கொங்கு மந்திரிகளுக்கு கொலை மிரட்டல்? | கொங்கு மந்திரிகளுக்கு கொலை மிரட்டல்? இணைப்பு முயற்சியை முறியடிக்க திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொங்கு மந்திரிகளுக்கு கொலை மிரட்டல்? இணைப்பு முயற்சியை முறியடிக்க திட்டம்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (17)
கொங்கு, மந்திரி, கொலை, மிரட்டல்,

கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, தகவல் பரவியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதன்பின், தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும், சின்னத்தை முடக்கியது, கட்சி தொண்டர்களிடம் பெரும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை புரிந்துள்ள கட்சியின் சீனியர் அமைச்சர்கள் சிலர், இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு தடையாக இருக்கும் சசிகலா, தினகரன் தரப்பை, ஒதுங்கி இருக்கும்படி, பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, ஒரு வாரமாக, தினகரன் வீட்டில், பல கட்டங்களாக பேச்சு நடந்துள்ளது. கொங்கு மண்டல அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், இந்த விஷயத்தை துணிச்சலோடு முதலில் உடைத்து பேசி உள்ளனர்.அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில், தினகரன் தரப்பை எல்லாரும் எதிர்க்க துணிந்துள்ளனர்.

தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளனர். இந்த முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதால், செங்கோட்டையனும், இப்போது நடுநிலைமைக்கு மாறி விட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதுள்ள நிலையில், மற்ற மூவர் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக, ஐவர் அணியிலுள்ள தங்கமணி மற்றும் வேலுமணிக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தகவல் பரவியுள்ளது. கட்சியில் சாதாரணமான பொறுப்பிலுள்ள சிலர், இவர்களது எண்களுக்கு அழைத்து, 'முடிச்சுக் கட்டிருவோம், சீவிட்டுப் போயிருவோம், உருத்தெரியாம அழிச்சிருவோம்' என, மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை, அமைச்சர்கள் இருவரிடமும் உறுதிப்படுத்த முயற்சி செய்தும் முடியவில்லை.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X