கோடநாடு கொலை பின்னணியில் ரூ. 570 கோடி பணம்? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை பின்னணியில் ரூ. 570 கோடி பணம்?

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (28)
Share
கோடநாடு, எஸ்டேட், ரூ.570 கோடி

கோடநாடு எஸ்டேட்டில் என்ன நடக்கிறது என்றே புரியாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த போலீசும் தவித்துக் கொண்டிருக்கிறது. கோடநாடு எஸ்டேட்டின் 10ம் எண் கேட்டில் பாதுகாவலுக்கு இருந்த ஓம் பகதூர் என்பரை, இரவு நேரத்தில் உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, கொலை செய்தது. கொலையாவதற்கு முன், ஓம் பகதூர் இட்ட கூச்சலைத் தொடர்ந்து 9ம் எண் கேட்டில் பாதுகாப்புக்கு நின்ற கிருஷ்ண பகதூர் ஓடி வர, அவரையும் அடித்து கட்டிப் போட்டு விட்டு, எஸ்டேட்டுக்குள் உள்ளே புகுந்து, ஆவணங்களையும்; பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற தகவல் இப்போது கசிய ஆரம்பித்துள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

நீலகிரியில் மிகப் பெரிய எஸ்டேட் கோடநாடு எஸ்டேட். முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான அந்த எஸ்டேட், 800 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. த எஸ்டேட்டுக்கு பத்து கேட்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும், அங்கு மேலாளராக இருந்தவரிடம் இருந்து அனுமதி வாக்கி டாக்கி மூலம் வழங்கப்படும். அப்படி அனுமதி பெற்று விட்டால், உள்ளே செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் நபர்களை போலீசாரும் எந்த சோதனையும் செய்ய மாட்டார்கள்.


பெரிய இடத்து சமாச்சாரம் :

இப்படித்தான் அங்கு, நிறைய ஆவணங்களும், பணமும் கொண்டு செல்லப்பட்டன. பல நாட்கள் இரவு 2 மணிக்கு மேல், அதிகாலை, 5 மணிக்குள், நிறைய லாரிகள் வந்து சென்றுள்ளன. அதில் மூட்டை மூட்டையாக பணம் இருந்ததை எஸ்டேட் உள்ளே இருப்பவர்கள், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதை, அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு சொன்ன போது, 'இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். எது வேண்டுமானாலும், அவர்கள் உள்ளே கொண்டு செல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் போலீஸ் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் அனுமதியில்லாமல், எதையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம். அதே போல, யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். இதில் மட்டும் கவனமாக இருந்து செயல்பட்டால் போதும்' என சொல்லி விட்டனர். அதனால், எஸ்டேட் மேலாளர் வாக்கி டாக்கி மூலமோ, போன் மூலமோ யாரை, எதை உள்ளே அனுமதிக்கச் சொன்னாலும், அதை செய்து விடுவோம்.இப்படி யார் யாரோ எத்தனையோ முறை கோட நாடு எஸ்டேட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் குறித்தெல்லாம் யாரும் எதையும் கேட்டதும் இல்லை; பேசியதும் இல்லை. நிறைய பொருட்களும் கோடநாட்டுக்கு லாரிகள் மூலம் அவ்வப்போது வரும்; போகும். யாரும் எதையும் சோதித்ததும் இல்லை; என்ன ஏதென்று கேட்டதும் இல்லை.

ஜெயலலிதா இறந்ததும், அரசுத் தரப்பில் இருந்து, எஸ்டேட்டுக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கச் சொல்லி விட்டனர். அதனால், போலீசுக்கு பதிலாக, அங்குள்ள அனைத்து கேட்களின் பாதுகாப்புக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அவர்களும் பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கும் எஸ்டேட்டுக்குள் இருக்கும் கட்டடங்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது தெரியாது.


பலருக்கும் சிக்கல் வரும்:

தேர்தல் நேரத்தில் கன்டெய்னரில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாயை எஸ்டேட்டிற்குள் வைத்திருந்தனர் என சொல்லப்பட்ட விவரம் கூட அவர்களுக்குத் தெரியாது. அந்தப் பணம் உள்ளே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டுதான், சிலர், கோடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்ததாக அதிகாரப்பூர்வமாக இல்லாத சில தகவல்கள் வருகின்றன. அது குறித்தும் போலீஸ் விசாரணை துவக்கத்தில் இருந்தது. ஆனால், அந்தப் பணம் குறித்து இப்போது சர்ச்சை கிளப்பப்பட்டால், அது போலீசையும் சேர்த்து சிக்கலுக்கு ஆளாக்குவதோடு, ஆட்சி, அதிகாரமட்டத்தில் இருக்கும் பலரையும் சிக்கலுக்கு ஆழ்த்தலாம். அதனால், போலீஸ் தரப்பில், அந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து பின் வாங்கி விட்டனர். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், அவர்கள் அந்தப் பணத்தைத்தான் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற தகவல் வரப் போவதில்லை. காரணம், அந்தப் பணம், கணக்கில் வராத பணம். அப்படிப்பட்ட விவரம் வெளியே வந்தால், அதற்கு காரணமானவர்கள் பலர், இப்போது சிக்கலுக்கு ஆளாவர்.

இந்த விஷயம் வெளிப்படக் கூடாது என்பதற்காகத்தான், கொள்ளையடித்தவர்கள் திட்டமிட்டே, திசை திருப்பும் நோக்கத்தோடு, 'எஸ்டேட்டுக்குள் இருந்த பல நூறு கோடி ரூபாய்க்கான ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்' என, கூறுகின்றனர். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த ஆவணத்தைக் கொள்ளையடித்துச் சென்றாலும், அந்த ஆவணங்களை வைத்து, யாராலும் எதையும் செய்ய முடியாது. தேவையானால், ஆவணங்கள் அனைத்துக்கும் டூப்ளிகேட் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு கணக்குக் காட்ட வேண்டும். அதனால்தான், பணம் தொடர்பாக, யாரும் மூச்சு விடாமல் இருக்கின்றனர்.

இந்த பணம் தொடர்பான விவரங்கள் அனைத்தும், ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜுக்கு தெரியும் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது, ஒரு விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார். அந்த விபத்தை தீவிரமாக விசாரித்தாலும், இந்த பண விவகாரம் வெளிப்படலாம். ஆனால், அதற்கும் வழியில்லை. விபத்து என்று முடித்து விட்டனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X