சித்தர்கள் தந்த அறிவியல் கொடை : இன்று உலக சித்தர் தினம்

Added : ஏப் 13, 2017
Advertisement

அறிவியல் தமிழ் கொடுத்த அருட்கொடைதான் தமிழ் மருத்துவம். எதுகை மோனையுடன் இலக்கணம் சுருதி தவறாமல் சித்தர்கள் மீட்டிய நாதம்தான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த
மருத்துவக் களஞ்சியம். சித்தர்கள் தொடாத எல்லைகளே இல்லை.
விண் அறிவியல், அணு அறிவியல், மருத்துவ அறிவியல், ஐந்திணை அறிவியல், கால ஒழுக்கம், சமய அறிவியல் என பல்துறை அறிவியல் ஆய்வுகளில் முத்து குளித்து பல்வேறு விஞ்ஞான முத்துக்களை ஓலைச்சுவடிகளாக, கல்வெட்டு எழுத்துகளாக, ஏட்டுப்பிரதிகளாக இந்த தமிழ்
உலகிற்கு அருட்கொடையாக தந்துள்ளனர்.பெருஞ்செலவு செய்து, நீண்டகாலம் ஆய்வு செய்து நாம் தற்போது கண்டறிந்த அறிவியல் கருத்துக்களை எல்லாம் சித்தர்கள் தங்கள் மெஞ்ஞானத்தால் உணர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருப்பது ஒரு அறிவியல் அதிசயமாகும்.

பிரளய பெருவெடிப்பு : பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பெரும் பிரளய வெடிப்பினால், நெருப்பு தோன்றி, ைஹட்ரோ கார்பனால் இந்த உலகம் தோன்றியது என்ற 'பிக் பேங்' தியரி பல நுாறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சொன்னதை, சித்தர்கள் தங்கள் பாடலில் மிக அழகாக சொல்லி வைத்துள்ளனர்.

''தேடரு மகண்ட வொளிப் பிழம்பாய் ஞான
தீதப் பூரணமாய் தற்செயல் கொண் டெல்ல''

என பிரளய வெடிப்பினால் தோன்றிய நெருப்பே உலகத்தோற்றத்திற்கு காரணம் என்பதை தேரையர் குணவாகடப் பாடலால் புரியலாம்.

நானோ தொழில்நுட்பம் : மருந்துகள், உலோகங்கள், மின் சாதனங்கள் என 'நானோ' தொழில் நுட்பம் பெருகி வரும் சூழலில், எந்த நிலையில் ஆற்றல் அதிகம் என்பதை திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிஉள்ளார்.

''மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நுாறுடன் கூறிட்டு
மேவிய கூறு ஆயிரமானால்
ஆவியின் கூறு நுாராயிரத்து ஒன்றாமே''

ஜீவன் என்ற ஆற்றல். ஒரு பொருளை 10000000000 மடங்கு நுன்மை படுத்துவதன்மூலம் முழுமையாக பெற முடியும் என்ற தற்போதைய 'நானோ டெக்னாலஜி' தொழில் நுட்பத்தை அறிவியல் முறையில் அந்த காலத்திலேயே திருமூலம் விளக்கியதை நடைமுறையில் நம்மால் உணர முடியும்.

அணுக்கொள்கை :

அணுவில் அணுவினை ஆதிபிரானை
அணுவில் அணுவினை ஆயிரல் கூறிரு
அணுவில் அணுவினை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவினை அணுகலாடுமே.

என திருமூலர், அணுவினை உடைத்து, அணுகும் வல்லமை படைத்தவர்களால் இவ்வுலகையே தன் வயப்படுத்த முடியும் என அணுவின் ஆற்றலை சிறப்பித்து கூறியிருக்கிறார்.
சட்டமுனி சித்தர், ஐம்பூதங்களால் ஆகிய உலகின் பொருட்கள் யாவும், மனித உடலில் ஐம்பூத கூறுபாட்டில் காணப்படுகின்றன. உலகின் இயற்கை மாறுபாட்டில் எப்படி அழிவு ஏற்படுகிறதோ அதுபோல, உடலில் ஐம்பூத மாறுபாட்டில் நோயினால் அழிவும் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். ஆன்மிகத்தால் சித்தர் கொள்கை

''சிவனென்ன சிவனென்ன வேறில்லை
சிவனார் சிவனாரை அறிந்திட்ட பின்
சிவனார் சிவனாராயிட்டாரே''

சித்தர்கள் ஜீவன் என்னும் அறிவும் சிவனும் ஒன்றுதான். அறிவே கடவுள் என்று குறிப்பிடுகின்றனர்.

'நட்டகல்லை தெய்வமென்று
நாலு புட்பம் விற்றிலே
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லும்
மந்திரம் ஏதுடா?...
நட்ட கல்லும் பேசுமோ...
நாதனுள் இருக்கையில்!' என கடவுள் நம் உள்ளேயே இருக்கிறார். அதைதேடி எங்கும் அலைய வேண்டாம் என்ற உண்மையை ஆணித்தரமாக சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார்.

ஐந்திணை மருத்துவம் : தாங்கள் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் நீர் மற்றும் உணவுகளை மட்டுமே அருந்த வேண்டும். அதற்கேற்றார் போலவே நமது இயல்பும் இருக்கும் என்று சித்தர்கள் முன்பே சொல்லியுள்ளனர். குறிஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் கிழங்குகளையும், முல்லை போன்ற வனப்பகுதிகளில் வசிப்பவர்கள் பழங்களையும், மருதம் என்ற வயல் பிரதேசங்களில் வசிப்பவர்கள் விவசாயம் செய்து கிடைக்கும் தானியங்களையும், நெய்தல் என்ற கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மீன், நண்டு ஆகியவற்றையும் உண்ண வேண்டும். பாலை நிலம் மனிதர்கள் வசிக்க உகந்தது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

''குறிஞ்சி வருநிலத்திற்கு கொற்ற டுணடி ரத்தம்...
முல்லை நிலத்தயமே முறிநிறை மேனினுமவ்...
மருதநிலம் நன்னீர் வளருமான்றைக் கொண்டே...
நெய்தனிது மேலுப்பை நீங்கா துளினுமது...
பாலை நிலம் போற் படரைப் பிறப்பிக்க...

-பதார்த்த குண சிந்தாமணி என்ற பாடலில் இதனை தெளிவாக அறியலாம். இதன் மூலம் நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற 'மாறுபாடில்லாத' உணவை உட்கொள்வதே நல்லது என்பதை உணரலாம். அதுபோல் இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி, கார் மற்றும் கூதிர் என்ற ஆறு காலங்களிலும் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என இறையனார் அகப்பொருள் சூத்திரம் விளக்குகிறது.

அறுவை மருத்துவம் : சித்தர் பாடல்களால் நாசித்துவாரம் மற்றும் பிற உடல் துவாரங்கள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யும் முறை மற்றும் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளின் பெயர்கள் மற்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர் மற்றும் நாக முனிவரின் நயன மருத்துவ நுால்களில் செப்புச் சலாகையால் கண்புரையை நீக்கும் முறை மற்றும் பிற உயிரினங்களின் கண்களை பொருத்தும் முறைகளையும் விளக்கியுள்ளது

வியப்பளிக்கும் உண்மைகள்.

''வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் மேல்
மாளாக் காதல் நோயாளன் போல''

என நாலாயிர திவ்ய பிரபந்தம் குறிப்பிடுகிறது. அறுவை சிகிச்சையின்போது கத்தியால் ஒரு உறுப்பை அறுத்து, அதிலிருந்து வரும் குருதி நிற்க 'காட்டாரை சேசன்' என்ற முறையில் சுட்டு பொசுக்கும் நவீன தொழில்நுட்ப முறையை பழங்கால சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியும்போது சித்தர் அறிவியலின் உச்சம் நம்மால் உணர முடிகிறது.

நீர் மருத்துவம்

நீரை பாதுகாக்கும் வழிகளையும், நீரின் குணம் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகளையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

''ஆற்றுத் தண்ணீர்க்கு கழருண்டாம்;
அடைந்த அணைக்கு மதேகரமாம்;
துாற்றி மாறி மெய்யிடுகும்;
துலையாக் கிணறே கயந்திரட்டும்

என 20க்கும் மேற்பட்ட தண்ணீரின் குணங்களையும், அவற்றில் தோன்றும் மற்றும் தீரும் நோய்
களையும் பதார்த்த குண சிந்தாமணி எனும் தொகுப்பு நுாலில் தேரையர் குறிப்பிட்டுள்ளார்.
நோயில்லா வாழ்வு மலம், சிறுநீர் அடக்காமல், காம இச்சை பெருக்காமல், நீரை கொதிக்க வைத்து, மோரை நீர் சேர்த்து பெருக்கி, நெய்யை உருக்கி உண்பவர்களை நோய் அணுகாது என தேரையர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தியும், 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதியும், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கில் மருந்தும், வாரம் ஒரு முறை நகம் வெட்டுதல் மற்றும் சவரமும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலை முழுகலும், 3 நாட்களுக்கு ஒரு முறை கண்ணில் மையும் இடுவதால் இளமையை தக்கவைக்கலாம் என சித்தர் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கரு உற்பத்தி

''ஆண்மையென்று மங்கையர்கள்
பூக்குங் காலம்
அன்று முதல் பதினான்கு நாலும்
தாண்மையன்றி தினமொன்று
இதழ்தானொன்று
கருவான கருக்குழிதான் இந்நாட்டுள்ளே...''

என அகத்தியர் தனது நுாலில் பெண் மாதவிலக்கான நாளில் இருந்து 14வது நாளில் சினை முட்டை தோன்றி அந்நாளில் உறவு கொள்ளும் போது கருத்தரிக்கும். குழந்தைபேறு உண்டாகும் என்பதை 'ஸ்கேன்' போன்ற கருவிகள் இல்லாத நாட்களிலேயே சித்தர்கள் கூறியுள்ளது சித்த மருத்துவத்தின் தொன்மையையும், அறிவியல் புலத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம் என்று ஆறு உலக தொன்மையான மொழிகளில் தற்சமயம் வழக்கில் உள்ள சீனமொழி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே தனக்கு சொந்தமான மருத்துவத்தை கொண்டுள்ளன. இவற்றில் தமிழ்மொழி மட்டுமே எழுத்து மற்றும் பேச்சு என மருத்துவமாக நடைமுறையில் உள்ளதுடன் மருத்துவத்தையும் தன்னுள்ளே கொண்டு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. சித்தர்கள் யாவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து அதனை பதிவு செய்து வைத்து
உள்ளனர். அவற்றின் முறையை ஆராய்ந்தால் இவ்வுலக மேம்பாட்டிற்கான பல்வேறு அறிவியல் உண்மைகளையும், ஆய்விற்கான அடிப்படை தளத்தையும் நாம் பெற முடியும். சித்தர்களின் தினமான தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள் சித்திரை 1 அன்று சித்தர்கள் தமிழுக்கும், உலகத்திற்கும் வழங்கிய அறிவியல் கொடையை போற்றுவோம்.

-ஜெ. ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவர், மதுரை
98421 67567.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X