சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

வளரும்

Added : ஏப் 29, 2017 | கருத்துகள் (2)
Advertisement
வளரும் Ramanujar Download

சமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் வீற்றிருந்தார் ராமானுஜர்.

முதுமையின் தளர்ச்சி மீறிய மினுமினுப்பொன்று எப்போதும் அவரிடம் உண்டு. கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம்தான். அமர்ந்திருக்கும்போதும் நிற்பது போலத்தான் இருக்கும். சலிப்பின்றிச் சொற்பொழிவாற்றிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று கண்மூடி கணப் பொழுது எதிலோ லயித்து நின்றுவிடுகிற வழக்கம் உண்டு. அப்போது முகத்தில் மெலிதாக ஒரு முறுவல் விரியும். அதுவும் கணப் பொழுதே. ஆனால் இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை மீட்டினால் பரவி நிறையும் நாதம் போல் அது மேலும் பல கணங்களுக்கு வெளியை நிறைத்திருக்கும்.திருவாய்மொழி காலட்சேபமென்றால் உற்சாகம் துள்ளும். ராமாயணமென்றால் பரவசத்தில் அடிக்கடிக் கண் நிறையும். சஹஸ்ரநாமம், பிரம்ம சூத்திர விளக்கங்களென்றால் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, நிறுத்தி நிதானமாகச் சொல்லுவார். பேசப்படுகிற விஷயம் தாண்டி யார் கவனமும் நகர்ந்து விடாதபடி ஒரு மாயத் தடுப்புச் சுவரை எழுப்பி நிறுத்தியிருப்பார். இன்று இது போதும் என்று அவரே நிறுத்திவிட்டு எழும் வரை கூட்டம் கண்ணிமைக்காது கவனித்துக் கொண்டிருக்கும்.
ஆனால் இன்று என்ன எல்லாமே விசித்திரமாக இருக்கிறதே! சீடர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக ஒன்றைத் தெரிவிக்கும் விதமாக அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்? எல்லாம் பொதுவான விஷயங்கள்தாம். எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிற விஷயங்கள்தாம்.
ஆனாலும் ஒவ்வொருவரும் அன்றைக்கு உடையவர் தமக்காக மட்டுமே பேசிக் கொண்டிருப்பது போல உணர்ந்தார்கள்.'வடுகா, மூன்று விஷயங்கள் மகா பாவம். ஒரு வைணவன் உயிருள்ளவரை செய்யக்கூடாதவை. என்னவென்று சொல்லு பார்ப்போம்?'மூவாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. வாழ்நாள் முழுதும் அவர் எத்தனையோ தருணங்களில் எடுத்துச் சொன்னவை. வடுக நம்பிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது, பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்
தத்தை வெறும் தண்ணீர் என்று எண்ணுவதும் இழிப்பதும். பரம பாகவதர்களின் பாதம் அலம்பிச் சேகரித்த தீர்த்தத்தைக் காட்டிலும் புனிதம் வேறில்லை என்பார் ராமானுஜர். 'பாகவத அபசாரமே பெரும் பாவம்.' சட்டென்று குரல் கொடுத்தார் வேறொரு சீடர். 'சந்திக்கிற மனிதர்களின் நல்ல குணங்களை விடுத்து, குறைகளைப் பெரிது படுத்திப் பேசுவதே பாவம்' என்றார் இன்னொருவர். 'பக்தர்களைப் பழிப்போரைப் பார்ப்பதே பாவம்' என்றார் வேறொருவர்.

'எல்லாம் சரியே. ஆனால் தலையாய பாவங்கள் மூன்று. எம்பெருமானுடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சாரூபத்தைக் கல்லென நினைப்பது முதல் பெரும் பாவம். தெய்வத்தினும் மேலானவரான ஆசாரியரை சராசரி மனிதரென நினைப்பது அடுத்தது. இந்த இரண்டினும் கொடிய பாவம், ஒரு வைணவனின் ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்வது.'அன்றைக்கு முழுதும் இதே போலக் கேள்விகளாகக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். உரையாடல் ஒரு புள்ளியில் நகராமல் தோகை விரித்த மயிலே போல் வெளி அடைத்து முன்னேறிக் கொண்டிருந்தது. இருட்டி வெகு நேரம் வரை ராமானுஜர் நிறுத்தவேயில்லை. 'சுவாமி, தாங்கள் ஓய்வுகொள்ள வேண்டும். மிச்சத்தை நாளை வைத்துக் கொள்வோம்' என்று எம்பார் முனைந்து சபையைக் கலைத்து அனுப்பி வைக்கும்படி யானது.மறுநாள் ராமானுஜர் மீண்டும் விட்ட இடத்தில் ஆரம்பித்தார். 'மந்திரங்கள் பரிசுத்தமானவை. அவற்றின் உள்ளுறைப் பொருளாக விளங்கும் சக்தியை உணர்வது அவசியம். மந்திரங்கள் வெறும் சொற்களல்ல. நமக்கு விளங்காதவை அனைத்தும் அர்த்தமற்ற
வையும் அல்ல.''உண்மை சுவாமி!''இன்னொன்று மறந்து விட்டேனே. பெருமானைத் தனியே சேவிப்பதில் பிரயோஜனமே கிடையாது.

பிராட்டியை விலக்கிவிட்டு அவனுக்கு எந்தப் பெருமையும் இல்லை.'உடையவர் அதை அடிக்கடி சொல்லுவார். வேறு எதைக் கேட்டார்களோ இல்லையோ, திருவரங்கத்துவாசிகள் அந்த ஒரு விஷயத்தில் அவர் சொன்னதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் பெருமாளைச் சேவிக்கக் கிளம்பினால் வடக்கு வாசல் தாயார் சன்னிதி வழியாகத்தான் போவார் கள். சமயத்தில் தாயாரைச் சேவித்து விட்டு அப்படியே திரும்பி வந்து விடுவதும் உண்டு. 'சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகிவிட்டது. பெருமானிடம் எடுத்துச்
சொல்லி, வேண்டியதைச் செய்து தருவது அவள் பொறுப்பு' என்று திடமாக இருந்து விடுவார்கள்.இதை ஒரு சீடர் குறிப்பிட, உடையவர் புன்னகை செய்தார். 'ஆம். அவள் தாய் அல்லவா? நம் தேவை அவளுக்குத்தான் தெரியும். தாய் ஒப்புக்கொண்டு விட்டால், தந்தையைச் சம்மதிக்க வைப்பது பிரமாதமில்லை.'மூன்று நாள் மூச்சு விடாமல் பொழிந்து கொண்டே இருந்தார். நற்கதிக்கான வழிகள். 'ஸ்ரீபாஷ்யத்தைப் படியுங்கள். பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள். முடியவில் லையா? பிரபந்தம் படியுங்கள். அதுவும் முடியவில்லையா? திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்யுங்கள். கஷ்டமா? திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழுங்கள். சிரமமா? யாராவது ஒரு பாகவத உத்தமரை அண்டி, அவருக்குச் சேவை செய்து வாழுங்கள். அதுவும் முடியவில்லையா? மூச்சுள்ளவரை த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருங்கள்.'எல்லாம் தெரிந்ததுதான். என்றும் அவர் சொல்லிக் கொண்டிருப்
பதுதான். இன்று ஏன் இத்தனை அழுத்தம் திருத்தமாக? அதுவும் திரும்பத் திரும்ப? சீடர்களுக்குச் சந்தேகம் வந்தது. அது மூன்றாவது நாள். தமக்குள் கூடிப் பேசிக்கொண்டு அவரிடமே கேட்டார்கள். 'சுவாமி, இடைவெளியின்றித் தங்கள் போதனைகளைக் கேட்பது வரம்தான். ஆனால் இப்படி ஆவேசம் வந்தாற்போல் பொழிந்து கொண்டே இருக்கிறீர்களே, இது மிகுந்த குழப்பமும் கவலையும் அளிக்கிறது.''கவலை கொள்ள என்ன இருக்கிறது? எனக்கு அரங்கன் ஏழு நாள் தந்தான். இன்று மூன்றாம் நாள். இன்னும் நான்கே நாள்.'துடித்துப் போனார்கள். அழுது அரற்றி, அதிர்ச்சியில் நிலைகுலைந்து, ஒடுங்கி நின்றார்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? இதுதான் என்றால் இதுதான். ஆறாம் நாள் காலை உடையவர் பராசர பட்டரை அழைத்தார். 'வாரும், கோயிலுக்குச் சென்று வருவோம்.'அரங்கன் திருமுன் அழைத்துச் சென்று நிறுத்தினார். 'பெருமானே! கூரேசருக்குப் பிறந்து உன்னால் சுவீகரிக்கப்பட்ட பிள்ளை இவர்.

எனக்குப் பின் வைணவ தரிசனத்தைப் பரப்பும் பொறுப்பை இவரிடம் தருகிறேன். எனக்கு அளித்த ஒத்துழைப்பை எல்லோரும் இவருக்கும் அளிக்க வேண்டும்.'தீர்த்தம், சடாரி உள்ளிட்ட திருக்கோயில் மரியாதைகள் அதுவரை ராமானுஜருக்குத்தான் முதலில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அன்று அவர் அதைப் பராசர பட்டருக்கு வழங்க வைத்தார். வைணவ உலகுக்கு அதன் உட்பொருள் புரிந்தது. ஒரு ஞானத்தருவின் விழுதாகி, பின் விதையாக உருப்பெற்று விளைந்து நிற்கிற பேராற்றல். அதைத்தான் உடையவர் அடை யாளம் காட்டுகிறார்.ஏழாம் நாள் விடிந்தது. பெரிய நம்பியின் பாதுகைகளைத் தொட்டு வணங்கிவிட்டு ராமானுஜர் எம்பார் மடியில் தலை வைத்துப் படுத்தார். அவரது பாதங்கள் வடுக நம்பியின் மடி மீதிருந்தன.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Shiv - chennai,இந்தியா
29-ஏப்-201721:22:54 IST Report Abuse
G.Shiv '' ஸ்ரீ மத் ராமானுஜரின் அருமையான தத்துவங்கள் மற்றும் அறிவுரை - தலையாய பாவங்கள் மூன்று. எம்பெருமானுடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சாரூபத்தைக் கல்லென நினைப்பது முதல் பெரும் பாவம். தெய்வத்தினும் மேலானவரான ஆசாரியரை சராசரி மனிதரென நினைப்பது அடுத்தது. இந்த இரண்டினும் கொடிய பாவம், ஒரு வைணவனின் ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்வது.' ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகள் சரணம் ''
Rate this:
Share this comment
Cancel
k.sampath - Trichy,இந்தியா
29-ஏப்-201707:07:41 IST Report Abuse
k.sampath மிக அருமையான தொடர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X