நிலமென்னும் நல்லாள்!ஏப். 22 உலக பூமி தினம்| Dinamalar

நிலமென்னும் நல்லாள்!ஏப். 22 உலக பூமி தினம்

Added : ஏப் 21, 2017
 நிலமென்னும் நல்லாள்!ஏப். 22 உலக பூமி தினம்

பூமியானது இயற்கை வளங்களின் பசுமைக்களமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அன்னையின் பரிசுத்தமான அன்பிற்கு ஈடானது நாம் வாழும் பூமி. நிலமென்னும் நல்லாளை அதன் முக்கியத்துவத்தை, பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணரவேண்டியது வசிக்கும் மக்களாகிய நமது கடமை.

சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் பூமி. அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே நிலம். உயிரினங்களும், உயிரற்ற காரணிகளும் வளர்ந்து பெருக இடமளித்த இப்பூமி ஒரே உயிர்க்கோளமாக நமக்கு அளிக்கப்பட்ட கொடை. புவியின் தன்மையும், அதன் இயல்பும் கெடாமல் நமக்கு வழங்கப்பட்ட புவியின் தற்போதைய நிலை, நமது நிலையினையே பிரதிபலிக்கிறது. புவியை அழிப்பதன் வாயிலாக நம்மை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

பூமியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டுசெல்வதும், அது தொடர்பான செயல்பாடுகளை ஏற்படுத்துவதும் இந்நாளின் முக்கிய நோக்கம். 1970 ஆம் ஆண்டிலிருந்து 192 நாடுகளில் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.


முன்னோர்களின் பரிவு


புவி தோன்றியது முதல், உயிரினங்கள் அனைத்தையும் அரவணைத்து வாழ்விக்கும் பண்பை ஏற்று இயங்குகிறது. இயற்கையின் அரவணைப்பில் உண்டு, களித்து, உறங்கிக் கிடந்த மனிதன், பிற்காலங்களில் மேற்கொண்ட அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவும், அறிவுப்பெருக்கமும் இயற்கையை சிறிது சிறிதாகச் சிதைக்கத் துவங்கியது. இதன் அடிப்படையில் பொதிந்திருக்கும் உண்மை, சுயநலமின்றி வேறில்லை என்பது மனதைப் பதைக்க வைக்கிறது.

நிலத்தை ஐந்திணைகளாகத் தொல்காப்பியர் பிரித்துக் கூறியிருக்கிறார், நிலத்தின் அடிப்படையில் நான்காக, முதற் பொருளின் சிறப்பைக் கூறியிருக்கிறார்.

உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு அடிப்படையான மூன்று பொருள்களில் முதற்பொருள் பற்றி தொல்காப்பியர், “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” என்று தொல்காப்பிய அகத்திணையியலின் நான்காம் நுாற்பாவில் கூறியுள்ளார். உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையானது நிலமே ஆகும், நிலமானது புவியே. ஒரு நாட்டின் வளத்தைத் தீர்மானிப்பது நிலம், எனவே தான் தொல்காப்பியர் நிலத்தை முதற்பொருளாக்கியிருக்கின்றார், என்பதும் நம் முன்னோரின் பாங்கும் வியக்கத்தக்கது.

நம் முன்னோர் ஐவகை நிலப்பாகுபாட்டில் அமைதியான வாழ்க்கை முறையை இயற்கையோடு இயைந்து மேற்கொண்டனர் என்பதும் அவர்களின் நிலத்தின் மேல் கொண்ட பற்றும், பரிவும் இன்றும் போற்றத்தக்கது.

சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கையோடு நிலத்தை இணைத்துக் கொண்டிருந்தனர், அவர்களின் வீரமும், காதலும் அவர்கள் மிக விரும்பும் நிலத்திலேயே நிகழ்த்த இன்புற்றிருக்க விரும்பினர் என்பது எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுால்கள் வழி அறிய முடிகின்றது.


பூமிக்கு மரியாதை


இன்று புவியானது நமது அக்கறையின்மையாலும், சுயநலத்தாலும் எண்ணவியலாத விதத்தில்
சீர்கேடு அடைந்துள்ளது.காடுகள் அழிப்பு, தொழிற்சாலைப்பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு போன்றவையும், பூச்சி கொல்லி பயன்பாடும் நாம் வாழும் புவியை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன. அதிகப்படியான அறிவியல் முன்னேற்றம், விரைவான வாழ்வு வசதிகளைப் பெற வேண்டும் என்பதற்காக நம் கண்களை அடகுவைத்து சித்திரம் வாங்குவது
போன்றதுதான், இத்தகைய செயல்பாடும்.

பெருகும் கார்பன் மோனாக்சைடு புவியின் கழுத்தை சுருக்கிவிடுகிறது என்பதும், வேதியியல் கழிவும், பூச்சி கொல்லிகளும் நிலத்தின் ரத்த ஓட்டத்தில் விஷத்தைக் கலக்கிற தென்பதும், நம்மை வாழவைக்கும் புவிக்கு எவ்வித மரியாதையை நாம் தந்திருக்கிறோம் எனும் வலி மிகுந்த கேள்வியை நம் முன் வைக்கிறது.


நிலம் மீட்கும் முயற்சி


குளம் தொட்டு வளம் பெருக்கிய அறவோரான நம் முன்னோரின் இயற்கைப்பாதுகாப்பும், தாவர
இனங்களைக் காத்து வளர்த்ததும் நாலடியாரில் குறிப்பிடப்பட்டிருப்பது இயற்கையுடன் அவர்கள் கொண்டிருந்த மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது.“ துறைஇருந்து ஆடை கழுவுதல் இன்னா” என்று நீர் அருந்தும் துறையில் ஆடை துவைத்தல் கூடாது என்னும் ஒழுகலாறினைக் கூறிய, பின்பற்றிய நம் சமூகம் புவியைக் காக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமாக இன்றைய பூமி தினம் அமைய வேண்டும்.

நிலத்தினுள் விஷம் பாய்ச்சும் சீமைக் கருவேலங் காடுகளை அகற்றி, நாட்டு மரங்கள் கொண்ட காடுகள் உருவாக்குதல், மழை நீர் பெருக்கத்திற்கு ஏற்ற மரங்கள் நடுதல் அவசியம். மழைநீர் சேமிப்புத் திட்டங்களும் அவற்றைச் செயல் படுத்தும் மக்கள் கரங்களிலேயே புவியின்
தலைவிதியோடு மனிதனின் நிலையும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆற்றினை, அதன் நீரினை, மணலினைச் சுரண்டும் சுயநலப்பதர்களிடம் இருந்து, புவியை விடுவிப்பது தற்போதைய வறட்சியினின்று வளத்தை மீட்டெடுப்பது, பூமிக்கு நாம் செய்யும் ஆக்கம் மட்டும் அல்ல; விஷமாகிப்போன நீர், நிலம், காற்றிடம் இருந்தும் நம்மைப்பாதுகாக்கும் முயற்சியாகும்.

புவி தோன்றியது முதல், உயிரினங்கள் அனைத்தையும் அரவணைத்து வாழ்விக்கும் பண்பை ஏற்று இயங்குகிறது. இயற்கையின் அரவணைப்பில் உண்டு, களித்து, உறங்கிக் கிடந்த மனிதன், பிற்காலங்களில் மேற்கொண்ட அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவும்,அறிவுப்பெருக்கமும் இயற்கையை சிறிது சிறிதாகச் சிதைக்கத் துவங்கியது.

அ.ரோஸ்லின்
ஆசிரியை, வாடிப்பட்டி
kaviroselina997@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X