என் செல்லப் பிள்ளையே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

என் செல்லப் பிள்ளையே!

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (3)
என் செல்லப் பிள்ளையே! Ramanujar Download

'ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தியை மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்று விட்டான்!' என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன்.

உடையவர் புன்னகை செய்தார். 'அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக் குறிப்பிட்ட உன் சுபாவத்தை ரசிக்கிறேன். ஆனால் உற்சவர் விக்கிரகம் இல்லாமல் நாம் விழாக்களை நடத்த முடியாது. பெருமாள் கோயில் என்றால் வீதி வலம் மிக முக்கியம். நான் டெல்லிக்குப் புறப்
படுகிறேன்' என்றார் ராமானுஜர்.மன்னன் தன் வீரர்கள் சிலரைத் துணைக்கு அனுப்பி வைத்தான். உடையவரின் சீடர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு கிளம்பினார்கள். ஒருபுறம் தனக்குப் பிறகும் வைணவ தருமம் தழைக்கவென்று உடையவர் உருவாக்கி நியமித்து வைத்திருந்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள். மறுபுறம் ஹொய்சள தேசத்தில் அவருக்குச் சேர்ந்திருந்த ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள். அத்தனை பேரும் உடன் புறப்பட்டு மாபெரும் ஊர்வலமாக அவர்கள் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.டெல்லி சுல்தான் திகைத்துப் போனான். இத்தனை பேரா! ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள்? அத்தனையும் ஒரு சிலைக்காகவா!'மன்னா, பெருமானின் விக்கிரகம் தங்கள் அரண்மனையில் ஓர் அலங்காரப் பொருளாக இருக்கக்கூடும்.

ஆனால் அவர் எங்கள் கோயிலில் குடிகொள்ள வேண்டிய பெருந்தெய்வம். தயவுசெய்து அதைக் கொடுத்து உதவுங்கள்!'சுல்தானுக்கு ராமானுஜரைப் பற்
றித் தெரிந்திருந்தது. காஷ்மீரத்துப் பண்டிதர்களும் மன்னனும் அந்தப் பிராந்தியங்களில் அவரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருந்தது அவன் காதிலும் விழுந்திருந்தது. கேவலம் ஒரு சிலைக்காக இத்தனை பேர் திரண்டு வந்திருக்கிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்ன விஷயம்தானே? சரி பரவாயில்லை என்று நினைத்தான்.'இங்கே ஏராளமான சிலைகள் இருக்கின்றன. அவை என் மகளுக்கு விளையாட்டுப் பொருள்கள். உங்களுடைய சிலை எதுவென்று தேடி எடுத்துக் கொள்ளுங்கள்!' என்றான் சுல்தான்.திறந்து விடப்பட்ட மாபெரும் மண்டபத்தில் நுாற்றுக்கணக்கான விக்கிரகங்களும் சிலைகளும் மலையெனக் குவிந்திருப்பதை ராமானுஜர் பார்த்தார். 'அதோ, நமது உற்சவர்!' உடன் வந்திருந்த ஹொய்சள தேசத்து மூத்த குடி ஒருவர் அடையாளம் காட்ட, உடையவர் அந்த விக்கிரகத்தை எடுக்கப் போனார். 'பெரியவரே, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பும் சிலை அதுதான் என்பதை நான் எப்படி அறிவது?''எப்படி அறிய விரும்புகிறாயோ, அப்படியே அறியலாம்.' என்றார் ராமானுஜர். 'சரி, உங்கள் பெருமாளை நீங்கள் கூப்பிடுங்கள். அவராக வந்து உம்மிடம் சேருகிறாரா பார்க்கிறேன்!'சற்றும் தயங்காமல், 'சரி, அப்படியே!' என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, 'என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்!' என்று கூப்பிட்டார்.அந்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது. அரங்கில் நிறைந்திருந்த நுாற்றுக்கணக்கான விக்கிரகங்களுள், திருநாராயணபுரத்து உற்சவர் விக்கிரகம் அப்படியே ஒரு சிறு குழந்தையாக உருவெடுத்துத் தவழ்ந்து வந்தது. மன்னன் திகைத்துப்
போனான். அமைச்சர்கள் வெலவெலத்துப் போனார்கள். உடையவரின் சீடர்களும் பக்தர்களும் பரவசத்தில் திக்குமுக்காடி நின்றார்கள்.

தவழ்ந்து வந்த குழந்தை உடையவரின் மடியில் ஏறிய மறுகணமே பழையபடி விக்கிரகமாகிப் போனது. சுல்தான் பேச்சு மூச்சில்லாது போனான். 'இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை ஐயா. நீங்கள் விக்கிரகத்துடன் புறப்படலாம்!' என்று வணங்கி வழிவிட்டான். வந்த காரியம் சரியாக நடந்தேறிய மகிழ்ச்சியுடன் ராமானுஜர் புறப்பட்டார். திரும்பும் வழியில் அடர்ந்த காடொன்றில் ஓரிரவு தங்கும்படி ஆனது. 'சுவாமி, இங்கு தங்குவது நமக்குப் பாதுகாப்பல்ல. கள்வர் பயம் மிகுந்த பிராந்தியம் இது.' வீரன் ஒருவன் எச்சரித்தான். 'கள்வர் வந்தால் வரட்டுமே. எடுத்துச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது?''அப்படி இல்லை சுவாமி. உற்சவ மூர்த்தி சேதாரமின்றி ஊர் சென்றடைய வேண்டுமே.''அவனை நாம் காப்பாற்றுவதா! நல்ல நகைச்சுவை. நம்மைச் சேர்த்து அவன் காப்பான். கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்!' என்றார் உடையவர்.ஆனால் அன்றிரவு அவர்களால் அப்படி நிம்மதியாக உறங்க முடியவில்லை. சொல்லி வைத்த மாதிரி ஒரு பெரும் கள்வர் கூட்டம் ஆயுதங்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
'யாரும் தப்பிக்க நினைக்காதீர்கள். கையில் உள்ள அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் ஒரு உயிரும் தங்காது!' கர்ஜித்த குரலில் கலங்கிப் போன பக்தர்கள் அபயம் கேட்டு அலற ஆரம்பித்தார்கள். கோபமடைந்த கள்வர்கள் அவர்களைக் கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, அலறல் சத்தம் மேலும் அதிகரித்தது.'எம்பெருமானே, இதென்ன சோதனை!' என்று ராமானுஜர் திகைத்து நின்றபோது, சத்தம் கேட்டு அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் குடியிருந்த மக்கள் தீப்பந்தங்களுடனும் சிறு ஆயுதங்களுடனும் ஓடி வந்தார்கள். யாரோ வழிப்போக்கர்களைச் சூறையாட நினைக்கிற கள்வர்கள். இன்று அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று வெறி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்.சில மணி நேரம் இரு தரப்புக்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. இறுதியில் கிராமத்து மக்கள் கள்வர்களை அடித்துத் துரத்தி, ராமானுஜரையும் பக்தர்களையும் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்துப் போனார்கள்.
'ஐயா, நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?''ஹொய்சள தேசம். மேல்கோட்டை நகரம்.''நல்லது. நாங்கள் உங்களுக்குத் துணைக்கு வருகிறோம்!' என்று சொல்லி திருநாராயணபுரம் வரை உடன் நடந்து வந்தார்கள். வழி முழுதும் அவர்களுக்கு உடையவரைப் பற்றியும் திருநாராயணபுரத்தில் எழுந்துள்ள ஆலயத்தைப் பற்றியும், டெல்லிக்குச் சென்று உற்சவ மூர்த்தியைப் பெற்று வந்தது பற்றியும் உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
ஊர் வந்து சேர்ந்ததும், 'நல்லது ஐயா. நாங்கள் கிளம்புகிறோம்' என்றார்கள் அந்த மக்கள். 'இத்தனை துாரம் வந்துவிட்டு கோயிலுக்கு வராமல் போவதா? அதெல்லாம் முடியாது!' என்றார் ராமானுஜர்.'அதெப்படி ஐயா முடியும்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள். கோயிலுக்குள் நுழைந்தால் பாவமல்லவா!'
துடித்துப் போனார் ராமானுஜர். 'யார் சொன்னது? பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில் லாத இடம் வேறு யாருக்கு உண்டு? வாருங்கள் என்னோடு!'அதுவரை சரித்திரம் காணாத அச்சம்பவம் அன்று நடந்தேறியது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X