. என்னைப் பாரும். நுாறு வயது போலவா தெரிகிறது? பத்திருபது வருடங்கள் உதிர்ந்து விட்டதைப் போல இருக்கிறது!' குழந்தை போலச் சிரித்தார் நம்பி.காலை அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுவிட்டு, கோயிலுக்குப் போய் சன்னிதியில் நெடுநேரம் கண்மூடி நின்றிருந்தார் ராமானுஜர்.'உடையவரே, நுாறாண்டுகள் வாழ்வது ஒரு சாதனையல்ல. வாழ்வு நாள் முடியும் காலத்தில் மனக்கவலைகள் மிகுவதுதான் வேதனையளிக்கிறது. சோழன் நம்மைச் சும்மா விட்டுவைக்க மாட்டான் போலிருக்கிறது' என்று சொல்லியிருந்தார் பெரிய நம்பி.திருமலையில் இருந்து அவர் அரங்க நகர் திரும்பிய கணத்தில் இருந்து பலபேர் சுற்றிச் சுற்றி இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். குலோத்துங்கனின் வைணவ விரோத நடவடிக்கைகள். கோயில் மானியங்களை ரத்து செய்கிற நடவடிக்கை. உற்சவங்களைத் தடுக்கிற மனப்போக்கு.
வைணவர்களைத் தேடித்தேடி அவமானப்படுத்துவதில் அவன் அடையும் ஆனந்தம்.'அரசுப் பணியில் வைணவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள் சுவாமி! சிவனே பெரிய கடவுள் என்று ஏற்போருக்கு மட்டுமே மன்னன் சபையில் இடம்.'

'அப்படியா? நாலுாரான் கங்கை கொண்ட சோழபுரத்தில்தானே இருக்கிறார்? சோழனின் அமைச்சர் வைணவரே அல்லவா?' என்று கேட்டார் ராமானுஜர். 'கெட்டது கதை. நாலுாரான் விவகாரம் தெரியாதா உமக்கு? அவர் வைணவர் என்றாலும் மன்னன் வழியே தன்வழி என்று மாறிப் பலகாலமாகிறது.' 'உடையவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? அவர் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி ஆறு வருடங்களாகின்றன. நாலுாரான் கெட்டதெல்லாம் இப்போதுதானே?'ராமானுஜர் அமைதியாக யோசித்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் உள்ளிட்ட சில சீடர்களுடன் அன்று மாலை ஆற்றங்கரைக்கு உலவச் சென்றபோது தற்செயலாகப் பெரிய நம்பி அங்கு ஓரிடத்தில் அமர்ந்திருப்பது கண்டு அருகே சென்று வணங்கினார்.'சுவாமி, தள்ளாத வயதில் தாங்கள் இத்தனை துாரம் நடந்து வர வேண்டுமா?''வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை உடையவரே. மனம் முழுதும் சோழனின் நடவடிக்கைகளைப் பற்றிய கசப்பே நிரம்பியிருக்கிறது. கங்கை பாவம் கரைக்கும் என்றால் காவிரி துக்கமாவது கரைக்காதா?''சுவாமி, தங்களுக்குத் தெரியாததல்ல. வைணவம் அனாதியானது. இது ஒருவர் தோற்றுவித்த சமயமல்ல. என்றும் உள்ளது. எத்தனை இடர் வந்தாலும் வென்று மீள்வது. இங்கே ஒரு யக்ஞேசர் போல பரதக் கண்டம் முழுதும் இந்தப் பயணத்தில் எத்தனை யக்ஞேசர்களைக் கண்டேன் தெரியுமா? வாதத்தின் பெயரால் நிகழ்ந்த விதண்டாவாதங்களை வைணவமே வென்று வாகை சூடியது. காரணம், இது பெருமானுக்கு உகந்த வழி. பெருவழி என்பது இதுவே அல்லவா? எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள். நிரந்தரமற்ற உலகில் வைணவ தருமம் ஒன்றே நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாதா!''உண்மைதான் ராமானுஜரே. ஆனால் சோழன் கண்மண் தெரியாமல் ஆடுகிறான். பலப்பல சிறு கோயில்கள் இந்தச் சில வருடங்களில் இழுத்துப் பூட்டப்பட்டு விட்டன. மன்னனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அறப்பணி செய்வோரும் வைணவத் தலங்களைக் கண்டும் காணாமலும் போக ஆரம்பித்து விட்டார்கள். விளக்கேற்றவும் வழியின்றி பல ஆலயங்கள் இருண்டு கிடக்கின்றன.'

பெரியவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.'புரிகிறது சுவாமி. இதில் நாம் செய்யக்கூடியது என்னவென்றுதான் தெரியவில்லை. உயிர் உள்ள வரை நாம் இத்தருமத்தைவிட்டு விலகப் போவதில்லை. திட சித்தம் கொண்ட யாரும் மன்னனுக்கு அஞ்சி மறுவழி தேடப் போவதுமில்லை. மழையோ வெயிலோ அடித்து ஓயத்தானே வேண்டும்? நாம் அது ஓயும் வரை அமைதி காப்பது தவிர வேறு வழியில்லை.' என்றார் ராமானுஜர்.
சிறு துாறல் விழத் தொடங்கியிருந்தது.'கூரேசரே, பெரியவரை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வாரும்!' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் புறப்பட்டார்.'ஒரு நிமிடம் சுவாமி. என் ஆத்ம திருப்திக்கு நான் ஒரு காரியம் செய்யலாம் என்றிருக்கிறேன்!' என்றார் பெரிய நம்பி.
'சொல்லுங்கள்.''நாளைக் காலை த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கோயிலை நான் வலம் வரப் போகிறேன். நடக்கச் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி தெரியவில்லை. நமக்கெல்லாம் நலம் தரும் சொல் என்றால் அது ஒன்றுதானே. அது காக்கட்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார். 'தங்கள் சித்தம் சுவாமி.''அகந்தையற்ற சுத்த ஆத்மாவான இந்தக் கூரேசரை எனக்கு உதவியாக அனுப்பி வையுங்கள். பிடித்துக்கொள்ள ஒருத்தர் தேவைப்படுகிறார் இப்போதெல்லாம்.'மறுநாள் காலை பெரிய நம்பி, கூரேசரின் கையைப் பிடித்துக்கொண்டு த்வய மந்திரத்தை உச்சரித்தவண்ணம் திருவரங்கம் பெரிய கோயிலைச் சுற்றி வரத் தொடங்கினார். அது ஒரு காப்பு. மந்திரக் காப்பு. கெட்ட நோக்கத்தோடு யாரும் நெருங்க முடியாமல் தடுத்து நிறுத்துகிற காப்பு. உச்சரிப்பவரின் பரிசுத்தம், மந்திரத்துக்கு மேலும் வீரியம் கொடுக்கும். வெறும் உச்சாடனமல்ல. அது தியானம். தன்னை ஆகுதி ஆக்கி, மந்திரத்தில் நிகழ்த்துகிற வேள்வி.

'இது போதும் முதலியாண்டான். பெரிய நம்பியைக் காட்டிலும் ஒரு புனிதர் திருவரங்கத்தில் இன்றில்லை. அவர் செய்கிற த்வயக் காப்பு இம்மண்ணை சோழனிடம் இருந்து காக்கும்.' என்று சொன்னார் ராமானுஜர்.சிறிது காலம் அப்படித்தான் இருந்தது. சோழ தேசம் முழுதும் வைணவர்களைத் தேடித்தேடிச் சித்ரவதை செய்து கொண்டிருந்த குலோத்துங்கன், திருவரங்கத்தின் பக்கம் திரும்பாமலேதான் இருந்தான்.சட்டென்று ஒருநாள் அதுவும் நடந்தது. 'என்ன பெரிய ராமானுஜர்? என்ன பெரிய ஸ்ரீபாஷ்யம்? சிவனே பெரிய கடவுள் என்று அவரையும் சொல்ல வைக்கிறேன் பார்!'நச்சு உமிழ் சர்ப்பமாகச் சீறி எழுந்தது அவனது அகந்தை.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X