பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் சங்கமிக்கும் விரகனூர் மதகு அணை:40.742 ஏக்கர் பாசன பகுதி பாலைவனமானது

Added : ஏப் 24, 2017
Share
Advertisement

மதுரை;மதுரையின் ஒட்டுமொத்த கழிவு நீர் சங்கமிக்கும் மையமாக விரகனுார் மதகு அணை மாற்றப்பட்டுள்ளது. இதனால் நேரடி பாசன வசதி பெறும் 40 ஆயிரத்து 742 ஏக்கர் நிலம் வறண்டு பாலைவனமாகி விட்டது.மழை காலம் அல்லாத நேரத்தில் முல்லை பெரியாறு, வைகை அணை நீர் ஆறு வழியாக திருப்பி விட்டால் விரயம் இரட்டிப்பாகும். இதை தடுக்க திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி வைகை ஆற்றில் பத்து ஷட்டர்களுடன் பேரணை மதகு அணை 1896ல் அமைக்கப்பட்டது. பேரணையில் இருந்து மதுரை கள்ளந்திரி மற்றும் திருமங்கலம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல பிரதான கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் வழியே பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பும்போது விரயம் ஏற்படாது.
3வது வைகை அணை
வைகையின் இரண்டாவது அணை பேரணை மதகு அணை எனவும், வைகையின் மூன்றாவது அணை விரகனுார் மதகு அணை எனவும் அழைப்பர். இந்த அணை 1975ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 18 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. 18 ஷட்டர்கள் கொண்ட அணை 261 மீட்டர் நீளம் கொண்டது. ஷட்டர்களின் உயரம் 1.98 மீட்டர். இது சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அணையில் வலது தலை மதகு பகுதியில் மூன்று ஷட்டர்கள் உள்ளன. இதன் வழியாக வெளியேற்றப்படும் நீர் 60 கண்மாய்களை நிரப்பும். இவற்றின் மூலம் பிரம்பனுார், திருப்புவனம், கொந்தகை, மானாமதுரை வரை 27 ஆயிரத்து 80 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இடது தலை மதகு பகுதியில் இரண்டு ஷட்டர்கள் உள்ளன. இதன் வழியாக வெளியேற்றப்படும் நீர் 27 கண்மாய்களை நிரப்பும். இவற்றின் மூலம் சக்கிமங்கலம், சக்குடி வரை 13 ஆயிரத்து 662 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நேரடி பாசனம் தவிர்த்து மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைந்தன.
அபாயகரமான கால்வாய்
வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வரும்போது விரகனுார் மதகு அணையின் வலது தலை மதகு, இடது தலை மதகு வழியாக நீர் வெளியேற்றப்பட மாட்டாது. அதிகப்படியான நீர் வீணாக கடலில் கலக்காமல் தடுப்பதற்காக மதகு அணை அருகே இடது பகுதியில் 'அபாயகரமான கால்வாய்' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு சிலைமான், சொட்டதட்டி, மேலவள்ளூர் கண்மாய்களை நிரப்புவர். இவற்றின் மூலம் 1,186 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். வலது தலை மதகு, இடது தலை மதகு, அபாயகரமான கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் மொத்த நீர் மூலம் நேரடியாக 40 ஆயிரத்து 742 ஏக்கர் நிலமும், மறைமுகமாக 38 ஆயிரத்து 404 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்றன. பருவ மழை, கோடை மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் அணை பகுதி முழுவதும் புதர் மண்டி, சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தன.
கழிவு சங்கமிக்கும் அணைமதுரை, சிவகங்கை மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணையாகவும் இந்த மதகு அணை விளங்கியது. தற்போது கழிவு நீர் சங்கமிக்கும் மையமாக அணை மாற்றப்பட்டுள்ளது. மதுரை நகர் எல்லைக்குள் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கிறது. இவை சிறு ஓடைகள் போல் ஆற்றில் பயணித்து மதகு அணையில் இணைகின்றன.அங்கு கருப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் எடுக்கிறது. கழிவுநீர், சாயக்கழிவுநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. அணையின் பக்கவாட்டு பகுதியில் 'போர்வெல்' நீரை பயன்படுத்துவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி அணையின் உட்பகுதி, வெளிப்பகுதியில் கருவேல மரங்கள் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அகற்றப்பட்டன. எனினும் அணையை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை இல்லை.பராமரிப்பு பணி எப்போதுமதகு அணை ஆண்டுக்கு ஒரு முறை பராமரிக்கப்படுகிறது. அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பராமரிப்பு நிதியாக ஒதுக்கப்படுகிறது. இவை போதுமானதாக இல்லை. ஊழியர் பற்றாக்குறை பெரும் குறையாகவே உள்ளது. திருப்புவனம் உதவி பொறியாளரிடம் அணை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அணையின் முகப்பு பகுதியில் சிறுவர் பூங்கா முன்பு இருந்தது. பராமரிப்பின்றி பூங்கா இருந்த இடம் தற்போது தெரியவில்லை. அணையின் கைப்பிடி சுவர்களின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பி வெளியில் தெரிகிறது. அணை பராமரிப்புக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். ஆற்றுக்குள் கழிவு நீர், சாயப்பட்டறை கழிவு நீர் கலக்காமல் மாநகராட்சி தடுக்க வேண்டும். ஆகாய தாமரையை அழிக்க வேண்டும். 90 கண்மாய்களின் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இப்பணிகளை கோடை முடிவதற்குள் மேற்கொண்டால் தான் மழை பெய்யும்போது பயனுள்ளதாக அமையும்.
மழையின்றி வறட்சிமுன்பு வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்தோம். மதகு அணை வரவால் முறை வைத்து பாசனம் செய்தோம். மழையின்றி வறட்சி நிலவுவதால் மானாவாரி சாகுபடிக்கு கூட வழியில்லாமல் போனது. மதகு அணையில் கழிவுநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. கருவேல மரங்களை அகற்றினர். எனினும் ஆகாய தாமரையை அகற்றவில்லை. தேவையான நிதியை ஒதுக்கி அணையை பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்மாயாண்டி விவசாயி, கருப்புப்பிள்ளையேந்தல்.


பாழாகி வரும் அணைநேரடி பாசனம் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலமும், மறைமுகமாக 40 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகின்றன. எனவே அணை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கழிவு நீர் தேங்கும் மையமாக அணை மாற்றப்பட்டுள்ளது. இதைதடுப்பது யார்? மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அணை தொடர்ந்து மாசடைந்து வருவது வேதனையளிக்கிறது. இருளப்பன் விவசாயி, புல்வாய்க்கரை.


தோல் நோய் அபாயம்அணை நீரை நம்பி விவசாயம் செய்தோம். கடந்தாண்டு 20 நாட்கள் மட்டுமே மதகு அணை மூலம் நீர் கிடைத்தது. அது போதுமானதாக இல்லாததால் விவசாயம் செய்யவில்லை. பஞ்சம் பிழைக்க வழியின்றி மாடு மேய்க்கிறேன். விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. மதகு அணையில் கழிவு நீர், சாயப்பட்டறை கழிவு நீர் தேங்க விடாமல் தடுக்க வேண்டும். நிலத்தடி நீர் மாசடைந்து வருவதால் தோல் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதுசாத்தையா விவசாயி, கருப்புப்பிள்ளையேந்தல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X