பொழுதெல்லாம் திறந்திருக்கு 'பாரு'... போலீசுக்கு வசூலு ஜோரு!

Added : ஏப் 18, 2017
Share
Advertisement
பொழுதெல்லாம் திறந்திருக்கு 'பாரு'... போலீசுக்கு வசூலு ஜோரு!

கைகளில் உறை, முகம், தலையைச் சுற்றியிருந்த துப்பட்டா, கூலிங்கிளாஸ், அதற்கும் மேல் 'ஹெல்மெட்' என, கோடை வெயிலுக்கான புது, 'கெட்டப்'பில், வண்டியில் வந்து இறங்கினாள் மித்ரா. அருகில் வந்து, 'அக்கா' என்றதும் தான் சித்ராவுக்கு அடையாளமே தெரிந்தது.
''என்னடி, இப்பிடி பயமுறுத்துற...'' என்றாள் சித்ரா.
''வெயிலு அப்பிடி பயமுறுத்துதுக்கா... டூ வீலர்ல 'ஹெல்மெட்'டைப் போட்டு சுத்துறதுக்குப் பதிலா, பஸ்சுலயே போயிரலாம் போலிருக்கு'' என்றாள் மித்ரா.
''நானும் அதைத்தான் சொல்றேன்... வண்டியை எங்கேயாவது நிறுத்து; பஸ்சுல போகலாம்'' என்றாள் சித்ரா.
வண்டியை, 'பார்க்கிங்'கில் நிறுத்தி விட்டு வந்தாள் மித்ரா. இருவரும், ஏழாம் நம்பர் டவுன் பஸ் ஏறினர். வண்டியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இரண்டு, 'குடி'மகன்கள் ஏற, வண்டிக்குள் வாடை துாக்கியது. சித்ரா கேட்டாள்...
''மித்து... இன்னும் கடையே திறக்கலை; காலங்காத்தால, இவுங்க எப்பிடி குடிச்சிட்டு
வர்றாங்க?''
''என்னக்கா கேள்வி இது... நம்ம ஊர்ல, '24x7' குடி தண்ணி கொடுக்குறதா திட்டம் போட்டாங்க; அது நடக்கலை... இப்போ '24x7' கிடைக்கிற ஒரே தண்ணி, டாஸ்மாக் சரக்கு தான்''
''உண்மைதான்டி... மூணுல ரெண்டு பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிட்டாங்க. ஆனா, அந்த, 'பார்'களையே, கடையா மாத்தி, அங்கேயே சரக்கு விக்கிறாங்க. நடத்துறது எல்லாமே, ஆளுங்கட்சி ஆளுங்க தான். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, முன்னால கிடைச்சதை விட அதிகமான மாமூல் கொட்டுதாம்''
''இதெல்லாம் பெரிய ஆபீசர்களுக்குத் தெரியாதா?''
''இவ்ளோ தைரியமா, இந்த, 'பார்'கள்ல, சரக்கு விக்கிறதைப் பார்த்தா, அவுங்களுக்கும்
இதுல, 'பங்கு' போகுதோன்னு சந்தேகமா இருக்கு. சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிர்ல மூடுன, 'பார்'ல, 80 அடி ரோட்டு, 'பார்'ல இதே வேலை தான் நடக்குது. இத்தனைக்கும், சிங்காநல்லுார்ல பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கு''
''இந்த 'பார்'களை எப்ப வேணும்னாலும் மூடிடலாம்க்கா... ஆனா, ஸ்டேட் ஹைவேஸ், நேஷனல் ஹைவேஸ் ரோடுகள்ல இருக்குற ஓட்டல், 'பார்'களை மூட, 'எக்சைஸ்' ஆபீசர் தான் உத்தரவு போடணும். அவிநாசி ரோட்டுல, இளைய தளபதி பேருல இருக்குற ஓட்டல்ல அமோகமா, 'பார்' நடக்குது. அதுக்கு, 'எக்சைஸ்' ஆபீசர் தான் காரணம்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''அதாவது, ஸ்டேட் ஹைவேஸ் ரோடு... நஞ்சப்பா ரோடு, நேஷனல் ஹைவேஸ் ரோடாச்சே. அதுக்கு ரொம்பவும் பக்கத்துல இருக்குற அலங்காரமான ஓட்டல் உட்பட பல ஓட்டல்கள்ல இன்னும், 'பார்'களை மூடாம வச்சிருக்காங்க. அதுக்கெல்லாம், எவ்ளோ மீட்டர் ஓட்டுனாரோ, அந்த ஆபீசர்?'' என்றாள் சித்ரா.
இருவருக்கும் காந்திபார்க் டிக்கெட் எடுத்தாள் மித்ரா. அவளே கேட்டாள்...
''அக்கா... நம்ம கொங்கு மண்டல மக்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மேல கடும் அதிருப்தியில இருக்காங்கன்னு நடிகர் ஆனந்தராஜ் கொந்தளிச்சு நேத்து பேட்டி கொடுத்திருக்காரு, பார்த்தியா?''
''நல்லாத்தான் சொல்லிருக்காரு... நம்ம, 'கொங்கு பெல்ட்' எம்.எல்.ஏ.,க்கள் ஏழெட்டுப் பேரு மாறுனாலே, கவர்மென்ட் நிக்காது. ஆனா, ரெண்டு அணியையும் ஒண்ணு சேக்கிறதுல, நம்மூரு வி.ஐ.பி.,ங்க தான், தைரியமா இறங்கிருக்காங்க. மினிம்மா அணியில இருந்துட்டே, அவுங்களை வெளிய போகச் சொல்லி, 'தில்'லா போராடுறது நம்மூரு 'எம்'தானாம்''
''அவர்ட்ட, நம்ம கார்ப்பரேஷன் இன்ஜினியர்கள் சேர்ந்து, ஒரு கம்பிளைண்ட் பண்ணிருக்காங்க... தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''அவுங்களைப் பத்தி தான், மக்கள் தான் அவர்ட்ட, 'கம்பிளைண்ட்' பண்ணனும்; அவுங்க என்ன பண்ணுனாங்களாம்?'' ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''குப்பையில கரன்ட் எடுக்குற மாதிரி, குப்பையில, 'கரன்சி' எடுக்குற இன்ஜினியருக்கு, 'இ.இ.,' புரமோஷன் கொடுத்ததே தப்பு; அவரு டிப்ளமா இன் மெக்கானிக்தான் படிச்சிருக்காரு. சிவில் இன்ஜினியரிங் படிச்சவரைத்தான் போடணும்; போர்மேன் வேலைக்குத் தகுதியான அவரை இ.இ.,யா போடக்கூடாதுன்னு போர்க்கொடி துாக்கிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''என்ன கொடுமை சரவணன்?'' என்று சிரித்த சித்ரா, ''கோயம்புத்துாருக்கு ஜெ., அறிவிச்ச திட்டங்களை நிறைவேத்த, தனியா ஒரு அதிகாரியைப் போடுங்கன்னு, மினிஸ்டர் சொல்லிருக்காராம். அதுக்காவது நல்ல ஆபீசரா போட்டா நல்லது'' என்றாள்.
டிராபிக்கில், பஸ் நின்ற
இடத்தில், பிரம்மாண்டமான பேனரில் சிரித்துக் கொண்டிருந்தார், ஆளுங்கட்சியின் முன்னாள் கவுன்சிலர். அதைப்
பார்த்ததும் மித்ரா கோபமாய்த் தொடர்ந்தாள்...
''இந்த 'எக்ஸ்'களோட இம்சை இன்னமும் தீர்ந்தபாடில்லைக்கா... இப்பவும், கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்கள்ட்ட கமிஷன் கேட்டு, மெரட்டுறாங்களாம். புலியகுளத்துல, 'டிரெயினேஜ்' கட்டுறப்போ, 'எனக்கு ஏன் கமிஷன் கொடுக்கலை'ன்னு, பக்கத்து பக்கத்து வார்டுகளின், 'எக்ஸ்' கவுன்சிலர்களும், 'பப்ளிக்'கா சண்டை போட்டுக்கிட்டாங்களாம். கார்ப்பரேஷன் ஆபீசர் வந்து தான், பஞ்சாயத்து பண்ணி வச்சிருக்காரு''
''ஓ... செல்வத்தோட குமாரருக்கும், வட மாநில விநாயகருக்கும் நடந்த தகராறைச் சொல்றியா... நானும் அதைப் பத்தி கேள்விப்பட்டேன். பதவியிலேயே இல்லாட்டாலும், ரெண்டு பேரும் இன்னும் ஏரியாவுக்குள்ள ஏகப்பட்ட கலெக்ஷன் ஓட்றாங்களாம்'' என்றாள் சித்ரா.
''கலெக்ஷன்னு சொன்னதும், நம்ம அறநிலையத்துறை ஆபீசர் ஞாபகம் வந்துச்சு. நம்மூர்ல இருந்துக்கிட்டே, நாலு மாவட்டத்தைக் கண்காணிக்கிற பெரிய ஆபீசர், இன்னும் ஒரு மாசத்துல, 'ரிட்டயர்டு' ஆகப்போறாராம். அதனால, ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் வசூல் பண்ணிக் கொடுக்கச் சொல்லி, இ.ஓ.,க்களுக்கு உத்தரவு போட்ருக்காராம்'' என்றாள் மித்ரா.
''அதை விடு மித்து... நம்மூரு காவல் தெய்வமான அம்மன் கோவிலுக்கு புதுசா வந்த ஆபீசர், மூணே நாள்ல மூணு லட்சம் ரூபாய்க்கு, 'செக்' போட்டு காசு எடுத்த விவகாரத்துல, விசாரணை துவங்கிருச்சாம்'' என்று கூடுதல் தகவல் தெரிவித்தாள்.
''என்னத்தை விசாரணை நடந்து... என்னத்தை கண்டு பிடிச்சு... இதே டிபார்ட்மென்ட்ல, பல பேரு போலி சர்ட்டிபிகேட்டைக் கொடுத்து வேலையில இருக்காங்கன்னு ஒரு புகார் வந்துச்சு. தணிக்கைக்குழு ஆய்வு பண்ணி, 'அது உண்மைதான்; அவுங்களை எல்லாம் டிஸ்மிஸ் பண்ணனும்'னு அறிக்கை கொடுத்துச்சு. ஆனா, இதுவரைக்கும் ஒருத்தரைக் கூட, 'டிஸ்மிஸ்' பண்ணலையே.
அப்புறம் எதுக்கு விசாரணை?'' என்றாள் மித்ரா.
''அந்த மேட்டரை விசாரிக்கிறப்பவே, சம்மந்தப்பட்ட சில பேரை, 'சஸ்பெண்ட்' பண்ணிருந்தாங்களே'' என்று நினைவூட்டினாள் சித்ரா.
''சஸ்பெண்ட் பண்ணுனது உண்மைதான்; ஆனா, நாலு மாவட்டத்தைப் பாக்குற அதே ஆபீசர், அவுங்ககிட்ட ஆளுக்கு ஒரு தொகையை வாங்கிட்டு, 'சஸ்பென்ஷனை ரிவோக்' பண்ணிட்டாரு'' என்றாள் மித்ரா.
''நல்ல ஆபீசர் யாரும், இந்த ஊர்ல வேலை பார்க்க முடியாது மித்து'' என்று அலுப்பாய்ச் சொன்னாள் சித்ரா.
''நீ சொல்றது 100 பர்சண்டேஜ் கரெக்ட்க்கா... நம்ம கலெக்ட்ரேட்ல, குழந்தைகள் நல அலுவலர்னு ஒரு பதவி இருக்கு தெரியுமா... அதுல, சரண்யான்னு நேர்மையான ஒரு ஆபீசர் நல்லா வேலை பார்த்தாங்க. பஸ்சுல தான் போவாங்க, வருவாங்க'' என்றாள் மித்ரா.
''ஆமாமா... நல்ல ஆபீசராச்சே; அவுங்களுக்கு என்ன ஆச்சு?'' என்றாள் சித்ரா.
''கிணத்துக்கடவு பக்கத்துல, ஆதரவற்றோர் காப்பகத்துக்கு, குழந்தைகளை தத்து எடுக்குற உரிமம் கொடுத்திருக்காங்க. ஆனா, அங்க அதுக்கான வசதி, கட்டமைப்பு, கவனிப்பு எதுவுமே இல்லியாம். புகார் வந்து, ஆய்வு பண்ணுன அந்த லேடி ஆபீசர், அந்த லைசென்சை வேற காப்பகத்துக்கு மாத்துறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ, அவுங்களை டிரான்ஸ்பர் பண்ணீட்டாங்க'' என்றாள் மித்ரா.
''அந்த காப்பகம் நடத்துறவுங்க அவ்ளோ, 'பவர்புல்'லான ஆளுங்களா?'' என்று
கேட்டாள் சித்ரா.
''அதை நடத்துற லேடிக்கு, கோட்டை அமைச்சரோட சம்மந்தி, ரொம்ப நெருங்குன சொந்தமாம். அதனால, அவரைப் பிடிச்சு, லேடி ஆபீசரை மாத்திருக்காங்க. இதுக்காக, மாவட்ட ஆபீசருக்கு, பெரிய தொகை ஒண்ணும் கை மாறுனதா ஒரு தகவல் ஓடுது'' என்றாள் மித்ரா.
''இதுவும் ஒரு லேடி மேட்டர் தான்... ஆர்ட்ஸ் காலேஜ் கேர்ள்ஸ்களுக்காக ஒரு ஹாஸ்டல், போன வருஷம் புதுசா ஆரம்பிச்சாங்களே. அதுக்கு, அசிஸ்டென்ட் புரபசர் ஒருத்தரை, 'அடிஷனல் சார்ஜ்'ஆ போட்ருக்காங்க. அவுங்க, வார்டன்ல இருந்த வாட்ச்மேன் வரைக்கும் பல, 'ரோல்' பண்றாங்களாம். காய்கறித்தோட்டம் போட்டு, அதுல காய் எடுத்தே, புள்ளைங்களுக்கு சாப்பாடு போடுறாங்களாம்'' என்றாள் சித்ரா.
அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், 'காந்தி பார்க்' என்று கண்டக்டர் குரல் கொடுக்க, இருவரும் அவசரமாய் இறங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X