காங்கிரஸ் - ம.ஜ.த., ரகசிய கூட்டணி கரை சேருமா?| Dinamalar

காங்கிரஸ் - ம.ஜ.த., ரகசிய கூட்டணி கரை சேருமா?

Added : ஏப் 17, 2017
Share

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக, ரகசிய ஒப்பந்தம் செய்து, தேர்தலை சந்திக்க காங்கிரஸ் - ம.ஜ.த., திட்டம் வகுத்துள்ளன.
நஞ்சன்கூடு, குண்டுலுபேட் தொகுதியில், தன் வேட்பாளர்களை களமிறக்காமல், காங்கிரசின் வெற்றிக்கு, ம.ஜ.த., மறைமுக காரணமாக இருந்தது. இதனால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வுடன் உள் ஒப்பந்தம் செய்து கொள்ள முற்பட்டுள்ளது. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்பதை போன்று, பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரசும், ம.ஜ.த.,வும் கைகோர்க்க திட்டம் வகுத்துள்ளன.உத்தரபிரதேசத்தில் கிடைத்த வெற்றிக்கு பின், பா.ஜ., மேலிடத்தின் பார்வை, கர்நாடகா மீது பதிந்துள்ளது. இம்முறை ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டுமென்று, கட்டளையின் பேரில், மாநில பா.ஜ., தலைவர் எடியூரப்பாவும், தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளார்.நஞ்சன்கூடு, குண்டுலுபேட் இடைத்தேர்தலில் தோற்றாலும், அவரது உற்சாகம் குறையவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்ற இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறார். இதே வேளையில், கட்சியின் வேர் உறுதியாக உள்ள கர்நாடகாவில், ஆட்சியை பறி கொடுத்து விடக்கூடாது; மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்பதில் காங்கிரஸ் மேலிடமும் உறுதியாக உள்ளது.
இதற்காக மதச்சார்பற்ற கட்சிகளை உடன் வைத்துக் கொள்வது நல்லது. ம.ஜ.த.,வுடன் திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொள்வது, கட்சிக்கு அனுகூலமாக இருக்கும் என்பது மேலிடத்தின் எண்ணம்.முதல்வர் சித்தராமையா டில்லி சென்றிருந்த போது, இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ம.ஜ.த., மேலிடமும், காங்கிரசுடன் கை கோர்க்க விரும்புகிறது.
பழைய மைசூரில் செல்வாக்கு பெற்றுள்ள ம.ஜ.த., இப்பகுதியில், 28 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ளது.அதே போன்று வட கர்நாடகாவின் பீதர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, தார்வாட் மாவட்டங்களிலும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.ஷிவமொகா, சிக்கமகளூரு, தாவணகரேவிலும் கூட, கடந்த முறை ம.ஜ.த., வெற்றி பெற்றது. இத்தொகுதிகளை தக்க வைத்து கொள்வது, ம.ஜ.த.,வின் நோக்கம். வரும் தேர்தலில், இத்தொகுதிகளில், ம.ஜ.த.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தரும். அதற்கு பதிலாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளில், ம.ஜ.த., உதவியாக இருப்பது பற்றி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.மேலும் சில தொகுதிகளை, தனக்கு விட்டுத்
தரும்படி, ம,ஜ.த., நெருக்கடி கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ம.ஜ.த., தனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததை வைத்து, 2008 தேர்தலை சந்தித்த போது, பா.ஜ., 100 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.வரும் தேர்தலில், காங்கிரஸ் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கினால், ம.ஜ.த., சிறிதளவு ஓட்டுகளை பறித்துக் கொள்ளக்கூடும். அவ்வாறு நடந்தால், பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். இதனால், காங்கிரஸ் -ம.ஜ.த., உள் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், பா.ஜ., கடுமையாக போராட வேண்டி வரலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X