சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

கண்ணழகர்

Added : ஏப் 26, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற் போலிருந்தது. தடதடத்து ரதம் ஓடும் அகண்ட பெரும் வீதியில் ராமானுஜரும் கூரேசரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது பரவசக் கண்ணீரைத் தவிர இருவரிடமும் ஏதும் இருக்கவில்லை. 'சுவாமி..!' என்று பாதம் பணிய வந்த கூரேசரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார் ராமானுஜர்.'இதுவோ விதி? இதுவோ உம் சேவைக்குப்
கண்ணழகர் Ramanujar Download

நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற் போலிருந்தது. தடதடத்து ரதம் ஓடும் அகண்ட பெரும் வீதியில் ராமானுஜரும் கூரேசரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது பரவசக் கண்ணீரைத் தவிர இருவரிடமும் ஏதும் இருக்கவில்லை. 'சுவாமி..!' என்று பாதம் பணிய வந்த கூரேசரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார் ராமானுஜர்.

'இதுவோ விதி? இதுவோ உம் சேவைக்குப் பரமன் அளித்த பரிசு? ஞானச் சுடரொளி வீசும் தங்கள் விழிகளை அல்லவா இத்தனைக் காலமாக உமது அடையாளமாக என் நினைவில் ஏந்தி பத்திரப்படுத்தி இருந்தேன்! அதைப் பிடுங்கி எறிந்தது காலத்தின் உக்கிரமா, கலியின் வக்கிரமா? இப்படி ஆகிவிட்டதே கூரேசரே!''வருந்தாதீர்கள் சுவாமி. கலி கெடுக்க வந்த புருஷர் தாங்கள். ஆயிரமாயிரம் பேர் அகக்கண் திறந்து வைத்தவர் தாங்கள். அடியேனும் அதிலொருவன் அல்லவா? இந்த விழிகள் எனக்கெதற்கு? இதனால் எதைக்கண்டு மகிழப் போகிறேன்? நெஞ்சில் நீங்கள் இருக்கிறீர்கள். நினைவில் எம்பெருமான் இருக்கிறான். விழிகொண்டு கண்டறிய வேறேதும் எனக்கில்லை சுவாமி!' என்றார் கூரேசர். வீதி குழுமி விட்டது. உடையவரின் சீடர்கள் எழுநுாறு பேரும் ஓடோடி வந்து கூரேசரின் தாள் பணிந்தார்கள். யாருக்கும் பேச்சு எழவில்லை. நடந்த கோர சம்பவத்தின் எச்சமாகக் குழிந்திருந்த அவரது கண்கள் அவர்களது வாயடைக்கச் செய்திருந்தன. எப்பேர்ப்பட்ட மகான்! யாருக்கு இந்த நெஞ்சுறுதி வரும்! மன்னனே ஆனாலும் மற்றொரு கருத்தை ஏற்க மாட்டேன் என்று அடித்துப் பேசுகிற தெளிவு எத்தனை பெரிய வரம்! மிரட்டல் அவரை அச்சுறுத்தவில்லை.

தண்டனை அவரை பலவீனப்படுத்தவில்லை. வலியும் வேதனையும் குருதிப் பெருக்கும்கூட அவருக்கொரு பொருட்டில்லை. 'எம்பெருமானாரே, இத்
தனை ஆண்டுகள் தங்களைக் காணாமல், தங்கள் நிழலில் வசிக்காமல் அனலில் வாடினேனே, அதனைக் காட்டிலும் ஒரு துயர் எனக்கில்லை'
என்றார் கூரேசர். 'இல்லை. இது மிகக் கொடுமை. ஒரு பாவமும் அறியாத தங்களுக்கு இது நேர்ந்திருக்கவே கூடாது!''யார் கண்டது? பரம பாகவதர் யாருடைய திருமண்ணாவது நேராக இல்லை என்று எப்போதாவது மனத்துக்குள் நினைத்திருப்பேன். அந்த பாகவத அபசாரமாவது செய்யாமல் இது எனக்கு நேர்ந்திருக்காது சுவாமி!''ஐயோ நீங்களா! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர் கூரேசரே. உலகுக்கும் மக்களுக்கும் உங்கள் மூலம் பகவான் ஒரு செய்தி சொல்லியிருக்கிறான் என்று மட்டும்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிபந்தனையற்ற அன்பும் அப்பழுக்கற்ற தியாகமும் பரிசுத்தமான சேவையுமே வைணவம் என்பதை நீங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள்.'துயரத்தின் கனத்தைச் சொற்களின் மூலம் வெளியே இறக்கப் போராடிக் கொண்டிருந்தார் ராமானுஜர். முடியவில்லை. அன்றும் மறுநாளும் ஒவ்வொரு நாளும் கூரேசரைக் காணும்போதெல்லாம் அவரைத் துக்கம் வ்விக் கொள்ளும். அம்மெலிந்த தேகத்தையே அவரது விழிகள்தாம் தாங்கிக் கொண்டிருந்தாற்போல் இருக்கும். அப்படியொரு சுடர். அப்படியொரு பெருங்கருணை. அது இல்லாது போய்விட்டதே.

ஒருநாள் இதை யோசித்தபடியே தனித்து அமர்ந்திருந்த உடையவர், சட்டென்று ஏதோ தோன்ற, எழுந்தார். விறுவிறுவென்று திருவரங்கத்து அமுதனார் இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கோயில் அதிகாரியாக இருந்து, தொடக்க காலத்தில் ராமானுஜரின் சீர்திருத்தங்கள் பிடிக்காமல் போர்க்கொடி துாக்கிய அமுதனார். பிறகு உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து பாதம் பணிந்த அமுதனார். 'கூடாது; வேண்டாம்' என்று ராமானுஜர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், ராமானுச நுாற்றந்தாதி என்னும் காலத்தால் அழியாத பேரற்புதப் படைப்பைத் தந்து, அதை அரங்கன் அருளால் நிரந்தரமாக்கும் கொடுப்பினை பெற்ற அமுதனார்.அது நல்ல நண்பகல் நேரம். தன் வீட்டு வாசலுக்கு உடையவர் வந்து நிற்பது கண்டு திடுக்கிட்டு ஓடி வந்தார் அமுதனார். 'சுவாமி! வெளியே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வர வேண்டும்!''நான் பிட்சை கேட்டு வந்துள்ளேன் அமுதனாரே!''திருவுள்ளம் என்னவென்று தெரிந்தால் நான் இயன்றதைச் செய்வேன்.''திருவரங்கம் திரும்பிய கூரேசர் குடும்பத்துக்குத் தங்குவதற்குச் சரியான இடம் இல்லை. பெரிய நம்பியின் மகன் புண்டரீகாட்சனும் இடிந்து விழும் தறுவாயில் உள்ள ஓரிடத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார். பாகவத உத்தமர்களைப் பராமரிப்பதைக் காட்டிலும் பெரிய கைங்கர்யம் வேறில்லை...'அமுதனாருக்குப் புரிந்தது. சித்திரை வீதியில் இருந்த தமது இரண்டு நிலங்களை அந்தக் கணமே கூரேசருக்கும் பெரிய நம்பி குடும்பத்தாருக்கும் தந்துவிட்டதாகச் சொன்னார். உடையவர் தமது சீடர்களைக் கொண்டு அங்கு இரு குடும்பங்களும் தங்குவதற்கேற்ப வீடுகளைக் கட்டினார். அவர்களைக் குடியேற்றி அழகு பார்த்தார். எதிரெதிர் வீடுகளில் இரு பெரும் சூரியச் சுடர்கள்.'ஆனால் இதெல்லாம் எனக்குப் போதாது கூரேசரே. நீங்கள் என்னோடு காஞ்சிக்கு வரவேண்டும். வரம் தரும் கடவுளான பேரருளாளன் தங்களுக்குக் கண்டிப்பாகப் பார்வை
யைத் திருப்பித் தருவான்''என் பார்வை அத்தனை அவசியமா சுவாமி?''எனக்கு அவசியம்' என்றார் ராமானுஜர். வற்புறுத்தி அவரைக் காஞ்சிக்கு அழைத்துச் சென்று சன்னிதியில் நிறுத்தினார்.

கூரேசர் நெஞ்சுருகப் பாடிய சுலோகங்களைக் கேட்டுக் கனிந்த பேரருளாளன் திருவாய் மலர்ந்தான்.'என்ன வரம் வேண்டும் கூரே சரே?'ஒரு கணமும் யோசிக்காமல் அவர் பதில் சொன்னார், 'நாலுாரான் இறந்தால் அவனுக்கு நல்லகதி கிடைக்க வேண்டும்.'திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். 'என்ன இது கூரேசரே? நான் என்ன சொன்னேன், நீங்கள் என்ன கேட்டீர்?''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். என் கண்ணைவிட மேலான தாங்கள் என்னுடன் இருக் கிறீர்கள். ஆனால் வைணவனாகப் பிறந்தும் பாவம் பல புரிந்ததால் அவன் நரகம் போவான். நாலுாரான் நரகம் போனான் என்று சொல்லாமல் ஒரு வைணவன் நரகம் போனானென்று சரித்திரம் பேச இடம் தர விருப்பமில்லை எனக்கு' என்று சொன்னார்.கேட்டுக் கொண்டிருந்த உடையவர் மட்டுமல்ல; அருளாளனே வியந்து போனான். 'ஓய் கூரேசரே, இன்னொரு வரம் இந்தாரும். நாலுாரான் மட்டுமல்ல; உமது சம்பந்தமுள்ள அத்தனை பேருக்கும் இனி சொர்க்கம்தான்!' என்று திருவாய் மலர்ந்தான்.குரு சொல் மீறினால் நரகம் என்று முன்பொருமுறை திருக்கோட்டியூர் நம்பி எச்சரித்தும், மீறிய சம்பவம் ராமானுஜருக்கு நினைவுக்கு வந்தது. 'கூரேசரே, உமது சம்பந்தத்தால் எனக்கும் இனி சொர்க்கம் நிச்சயம்!' என்று சொல்லிப் புன்னகை செய்தார்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
28-ஏப்-201709:57:34 IST Report Abuse
Manian நல்ல கேள்விகள்தான். நின்று- நிலையாக ஓர் வட்டத்தில் சூரியனை சுற்றி நின்று , பகல், இரவு என்று மாறிமாறி வரும் சுழர்ச்சியில் இருக்கும் - தன் அச்சில் சுழலும், சூரியனையும் சுற்றி வரும் - பவுதீக விதியையே மாதக்கண்ணோடு சொல்லப்படாது. ராமாநுஜர்காலத்தில் இன்றைய செயல் முறைகள் இல்லாதபோதும், ஆழ்ந்த சிந்தனையால் அறிந்திருக்கவேண்டும். (இது எனது ஊகமே. ). கூரேசன் போன்றவர்கள் மரபணுவில் இவ்வித சிந்தனை சார்ந்த டிஎன் ஏ க்கள் இருந்திருக்கலாம். இவர்களையே ப்ரோடிஜி Prodigy என்கிறோம். உதாரணமாக, சமுதாய நியாயத்துக்கு நான் போராடுவேன், தவறை தட்டி கேட்பேன். என் அருமை தாய், ஏன்டா தம்பி, நீ ஒங்க அப்பாரப்போலவே மத்தவங்க நலத்துக்கு ஒழைக்கிறாய். என்னத்தை சொல்ல என்பார்கள். அறிவியல் உலகில், சர் ஐசாக் நியூட்டன் கண்டுபிடித்த பல கோட்ப்பாடுகளே இன்றய முன்னேற்றத்திற்கு காரணம். கூரேசன் தாயார் வழி மரபணு காரணமாக இருக்கலாம். இது மாதிரி அமைவது கோடி கோடியில் ஒன்றே. ஒரே ஐன்ஸ்டைன், ஒரே மதம் கியூரி, என்று நிகழ்வது. ஆனால் இவர்கள் மாதிரி ராமானுஜரை பற்றி இவ்வளவு விரிவாக ஏன் யாரும் இதற்கு முன் எழுத வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. பா.ரா அவர்கள் தொண்டு ராமானுஜரின் தொடர்ச்சியே.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201720:44:25 IST Report Abuse
மலரின் மகள் ''நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும்'', இது எனது அறிவியல் அறிவிற்கு எட்டாத ஒன்று.நின்று சுழலும் புவி என்பதற்கான உண்மையான அர்த்தம் புரிபடவில்லை. பூமி சதா சர்வகாலமும் சுழன்று கொண்டே இருப்பது தானே, சுற்றுவது நின்றாள், பிரளயம், அனைத்தும் பூமியிலிருந்து வீசி எரிய படும் என்பது இயற்பியல். ஆகையால் எனக்கு குழப்பம் தான். தமிழின் சொல்லாட்சி புரிய வில்லை. நிறைய படிக்க வேண்டும். பெரியவர்களின் துணை உரையாடுவது இல்லாமல் போனது எனக்கு வருத்தம்.
Rate this:
00000 - 00000,இந்தியா
21-ஜூலை-201708:39:09 IST Report Abuse
00000அன்பு என்ற தத்துவத்துக்குள் ஆண்டவனும்,அடியானும் ஒன்றேஇதை அரசர்களால் ஏற்க முடியாது(ஒரு சிலர் விதிவிலக்கு).அன்பை கொடுப்பது,பெறுவது இரண்டும் ஆண்டவனே அடியார் ஆண்டவனிடம் ஐக்கியம். சைவம், வைணவம் இரண்டுமே இந்த கோட்பாட்டில் உறுதியுடன் நிற்பவை."அன்பே சிவம்" என்றது சைவம்."'அர்ப்பணித்தலே அரங்கமாகும் வைணவத்தில்".ஆகவே இவற்றை ஆராதித்த அந்த மதப்பெரியோர்கள் அவற்றில் பேதம் பார்த்ததில்லை என்பது தான் நிஜம்.அவர்கள் புனைந்து வந்த மதவேடம் அவர்கள் உள்ளத்தை மதவரம்புக்கு மட்டுமே கட்டுப்படுத்தியிருந்தால் மக்கள் இதயத்தை அவர்கள்ஆட்கொண்டிருக்க இயலாது.அப்பர்,சுந்தரர்,வாசகர் வழியேதான் உடையவரதும்.அவருடைய கோட்பாடுகளிலும் மறறும் செயல்பாடுகளிலும் அந்த ""ஒன்றே குலம்,ஒருவனேதேவன்"" என்பது நிதர்சனம்.அவர் ஆளவந்தாரின் சீடர் என்பதால் வைணவத்தில் மட்டுமே செய்ததை,ஆதிசங்கரரின் சுடராகியிருந்தால் சைவத்திலும் தந்திருப்பார். அத்வைதமும், விஷிஸ்டாத்வைதமும் கணவன்,மனைவியாக கைகோர்த்திருக்கும். அவருடைய ஒப்பற்ற சீடரான கூரத்தாழ்வாருக்கு ஒரு போதும்'"தும்பை பூ சிவனைவிட பெரிது"" என்று எழுதி வைணவத்தை உயர்த்த வேண்டிய எண்ணம் வரவாய்ப்பிலலை.ஏன்?வைணவம் போதிப்பதே ஆசாரியர்திருவடி அடையும் சரணாகதியை.அவருடைய ஆசார்யராம் உடையவரின் திருவடியைவிட அவருக்கு பெரிது ஏதுமில்லை.அன்பினால் மட்டுமேஅதிகாரத்தால் அல்ல. ஆகவே, ""த்ரோணம் அஸ்தி ததபரம்"" என்று அவர் எழுதியதற்கு ""தும்பை பூ சிவனைவிட பெரிது"" என்ற அர்த்தம் வைணவத்திற்கே பொருந்தாது. ஐயாநான் சமஸ்கிருதம்,சாத்திரம் பயின்றதில்லை,அடியாராக பயில்கிறேன் ஆழ்வாரவர் வழியேஅந்த சுலோகத்திற்கு பொருள் ""த்ரோணம்-தாழ்மை, அஸ்தி-முற்றிலும் , ததபரம் -அதுபெரிது., ""முற்றிலும் தாழ்மை அதுபெரிது"" என்பதுவே சைவத்திற்கு( வைணவத்திற்கும்) ஏற்றதாகும். ஏனெனில் கையில் கபாலத்துடன் காட்சி தரும் சிவபெருமான் ஆணவத்தை அழித்தலின் அடையாளம்அ ப்படியிருக்க'சிவாத் பரதரம் நாஸ்தி (சிவத்தை விட உயர்ந்தது வேறில்லை)"" என்பது அம்(சிவ)மதத்தின் கோட்பாட்டை(அன்பே சிவம் என்றதை) எதிர்ப்பதே சிவன் உயர்வு,தாழ்வு என்ற பேதம் கடந்து ஆருயிராய் அண்டசராசரம் அனைத்திலும் நிறைந்துஉள்ளது என்ற சைவ, வைணவ உள்ளமை ,அவற்றை இருகண்களாக போற்றிய விஜயலயன்,கண்டராதித்தன்,ராஐராஜன்.ராஜேந்திரன் வழிவந்த இரண்டாம்குலோத்துங்கன் போற்றாத காரணம் அகந்தையேயன்றி இராமானுஜரல்லஆதி, அந்தம் கடந்த சிவப்பொருள் பூவுலகில் அவதரிக்கும்போது மட்டுமே அதை(சிவாத் பரதரம் நாஸ்தி )இயம்ப மனிதனுக்கு தகுதி.மனோ,வாக்கு,காயம் கடந்த அந்த சிவனின் பெருமையை வெளியிட ,அகந்தையே அகலாத அற்ப குலோத்துங்கன் எம்மாத்திரம்???ஆனால் பற்றுதலுக்கு குருவன்றி வேரில்லாத கூரத்தழ்வார் ஆதிஅந்தம் அறிந்தவர். அடி(திரு)பணிவதே மேன்மை என்ற உண்மையை நிலைநிறுத்தவே கண்களை தியாகம் செய்தார்.இனியும்இவை ஆணவம்கொண்டோரை காணவேண்டியதில்லை என்று.ஏனெனில் அவர் மனக்கண்ணில் உடையவர் மட்டுமே இருப்பார். குலோத்துங்கர்,நாலூரார் அங்கு இல்லை...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201720:41:03 IST Report Abuse
மலரின் மகள் ராமனுஜரின் சீடர்களில் மிகவும் உயர்ந்தவர் கூரேசரர் என்று தெரிகிறது. பகைவனுக்கு அருளும் குணம். எப்படி வந்தது அவருக்கு, தனக்கென கேட்டுப் பெறாமல் ஒரு வைணவன் பாபியானாலும் பரவாயில்லை, அவன் செய்த பாவத்தை தனக்கு கிடைக்கும் வரத்தால் போக்கி அவனையும் வைகுண்டம் செல்ல ஆசை வைத்தவரை என்ன சொல்வது. குருவிற்கு கண்களை தந்தார், நல்லூரானுக்கு பரமபதத்தை வேண்டி பெற்றார். மேன்மக்கள் என்பதற்கு உதாரண புருஷர் கூரேசர். சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X