வாழட்டும் இசை நாடகக் கலை| Dinamalar

வாழட்டும் இசை நாடகக் கலை

Added : ஏப் 27, 2017 | கருத்துகள் (1)
வாழட்டும் இசை நாடகக் கலை

தமிழ்க்கலை என்பது மிகப் பெரிய சமுத்திரம். அதை எட்டித்தான் பார்க்க முடியுமே தவிரத் தொட்டு பார்க்க முடியாது. ஆயக்கலைகள் 64 என்பர்.அறுபத்து நான்கு கலைகள் இருந்தாலும், தமிழை முத்தமிழாகவே நாம் வகைப்படுத்திக் கூறுகின்றோம். இன்று தமிழ் மக்களிடம்
தமிழின் பெருமை, இனிமை, எளிமை ஆகியவற்றை நேரடியாக கொண்டு சேர்ப்பது இசைத்
தமிழும், நாடகத் தமிழும் தான். படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை கேட்டும், பார்த்தும் ரசிக்கும் கலை இசையும், நாடகமும் ஆகும்.

இசை நாடகம் : இசையையும் நாடகத்தையும் இணைத்து ''இசை நாடகம்'', காலங்காலமாக நடத்தப்படும் கலை. திருவிழாக்களில் இசை நாடகத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர். மேடை நாடகங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சொந்தக் குரலிலேயே பாடி, வசனம் பேசி நடிப்பது தான் இசை நாடகம் எனப்படுகிறது. திரைப்படங்களில் பாடலைப் பின்னணி இசையில் இசைக்க செய்து, நடிகர் நடிகைகள் பாடலுக்கு ஏற்றவாறு வாயசைப்பது இசை நாடகம் கிடையாது. அன்றைய திரைப்படங்களில் திரையில் தோன்றி நடிப்பதற்கு, இசைக்கே முதலிடம் கொடுத்தனர். சொந்த குரலில் இனிமையாக பாடல்களைப் பாடக் கூடியவர் களே சிறந்த நடிகர்களாக ரசிகர்
களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அந்த வரிசையில் எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர். இவர்கள் இனிமையான குரல் வளத்தால், ரசிகர்களை தங்கள் வசம் இழுத்தனர். திரைப்பட நடிகர்களாக கொடிக்கட்டிப் பறந்தாலும், இவர்கள் அனைவருமே இசை நாடக உலகிலிருந்து, திரைப்பட உலகிற்கு வந்தவர்களே!

இசை நாடக நடிகர்கள் : முன் காலத்தில் திரைப்படங்கள் பேசும் படங்களாக இல்லாமல் ஊமைப்படமாக இருந்தன. அந்தக் காலத்தில் இசை நாடகம் பார்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டினர். பழம்பெரும் இசை நாடக நடிகர்களாக நவாப் ராஜமாணிக்கம், விஸ்வநாததாஸ், மதுர பாஸ்கரதாஸ், சங்கரதாசர் திகழ்ந்தனர். மேடை நாடகங்களுக்கு மைக் இல்லாத காலம் அது. நாடக மேடைகளின் உள்புறம் பெரிய பெரிய மண்பானைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். மேடையில் நடிகர்கள் பாடுகின்ற பாடல்கள் இந்த பானைகளில் எதிரொலித்து தொலைவில் கேட்க கூடிய வகையில் அமைந்திருந்தன. இசை நாடக உலகின் தந்தை எனப் போற்றப்படுபவர்
சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார்.

பெண்களே இல்லாத நாடகம் : அன்றைய காலங்களில் இசை நாடகத்தில் பெண் நடிகைகள் நடிக்க முன்வரவில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர். இசை நாடகம் பயிலும் நடிகர்
களுக்கு நல்ல குரல் வளம், ஓரளவு கர்நாடக இசை ராக வழிகளும், வேடப் பொருத்தமும் வேண்டும். மேடையில் நடித்து வசனம் பேசுபவர்கள் வசனம் மறந்து விட்டால் திரைக்கு பின்னால் இருந்து இன்றைய நாடகங்களில் இயக்குனர் சொல்லிக் கொடுப்பது போன்றோ, பின்னணியின் பாடல்களுக்கு ஏற்றவாறு வாயசைத்து நடிப்பதோ கிடையாது. இசை நாடகம் நடிப்பவர்கள் குழுவாகச் சேர்ந்து பயின்ற வர்கள் கிடையாது. நாடக ஆசிரியரிடம் யாரெனும் ஒருவர்
மட்டுமே, குறிப்பிட்ட வேடத்திற்கான பாடம் பயில்வார். நாடகங்களில் பங்கேற்கும்
நடிகர்கள் ஒரே இடத்திலிருந்து வருவது கிடையாது. வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து, ஒப்பனை அறையில் தான் அறிமுக மாகி கொள்வார்கள். ஒப்பனைகளை அவரவர்களே தான் செய்து கொள்வார்கள். ஒப்பனை செய்து கொள்வதற்கு முன்னர், மூத்த, அனுபவம் மிக்க நடிகர்களை வணங்கி ஆசி பெறுவர். எட்டு மணிக்கு நாடகம் துவங்கி 2 மணி நேரம் மட்டுமே நடத்தும் சபா நாடகங்கள் போன்றதல்ல. இரவு 10 மணிக்கு துவங்கி, காலை 6 மணி வரை, பாடல்களின் சுருதி குறையாமலும், ஒப்பனை கலையாமலும் பாடி நடிக்க வேண்டும்.

நாட்டுப்பற்று கொண்ட நடிகர்கள் : இசை நாடக நடிகர்களில் பலர் தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் கொண்டவர்கள். அதில் முக்கியப் பங்காற்றியவர் விஸ்வநாததாஸ். இவர் சிறந்த ராஜ நடிகர். மேடைகளில் தோன்றி நடிக்கும் போது, ஆங்கில அரசிற்கு எதிரான தேசியப் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடி வந்தார். அதன் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக, அன்றைய மேடை நாடக நடிகர்கள் தங்களால் இயன்ற அளவில் தொண்டாற்றினார்கள்.

வேடமும் நடிப்பும் : விஸ்வநாததாஸ், வள்ளி திருமணம் நாடகத்தில் முருகன் வேடத்தில் நடித்து கொண்டிருந்த போதே உயிர் பிரிந்தது. அவரது வேடத்தை கலைக்காமல் அப்படியே அடக்கம் செய்தனர். சத்யவான் சாவித்திரி என்னும் நாடகத்தில், எமதர்மனாக தோன்றி நடிப்பில் பிரபலமானவர் திருவாடனை லட்சுமணத் தேவர். இவர் வேடமேற்றுத் தோன்றும் காட்சியை, சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மனத் தைரியம் இல்லாதவர்கள் நிமிர்ந்து பாராமல், தலையைக் கவிழ்ந்து கொள்வார்கள். அந்த அளவிற்கு இவரது வேடமும், நடிப்பும், குரலும் மிக பயங்கரமாக இருக்கும்.

புகழ் பெற்ற நடிகர்கள் : இசை நாடகத்தில் சிவஞான பாண்டியன், சக்திவேல் ஆச்சாரி, வெட்டி முத்தப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம், எம்.எம். மாரியப்பா, எம்.ஆர்.முத்துசாமி, ஆர்.வி.உடையப்பா, சக்குடிதுரைராஜ், கிளாங்காட்டூர் சாமித்துரை ஆகியோர் நடிப்பில் பெயர் பெற்றனர். சிரிப்பு நடிகர்களாக தோப்பூர் கோவிந்தன், கழுகு மலை சுப்பையா, அம்பலத்தாடி ராமையா, எம்.சி.சொக்கலிங்கம் ஆகியோரும் முத்திரை பதித்தனர்.பழைய திரைப்பட நடிகர்கள் திரைப்படங்களில் பெயரும்,புகழும் பெற்றிருந்தாலும் அவர்கள் வந்த பாதையான மேடை நாடகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், ஆர்.எஸ்.மனோகர், கே.ஏ. தங்கவேலு ஆகியோர் தொடர்ந்து மேடை நாடகங்
களையும் நடத்தி வந்தனர்.

நிஜத்தில் நடிகர்கள் வாழ்க்கை : இசை நாடக நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் வறுமையே
தாண்டவமாடியது. மழை, பனி காலங்களில் நாடகங்கள் நடத்துவதில்லை.
இதனால், நாடக ஆசிரியர்கள் குழு அமைத்து நாடகம் பயிற்றுவித்தனர். இவர்களில் ராஜாம்பாள் (பாலராஜ விநோத சங்கீத சபா), நவாப் ராஜமாணிக்கம் (தேவி பால விநோத சங்கீத சபா), டி.கே.எஸ்.பிரதர்ஸ் (மதுரை பால சண்முகானந்த சபா), எம்.ஆர்.ராதா (சரஸ்வதி கான சபா), கே.ஆர்.ராமசாமி (கிருஷ்ணன் நாடக சபா), என்.எஸ்.கிருஷ்ணன் (என்.எஸ்.கே.நாடக சபா) எனப் பலரும் நாடகசபாக்கள் அமைத்து பல நடிகர்களை உருவாக்கியவர்கள். இசை நாடகத்துறையில் சிறந்து விளங்கிய நாடக ஆசிரியர்கள் சூடியூர்கனகசபாபதி, மதுரை மதுர பாஸ்கரதாஸ், இசக்கிமுத்து வாத்தியார், ராகவவாத்தியார் ஆகியோரும் வறுமையிலேயே வாழ்க்கையை ஓட்டினார்கள்.

வறுமையை மறக்கடிக்கும் நாடகம் : எவ்வளவு தான் பசி, பட்டினி, வறுமையால் வாடினாலும் நாடக மேடைக்கு சென்றவுடன் கஷ்டங்களை மறந்து ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. இந்த நடிகர்கள் எதிர்பார்ப்பது மிகுந்த வருமானம் அல்ல. தங்களது திறமைக்கு ஏற்ற பாராட்டு தலும், அங்கீகாரமும் தான்.காலப்போக்கில் இளைய தலைமுறையின் திரைப்பட மோகத்தினாலும், புதுமையான எதிர்ப்பார்ப்புகளாலும் கிராம திருவிழாக்களில் இசை நாடகங்களை புறக்கணித்து இசைத்தட்டு நடனம், ஆடல்பாடல் நிகழ்ச்சி, திரைப்பட இசை நிகழ்ச்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கலைஞர்களின் எதிர்பார்ப்பு : இசை நாடகம் மட்டுமல்லாது கிராமிய கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், தெருக்கூத்து ஆட்டம் போன்றவை களும் குறைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கிராமிய கலைகளை ஊக்குவிக்கவும் உதவிக்கரம் நீட்டவும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்னும் அமைப்பு உள்ளது. இதில் நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1500 வழங்குகின்றனர். இருப்பினும் இந்த கலைஞர்கள் எதிர்ப்பார்ப்பது தங்களுடைய கலை பணிக்கான பாராட்டுதல்களே! ''கலைமாமணி'' விருதுகளில் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுப்புறக் கிராமியக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

வாழ்க இசை நாடகக் கலை!
- தி.அனந்தராமன்
இசை நாடக ஆசிரியர்
மானாமதுரை. 99409 69616We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X