சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

பொலிந்த கணம்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
பொலிந்த கணம் Ramanujar Download

தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.

'பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா?' சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.
'கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்' என்றார்கள் சமணர்கள்.
'சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்' என்றார் ராமானுஜர்.
திரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.
'யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா?'
'அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.'
இது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். 'உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்து விடலாமே?
ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்?'
'அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே? அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா?'
சரி என்றார் உடையவர்.
திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன.
அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.
'ம், ஆரம்பியுங்கள்!' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.
நாராயணா! நாராயணா! என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.
ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக! பொலிக!' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டு விட்டேன்' என்று ராமானுஜராக வந்துதித்தார்.
'ஆஹா! எப்பேர்ப்பட்ட தருணம்! உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா! சந்தேகம்தான்.' முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.
திகைத்துப் போனார்கள் சமணர்கள். 'உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்!' என்று கரம் கூப்பி நின்றார்கள்.
சில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.
தொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
'அதற்கென்ன? இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்!' என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.
ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகி விட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்?
உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.
அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். 'உடையவரே, கவலைப் படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்!'
தேடிச் செல்வது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-ஏப்-201722:33:33 IST Report Abuse
Manian என் சிறு வயதில் கேட்டது: பதஞ்சலி முனிவர் அத்திரி மகரிஷியின் புதல்வர். ஆதி சேஷன் அவதாரம். தனக்கு பின் யோக வாசிஷ்டம் போன்றவை மறையக்கூடாது என்று எண்ணி ஆயிரம் (நூறா என்பது நினைவில் இல்லை) மாணவர்களுக்கு ஒருசேர கற்பிக்க நினைத்தார். ஏனவே ஒரு திரை இட்டு, யாரும் எட்டி பார்க்க கூடாது, படம் முடியும் வரை யாரும் எழுந்து போக கூடாது என்று சொல்லி திரை பின் அமர்ந்து தன் ஆதிசேஷ உருவில் ஆயிரம் தலைகளோடு படம் காட்டினார். ஒரு மாணவன், அவசரமாக ஒண்ணுக்கு போக ஓடினான். இன்னொரு குறும்புக்கார மாணவன் திரையை நீக்கி எட்டி பார்த்தான். திரைக்கு முன் அமர்ந்திருந்த 999 மாணவர்கள் ஆதிசேஷனின் விஷ தீயில் எரிந்து போனார்கள். அவர் மனம் வருந்தினார். அப்போது வெளியேபோன மாணவன் திரும்ப வந்தான். அவனுக்கு போதித்தார். ஆனால், நீ பாதியில் எழுந்து போனதால், பைசமாக திரிவாய். ஆதி சங்கரரின் மாணவராகப்போகும் கோவிந்த பகவத் பாகவதரால் சாப விமோசம் அடைவாய் என்றாராம். நாம் இன்று கற்கும் யோகாவை ஏற்படுத்திய முனிவரே இந்த பதஞ்சலி. எனவே, ஆதிசேஷன் பல அவதாரங்கள் ஆத்திரேய கோத்திரத்தில் பிறந்து உலகிற்கு நல்லதே செய்தார் என்பதே கருத்து. பகவான் விஷ்ணுவின் ஆசிர்வாதமே இது. அத்திரி முனிவரின் மனைவி, மூன்று தேவதைகளையும் - பிரம்ம, விஷ்ணு, பரமசிவன்- மூவரையும் தன் குழந்தைகளாக மாற்றிய பெருமை உடைய முனி புங்கவி.
Rate this:
Cancel
G.Shiv - chennai,இந்தியா
17-ஏப்-201720:35:50 IST Report Abuse
G.Shiv குருவே சரணம் , ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகள் சரணம்
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
17-ஏப்-201711:51:49 IST Report Abuse
SENTHIL NATHAN அற்புதம் அற்புதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X