சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

மன்னன் மகள்

Added : ஏப் 16, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
மன்னன் மகள் Ramanujar Download

பிட்டி தேவனுக்கு அது ஒரு தீராத கவலை. நாடாளும் மன்னனாக இருந்தென்ன? யோசிக்காமல் செலவு செய்ய வல்லமை கொண்டிருந்தென்ன? ஒரு வார்த்தை உத்தரவிட்டால் போதும். ஓடி வந்து சேவகம் செய்ய நுாறு நுாறு பேர் இருந்தென்ன? பலகாலமாகப் பலவித முயற்சிகள் செய்து பார்த்தும் அவரது மகளுக்கு இருந்த மனநோய் தீரவில்லை. திடீர் திடீரென்று ஓலக் கூக்குரலிடுவாள். தலைவிரி கோலமாக வீதியில் இறங்கி ஓடுவாள். பேய் பிடித்த மாதிரி ஆவேசம் வந்து ஆடித் தீர்ப்பாள்.

கர்ம வினை என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள் சோதிடர்கள். சமண குருமார்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். கொடுத்த மூலிகை மருந்துகளும் பச்சிலை வைத்தியங்களும் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்றாகிப் போனது. மன்னன் மகளின் மனநிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.சட்டென்று ராமானுஜரின் பெயரைத் தொண்டனுார் நம்பி சொன்னபோது மன்னன் ஒரு கணம் யோசித்தான். 'வைணவரா?' என்று கேட்டான். 'ஆம் சுவாமி. திருவரங்கம் பெரிய கோயில் நிர்வாகமே அவரிடம்தான் உள்ளது. பிரம்ம சூத்திரத்துக்கு அவர் எழுதிய உரையைக் காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தின் தெய்வமே ஏற்று அங்கீகரித்திருக்கிறது. அரங்கனின் தலைமகன். ஆதிசேஷன் அம்சம்!' என்றார் நம்பி.
மன்னனுக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. என்ன கெட்டு விட்டது? யாரோ முன்பின் தெரியாத ஒரு துறவி வந்திருக்கிறார். அவரால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்று இந்த நபர் சொல்கிறார். முயற்சி செய்து பார்ப்பதில் என்ன பிழை?'சரி, வரச் சொல்லுங்கள்' என்று
உத்தரவு கொடுத்தான் பிட்டி தேவன்.விஷயம் ராமானுஜருக்குப் போய்ச் சேருமுன் அங்கிருந்த சமணர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.
'ஐயோ நாம் மோசம் போய்க் கொண்டிருக்கிறோம். ராமானுஜர் மன்னன் மகளை குணப்படுத்திவிட்டால் அந்த முட்டாள் ராஜன் வைணவனாகி விடுவான். ஏற்கெனவே மிதிளாபுரியில் சமணத் துறவிகள் மதம் மாறி மக்களைக் குழப்பியிருக்கிறார்கள். இப்போது மன்னனும் மாறிவிட்டால் இங்கே சமணம் என்ற ஒன்று இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிடும்!''ஆனால் நாம் செய்யக்கூடியது என்ன? மன்னன் முடிவு செய்து விட்டான். நாளை ராமானுஜர் அரண்மனைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.

இதற்குமேல் என்ன நடந்தாலும் எதிர்கொண்டு தான் தீரவேண்டும்.'அவர்களுடைய பிரச்னை, அவர்கள் யாரும் அரண்மனைக்குள் சென்று மன்னனைச் சந்திக்க மாட்டார்கள் என்பது. மிக விநோதமான ஒரு காரணம் வைத்திருந்தார்கள். டெல்லி சுல்தானுடன் நடந்த ஒரு யுத்தத்தில் பிட்டி தேவனின் விரல் ஒன்று துண்டாகிப் போனது. ஓர் அங்கஹீனன் மன்னனாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அரண்மனைக்குப் போகாதிருந்தார்கள். இப்போது ராமானுஜர் உள்ளே நுழைந்து தங்களது வேர்களை அசைத்துவிட்டால்?பயமாக இருந்தது. ஆனால் உடனடியாக எதுவும் செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை.
'பார்ப்போம். நாம் அச்சப்படுவதுபோல் ஏதும் நடக்காமலே போகலாம். அப்படி அசம்பாவிதமாகி விட்டால் இருக்கவே இருக்கிறது வாதப் போர்' என்றார் துறவிகளில் மூத்தவர்.
அவர்கள் காத்திருந்தார்கள்.மறுநாள் உடையவர் தமது சீடர்கள் முதலியாண்டான், பிள்ளான், கிடாம்பி ஆச்சான், வில்லிதாசர், நடாதுார் ஆழ்வான் ஆகியோரை அழைத்துக்கொண்டு மன்னனின் சபைக்குச் சென்றார். தொண்டனுார் நம்பி அவர்களை மன்னனுக்கு அறிமுகம் செய்து வைத்தபிறகு சித்தம் கலங்கிய இளவரசியை மன்னன் அழைத்து வந்தான்.ராமானுஜருக்கு ஒரு கணம் காஞ்சியில் இதேபோன்றதொரு சம்பவம் பல்லாண்டுகளுக்கு முன் நடந்தது நினைவுக்கு வந்தது.

யாதவப் பிரகாசரின் மாணவனாக மன்னனின் சபைக்குச் சென்ற தருணம். அங்கும் பேய் பிடித்த இளவரசி. அங்கு காத்த பரம்பொருள்தான் இங்கும் காக்க வேண்டும்.கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். அந்தப் பெண்ணுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். கணப் பொழுது மயங்கி விழுந்த இளவரசி, எழுந்தபோது குணம் மாறியிருந்தாள். தன் முன் நின்றிருந்த ராமானுஜரை நோக்கிக் கை கூப்பினாள். சட்டென்று காலில் விழுந்து எழுந்தாள்.பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் நம்பமுடியாத வியப்பு. 'மகளே...' என்று பாசம் பீறிட்டுப் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தான்.'உடையவரே, தொண்டனுார் நம்பி சொன்னபோது நான் நம்ப வில்லை. ஆனால் உண்மையிலேயே நீர் மகத்தான துறவி. தெய்வ சக்தி பொருந்திய தாங்கள் என்னை நல்வழிப் படுத்தி அருள வேண்டும்' என்று பணிந்து கரம் கூப்பினான்.சமணத் துறவிகள் எதற்கு பயந்தார்களோ அது அப்போது நடந்தது. உடையவர் மன்னன் பிட்டி தேவனுக்கு வைணவத்தின் சிறப்பு களை எடுத்துச் சொன்னார். 'இவ்வுலக வாழ்வின் சந்தோஷங்களுக்கும், இறந்தபின் மோட்சம் அடையவும் உள்ள ஒரே திறவுகோல் இது தான். கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுந்துவிடு மன்னா. எம்பெருமான் என்றும் உன் பக்கம் இருப்பான்.''அப்படியே சுவாமி!' என்றான் பிட்டி தேவன். அக்கணமே அவன் உடையவரின் சீடனாகிப் போனான்.'இனி நீ விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்படுவாய்!' என்று ஆசீர்வதித்தார் ராமானுஜர். செய்தி பரவிய மறுகணமே பன்னிரண்டாயிரம் சமணர்கள் அரண்மனையை நோக்கித் திரண்டு வந்தார்கள்.
'இதை ஒப்புக்கொள்ள முடியாது. உணர்ச்சி மேலிட்டு ஒரு மன்னன் மதம் மாறுவது மக்களைக் குழப்பும். தவறாகச் செலுத்திச் செல்லும். உண்மையில் வைணவமே உயர்ந்தது என்றால் உடையவர் அதை எங்களுடன் வாதம் செய்து நிரூபிக்கட்டும்!' என்று ஆவேசக் கூக்குரலிட்டார்கள்.'வாயை மூடுங்கள்!' என்று சீறினான் பிட்டி தேவன். 'மன்னா, அமைதியாக இருங்கள். வாதம் நல்லதுதானே. ஒரு விதத்தில் அவர்கள் சொல்வதுமே சரிதான். கண்மூடித்தனமாக ஏன் ஒன்றை ஏற்க வேண்டும்? வைணவம் காலக் கணக்கற்றது. இயல்பாக இருப்பது. காற்றைப் போன்றது. நீரைப் போன்றது. வான்வெளி போன்றது. இதனோடு வாதிட்டு சமணம் வெல்லும் என்று அவர்கள் கருதினால், அந்த நம்பிக்கைக்கு மதிப்புத் தருவோம். இதனால், வாதத்தின் இறுதியில் உண்மையில் எது சிறந்தது என்று அவர்களுக்கும் புரியுமல்லவா? எங்கள் ஆசாரியர் வாதப்போருக்கு மறுப்பு சொல்வதே இல்லை!' என்றார் முதலியாண்டான்.'நல்லது. நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் வாதம் புரிய வந்துள்ளோம். உங்கள் தரப்பில் எத்தனை பேர் உட்காருவீர்கள்?''இதென்ன அபத்தம்? நீங்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கள். உடையவர் மட்டுமே உங்களுக்கு பதில் சொல்வார்!' என்றார் வில்லிதாசர்.'ஒரே சமயத்தில் அத்தனை பேர் கேள்விகளுக்கும் ஒருவரே எப்படி பதில் சொல்ல முடியும்?'ராமானுஜர் புன்னகை செய்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201703:47:58 IST Report Abuse
மலரின் மகள் துளசியின் மகிமை மகத்தானது. இத்தொடரில் தெரிகிறது. ஜீரண சக்தி, ரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் நரம்பு மண்டலம் சரி செய்ய வல்லது. ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X