தினமும் செய்வோம் தியானம்| Dinamalar

தினமும் செய்வோம் தியானம்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (1)
தினமும் செய்வோம் தியானம்

இன்றைய மனித வாழ்க்கை முறைகளும், மனதில் தோன்றும் எண்ணங்களும் அவர்களுக்கு மன அழுத்தம், குற்றவுணர்வு, நிறைவேறாத தொடர் ஆசைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக உள்ளன. நமக்குள் நாமே நம் வாழ்க்கையை மறு சீராய்வு செய்து மாற்றத்தினை காண வேண்டும். 'படைப்புகளை தேடுவதை விட படைத்தவனை தேடு' என்கிறது பழமொழி. நாம் சிந்திக்க வேண்டிய வாசகம் இது.

சிறு குழந்தை பருவத்தில் மட்டுமே நம் தாயை, தந்தையை நம்பி வாழ்கிறோம். கல்வி பயில பள்ளி சென்றவுடன் பரபரப்பான வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறோம். தரமான கல்வி தன் குழந்தை
களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தகுதிக்கு மீறி பல லட்ச ரூபாய் செலுத்தி, குழந்தைகளை கல்வி பயில அனுப்பி திண்டாடுகின்றனர் பெற்றோர்.ஏதும் அறியாத பருவத்தில்
பரபரப்பான பண வருவாய்க்கான கல்வி ஒரு குழந்தைக்கு நல்ல பண்பு, நல்லொழுக்கம், விட்டு கொடுக்கும் மனப்பான்மை, பக்தி, பிறருக்கு சேவை செய்யும் எண்ணம் இப்படி ஏதும் தராததாக உள்ளது. பணம் சம்பாதிக்க கற்று கொடுப்பதாக கல்விக் கூடங்கள் இருக்கின்றன. நம் உயிர் இருக்கும் வரை நம்மை சரியாக வழிநடத்தி இந்த உலகில் எதிலும் சிக்கி கொள்ளாத பயிற்சி முறையை வழிவகுக்க மறந்து விட்டோம்.

பல லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க படித்த கல்வி சான்றிதழ்கள் இருக்கின்றன. நாம் சரியான வாழ்க்கை வாழ்ந்தால் தான் பின்வரும் சந்ததியும் அதை பின்பற்றும். நாமே பரிதவிப்பும், துக்கம், தொடர் துயரம் இப்படி பல பற்றாக்குறையுடன் வாழ்க்கை நடத்த நம் சந்ததியும் அதன் போக்கில் செல்கின்றன.இப்படி மனித எண்ணங்களால் இந்த இயற்கையை காப்பாற்றி வழிப்படுத்த தவறி, புவியின் அழிவு விளிம்பிற்கு கொண்டு வந்து விட்டோம். இதை சிந்திக்கக் கூட தனி மனிதனுக்கு நேரம்இல்லாத துரதிர்ஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பணம் சம்பாதிக்கும் மெஷினா : நாம் சுவாசிக்க மறந்தாலும் மரணம்; மருந்து சாப்பிடாமல் இருந்தாலும் மரணம். நம்மைபாதுகாக்கவே பணம், சொந்தம்பந்தங்கள். இப்போது சதாசர்வகாலம் மனிதன் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விட்டான். இதனால் தான் என்ன பயன்? கணவர் ஒரு ஊரிலும், மனைவி ஒரு ஊரிலும் வேலை செய்கின்றனர். பிள்ளைகளை ஏதோ ஒரு ஊரில் படிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். அவனுடைய தாய், தந்தைக்கு மாதம் பல ஆயிரம் கட்டி எந்த முதியோர் இல்லத்தில் உள்ளனர் என்று இணையதளத்தில் பார்த்தால் தான் தெரிகிறது. இப்படி தான் நம் குடும்பங்கள் உலகத்தில் உலா வருகின்றன.
நம் உறவுகள் கற்றுத்தர மறந்த உயர்ந்த பண்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் வலிமை, ஒன்று கூடி வாழ்ந்து மகிழ்ந்து கொள்ளுதல், சரியானநேரத்திற்குள் நம் செயல்களை செய்தல் போன்ற திறன் பெற தியானம் செய்வது அவசியம்.இப்புவி மூன்றில் ஒரு பகுதி நீரை கொண்டுள்ளது. ஆனால் நாம் பயன்படுத்த உகந்த நீராக பெரும்பான்மையானது இல்லை. இந்த ஒரு பங்கு நிலத்திலும் எங்கு பார்த்தாலும் நீர்நிறைந்த ஊருணிகள், ஏரிகள், ஆறுகள் என பழைய காலத்தில் தான்இருந்தன. ஆனால் இப்போது நீர் ஊற்றுகள் நுாற்றுக்கணக்கான அடி ஆழத்தின் கீழ் சென்று விட்டன. மனிதனின் சுயநலத்தால் 20 அடிக்கு ஒரு போர் என பூமியை ஒவ்வொரு நாளும் துளையிட்டு கொண்டிருக்கின்றனர்.

அரிய வகை பண்புகள் : இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் எண்ணமும், சிந்தனை யும், அன்பும், இப்படி தான் தேடி பார்க்கும் ஒரு அரிய வகை பண்பாக மாறி விட்டது. நீரை தேடி அலைவது போல பண்புகளை தேடி அலைகிறோம். இதற்காக தான் தியானம் செய்ய கற்றுக் கொள்வோம்.

உகந்த தருணம் : பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன் தியானத்தை முடித்து கொள்ள வேண்டும். இயற்கை சமச்சீராக இருக்கும் தருணம் அதுவே. அந்தி சாயும் மாலை நேரமும் உகந்த தருணம். சூரியன் மறைந்து நிலவு தோன்றும் நேரம் தியானம் செய்ய உகந்த நேரம். நாம் எதையாவது செய்வதற்கு முன் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என மனித மட்டத்தில் ஒரு கேள்வி வரும். தியானம் செய்தால், எனக்கு உடனடியாக என்ன கிடைக்கும் என நண்பர்கள் வேடிக்கையாக கேட்பது உண்டு.

அமைதியை தரும் தியானம் : தியானம் ஆழ்மனதில்அமைதியை கொடுக்கும். இந்த அமைதி அனைத்தையும் மாற்றி அமைக்கும் அற்புதம். நாம் அமைதியாக இருக்கும் போது ஒரு ஆற்றல் பெருக்கெடுக்கும். அந்த ஆற்றல் நம் இதயப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக பாயச் செய்கிறது. உடல் முழுவதும் பாயக்கூடியது ரத்தம் ஒன்றே. இந்த ரத்தம் ஓட்டம் அனைத்து ஹார்மோன்களையும் சுரக்க துாண்டுகிறது. இதனால் எலும்பு மஞ்சைகள் சுரந்து உடல் வலி, மூட்டுவலி எலும்பு தேய்மானம் போன்ற அனைத்தையும் சரி செய்கிறது.

உறக்கம் தரும் தியானம் : மனிதனுக்குள் புதைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி விட உதவுகிறது. இதனால் மனிதன் எந்த நோயிலும் மாட்டிக் கொள்ள மாட்டான். ஆழ்ந்த துாக்கம் இல்லாத மனிதர்கள் 80 சதவீதம் உள்ளனர். தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.
எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கும் சக்தி படைத்த மனிதா, உன்னால் நிம்மதியை வாங்க முடியுமா. அதை தியானம் கொடுக்கும். ஒரு அரசனை போல மகிழ்ச்சியாக வாழ
கற்று தருவதும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பிச்சைகாரரை போல இருக்க செய்வதும் தியானம். தியானம் ஆசைகளை குறைத்து ஆனந்தத்தை பெருக்க உதவி செய்யும். உடலில் உள்ள உயர்ந்த சக்திகள் கொண்ட சக்கரங்களை சுழலச்செய்யும் அற்புத ஆற்றல்
தியானத்திற்கு உண்டு.குடும்ப வாழ்க்கையைசரியாக வாழ்ந்து கொள்ளவும் பணியினை தொய்வில்லாது செய்யவும் தியானம் உதவி புரியும்.

உள்ளத்தின் வளர்ச்சி: நாம் மனதின் பெருமையை தான் பேசுகிறோம், தவிர அந்த கலையை வளர்க்க நாம் தவறி விட்டோம். ஒருவர் தன் கைக்குள் இந்த உலகம் இருக்கிறது என
கூறுவது அவரது குறுகிய எண்ணத்தை குறிக்கிறது. அதே மனிதன் தன் கையை விரித்து, இந்த உலகம் கைக்கு மேல் இருக்கிறது என கூறும் போது இந்த உலகை ஆளும் வல்லமையை காட்டுகிறது. ஒரு கனிஉள்ளிருந்து தான் பழமாக மாறுமே தவிர வெளியில் இருந்து அல்ல.
மனிதன் செல்வ வளர்ச்சி அடைவதை காட்டிலும் உள்ளத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு மயில் தன் தோகையை விரித்தாடும் போது அந்த அழகின் மீது அதற்கு அளவற்ற கர்வம் தோன்றும்.அப்போது காக்கையை கண்ட மயில், உன் கால்கள் காய்ந்த
அருவறுக்கத்தக்க கருப்பான குச்சி போல இருக்கிறது என்றதாம். அதுபோல மனிதனும் வெளிப்புற அழகை தான் பெரிதாக நினைத்து கவனம் செலுத்துகிறான்.

பெற்றோரின் கடமை : தொடர்ந்து தியானம் செய்தால் மனம் விரிவடைகிறது. நம் வாழ்க்கை தர்மம் விரிவடைய வாய்ப்பாக அமைகிறது. இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம்.
தியானம் செய்ய வயது 50 ஐ தாண்ட வேண்டும் என இன்று நினைக்கின்றனர். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமம். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத வயதில் எப்படி தியானம் செய்ய முடியும். சிறு குழந்தை பருவத்திலேயே நல்ல எண்ணங்கள், சிந்தனையை
துாண்டக்கூடிய தியான பயிற்சியை கற்றுகொடுப்பது பெற்றோர்களது கடமையாகும்.

-பி.ஜெயசீலன்
தியான ஆசிரியர், சிங்கம்புணரி 98424 35915We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X