உள்ளாட்சி தேர்தல் தாமதமும், விளைவுகளும்!| Dinamalar

உள்ளாட்சி தேர்தல் தாமதமும், விளைவுகளும்!

Added : ஏப் 15, 2017 | கருத்துகள் (4)
  உள்ளாட்சி தேர்தல் தாமதமும், விளைவுகளும்!

அண்டை மாநிலம் கேரளாவில், ஒரு பஞ்சாயத்து தலைவர், உள்ளூர் அளவில், மாவட்ட ஆட்சி தலைவரை விட அதிகம் மதிக்கப்படுகிறார். அங்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊழலில் ஈடுபடுவது மிக கடினம். பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் அதிகமிருக்கும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கூட, பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன், வெற்றிகரமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளை ஒரு பொருட்டாகவே, இரு திராவிட கட்சிகளும் கருதவில்லை. கடந்த, 3ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 'மே மாதம் கூட, தேர்தலை நடத்த முடியாது; கூடுதல் அவகாசம் வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கான காரணங்களாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மிகவும் சிரமமான பணி, ஊராட்சி துறை ஊழியர்களின் சமீபத்திய வேலைநிறுத்த போராட்டம் போன்றவை கூறப்பட்டன.
மேலும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்றும், மாநில தேர்தல் ஆணையம் சார்பில், நேரடி குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையரின், இரண்டு ஆண்டு கால பதவி, மார்ச், 22ம் தேதியுடன் முடிந்துவிட்டது என்பது, ஏப்., 4ல் தான் தெரிய வந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான ஒரு வழக்கில், கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, மிக தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.
'உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்காமல், நியாயமற்ற காரணங்களையும், விளக்கங்களையும், மாநில தேர்தல் ஆணையம் அளிக்கக் கூடாது. புதிய வேட்பாளர் பட்டியலை சரி பார்ப்பது, தொகுதி வரையறை செய்வது போன்றவற்றை காலம் தாழ்த்தாமல் செய்வது அவசியம்.
'அவ்வாறு செய்ய இயலவில்லை என்றாலும், இருக்கும் வேட்பாளர் பட்டியலை வைத்தே, தேர்தலை கட்டாயம் நடத்தி ஆக வேண்டும். அதாவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள், தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
'தேர்தல் தள்ளி போவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி, யாரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு தேர்தல் ஆணையம் இடம் கொடுக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளி வைப்பதற்கான விஷமத்தனமான முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
'பார்லிமென்ட், சட்டசபை தேர்தல் கூட தள்ளி வைக்கப்படலாம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை, எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்த கூடாது. மாநில அரசு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்' என, அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கூட, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய, உயர் நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வு, கடந்த அக்டோபர் மாதம், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கையை அவசியமில்லாமல் ரத்து செய்து, விரும்பத்தகாத அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
சிறப்பு தனி அதிகாரிகள் எனும் பதவியை, அவசியமில்லாமல் மீண்டும் உருவாக்கிவிட்டது. அது, மிகப்பெரிய தவறு. அதன் பின், ஜெ., உடல் நலம் குன்றியது, மர்மமான முறையில் இறந்தது, 'வர்தா' புயல் தாக்கம், அரசியல் நிலையற்ற தன்மை, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் போன்ற பல அடுத்தடுத்த நிகழ்வுகளால், அசாதாரண சூழ்நிலை உருவானது. அதன் விளைவாக, உள்ளாட்சி தேர்தல் தாமதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனி அதிகாரிகளின் பதவி காலத்தை, ஜூன் 30 வரை, மேலும், ஆறு மாதம் நீட்டித்து, அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம், மிகப்பெரிய குற்றம்.
இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பார்ப்போம்...
மாநகர மேயர் பதவி முதல், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி வரை, 1.32 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளில், 50 சதவீதமான, 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, அதிகாரம் பெறுவதற்கான வாய்ப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வறட்சி, விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, மாநிலம் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யும் நிலையிலான, 1.32 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் இன்று இல்லை.
நடப்பு, 2015 - 2020ம் ஆண்டிற்கான, 14வது நிதி ஆணையம், முதன்முறையாக மிக அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 17 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
குடிநீர், கழிப்பிட சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொது சொத்துகள் பராமரிப்பு, சாலைகள், மயானம், சுடுகாடு போன்றவை பராமரிப்பு உட்பட அடிப்படை சேவைகளுக்காக, மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓராண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் முதல், 80 லட்சம் ரூபாய் வரை பஞ்சாயத்துகளை பொறுத்து, இந்த நிதி வந்து சேரும். அடிப்படை சேவைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதற்கும், அதற்காக இந்த நிதியை செலவு செய்வதற்குமான முழு அதிகாரமும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அது போல, ச.கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான, ஐந்தாவது தமிழக நிதி ஆணையத்தின் கூட்டங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து போகிறது. கேரளா உட்பட பல மாநிலங்களில், மாநில நிதி ஆணையங்கள், தங்கள் பரிந்துரைகளை, மத்திய அரசிடம் அளித்து விட்டன. ஆனால், நம் மாநிலத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.
பசுமை வீடுகள் திட்டமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் மூலமாகவே செயல்படுத்தப்படுவது அவசியம்; அதுவும் தடைபட்டுள்ளது.
மேலும், தமிழக கிராமங்களில், ஏழை மக்களுக்கு வேலை மற்றும் ஊதியம் கிடைக்கும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அளிக்கப்படும், 100 நாட்கள் வேலை, 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் முழு அதிகாரமும், பஞ்சாயத்துகளுக்கே அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தாமதப்பட்டதன் விளைவாக, கிராமப்புற வேலை உறுதித்திட்டம் முதல், 14வது நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு வரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, தனி அதிகாரிகளான, பி.டி.ஓ.,க்களால் அதிகாரம் செலுத்தி, செயல்படுத்தப்படுகிறது; செலவு செய்யப்படுகிறது. இவையெல்லாம், அரசியல் சாசனத்திற்கு புறம்பான, நிர்வாக குளறுபடிகள் என்பது தான் உண்மை.
தமிழக அரசின் எல்லா துறைகளிலும், கிட்டத்தட்ட, 40 சதவீதத்திற்கும் மேலாக, ஊழியர் பற்றாக்குறை உள்ளது. பல முக்கியமான அதிகாரிகள், அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஆதலால், வரும் மே, ஜூன் மாதங்களில் மழையில்லாமல் போனால், பிரச்னைகள் இன்னும் தீவிரமடையும். இப்பிரச்னைகளை தீர்ப்பதற்கும், பரவலான அதிருப்தியில் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், அரசு நிர்வாகம் படாத பாடு படும்.
ஆக, நீதிமன்றம், அரசு நிர்வாகம், மாநில தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஆகிய எல்லாருமாக, உள்ளாட்சித் தேர்தல் எனும் குடத்தை உடைத்து விட்டனர். இதன் மூலம், இந்திய அரசியல் சாசனத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ள, அடிப்படை ஜனநாயகம் மற்றும் அதன் வடிவமான உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மரண அடி விழுந்திருக்கிறது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம், கடந்த வியாழன் அன்று அளித்துள்ள பதில் மனுவில், 'ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்' என, தெரிவித்துள்ள பதில், நம்பிக்கையை மீண்டும் விதைத்துள்ளது.
கண்ணியமான, நேர்மையான, அர்ப்பணிப்புடன் கூடிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வரும் போது தான், தமிழகத்தின் எதிர்கால அரசியல் ஜனநாயகம் உயிர்ப்பிக்கப்படும். அதற்கான, நம்பிக்கை
இப்போது துளிர்த்துள்ளது. இ - மெயில்:changeindiacentre@gmail.com - அ.நாராயணன் - சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X