ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு நகரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும், நாட்டிலேயே முதலாவதும், மிக நீளமான, சுரங்க சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில், பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, 'காஷ்மீர் இளைஞர்கள், ஒரு பக்கம் கற்களை பயன்படுத்தி, வளர்ச்சி பணியில் ஈடுபடுகின்றனர். சில அப்பாவி இளைஞர்கள், மற்றவர்களின் தவறான துாண்டுதலால், கற்களால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தவறான துாண்டுதலால், காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம்.'கடந்த, 40 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். அதனால், யாருக்கும் எந்த பயனும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில், சுற்றுலா வளர்ச்சியில் ஈடுபட்டிருந்தால், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக, ஜம்மு - காஷ்மீர் உருவாகியிருக்கும்.
'கற்களை வீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். மக்களின், இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சியை காண முடியாது' என்றார்.
மோடியின் அறிவுரை, காஷ்மீர் இளைஞர்களுக்கு மட்டுமானதல்ல... இந்தியாவில் உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும், குறிப்பாக, நம் தமிழக இளைஞர்களுக்கானதும் தான்.
பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டது போல, மற்றவர்களின் தவறான துாண்டுதலால், இளைஞர்கள் போராட்டங்களிலும், வன்முறையிலும், ஈடுபடுகின்றனர். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அரசியல் கட்சிகள், தங்களுக்கு பக்க பலமாக ஆக்கி கொள்கின்றன.
பல லட்சம் ரூபாய் கொட்டி, படிக்க வைத்து, பெரிய பதவிகளை வகிக்க வேண்டும் என, கனவு கண்டுகொண்டிருக்கும், பல பெற்றோரின் உழைப்பை, பகல் கொள்ளையடிப்பது போல அரசியல் கட்சிகள், இளைஞர்களை மாற்று பாதையில் கொண்டு செல்கின்றன.
இளைஞர்களை மயக்கினால் தான், தங்கள் எண்ணம் நிறைவேறும் என நினைத்து, அரசியல் கட்சிகளும் இன்னும் பிற அமைப்புகளும், இன்றைய இளைஞர்களுக்கு வலை வீசுகின்றன.
அரசியல்வாதிகளின் மூளைச்சலவைக்கு எத்தனையோ இளைஞர்கள், தங்களை மாய்த்து கொண்டுள்ளனர்; தீயிட்டு கொளுத்தி கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள், தங்கள் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கும், வெற்றி பெற்றதாக காட்டி கொள்வதற்கும், இளைஞர்களையும், மாணவர்களையும் துாண்டி விட்டு, தங்களுக்கு துணைக்கு வைத்து கொள்வது வழக்கம்.
உதாரணமாக, 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கூறலாம். '1965 ஜனவரி, 26 முதல், ஹிந்தி, ஆட்சி மொழி ஆகும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் எங்கும் போராட்டம் நடந்தது.
தமிழகத்தில், முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு வன்முறை சம்பவங்களும், தீக்குளிப்புகளும் நடந்தன. 18 நாட்கள், சட்டம் - ஒழுங்கு என்பதே இல்லாமல், 'உள்நாட்டு போர்' என, வர்ணிக்கும் அளவுக்கு போராட்டம், மாணவர்களிடையே விஸ்வரூபம் எடுத்தது.
அதே ஆண்டு, ஜன., 27ல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், ராஜேந்திரன் என்ற, 18 வயது மாணவர், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்.
இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தோர், அன்றைய மாணவர் தலைவராக இருந்து, பின்னாளில் அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்த, கா.காளிமுத்து மற்றும் கவிஞர் நா.காமராசன், பெருந்தலைவர் காமராஜரை தேர்தலில் தோற்கடித்த, பெ.சீனிவாசன், பின்னாளில் அமைச்சராக இருந்த, ராஜா முகமது, துரைமுருகன், வழக்கறிஞர், எஸ்.துரைசாமி போன்றோர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்களை முன்னிறுத்தி, அரசியல்வாதிகள் ஜெயித்து விட்டனர். மாணவர்களின் உணர்வுகளை துாண்டி, ஒன்று திரட்டுவது எளிதான விஷயம் என்பதால், மாணாக்கர்களை தங்களின் போராட்டத்திற்கு அழைக்காத கட்சிகளோ, அமைப்புகளோ கிடையாது.
பெரும்பாலான இடங்களில், அரசியல் கட்சிகளும், பிற ஜாதி அமைப்புகளும், பள்ளிக் குழந்தைகளை, அதாவது ஆரம்பப் பள்ளி குழந்தைகளை கூட, தங்கள் போராட்டங்களில், முன் வரிசையில் அமர வைத்து, போராட்டம் நடத்துகின்றன.
போராட்டத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பள்ளி ஆசிரியர்களை பயமுறுத்தி, பணிய வைக்கின்றனர். இந்த சூழலுக்கு பழக்கப்பட்ட மாணவனுக்கு, வருங்காலத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டமே வாழ்க்கை என்ற நிலைப்பாடு மனதில் பதிந்துவிடும்.
இதனால், எதிர்காலத்தில் தமிழகம், போராட்ட களமாக இருக்குமே தவிர, வளர்ந்த தமிழகமாக இருக்காது.
விஞ்ஞான உலகத்தின் மந்திரவாதி என, போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன், ரயிலில் பத்திரிகைகள் விற்பதற்காக அனுமதி பெற்றிருந்தார். ரயில் பெட்டியில் சிறிய அளவிலான ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்து கொண்டார்.
ஒரு நாள், அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, பாஸ்பரஸ் வேதிப்பொருள் விழுந்து தீப்பிடித்து கொண்டது. தன் சட்டையைக் கழற்றி, தீயை அணைக்க முயன்றார்.
ரயில் பெட்டியில் தீ பரவுவதை கண்ட ரயில்வே ஊழியர், கோபத்தில், எடிசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். அது முதல், அவரது காது கேட்காமல் போனது. அதற்காக எடிசன், ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து, போராட்டம் நடத்தவில்லை. சக மாணவர்களை கூட்டி, ரயில் மறியல் செய்யவில்லை.
காது கேட்காமல் போனதை குறைபாடாகவே அவர் நினைக்கவில்லை. அனாவசியமான பேச்சுக்களை கேட்பது தவிர்க்கப்பட்டுள்ளதால், ஆராய்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக கருதினார்.
மாணவர்களே... இளைஞர்களே... ஜல்லிக்கட்டு, நெடுவாசல், வாடிவாசல் போராட்டம் என்பதை விடுத்து, மோடி கூறியது போல், இனியாவது ஆக்க வழியில் சிந்தனையை
செலுத்துங்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்களே... சற்றே யோசித்துப் பாருங்கள். எத்தனையோ தமிழர் கலாசாரங்களை காற்றில் பறக்கவிட்ட நீங்கள், தமிழன் கலாசாரமான ஜல்லிக்கட்டை காப்பாற்ற மெரினாவில் கூடி, போராட்டம் நடத்தினீர்கள்.
அப்போது, உங்களுக்கு தேவையான போர்வைகள், படுக்கை விரிப்புகள், உணவு வகைகள், நொறுக்கு தீனிகள், மினரல் வாட்டர்கள், போக்குவரத்து செலவீனங்கள், இன்னும் பிற செலவினங்களை கணக்கு பார்த்தால், நம் தமிழக கிராம விவசாயிகள் ஒவ்வொருவருக்கும், ஒரு நாட்டு பசு மாடு வாங்கி
தந்திருக்கலாம்.
இப்படியாக ஒவ்வொரு இளைஞனும் செய்திருந்தால், தமிழகத்திற்கு குறைந்தது, 50 ஆயிரம் நாட்டு பசு மாடுகளாவது கிடைத்திருக்கும்.
எனவே, இளைஞர்களே... இந்த சமுதாயம் உங்களை, 'போராட்டக்காரன்; போராட்டத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது' என, நினைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்.
சினிமா, சமூக வலைதளங்கள், மொபைல் போன்களால் தானாகவே சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை அரசு, மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் தவறை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே, அவர்களை மதுவுக்கு அடிமையாக மாற்றிவிட்டனர்.
இமயத்தில் தன் புலிக்கொடியை பறக்க விட்டான், கரிகால் பெருவளத்தான். அங்கு, வில் கொடியை நாட்டினான், சேர மன்னன், இமய வரம்பன் சேரலாதன். தமிழனை இகழ்ந்து பேசிய, கனக விஜயர்களை தோற்கடித்து, இமயத்தில் கல்லெடுத்து, அவர்கள் தலைமேல் சுமக்க வைத்து, கங்கையில் நீராட்டி, தமிழகம் கொண்டு வந்தான், சேரன் என, பழம்பெருமை பேசாதீர்கள்.
தமிழ் இனமே... இளைஞர்களே... வடக்கே இருந்து தெற்கே இன்று, இங்கு நேரடி படையெடுப்பு நடந்து கொண்டிருப்பது உங்களுக்கு தெரிகிறதா?
கத்தி எடுத்து, ரத்தம் சிந்தி, யுத்தம் செய்தால் தான், படையெடுப்பு என, நினைக்க வேண்டாம். வட மாநில இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று தமிழகம் நோக்கி, நேரடி படையெடுப்பு செய்து கொண்டிருக்கின்றனர். இதை உணருங்கள்.
இலங்கையில், தமிழர்கள் வாழும் பகுதியில், சிங்களர்களை குடியமர்த்தும் இலங்கை அரசை கண்டித்து, இங்கே குரல் எழுப்பும் அரசியல்வாதிகளே, வடக்கே இருந்து தெற்கே குடியமர்வு நடந்து கொண்டிருப்பது, உங்களுக்கு தெரியவில்லையா?
ஒரு பக்கம், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையென கூறி, கொண்டிருக்கிறோம் அல்லது கிடைக்கக் கூடிய வேலையை செய்ய மறக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இன்று, லட்சக்கணக்கான வட மாநில இளைஞர்கள், தமிழகம் வந்து வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். வட மாநில இளைஞர்கள் இன்று, தமிழகத்தில் கால் பதிக்காத இடங்களே இல்லை என, கூறலாம்.
விவசாயம், உணவு விடுதிகள், காய்கனி அங்காடிகள், கட்டுமானத் துறை, மின் வழித்தடங்கள்
அமைப்பது, ரயில்வே துறை,
காவலாளிகள், நெடுஞ்சாலைகள் அமைத்தல், செப்பனிடுதல் இன்னும் பிற இடங்களில் ஏகப்பட்ட, வட மாநில இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
நம் இளைஞர்களோ, போராட்டம் என்ற பெயரில் பொழுதை போக்கி கொண்டிருக்கின்றனர்; இதையாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதன் முடிவு என்னவாகும் என்பதை யாரும் உணர போவதில்லை.
இதை உணர்ந்து, இன்றைய இளைஞர்கள் விழித்தெழவில்லை எனில், தமிழகத்திலேயே தமிழன் அகதியாக வாழும் அவலம் நேரிடும்.
அரசியல்வாதிகளே... ஜாதி அமைப்புகளே... மற்ற பிற அமைப்புகளே...
தமிழக இளைஞர்களை உங்கள் போராட்டத்திற்கு பயன்படுத்தி, அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களை சீரழித்து
விடாதீர்கள்!
தினம் ஒரு பிரச்னை வரலாம். அதற்காக தினம் ஒரு போராட்டம் நடத்துவதா... அப்படி ஆனால், தமிழகம் போராட்ட களமாக ஆகிவிடும். எனவே, அரசியல்வாதிகளே, உங்கள் வயிற்று பசிக்காக, தமிழக இளைஞனை இரையாக்காதீர்கள்.
தமிழக இளைஞர்களே... போராட்டமே வாழ்க்கையாக இருந்துவிட்டால், வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடும். சிந்தியுங்கள் இளைஞர்களே. மனம் திருந்துங்கள்!
- தேவ். பாண்டே -சமூக ஆர்வலர் இ - மெயில்:dev.pandy@rediffmail.com