சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

தாள் கண்டார், தாளே கண்டார்!

Added : ஏப் 14, 2017 | கருத்துகள் (2)
Advertisement
தாள் கண்டார், தாளே கண்டார்! Ramanujar Download

அந்த வேடர் குடியிருப்பு ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. நான்கு புறமும் சூழ்ந்திருந்த மலையின் மடி தெரியாமல் மரங்கள் அடர்ந்திருந்தன. தொலைவில் தெரிந்த சிறு விளக்கொளியைக் கண்டுதான் உடையவரின் சீடர்கள் அந்த இடம் நோக்கி வந்தார்கள்.
'யார் நீங்கள்?'குடிசைக்கு வெளியே படுத்திருந்த வேடர்கள் எழுந்து வந்து கேட்டார்கள்.'ஐயா நாங்கள் திருவரங்கத்தில் இருந்து வருகிறோம். இருட்டுவதற்குள் இக்காட்டைக் கடந்துவிட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. இரவு தங்க இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்.''திருவரங்கமா? அங்கே உடையவர் நலமாக இருக்கிறாரா?'அதே கேள்வி. திருவரங்கத்து பக்தர்களை வழியில் சந்தித்த வேடர்கள் கேட்டதும் அதுதான். அந்த பக்தர்களைப் போலவே ராமானுஜரின் சீடர்களும் வியப்பாகிப் போய், 'உங்களுக்கு உடையவரை எப்படித் தெரியும்?' என்று பதில் கேள்வி கேட்டார்கள்.அதே பதில். அதே நல்லான் சக்கரவர்த்தி. அதே இறைவன் சித்தம். ராமானுஜர் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் குடியிருப்பில் இருந்த வேடர்கள் பரபரப்பாகி விட்டார்கள். 'ஐயோ, உண்ணவும் உறங்கவும் இடமின்றி உடையவர் காட்டில் தனித்திருக்கிறாரா! இதோ வருகிறோம்!' என்று பாய்ந்து உள்ளே சென்று, தத்தம் வீட்டில் இருந்த பழங்களையும் பிற உணவு வகைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் உடையவர் இருக்குமிடம் நோக்கிப் போன பிறகே திருவரங்கத்து பக்தர்கள் தாம் சந்தித்த வேடர்களோடு அந்த வேடுவர் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள். பசி தீர உண்டு முடித்ததும் வேடர்கள் அவர்களை அங்கேயே உறங்கச் சொன்னார்கள். 'இல்லை ஐயா. உறங்கிப் பொழுதைக் கழிக்க எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் உடையவரை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். காடானாலும் இரவானாலும் பொருட்டல்ல.''நல்லது. நாங்களும் தேடுகிறோம். நீங்கள் வடக்கு நோக்கித்தானே தேடிப் போகிறீர்கள்? எங்களுக்கு அவர் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்குத் தகவல் கொண்டு வந்து சேர்ப்போம்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.மறுபுறம் உடையவரைச் சந்தித்த அதே வேடர் இனத்தின் வேறு சிலர், அவருக்கு உணவளித்து, நடந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டார்கள்.'சுவாமி, தங்கள் அருமை அந்தச் சோழனுக்குத் தெரியவில்லையே. சோழன் எங்கள் குருநாதர் நல்லான் சக்கரவர்த்தியை ஒரு முறையாவது சந்தித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அவன் மனம் திருந்தியிருப்பான்!''அப்பனே, இந்தக் கொடுங்கானகத்தில் நல்லான் நாலு நற்பயிர்களை விதைத்துச் சென்றிருக்கிறார். நாடெங்கும் அவர் நடும் ஜீவத்தருக்கள் காலகாலத்துக்கும் செழித்திருக்கும். ஒரு சோழன் சரியில்லாதது ஒரு பொருட்டல்ல. மக்கள் தெளிந்து விட்டால் போதும்' என்றார் ராமானுஜர். அவர்கள் அங்கேயே உடையவரும் சீடர்களும் தங்க கூடாரம் அமைத்துக் கொடுத்தார்கள். இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்து காவல் காத்தார்கள். விடிந்ததும் அவர்கள் குளிப்பதற்கும் நித்ய கர்ம அனுஷ்டானங்களைச் செய்வதற்கும் வழி செய்து கொடுத்தார்கள்.'வேடர்களே, எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்!' என்றார் ராமானுஜர்.'உத்தரவிடுங்கள் சுவாமி.''உங்களில் ஒருவர் திருவரங்கம் சென்று நாம் நலமாக இருப்பதை அங்குள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் எங்களுடன் உங்களில் சிலர் இந்த நீலகிரி மலையைக் கடக்கும்வரை துணைக்கு வர வேண்டும்.'இரண்டும் நடந்தது. வேடுவர்களுள் ஒருவன் உடையவரின் சீடருடன் திருவரங்கம் நோக்கிச் செல்ல, உடையவரும் பிற சீடர்களும் நாலைந்து வேடுவர்களின் துணையுடன் அன்றே தம் பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் தம் குடியிருப்புக்குத் திரும்பி வந்தபோது தான் திருவரங்கத்தில் இருந்தே சில பக்தர்கள் உடையவரைத் தேடி அங்கே வந்த விவரம் அவர்களுக்குத் தெரிந்தது.'அடக்கடவுளே! ஒரே இரவில் இரு தரப்பினரும் இந்தப் பகுதிக்கு வந்தும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் போய் விட்டதே' என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.ராமானுஜர் தம் குழுவினருடன் இரண்டு நாள்கள் ஓய்வின்றிப் பயணம் செய்து கர்நாடகத்தின் எல்லையைத் தொட்டார். கொள்ளைக்கலம் என்னும் இடத்தை அவர்கள் வந்தடைந்தபோது ஒரு மூதாட்டி எதிர்ப்பட்டார்.'அதோ பாருங்கள்! வருவது யார் தெரிகிறதா?'உடையவர் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் பார்த்தார்கள். 'சுவாமி, அது நம் கொங்குப் பிராட்டியார் அல்லவா?'சுமதி என்ற இயற்பெயர் கொண்டஅந்தப் பெண்மணி ராமானுஜரின் பரம பக்தை. திருவரங்கத்துக்கு வந்து மடத்தின் அருகே தங்கியிருந்து அவரிடம் உபதேசம் பெற்றுத் திரும்பியவர். ராமானுஜர் பாசத்துடன் அவரைக் கொங்குப் பிராட்டி என்று அழைப்பார். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் அந்தப் பிராட்டியைச் சந்திக்க நேர்ந்ததில் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. ஆனால் வெள்ளை உடையில் இருந்த ராமானுஜரை அந்தப் பெண்மணிக்கு அடையாளம் தெரியவில்லை.'ஐயா நீங்களெல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்?''திருவரங்கத்தில் இருந்து வருகிறோம் தாயே.''அப்படியா? அங்கு நிகழ்ந்த சம்பவங்களைக் கேட்டதில் இருந்து எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எம்பெருமானார் எப்படி இருக்கிறார் என்ற தகவலே தெரியவில்லையாமே?'சீடர்கள் புன்னகை செய்தார்கள்.
'தாயே, எம்பெருமானார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள்!'திடுக்கிட்ட பெண்மணி, 'என்ன சொல்கிறீர்கள்?''எங்கள் முகங்களைப் பாருங்கள் தாயே. உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?''இல்லை. எனக்கு அவர் முகத்தைக் காட்டிலும் பாதங்களே பரிச்சயம். இருங்கள்!' என்றவர், வரிசையாக ஒவ்வொருவர் பாதங்களையும் பார்த்துக்கொண்டே வந்து ராமானுஜரின் பாதங்களைக் கண்டதும் பரவசமாகிப் போனார்.'இதோ என் ஆசாரியர்!' என்று அப்படியே காலில் விழுந்துக் கதறத் தொடங்கினார். சீடர்கள் வியந்து போனார்கள்.'இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொங்குப் பிராட்டி திருவரங்கத்தில் இருந்து விடைபெற்றுக் கிளம்பும்போது உடையவரின் பாதுகைகளைக் கேட்டு வாங்கிச் சென்றார். அவருக்கு ஆசாரியரின் பாதங்களும் பாதுகைகளுமே உலகம்' என்றார் முதலியாண்டான்.'சுவாமி, வீதியிலேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடியாளின் வீட்டுக்குத் தாங்கள் எழுந்தருள வேண்டும்!'உடையவரும் சீடர்களும் ஒரு சில நாள்கள் அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவரது கணவருக்கு த்வயம் உபதேசித்து, கொங்கிலாச்சான் என்ற பெயரிட்டு வைணவ தரிசனத்தில் இணைத்தார் ராமானுஜர். அதுவரை சோழனுக்கு அஞ்சி, சீடர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர் அணிந்திருந்த வெண்ணுடைகளை அங்கே களைந்து மீண்டும் காவி ஏந்தினார். கொங்குப் பிராட்டியிடம் விடைபெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார்.மைசூருக்கு மேற்கே சிறிது தொலைவில் இருந்த மிதிளாபுரியைச் சென்றடையும் வரை அவர்கள் வேறு எங்கும் தங்கவில்லை.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-ஏப்-201703:29:53 IST Report Abuse
மலரின் மகள்கள் இங்கு சொல்லப் பட்டிருக்கும் நீலகிரி என்பது ஊட்டி மலையா? அப்படி என்றால் ராமானுஜர், திருச்சியில் இருந்து கோவை வந்து குன்னூர் வழியாக அடர்ந்த மலை காடுகளூடே மைசூரு சென்றடைந்தாரா? திருப்பதி திருச்சி ஊட்டி மைசூரு என்று நடை பயணமாகவே தென்னகத்தை சுற்றி இருக்கிறாரா? பாதைகள் எப்படி அறிந்து கொண்டார். வான சாஸ்திரம் தெரியுமா அவருக்கு? ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் வாழக்கை பயணம். சுமதி என்ற ஒரு பெயரை தவிர மற்ற அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
17-ஏப்-201722:47:30 IST Report Abuse
Manianஇன்றைய நிலப் பிரிவுகள், போக்குவரத்து இல்லாத காலத்தில் காடுகள் வழியே போயிருக்கவேண்டும். வேடர்கள், முன்பு சென்ற யாத்திரிகர்கள், நாட்டு எல்லைகள் எல்லாம் தெரிந்தவர்களிடம் கேட்டு (முன்பே தெரிந்து கொண்டு) போயிருக்கலாம். இன்றைய பிரயாண முறைகள் இல்லாததால், நானா சாஸ்திரராம் தெரிந்த - வட திசையில் அருணத்தை நட்ஷத்திரம் (இன்று ஐயர்கள் கலியாணத்தில் அம்மி மிடிடிக்கு , அருந்ததி காட்டுவார்கள்), முன் கொண்டு போயிருக்க வேண்டும். நம்மை விட காலரா நடந்து, வண்டி, குதிரைகள் மேல் சென்றே பிரயாணம் நடந்த காலம் அது. உதாரணமாக, பாபநாசம்(திருநெல்வேலி மாவட்டம்) பக்கத்தில் உள்ள மலையப் பாதை மூலம் கேரளாவுக்கு வழி உண்டு. ஆனால் இன்னும் அது முழு படையாக பொது ஜன வாகன போக்குவரத்திற்கு தயாரில்லை. எனது பாட்டனார் அது பற்றி என் தந்தையிடம் சொல்லி இருக்கிறாராம். சில காலம் முன்பு இது பற்றியும் ஊடங்களில் படித்த நினைவு வருகிறது. பொதுவாக காட்டில் ஆடு, மாடு மேய்க்கும் கோன்னர்களுக்கு இந்த பாதைகள் தெரியும். ராமானுஜருக்கு ஜாதி பேதம் இல்லாததால் அவர்கள் யாராவது வழி காட்டி இருக்கலாமே -கற்றதும், பெற்றதும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X