புதுடில்லி: சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர் ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.
நெகிழ வைத்த போட்டோகிராபர் :
அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும் எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில் சேர்த்தார். முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம் சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில் மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து, அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர். கன் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார்.
ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர் போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.