எல்லோரும் ஒருசேர நினைப்போம்...மழை பெய்ய!| Dinamalar

எல்லோரும் ஒருசேர நினைப்போம்...மழை பெய்ய!

Added : ஏப் 11, 2017
எல்லோரும் ஒருசேர நினைப்போம்...மழை பெய்ய!

நீர் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிரும் வாழமுடியாது. மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்றாகி விடும்' என்பதை வள்ளுவர்,

நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு”
என்ற குறளின் மூலம் கூறியுள்ளார். தண்ணீர் என்பது குளிர்ச்சி பொருந்திய நீராக அமைந்து, உணவாகவும், அமிழ்தமாகவும் இருப்பதை மறுக்கமுடியாது. மழையின் அருமையை மக்கள் தற்போது உணர்ந்து வருகிற காலம் இது. 'தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே' என்பது பழமொழி. வெப்பத்தால் வருகின்ற நோயை முன் கூட்டியே தடுப்பதற்கு, மாசி மாதத்தில் மாரியை (மழையை) அம்மனாக வழிபடும் வழக்கமும் பலநுாறு ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக, மதுரையில் தெருவுக்கு தெரு 'மாரியம்மன் திருவிழா' கொண்டாடப்படுவது மழை வேண்டியே.

நீர் மேலாண்மை : மழைநீரை சேமித்து வைக்க குளங்கள் வெட்டி நீர் மேலாண்மை செய்த நம் தமிழ் பெருமக்கள், இன்று பல்வேறு நிலைகளில் செய்வதறியாது உள்ளனர். மனித சுய
நலத்தினால் குளங்கள் காணாமல் போனது. வீட்டில் இருந்த கிணறுகள் நாகரிக வளர்ச்சியில் ஆழ்துளை மோட்டார் பொருத்தப்பட்டதே, தண்ணீர் பிரச்னைக்கு முதல் காரணமாக அமைந்தது எனலாம்.தமிழகம் முழுவதும் ஏரிகள், கண்மாய், குளங்கள் என்று தகுந்த நீர் தேவைக்கு ஏற்ப நீராதாரங்கள் எல்லா ஊர்களிலும் அமையப் பெற்றுள்ளது. மதுரையின் முக்கிய நீராதாரமென்பது வைகை ஆறு. மீனாட்சி அம்மையின் திருமணத்துக்கு வந்திருந்த குண்டோதரன் உணவு உண்டபின், தாகத்தை அடக்கச் சிவனிடம் சென்று முறையிட்டா னாம். அப்போது சிவன், வை..கை.. என்று குண்டோதரனுக்கு உத்தரவிட்டு, வைகை ஆற்றைப் படைத்ததாகப் புராணங்கள்கூறுகின்றன.

கோயில் குளங்கள் : ஆன்மிகத் திருத்தலமாகத்திகழும் மதுரையில் ஆலயங்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்கள் நிறைய உள்ளன.மக்களின் நீர்த் தேவையைக் கருதி அவை அவ்வப்போது ஆண்ட மன்னர்களால் உருவாக்கப்பட்டன.திருமலை நாயக்கர் மதுரையில் மன்னராகப் பொறுப்பேற்றதும், மாரியம்மன் கோயிலுக்கு எதிரில் தெப்பத்தை வெட்டியதே அவரது முதற்பணியாக இருந்தது.அவரது பிறந்தநாளாம் தைப்பூசத்தன்று அங்கு தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. இந்தத் தெப்பம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தெப்பமாகக் கருதப்படுகிறது.
வைகையாற்றின் மிகுதியான நீரைச் சேமிக்கும் வகையில், அதன் கட்டுமானம் இருந்தது. ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து தொண்ணுாறாயிரம் கனஅடி கொள்ளளவுக் கொண்ட அந்தத் தெப்பத்தில், எப்போதும் நீர் நிரம்பியிருந்தால் ஐம்பதாயிரம் பேர் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெற முடியும். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது தான், தல்லாகுளம் பெருமாள்
கோயிலுக்குரிய திருமுக்குளம். நான்கு லட்சத்து தொண்ணுாற்றொன்றாயிரத்து எழுநுாற்று முப்பத்தொன்பது கன அடி கொள்ளளவு கொண்ட இந்தத் தெப்பத்திற்கு, வைகை ஆற்றின் கிளைக் கால்வாய் மூலம் நீர் வருவதாக ஏற்பாடு இருந்தது. இந்தக் குளம் மட்டும் தனது முழுக்கொள்ளளவைக் கொண்டிருந்தால், ஆண்டு முழுவதும் ஐந்தாயிரம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும்.
இங்கேயும் பொற்றாமரைக்குளம் இம்மையில் நன்மை தருவார் கோயிலின் உள்ளே இருக்கிறது ஒரு தெப்பம். இதற்கும் பொற்றாமரைக் குளம் என்ற பெயருண்டு. பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. ஒரு லட்சத்து இருபதாயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த
தெப்பத்தில், நீர் நிறைந்திருந்தால் ஆயிரம் மக்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க இயலும். கிருதுமால் நதிமூலம் தண்ணீர் பெற்று வந்த தெப்பம் இது. இத்திருக்கோயிலில் சில ஆண்டு
களுக்கு முன்னர், குன்றக்குடி அடிகளின் பெரும் முயற்சியால் கோயில் குளம் சீர் அமைக்கப்
பட்டது. ஒவ்வொரு பங்குனி மாதத்தில் வரும் தண்டியடிகள் நாயனார் குரு பூஜை நாளில்,
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு பகுதியில் குன்றக்குடி அடிகள் தலைமையில் குளங்கள் துார்வாரப்பட்டு வந்தன.மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப் பட்டது. இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் கன அடி கொள்ளளவு கொண்டது. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்கள், தங்கள் படைப்புகளை இக்குளக்கரையில் அரங்கேற்றியதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. 'வற்றாத
பொற்றாமரை தடந்தோய்ந்திடில் வாராது பின் பிறவி நோய்' என்பது அவ்வையார் வாக்கு.

கூடலழகர் : கூடலழகர் பெருமாள் தெப்பம் மூன்று லட்சம் கன அடி கொள்ளளவு உடையது. இந்தத் தெப்பத்துக்கு வைகையில் இருந்து நீர்வரத்து இருந்திருக்கிறது. இப்போது இது நம்பியிருப்பது மழை நீரை மட்டுமே. இந்தக் கோயிலின் உட்புறத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் ஹேமபுஷ்கரணி என்னும் குளமும் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டது தான். செல்லுார் திருவாப்புடையார் கோயில் லட்சுமி தீர்த்தம் கி.பி.1200-ல் கட்டப்பட்டது. எண்பத்தைந்தாயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட தெப்பம். வைகையாற்றில் இருந்து தண்ணீர் பெறுவதற்கான ஏற்பாடு இக்குளத்திற்கும் இருந்தது. இவையெல்லாம் மதுரை நகருக்குள் கோயிலை சார்ந்திருக்கும் குளங்கள்.'எழுகடல் தெப்பம்' என்ற பெயரால் அழைக்கப்பட்ட சிறு தெப்பக்குளம் ஒன்று தற்போதைய ராயகோபுரத் தெருவில் இருந்ததாக சான்று உள்ளது. சொக்கநாதசுவாமி கோயிலுக்கு முன்புறம் இத்தெப்பக்குளம் அமைக்கப்பட்டதாகவும் விஜயநகர அரசரான கிருஷ்ணதேவராயரின் நன்கொடையாக கி.பி.1516ல் வெட்டப்பட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. “சப்த சாகர தீர்த்தம்” என்ற பெயரும் இதற்குண்டு. வலைவீசித் தெப்பம் என்ற பெயரால் அழைக்கப் பட்டு வந்த தெப்பக்குளமொன்று இன்று இருந்த இடம் தெரியாமல் மாறிவிட்டது. பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இருந்த இந்தக் குளத்தை, மழைக் காலத்தில் தண்ணீர் தேங்குவதை வைத்து மட்டுமே அறியமுடிகிறது. மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு அருகில் இருந்த கிருஷ்ணராயர் தெப்பக்குளம், இன்றைக்கு சந்தையாகி விட்டது.

வைகையின் நிலை : பெரும்பாலான குளங்களில் நீர் ஆதாரமான வைகை ஆறு தற்போது மாசுபடுத்தப்படுகிறது. கால்வாய்களும் கண்மாய்களும் மண்மேவிப்போய் திடக்கழிவுகளால் நிரப்பப்பட்டுள்ளது. மதுரை நகரில் உள்ள வைகை ஆற்றில் மட்டும் நாள்தோறும் தொண்
ணுாற்றெட்டு லட்சம் லிட்டர் சாக்கடைக் கழிவும் ஆஸ்பத்திரி கழிவும் கொட்டப்படுகிறது. நாளொன்றுக்கு எழுநுாற்று பதினொரு டன் குப்பை கொட்டப்படுகிறது. வைகையைப் பராமரிக்கும் பாதுகாக்கும் அக்கறையும் குறைந்து வருகிறது. மதுரை நகரினுள் ஓடும் வைகை ஆற்றுக்குள் துணி துவைத்தல், அதைக் காயப்போடுதல், பழைய பொருட்கள் விற்றல், முடிவெட்டுதல் உள்ளிட்ட சுமார் இருபது தொழில்கள் நடப்பதாகவும் இவை வைகையை மாசுபடுத்துவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. மதுரையில் குப்பைத் தொட்டி யாக மாறிவிட்ட வைகை நதி, முன்பு எப்படியிருந்தது? தனி மனித ஒழுக்கம் சமுதாயத்தை மேம்படுத்தும் என்பதை எல்லோரும் கருத்தில் கொண்டு தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும்.
திருஞானசம்பந்தர், 'மேகராகக் குறிஞ்சி' என்ற பண்ணில் ஏழு தலங்களுக்கு சென்று தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளார். முத்துசாமி தீட்சிதர் 'அமிர்தவர்ஷினி' ராகத்தில் 'கிருதி' பாடி மழையை பெய்வித்தார்.எல்லோரும் ஒரு சேரநினைத்தாலே மழை பொழியும்! ஒருமையுடன் மனதால் நினைப்போமா? -
முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழி இசைத்தமிழ்
அறிஞர், மதுரை. 94439 30540

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X