குழந்தைகள் விடுமுறையை அனுபவிக்க விடுங்கள்!| Dinamalar

குழந்தைகள் விடுமுறையை அனுபவிக்க விடுங்கள்!

Added : ஏப் 26, 2017 | கருத்துகள் (3)
Advertisement
குழந்தைகள் விடுமுறையை அனுபவிக்க விடுங்கள்!

தேர்வுகள் முடிந்து விட்டன. புத்தகங்களை மூடிவைத்துவிட்டுக் குதுாகலமாய் குழந்தைகள் தெருவுக்கு விளையாட வந்துவிட்டன. இருபதாண்டுகளுக்கு முன் கோடைவிடுமுறை பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்தது. காரணம் ஆண்டுமுழுக்கப் படித்த படிப்புச்சுமையிலிருந்து ஒன்றரை மாதங்கள் ஒதுங்கி இருப்பதற்கான விடுதலைக் காலமாக அந்த விடுமுறைக் காலம் இருந்தது. நம் நினைவேட்டில் பல நினைவுகள், சில செல்லரித்து, சில சொல்லரித்து.. தொலைதுாரத்தில் உள்ள தாத்தா பாட்டி ஊருக்குப் பயணித்து அந்த மண்மணம்
கமழும் கிராமத்தில் சேற்றுவயலாடி ஆற்றுவழியோடி மீன்பிடித்து கல்லா மண்ணா என்று கேட்டு, பம்பரம் விட்டு, பாண்டியாடி, குச்சிக்கம்பு அடித்து, டயர்வண்டி ஓட்டி, நுங்குவண்டியோட்டி, நிலாச் சோறு சுவைத்து, டூரிங் திரையரங்கில் எம்ஜிஆர் படம்பார்த்து இடைவேளையில் முறுக்கு வாங்கிச் சாப்பிட்டு பாட்டியிடம் கதைகள் கேட்டு ரசித்த நாட்கள் எங்கே போயின?
ஏன் மறந்துபோனோம்? இளநீர்காய்களைச் சீவித்தந்த அந்த தாத்தாவின் கைகளில் இருந்த விடுமுறை பொழுதை பறித்தது யார்? பனையோலை மடலில் பதநீர் ஊற்றி நுங்குபோட்டுத் தந்த சின்னத் தாத்தாவிடமிருந்து நம் குழந்தைகளைப் பிரிக்க நாம் எப்படி விடுமுறை நாளில் முடிவுசெய்தோம். எந்த சாக்லேட் தாளையாவது தாத்தா பாட்டிகள் பிரித்துச் சாப்பிட்டு இருக்கிறார்களா? அதைப் பிரிக்க நினைக்கையில் சட்டென்று விடுமுறைக்கு வரப்போகும் பேரன்பேத்தி முகம் சட்டென்று நினைவுக்கு வந்து உடன்முந்தானை முனையில் முடிச்சுபோட்டு வைக்கும் பாட்டிகளை நாம் ஏன் இந்த விடுமுறை நாளில் மறந்துபோனோம்? அவர்களின் கரம்பிடித்துப் பார்த்த பட்டமரத்தான் பூச்சொரிதல்கள், அழகுநாச்சியம்மன் திருவிழா, பிடாரிஅம்மன் தேரின் மாம்பழத் திருவிழா எல்லாவற்றையும் எப்படி மறந்தோம்? கோடைவிடுமுறை வெறும் விடுமுறையாக மட்டுமா இருந்திருக்கிறது? அத்தை பிள்ளைகள், மாமன் மகன்கள், சித்தி குழந்தைகள் என்று வீடே குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சித்திரை மாதம்முழுக்கத் திளைத்திடுமே!

தாத்தா வாழும் தெரு : வந்தவழி மறந்து அறை எங்கும் அலைந்து திரியும் எறும்புகளாய் நாம் ஏன் மாறினோம்? “ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூபூத்ததாம் இரண்டுகுடம் தண்ணி எடுத்து இரண்டுப் பூ பூத்ததாம்” என்று பாடக் குழந்தைகள் இல்லாததால் கல்லா மண்ணா கேட்கக்
குழந்தைகளற்று மண்ணுமற்று தண்ணீருமற்றுக் பாட்டிதாத்தாக்கள் வாழும் அன்புத்
தெருக்கள் ஆதரவற்றுஅமைதியாய் நின்று கொண்டிருக்கின்றன. வேகாத வெயிலில் அந்தக்
குழந்தைகளின் விடுமுறைநாட்களை மறுத்து அவர்களைமீண்டும் சம்மர் வகுப்புகளில் கொண்டு நிறுத்துவது என்னநியாயம்? பண்பாட்டையும் அன்பையும் பண்பையும் அவர்களுக்குக் கற்றுத் தந்து இத்தரையின் நித்திரையிலிருந்து நீக்குவதுஇந்தச் சித்திரை மாதத்தின் கோடை விடுமுறையில்தானே! அன்பெனும் ஆயுதத்தால் நம் குழந்தைகளின் குழந்தைத்தனத்தில் கை
வைப்பது என்ன நியாயம்? வெகுவாய் அடக்க முயலும் எதுவும் விரைவாய் கடக்க முயலும்
என்பது நாமறியாததா?

பயணப்படுங்கள் : ஆண்டுமுழுதும் குழந்தைகள் உழைக்கும் உழைப்பு மிகஅதிகமானது. பட்டாம்பூச்சிகளின் சிறகில் நாம் மாட்டிய பைக் கூடுகளை இறக்கிவைக்கப் பேருந்திலோ தொடர்வண்டியிலோ சுற்றுலாத் தலங்களுக்குப் பயணப்படுங்கள். தகிக்கும் கோடை குழந்தைகளுக்கு ஒருபொருட்டன்று. வெயிலோடு விளையாடி களிப்போடு துாங்கப்போகிற விந்தை விழிகள் அவர்
களுடையன.

உழைப்பின் உன்னதத்தைப்புரிய வையுங்கள் : மாஞ்சோலையின், மூணாறின் பச்சைத் தேயிலைத் தோட்டத்தினுாடே குழந்தைகளோடுபயணப்படுங்கள். பசுமையின் அழகு மொழியில் அவர்கள் அந்தக் குட்டி இலைகளோடும் வழிந்தோடும் தண்ணீர் ஓடைகளோடும் பேச அனுமதியுங்கள். ஒருகோப்பை தேநீருக்குப் பின்னால் அட்டைகளோடு போராடி முதுகில் கூடையோடு தேயிலைக் கொழுந்தை வியர்வையோடு அதிகாலை நேரத்தில் பறித்தெடுக்கும் உழைப்பாளிகளின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சொல்லி உழைப்பின் உன்னதத்தைப் புரிய வையுங்கள்.

வற்றிய வைகை : கரைபுரண்ட ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இன்று வறண்டவைகையில் நீரின்றி இறங்கு வதை காட்டி வற்றிப்போனதன்துயரத்தை மென்மையான அறிவியலால் உணர்த்துங்கள். கடலின் எதிர்ப்பை மீறிராமேஸ்வரத்தில் உயரிய தொழில்நுட்பத்தோடு பாம்பன் பாலம் கட்டிய கதையை அந்தப்பாலத்தில் நின்று குழந்தைகளுக்குச்சொல்லுங்கள். தீவில் பிறந்து தன் மனிதநேயத்தால் இந்தியப் பெருங்கடலாய் மாறிப்போன மாமனிதர் அப்துல்கலாம் உறங்கும் பேய்க்கரும்பில் அவர் போல் வாழ உறுதிகொள்ள உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தாருங்கள். ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தால் மண்மேடாகிப்போன தனுஷ்கோடியை அவர்களுக்குக் காட்டுங்கள். அகண்ட காவிரியைக் காட்டி இன்று நீரற்ற நிலையில் சுருங்கிய ஓடையாய் மாறியதன் காரணத்தை அவர்களுக்கு புரிகிறவகையில் சொல்லுங்கள்.

கரிகாலன் கட்டிய கல்லணை : தமிழரின் பலநுாறு ஆண்டுகளுக்கு முந்தைய நீர்மேலாண்மைச்
சிந்தனையின் இன்றைய இருப்பு என்பதை உணர்த்துங்கள். எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்த
வீட்டைக் காட்டுங்கள்.. “வேடிக்கை மனிதரைப்போல்வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற அவன் வரிகளைச் சொல்லித் தாருங்கள்.

நதியைக் காட்டுங்கள் : இப்போதும் வற்றா நதியாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியின் அழகைபாபநாசத்தில் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அந்த நதியில் உலவும் வெள்ளியற்புதமாய் நீந்திக் களிக்கும் மீன்களுக்கு அவர்கள் கையால் பொரி போடவைத்துக் கூட்டமாய் ஓடிவரும் மீனினத்தை ரசிக்கக் கற்றுத்தாருங்கள்.குமரியில், முக்கடல் சங்கமத்தைக் காட்டுங்கள், படகில் பயணித்து விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் சென்று இந்தச் சீற்றம்மிகுந்த கடலை சுவாமி விவேகானந்தர் நீந்திக்கடந்தார் என்று அவர் கொண்ட மனஉறுதியைக் கற்றுத்தாருங்கள்.

மனம் விட்டுப் பேசுங்கள் : யாருடனும் பேசாமல் கூச்சத்தோடு ஒதுங்கிநிற்கும் குழந்தைகளை ஏற்று அன்போடு அவர்களுடன் பேசுங்கள், அவர்களின் உன்னத உலகம் உங்களுக்குப் புரியும். விடுமுறை நாட்களில் குழந்தைகளைச் சமாளிக்க முடியவில்லையே என்று பதற்றப்படாதீர்கள். அவர்களோடு அதிகமாய் இருப்பதற்கான பொன்னான நேரம் இதுஎன்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.உறவுகளின் உன்னதத்தை அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். நெடுநாட்கள் செல்லாமல் இருந்த உறவினர் வீட்டிற்குக் கோடைவிடுமுறையில் அழைத்துச் செல்லுங்கள். நிம்மதி என்பது வீடுநிறையப் பொருட்களை வாங்கிக்குவிப்பதில் இல்லை, எந்த வசதியும் இல்லாமல் வெம்மைபொங்கும் சித்திரை மாதத்திலும் ஓட்டு வீட்டில் வாழும் உறவினர்களின் வாழ்வியலைக் காட்டி நிம்மதி என்பது மனநிறைவில்மட்டுமே இருக்கிறது என்பதை உணர்த்துங்கள்.

உதவக் கற்றுத்தாருங்கள் : உங்கள் பிள்ளைகளின் கடந்த ஆண்டுப் புத்தகங் களை இந்த ஆண்டு படிக்கப்போகும் ஏழைக்குழந்தைக்கு அழகாக அட்டைபோட்டுத் தந்து உதவுங்கள்.
கிராமத்து வாழ்க்கை கிராமங்களை ஏளனம் செய்யாமல் கோடைவிடுமுறைக்கு உறவினர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பஞ்சாரத்தைத் திறந்த உடன் தன்குஞ்சுகளுடன் கூரிய அலகால் கொத்திக்கிண்டும் கோழிகள், நெற்பயிர் விளையும் வயற்காடுகள், கூர்நுனி கொண்ட ஏர்நுனிகள், தண்ணீர் பாயும் பம்பு செட்டுகள், வெள்ளந்தியான மனிதர்கள், கூரைபோட்ட மண் சுவர் வீடுகள், கிராமத்துக்காவல் தெய்வங்கள், வந்தோரை வரவேற்கும் அன்பான
திண்ணைகள் என யாவற்றையும் இந்த விடுமுறையில் காட்டாவிட்டால் எந்த விடுமுறையில் காட்டப்போகிறீர்கள்?

வாசிப்பில் நேசம் : சிறுசிறு நுால்களை வாங்கித்தந்து வாசிக்கக் கற்றுத் தாருங்கள். வாசிப்பின் சுகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. சோட்டா பீம்களுக்குள்ளும், ஆண்ட்ராய்டு அலைபேசி
களின் பேசும் பொம்மைகளுக்கு உள்ளும், வீடியோ விளையாட்டுகளிலும் போகோ சேனல்களுக்கும் உள்ளே தொலைந்து கிடக்கும் குழந்தைகளை மீட்டு வெளியே கொண்டு வாருங்கள்.
“ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் உலகையே மாற்றக்கூடும்” என்ற மலாலா யூசுப்யின் வாக்கில்தான் எவ்வளவு உண்மை! உலகையே மாற்றும் உன்னதக் குழந்தை உங்கள் வீட்டில் வளர்கிறது என்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு பெருமை.

முனைவர்சௌந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி,
திருநெல்வேலி. 99521 40275வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29-ஏப்-201710:16:02 IST Report Abuse
A.George Alphonse The author has very beautifully narrated the Flash Back lives of the present day grand parents and the present generation don't , won't and never enjoy such kinds of villages flash back in their lives at any time.Since this is an electronic era the generation won't understand all these and simply set aside all these as boring in their lives.
Rate this:
Share this comment
Cancel
Ram Mohan Thangasamy - Chennai,இந்தியா
27-ஏப்-201717:32:37 IST Report Abuse
Ram Mohan Thangasamy தங்கள் கட்டுரை சிறப்பு ஐயா. எனது வயதை ( 47 ) ஒத்த தங்களின் நினைவுகள் அபாரம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏனைய மாணவர்களும், சிறு வயதில் அனுபதித்த கோடை விடுமுறையை, அந்த இடங்களோடு தொடர்பு படுத்தி மிக்க நினைவாற்றலோடு, மிக விளக்கமாகவும், தெள்ள தெளிவாகவும் எழுதி எங்களின் நினைவுகளை சுமார் 20 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்ற உணர்வை, உங்கள் கட்டுரை கொண்டு வந்ததற்கு நன்றி. எனது குழந்தைகளுக்கு படிப்பை இந்த கோடை காலத்தில் திணிக்காமல் தாங்கள் கூறிய படி இன்ப சுற்றுலா மற்றும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். தாங்கள் மென்மேலும் மக்களுக்கு பயன் பெரும் கட்டுரை தருக. தங்கள் தமிழ் தொண்டு வாழ்க வளர்க. நன்றி வணக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Ram Balaji - Mumbai,இந்தியா
26-ஏப்-201710:44:34 IST Report Abuse
Ram Balaji மிக மிக அற்புதமான நினைவுகள். ரசித்தேன் மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X