சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

குளமும் கடலும்

Added : ஏப் 15, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
குளமும் கடலும் Ramanujar Download

ஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் இருந்தது. மைசூரைச் சுற்றிய பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் வீர சைவமும் சமணமும்தான் பிரதானமான மதங்கள்.

பிறந்த கணம் முதல் கழுத்தில் லிங்கத்தை அணியும் லிங்காயத மதம் என்னும் வீர சைவம், சைவத்தின் தீவிரப் பிரிவுகளுள் ஒன்று. தாந்திரீகத்தை உள்ளடக்கியது. தாந்திரீகம், அதர்வ வேதத்தில் இருந்து கிளைத்து வருவது. பக்தி இயக்கம் இதனை ஆதரிப்பதில்லை. ராஜராஜ சோழன் தென்னகமெங்கும் புகழ் பெற்ற மன்னனாக ஆட்சி புரிந்த காலத்தில், தனது சைவப் பணிகளில் ஒன்றாகத் தாந் திரீகத்தை வளரவிடாமல் செய்வதை மேற்கொண்டான். தாந்திரீகப் பாடசாலைகளைத் தமிழ் மண்ணில் இருக்க விடாமல் செய்தான். தமிழகம் ஏற்காத தாந்திரீகத்தைக் கர்நாடகம் ஏற்றது. வீர சைவர்களின் ரகசிய
அடையாளமாக அது மாறியது. அவர்களுக்கு சிவம் என்பது சகல உயிர்களுக்குள்ளும் இருப்பது. தனியே கோயிலில் உள்ளதல்ல. சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்று அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்க நெறிகள் உண்டு. எட்டு வகைக் காப்புகள், ஆறு வகைப் பயிற்சிகள் என்று அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது.
மறுபுறம் ஜைனம், ஆருகதம், நிகண்டம், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட சமணமும் கர்நாடகத்தில் தழைத்துக் கொண்டிருந்தது. சமணம் என்ற சொல்லுக்குத் துறவு என்று பொருள். துறவறத்தை வற்புறுத்திச் சொல்லுகிற மதம் அது. வீடு பேறு அடைய துறவேற்பதே ஒரே வழி என்பார்கள்.

ஆனால் இறை மறுப்பு என்பதே சமணத்தின் அடிப்படை. கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தியாகத்தையும் வற்புறுத்துகிற மதம் அது. காலவரையறைக்கு அப்பாற்பட்டது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிற ரிஷப தேவரையே சமணர்கள் தமது முதல் தீர்த்தங்கரர் என்று சொல்லுவார்கள். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் காலத்தில்தான் சமணம் ஒரு மதம் என்கிற அடையாளத்தையும் உரிய சீர்திருத்தங்களையும் பெற்றது.ராமானுஜர் தமது சீடர்களுடன் பிட்டி தேவனின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் அடியெடுத்து வைத்தபோது இந்த இரு மதத்தாரும் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களுக்கு உடையவரைத் தெரிந்திருந்தது. காஷ்மீரம் வரை சென்று வைணவம் பரப்பிய பெரியவர். மதத் தலைவர்களை வாதில் வென்று மன்னர்களை வைணவத்தின் பக்கம் திருப்பியவர். இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார்? இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.வீர சைவர்களும் சமணர்களும் நண்பர்கள் அல்லர். ஆனால் உடையவரை எதிர்க்கும் விஷயத்தில் இருவரும் ஒரே நோக்கத்தோடு தனித்தனியே ஈடுபட்டார்கள்.மிதிளாபுரி என்ற பகுதிக்கு ராமானுஜர் முதல் முதலில் வந்து சேர்ந்தபோது ஊரே திரண்டு எதிர்த்தது.'என்ன செய்யலாம் சுவாமி? இங்கே இருக்க முடியாது போலிருக்கிறதே!' என்று கவலைப்பட்டார்கள் சீடர்கள்.ராமானுஜர் கண்மூடி அமைதியாகச் சில வினாடிகள் யோசித்தார். பிறகு முதலியாண்டானைப் பார்த்து, 'நீர் ஸ்நானம் செய்து விட்டீரா?' என்று கேட்டார்.
'இல்லையே? இனிதான் எல்லோருமே நீராட வேண்டும்.

''அப்படியானால் ஒன்று செய்யும். நீர் முதலில் கிளம்பிப் போய் இந்த ஊரில் இருக்கிற குளத்தில் குளித்துவிட்டு வாரும்.' ராமானுஜர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. அது விடிகாலைப் பொழுது. வெளிச்சம் வந்திராத நேரம். முதலியாண்டான் ஏன் எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்டுக் கொண்டிருக்காமல் உடனே கிளம்பினார். நேரே ஊரின் மத்தியில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளக்கரையில் யாரும் இல்லை. நல்ல குளிர் இருந்தது. இருளில் குளத்தின் நீர் அலையடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் களைந்து ஓர் ஓரமாக வைத்து
விட்டுக் குளத்தில் இறங்கினார்.நீரில் அவர் பாதம் பட்ட மறுகணமே ஒரு குரல் ஓடி வந்தது. 'சுவாமி! உம்மைக் கால் அலம்பிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆசாரியர் சொல்லச் சொன்னார்.'பின்னாலேயே விரைந்து வந்து தகவல் சொன்ன சீடருக்கே உடையவர் ஏன் தாம் முன்னர் சொன்னதை மாற்றிச் சொன்னார் என்று புரியவில்லை. முதலியாண்டான் கால்களை மட்டும் கழுவிக்கொண்டு கரை ஏறி விட்டார்.சில மணி நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அந்த ஊரில் இருந்த வீர சைவர்களும் சமணர்களும் ராமானுஜர் இருக்கும் இடத்தைத் தேடி வர ஆரம்பித்தார்கள். 'சுவாமி! தங்கள் அருமை புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம். நீங்கள் பெரிய மகான். தங்கள் சித்தாந்தம் மதிப்பு வாய்ந்தது. எங்களுக்கும் அதை விளக்கிச் சொல்லி அருள வேண்டும்!'ராமானுஜர் புன்னகை செய்தார். அன்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. மிதிளாபுரியின் அத்தனை வீர சைவர்களும் சமணர்களும் உடையவரிடம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பாடம் கேட்டார்கள். 'இதுவல்லவோ முக்தி நெறி, இதுவல்லவோ கதி மோட்சம் தர வல்லது!' என்று பரவசப்பட்டுவைணவத்தைத் தழுவி, பரம பாகவதர்களாகிப் போனார்கள்.'சுவாமி, தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது இங்கே? நாம் ஊர் எல்லையை நெருங்கும் முன்னரே விரட்டியடிக்கப் பார்த்தவர்கள் எப்படி இப்படி மனம் மாறினார்கள்?' சீடர்கள் ஆர்வம் தாங்க மாட்டாமல் கேட்டார்கள்.'நான் எதுவுமே செய்யவில்லையப்பா! செய்ததெல்லாம் முதலியாண்டானின் பாதம் பட்ட நீர்தான்!' என்றார் ராமானுஜர்.
திட சித்தமும் ஆழ்ந்த பக்தியும் தெளிந்த ஞானமும் பரந்த மனமும் கொண்ட முதலியாண்டானின் பாதம் பட்ட நீரில் அவர்கள் அன்று காலை குளித்தெழுந்தபோது அவர்கள் சித்தம் மாறியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது.'நம்பவே முடியவில்லை சுவாமி! இது அற்புதம்தான். சந்தேகமே இல்லை!''நிச்சயமாக இல்லை. இது சாதாரணம். பாகவத உத்தமர்களை பகவான் கைவிடுவதே இல்லை' என்றார் ராமானுஜர். மிதிளாபுரிக்கு அருகே தொண்டனுார் என்ற ஊரில் உடையவரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவர்மூலம் இந்த விவரம் மன்னன் பிட்டி தேவனுக்குத் தெரியவந்தது.'அத்தனை பெரிய மகானா? அவரது சீடரின் பாதம் பட்ட நீருக்கே இந்த சக்தி என்றால் அவரது பார்வை இங்கு பட்டால்?' 'அழைத்துப் பேசுங்கள் மன்னா. தங்கள் மனத்தை வாட்டும் எந்தக் குறையையும் அவரால் போக்க முடியும்!' என்றார் தொண்டனுார் நம்பி. மன்னனுக்கு உடனே தன் மகளின் நினைவுதான் வந்தது. மனநிலை பிறழ்ந்து இருந்த மகள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201703:27:53 IST Report Abuse
மலரின் மகள் ஆச்சரியம் நடந்தது என்ன நடந்தது என்று அறிய நமக்கு ஆவலாக போயிற்று. பக்தனின் பாதம் பட்ட நீரே சிந்தையை நற்சிந்தனையாக மாற்றி இருக்கிறது. அந்த குளத்தின் பெயர் என்னவாக அழைக்கப்படுகிறது, பக்தனின் பாதம் கழுவிய அந்த நீரையா இறைவன் தனது அபிசேகத்திற்கு பின்னாளில் ஏற்றார். கருணையே கருணை. மிதிலா என்பது சீதை பிறந்த ஊர் தானே? அங்கு வைணவம் தானே தழைத்திருந்திருக்க வேண்டும். என்னாயிற்று சமணமும் சைவமும் மட்டுமே மிளிர்த்தென்க, வைணவம் இல்லாமல் போனதா பின்னாளில், அல்லது எந்த மிதிலா நகர் கர்நாடகத்து பகுதியே, அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனது சிற்றறிவுக்கு எட்டப்ப போவதில்லை, விசிஷ்டாத்வைதத்தை போதித்த ராமானுஜர் அதை தனி மதம் என்றும், தானே இறைவன் என்ரீல்லாம் கொள்ளாமல், வைணவம் தான் மதம், விசுத்தாத்வைதம் அதற்கு விழாக்கள் என்று போதித்திருக்கிறார் போலும். ஆதி சங்கரருக்கு அடுத்து உதித்த மஹான் ராமானுஜர். சொல்லாட்சி மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. நிறைய மொழி பெயர்ப்பு செய்து, அத்ஹ்டி மாமா, தமிழாசிரியரிடமெல்லாம் கேட்டு புரிந்து கொள்ள முயல்கிறேன். படிக்க படிக்க மனம் அமைதி அடைகிறது, தமிழின் சுவையா அல்லது இறைவனின் பக்தியை படிப்பதாலா? தெரியவில்லை. 108 திவ்ய தேசத்தின் கணக்கு படி 108 தொடரில் முடிந்து விட போகிறதே என்று கொஞ்சம் வருத்தமும் வருகிறது. ராமானுஜர் ஆயிரம் என்பதால் 1000 தொடர்களாக தொடர்ந்து எழுதுங்களேன். ஒவ்வொரு தொடருக்கும் எண்கள் இடப்பட்டிருந்தால், இது எத்தனையாவது தொடர் என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். குறை ஒன்றுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X