சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

திருவரங்கம் அழைக்கிறது

Added : ஏப் 24, 2017
Share
Advertisement
'சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் எப்படியும் எம்பெருமானாருக்குத் தெரிந்திருக்கும். இந்நேரம் அவர் கிளம்ப ஆயத்தமாகியிருப்பார். தாமதிக்காமல் தாங்களும் குடும்பத்தோடு திருவரங்கம் புறப்படுவதே எனக்குச் சரியென்று படுகிறது!' என்றார் சிறியாண்டான்.கூரேசர் பதில் சொல்லவில்லை. அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார்.
திருவரங்கம் அழைக்கிறது Ramanujar Download

'சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் எப்படியும் எம்பெருமானாருக்குத் தெரிந்திருக்கும். இந்நேரம் அவர் கிளம்ப ஆயத்தமாகியிருப்பார். தாமதிக்காமல் தாங்களும் குடும்பத்தோடு திருவரங்கம் புறப்படுவதே எனக்குச் சரியென்று படுகிறது!' என்றார் சிறியாண்டான்.

கூரேசர் பதில் சொல்லவில்லை.
அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் சமையலை முடித்துவிட்டு மெல்ல வெளியே வந்த ஆண்டாள் அம்மாள், 'முதலில் சாப்பிட்டு விடுங்களேன். பிறகு உட்கார்ந்து யோசிக்கலாமே!''அம்மா, யோசிக்க அவகாசமில்லை. கூரேசர் பக்கம் இல்லாமல் உடையவர் தவித்துப் போயிருக்கிறார். இங்கு நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட பிறகு அவருக்கு அங்கு நிச்சயம் இருப்புக் கொள்ளாது. காலமும் நமக்குச் சாதகமாகிக் கொண்டிருக்கிறபோது தாமதிப்பதில் அர்த்தமில்லையே!' என்றார் சிறியாண்டான்.
அப்போது பட்டர் உள்ளே வந்தார். சட்டென்று எழுந்து வணங்கிய சிறியாண்டான், 'சுவாமி நலமா?'
'எம்பெருமானார் திருவருளால் மிக்க நலம். அங்கே சுவாமி எப்படி இருக்கிறார்?'
'எப்போதும் தங்கள் தந்தையின் நினைவாகவே உள்ளார். இப்போதுதான் இங்கு நடந்தவை அங்கே எங்களுக்குத் தெரியவந்தது. உடனே என்னை இங்கு அனுப்பினார்!' என்றார் சிறியாண்டான்.
ஒரு கணம் யோசித்த பட்டர், 'அப்பா, நாம் திருவரங்கம் புறப்பட்டு விடலாம்.' என்று சொன்னார்.
அதுவரை அமைதியாக இருந்த கூரேசர் முகத்தில் சட்டென்று ஒரு முறுவல் பூத்தது. 'சரி, அப்படியே!' என்று உடனே சொன்னார்.
ஆண்டாள் அவர்களுக்கு இலை போட்டாள். பட்டரின் மனைவி அக்கச்சி பரிமாற ஆரம்பித்தாள்.
அப்போது ஒரு சம்பவம் நடந்தது. சிறியாண்டான் திகைத்துப் போய் விட்டார். உண்ண அமரும் முன் ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்த கூரேசரின் மனைவி ஆண்டாள், அதைத் தம் மகன் பராசர பட்டரின் பாதங்களில் விட்டுக் கழுவினார். கழுவிய நீரை ஒரு பாத்திரத்தில் ஏந்தி எடுத்துக் கொண்டு உள்ளே சென்று வைத்தார்.
இதென்ன விசித்திரம்! எந்தத் தாயும் தன் மகனிடம் செய்யாத காரியத்தையல்லவா ஆண்டாள் செய்து கொண்டிருக்கிறாள்!
கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே சிறியாண்டான் சாப்பிட்டு முடித்தார். ஆண்டாள் பட்டரின் பாதங்களை அலம்பியது மட்டுமல்ல அவரது அதிர்ச்சி. அருகிலேயே கூரேசர் இருந்தும் அவருக்கு அப்படியொரு சேவையை அவள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது.
அவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்த பிறகு ஆண்டாள் உண்ண அமர்ந்தாள். மருமகள்கள், பராசர பட்டரின் மனைவியான அக்கச்சியும், வேதவியாச பட்டரின் மனைவியான மன்னியும் அவளுக்குப் பரிமாற ஆரம்பித்தார்கள். உண்ணத் தொடங்கும் முன் தாம் எடுத்து வைத்த பட்டரின் பாத தீர்த்தத்தை ஒரு வாய் அருந்திவிட்டு, அதன் பிறகே ஆண்டாள் உணவில் கை வைத்தாள்.
அதிர்ந்து போன சிறியாண்டான், 'தாயே, இதென்ன காரியம்? தங்கள் மகனின் பாத தீர்த்தத்தை தாங்கள் எதற்காக அருந்துகிறீர்கள்?' என்று பதறிக் கேட்டார்.
'ஏன், இதிலென்ன தவறு? சிற்பி ஒருவன் சிலையைச் செதுக்குகிறான். செதுக்கும்போது அவன் சிற்பி. அது கல். செதுக்கி முடித்ததும் அந்தக் கல் பெருமாள் சிலையாகி விடுகிறது. முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தச் சிலையை சிற்பி வணங்க மாட்டானா? தான் வடித்த சிலைதானே என்று அகம்பாவம் காட்ட முடியுமா? என் மகன் எனக்கு அப்படித்தான்!'
சுரீரென்று மின்னலடித்தது சிறியாண்டானுக்கு. திருவரங்கம் கிளம்பச் சொல்லி தான் கேட்டபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, பட்டர் ஒரு வார்த்தை சொன்னதும் கூரேசர் உடனே ஒப்புக் கொண்டதை எண்ணிப் பார்த்தார். 'அது பிறப்பல்ல; அவதாரம்' என்று உடையவரே ஒருமுறை சொன்னதும் அவர் நினைவுக்கு வந்தது. சட்டென்று எழுந்து பட்டரை வணங்கினார்.
பிறந்த கணத்தில் எம்பாரால் காதில் த்வயம் ஓதப்பட்ட குழந்தை.
ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த சத்தியங்களில் முதலாவதாகப் பராசர முனியின் பெயரை உடையவரால் வழங்கப்பட்ட பிள்ளை. மிகச் சிறு வயதிலேயே பூரண ஞானம் எய்திய மகான் என்று முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமான் எம்பெருமானார் போன்றோரால் சுட்டிக் காட்டப்பட்டவர்.
ஒரு சமயம் திருவரங்கம் கோயில் கருவறைக்குள் நாயொன்று நுழைந்து விட்டது. இதென்ன அபசாரம் என்று வருத்தப்பட்ட அர்ச்சகர்கள் சிறிய அளவில் குடமுழுக்கொன்றை நடத்திவிட முடிவு செய்தார்கள். (லகு சம்ப்ரோக்ஷணம் என்பார்கள்.) இது தெரிந்ததும் பராசர பட்டருக்கு சுறுசுறுவென்று கோபம் வந்துவிட்டது. நேரே சன்னிதிக்குப் போனார். 'பெருமானே, தினசரி நான் இங்கு வருகிறேன். நினைவு தெரிந்த நாளாக தினமும் வந்து கொண்டிருக்கிறேன். அப்படியானால் எத்தனை ஆயிரம் சம்ப்ரோக்ஷணங்கள் இதுவரை செய்திருக்க வேண்டும்? அதையெல்லாம் விட்டுவிட்டு, இன்று இந்த நாய் நுழைந்ததற்காக மட்டும் குடமுழுக்கு என்பது என்ன நியாயம்? நாயினும் கடையோன் நானே அல்லவா?' என்றதும் திடுக்கிட்டுப் போனார் அர்ச்சகர்.
பட்டரின் தன்னடக்கம் அப்படிப்பட்டது.
இச்சம்பவம் நினைவுக்கு வர, சிறியாண்டான் புன்னகை செய்தார்.
'தாயே, நீங்கள் சொல்லுவது சரி. பட்டரின் பாதம் பட்ட நீர் மகத்தானதுதான்.'
'போதும் சுவாமி. உடையவரைப் பற்றிச் சொல்லும். கன்னட தேசத்தில் அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?'
'ஆம் சுவாமி. ஆயிரக்கணக்கான சீடர்கள் அவருக்கு அங்கே கிடைத்திருக்கிறார்கள். மன்னன் விஷ்ணுவர்த்தன் உடையவரின் சொல்லுக்கு மறு சொல் பேசுவது கிடையாது. எம்பெருமானார் கருத்துப்படி பேலுாரைச் சுற்றி ஐந்து நாராயண க்ஷேத்திரங்களை உருவாக்கி இருக்கிறான். இந்நேரம் விக்கிரகப் பிரதிஷ்டை நடந்தேறியிருக்கும்.' என்றார் சிறியாண்டான். தொடர்ந்து, திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டது முதல் அவர்கள் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரித்துச் சொல்லிக்கொண்டே வந்து, இறுதியில் 'கூரேசருக்குக் கண் போய்விட்டதுதான் இந்நாள்களில் உடையவரின் ஒரே பெரும் வருத்தம். தன் கண்ணே போனது போல உணர்ந்தார்.'
கூரேசர் கரம் குவித்துத் தம் மானசீகத்தில் ராமானுஜரை வணங்கினார். 'அமுதனார் பாடியபடி அவர் மேகத்தைப் போன்ற கருணை உள்ளம் படைத்தவர். எப்போதும் அடுத்தவர்களுக்காகத் தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். இத்தனை வருடம் அவரை விட்டு விலகியிருக்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு பாவியாக இல்லாமல் இப்படியொரு தண்டனை எனக்கு வாய்த்திருக்காது!' என்றார் கூரேசர்.
அவரை சமாதானப்படுத்தி, விரைவில் திருவரங்கம் புறப்பட ஏற்பாடுகள் செய்தார் சிறியாண்டான். 'நான் போய் உடையவருக்குத் தகவல் சொல்லி அவரை அங்கே அழைத்து வந்து விடுகிறேன். அதற்குமுன் நீங்கள் அங்கே வந்துவிடுவது தான் அவருக்கு சந்தோஷமாக இருக்கும்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X