சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

என்றும் உள்ளவன்

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017
Share
Advertisement
செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள்.ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தாள். தொண்டனுாரில்
என்றும் உள்ளவன் Ramanujar Download

செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள்.

ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தாள். தொண்டனுாரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில் ஒரு கோயில். கீர்த்தி நாராயணம். மேல்கோட்டையில் செல்வ நாராயணம். வேளாபுரி என்கிற பேலுாரில் விஜய நாராயணம். கதக்கில் வீர நாராயணம்.'எத்தனை எத்தனைக் கோயில்கள் எழுப்புகிறோமோ, அத்தனையும் மக்களுக்கு நல்லது விஷ்ணுவர்த்தா. பிரபஞ்ச
மெங்கும் பரவி உதிர்ந்து கிடக்கும் மூலாதார சக்தியின் துகள்களை ஒருங்கிணைத்து பிரதிஷ்டை செய்கிறோம். அது ஞான ரூபமாக உருக்கொண்டு கர்ப்பகிரகத்தில் பிரவகிக்கத் தொடங்குகிறது. சன்னிதியில் நிற்கிற கணம்தோறும் நாம் மூலாதார சக்தியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறோம். பக்தி நம் சிந்தையைப் பரமாத்மாவிடம் கடத்திச் செல்கிறது. உடல் விடுத்து, உள்ளம் விடுத்து, ஆன்மாவை நெருங்க வழி செய்கிறது. உன் ஆன்மாவைப் பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க முடிந்துவிட்டால் போதும். மோட்சம் நிச்சயம். நீ செய்வது நல்ல காரியம். இந்தப் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களும் காலம் உள்ளவரை உன் பேர் சொல்லும்.' என்றார் ராமானுஜர்.'சுவாமி, இது நான் செய்யும் காரியமல்ல. தங்கள் பெருங்
கனவைக் கல்லாக ஏந்திச் சுமந்து செல்லும் பாக்கியம் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என்றென்றும் தாங்கள் என் பக்கத்தில் இருந்து வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்!'ராமானுஜர் சிரித்தார். 'என்றென்றுமா! என்றும் உள்ளவன் பரமன் ஒருவன் மட்டுமே.''அவனை நெருங்க நீங்கள் அவசியம் சுவாமி.''மனிதப் பிறவி முடிவுக்கு உட்பட்டது மன்னா. ஆனால் ஆசாரிய சம்பந்தம்தான் பரமபத வாயிலை அடைய வழி செய்யும் என்பது உண்மை. ஆளவந்தார் சுவாமிகளும் பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியும் திருமாலையாண்டான் சுவாமியும் அரையரும் பெரிய திருமலை நம்பியும் இல்லாது போயிருந்தால் நானில்லை. திருக்கச்சி நம்பிகள் இல்லாவிட்டால் மேற்சொன்ன யாருமே எனக்கில்லை. இது ஒரு தொடர்ச்சி. என்றும் இருப்பது. என்றும் இருக்க வேண்டியதும் கூட. எக்காலத்திலும் நமது ஜனங்கள் ஆசாரிய அனுக்கிரகம் இன்றிப் போய்விடக் கூடாதே என்றுதான் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளைக் கண்டெடுத்து நியமித்தேன்.

சற்றும் தன்னலமற்ற, ஞானப் பெருஞ்சுடர்களான அவர்கள், தேசமெங்கும் பரவி வைணவம் வளர்ப்பார்கள். நான் உனக்குச் செய்தவற்றை அவர்கள் நாட்டுக்குச் செய்வார்கள்.''புரிகிறது சுவாமி.''இந்த குரு பரம்பரை மிக முக்கியமானது விஷ்ணுவர்த்தா! எவனொருவன் தன் ஆசாரியரைக் கண்டடைந்து, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று பாகவத உத்தமனாக வாழ்கிறானோ அவனே எம்பெருமானுக்கு உகந்தவன் ஆகிறான். ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அவனை நெருங்குவது அத்தனை எளிதல்ல.''உண்மை சுவாமி. அவ்விதத்தில் நானும் என் மகள் வகுளாவும் புண்ணியம் செய்தவர்கள். என்ன காரணத்தாலோ என் மனைவி இந்த வழிக்கு வர மறுக்கிறாள்.'உடையவர் புன்னகை செய்தார். 'அறிவைப் புகட்ட முடியும் விஷ்ணுவர்த்தா. ஆனால் ஞானத்தையல்ல. ஞானம் என்பது தன்னால் திரண்டு வரவேண்டியது. ஒரு தரிசனத்தில் சித்திப்பது. ஆசாரிய சம்பந்தம் தேடிச் செல்வதே ஞானத்தேடலின் தொடக்கம். உன் மனைவியைப் பற்றி வருந்தாதே. முதலில் இந்தத் திருக்கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கிற வழியைப் பார்.'
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதுதான் அத்தகவல் வந்தது. குலோத்துங்கன் இறந்து விட்டான்.அடடே என்று துள்ளியெழுந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.'வேண்டாம். ஒரு மரணத்தை யாரும் கொண்டாடாதீர்கள். வெறுப்பு அல்ல; வெறுத்தவர்களையும் அரவணைப்பதே வைணவம்' என்றார் ராமானுஜர்.'சுவாமி, சிறியாண்டான் கூரேசரைத் தேடி மாலிருஞ்சோலைக்குப் போயிருக்கிறாரே, அவர்கள் இருவருக்கும் நிச்சயம் இத்தகவல் எட்டியிருக்கும். இனி திருவரங்கம் திரும்ப நமக்குத் தடையிருக்காது என்றே நினைக்கிறேன்' என்றார் முதலியாண்டான்.

ராமானுஜர் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லாமே கலைந்து விட்டாற் போன்ற காட்சி மங்கலாக நினைவுக்கு வந்தது. கூரேசரும் பெரிய நம்பியும் சோழன் சபைக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவே எத்தனை வருடங்களாகி விட்டன! காலமும் துாரமும் பிரித்துப் போட முயற்சி செய்தாலும் நினைவுச் சரத்தில் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது.ஒரு திருப்தி இருந்தது அவருக்கு. துக்கத்தில் துவண்டு அமர்ந்து விடவில்லை. செய்ய வேண்டிய எந்தப் பணியையும் தள்ளிப் போடவில்லை. எத்தனை தேசங்கள், எத்தனை ஆயிரம் மக்கள், எவ்வளவு பண்டிதர்கள், எப்பேர்ப்பட்ட மன்னர்களைச் சந்தித்தாகி விட்
டது! உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது.

குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரிய வைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா! மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா! பிறப்பால் வைணவனாக இருந்தாலும், கூரேசரின் சீடனாகவே இருந்தாலும் சோழனின் அமைச்சன் நாலுாரான் நடந்துகொண்ட விதத்தை எப்படி மதிப்பிடுவது?இன்னொன்றும் இருக்கிறது. செல்வம். செழிப்பு கொடுக்கிற அகம்பாவம். ராமானுஜருக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டுப் போனபோது வர
தாழ்வான் வீட்டில் தங்கிய சம்பவம். உண்மையில் யக்ஞேசன் என்னும் தமது சீடன் ஒருவனின் இல்லத்தில்தான் அவர் தங்க நினைத்திருந்தார். அவனது பணத்திமிர் அங்கு செல்ல விடாமல் தடுத்து விட்டது. பின்னர் அதே யக்ஞேசன் கதறிக்கொண்டு வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை எண்ணிப் பார்த்தார். உன் பணம் உனக்கு என்ன கொடுக்கும்? ஆசாரிய சம்பந்தம் இருந்தும் அறிவில் தெளிவில்லாமல் என்ன பயன்?
ஆசாரியரே விட்டு விலகிச் செல்வதுதான் நிகர லாபமாக இருக்கும்.'எம்பெருமானே! மனித குலத்தைப் பீடித்திருக்கும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு முற்றிலும் நீங்கக் கருணை புரி. அகந்தையற்று இருப்பதே வைணவம், கைங்கர்யமே வைணவன் இலக்கணம் என்பதை வாழும் வரை நான் சொல்லிக் கொண்டே இருக்க வழி செய்!' என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X