-கவலையை விட்டு தள்ளுங்க!| Dinamalar

-கவலையை விட்டு தள்ளுங்க!

Added : மே 01, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 -கவலையை விட்டு தள்ளுங்க!

-வந்துவிட்ட அல்லது
வரப்போகிற அல்லது
வராமலே இருந்துவிடப்போகிற
ஒன்று குறித்து நீங்கள் ஏன்
ஓயாமல் கவலைப்பட வேண்டும்?
என்கிறார் ஒரு மேதை.

பெரும்பாலும் நிகழ்வுகள் நம்மை துன்புறுத்துவதில்லை. நிகழ்வுகள் குறித்த கவலையே நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கும்.பணம் போனால் வாழ்க்கையே போய்விடுமா என்ன. 'நான் பார்த்து சம்பாதித்த பணம், முடிந்தால் மீண்டும் சம்பாதிப்பேன். இல்லை, இருப்பதை வைத்து வாழ்ந்துவிட்டு போகிறேன்! என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? கைவிட்டு போன பணம் திரும்பி வர திட்டமிட வேண்டும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் -கவலையால் எதையும் தடுத்துவிட முடியாது. கவலையால் எதையும் மாற்றிவிட முடியாது கவலை எதற்கும் மாற்றாகிவிடாது. உங்களை கவலைக்குள்ளாக்குகிற ஒன்று நடக்கப் போவதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அதை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தியுங்கள். அதுகுறித்து திட்டமிடுங்கள்.அதை சமாளிக்க ஆயத்தமாயிருங்கள்.அதோடு கவலையை விட்டு விடுங்கள். கவலைப்பட்டுத்தான் தீர வேண்டுமானால், அதை உங்கள் செயலில் தொடக்க முனையாய் கொண்டு விடுங்கள். அந்த கவலை உங்கள் செயலை முடக்கிப்போட அனுமதிக்காதீர்.

நம்மால் தடுக்க முடியாத, தவிர்க்க முடியாத பெரிய கவலைகள் இருக்கவே செய்யும். குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகள், பணத்தொல்லைகள், இயற்கையின் சீற்றத்தால் விளையும் பேரிழப்புகள் - இப்படி பெரிய கவலைகள் வரும். அவற்றையும், சின்ன கவலைகளை சமாளிக்க மாதிரியே சமாளித்துவிட முடியும். அதற்கு இரண்டு வழிகள் உண்டு- ஒன்று, தவிர்க்க முடியாதது என்கிற நிலையில் வருவதை ஏற்றுக்கொள்வது. மற்றொன்று, உங்களால் முடிந்தளவு முயன்று அவற்றை தீர்ப்பது அல்லது அவற்றின் தீவிரத்தை குறைப்பது.

சீனத்து பழமொழியொன்று - ' உங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறந்து செல்வதை நீங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவை உங்கள் தலையில் கூடு கட்டாதபடி உங்களால் தடுக்க முடியும் '. வெகு நேர்த்தியான இந்த அறிவுரை கவலைக்கும் பொருந்தும்.

ஆலோசனை பெறுங்கள்

டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஒரு கையேடு( How To Deal with your Tension) வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பகுதி, 'உங்கள் கவலைக்கு எது காரணமோ, அதை வெளியில் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளாகவே வைத்து புழுங்க வேண்டாம். ஆய்ந்தறியும் திறன்கொண்ட ஒருவரிடம் அதுபற்றி பேசுங்கள். பேச்சில் வெளிப்படுத்துகிறபோது, பிரச்னையின் கனம் பாதியாய் குறைந்துவிடும். கவலையை போக்கிக்கொள்ளும் வழிமுறையும் கண் கூடாய் தெரியவரும்.

உங்களைவிட அறிவிலும், திறமையிலும், அனுபவத்திலும் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் உங்கள் பிரச்னை குறித்து விவாதிக்கிறபோது 'அட, இதற்குதானா இத்தனை கவலைப்பட்டோம்' என்று மனம் இலேசாகிவிடுவோம்.தேர்வில் தோல்வி கண்டு, காதலில் தோற்று, தொழிலில் நஷ்டப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறவர்கள் அனேகம் பேர். அவர்கள் தங்கள் பிரச்னை குறித்து யாருடனாவது ஆலோசித்திருந்தால் அப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்.மரணத்தை தேடிக்கொள்ளஒரு காரணம் போதும் - எனில்
வாழ்வை தொடர்வதற்குநுாறு காரணங்கள் இருக்கின்றன.

தன்னைத்தானே நேசிக்க முடிகிறவர்களுக்கு,தன்னைச் சுற்றியவர்கள்போல் அன்புசெலுத்துகிறவர்களுக்கு கவலைப்பட என இருக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக அல்லவா இருக்கும்!

அமைதி முக்கியம்

ஆம். நிம்மதியும், சந்தோஷமும்தானே இந்த மனிதப்பிறவியின் பேறாக இருக்க முடியும். நாம் ஓடியாடி உழைப்பது எல்லாம் வாழ்க்கையில் இவற்றை நிலைக்கச்செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே.முறையற்ற வேட்கை, பேராசை, சுயநலம், பொறாமை உங்கள் அமைதி குலைவிற்கு காரணமாகிவிடும். கட்டுப்பாடாக இருங்கள்.

கவலை எப்போது வருகிறது? நாம் விரும்பியது கிடைக்காதபோதுநாம் எதிர்பார்த்து நடக்காத போதுநம்முடைய வேலை, பணம் வெற்றி இவை நிலைக்காது என்கிற போது கவலைக்குள்ளாகிறோம்.மனவேதனை, மனஇறுக்கம், உளைச்சல், அச்சம் ஆகியவை மனம் சார்ந்த விதத்தில் மட்டுமல்ல, உடல் சார்ந்த விதத்திலும் விளைவை ஏற்படுத்தும்.

நடந்ததை மறந்துவிடுங்கள்

கவலைகளில் இருந்து விடுபட விரும்புகிறவர், தமது வாழ்வில் நடந்தவைகளையும், தாம் இழந்தவைகளையும் மறந்துவிட வேண்டும். கெட்டவைகளுக்கு பதிலாக நல்லவைகளை பார்க்கவும், சிரமங்களுக்கு பதிலாக வாய்ப்புகளை கண்டு அறியவும் கற்றுக்கொள்ளுங்கள். இழந்து போனதை பற்றி ஏன் கவலை? மிச்சம் இருப்பது என்ன? அதை வைத்து என்ன செய்யலாம் என எண்ணுங்கள். எனக்கு நல்லது நடக்கவில்லை, கெட்டதுதான் நடந்தது என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும். அந்த வகை அனுபவம் ஒரு ஆதாயமே.

தகுதிக்கு மீறியவைகளில் ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் கவலையை தவிர வேறு எதைக்கொண்டு வரும் என்று எண்ணுகிறீர்கள்?அளவான பணம் நன்மை செய்யும். கணக்கற்ற செல்வமும், கணக்கில் வராத பணமும் நிம்மதியை பறித்துவிடும். பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்வது? அந்த முதலீடு பாதுகாப்பானதாக இருக்குமா, பணத்தை எப்படி பெருக்குவது, எப்படிச் செலவிடுவது என்று பணத்தோடு கவலைகளும்
வந்துவிடுகின்றனவே.

சொல்லுங்கள், நம்முடைய கவலைகளுக்கு யார் காரணம்? 'நாம்தான் காரணம்' என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?அவரவர் வாழ்க்கை அவரவருக்குரியது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லை மீறினால் தொல்லைதான்.ஒரு கனவு நிறைவேறாவிட்டால் என்ன,இன்னொரு கனவு காணுங்கள்!

ஒரு துறையில் பிரகாசிக்க முடியாதவர்கள்வேறொரு துறையில் பிரகாசிக்க முடியம்!உங்கள் கவனக்குறைவு காரணமாய் நீங்கள் வெற்றியை இழந்திருக்கலாம். அல்லது உங்கள் அணுகுமுறை தவறாயிருக்கலாம். வியாபாரத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறதா? ஒன்று, உங்கள் வியாபார உத்திகளை மாற்றுங்கள். இல்லை வியாபாரத்தையே மாற்றிவிடுங்கள்.

ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தலாமா

அச்சம் கவலைக்கு காரணமாகும். கவலை இறுக்கத்தை ஏற்படுத்தி நரம்புகளை பாதிக்கும். வயிற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு இரைப்பை நீர்கள் மாறுதல்களுக்குள்ளாகி குடற்புண்ணில் முடியும்.டாக்டர் ஜோசப் எப் மாண்டேகு என்பவர் இப்படி குறிப்பிடுவார், 'குடற்புண் என்பது நீங்கள் எதை உணர்கிறீர்களோ, அதிலிருந்து உண்டாவதல்ல. எது உங்களை உண்கிறதோ, அதில் இருந்துதான் குடற்புண் உண்டாகிறது'.

உடல்சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் வெற்றி கண்ட மருத்துவ உலகம், மன உபாதைகளை குணப்படுத்துவதில் போதிய அளவு வெற்றி காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அச்சமும், கவலையுமே மன உபாதைகளுக்கு முக்கிய காரணிகள்.

கவலையை வெல்லுங்கள்

சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட வண்டிச்சக்கரம் போல் மீண்டும் மீண்டும் கவலையில் சிக்கிக்கொள்ளாதீர். கவலையைவிட்டு வெளியே வாருங்கள். மனம் தெளிவாக இருக்கும் நேரத்தில் தீர்வு காணுங்கள்.மழை வந்தவுடன் நனைந்து விடுவோமே என்ற கவலையில் பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளை நோக்கி போகும்போது, கழுகுகள் மேகத்து மேலேயே சென்றுவிடுமாம். பிரச்னையில் இருந்து வெளியே வருவதும் இப்படிதான்.கவலையை வெல்லுங்கள். இல்லாவிடில் கவலை உங்களை வென்றுவிடும்

கவலையை எதிர்கொள்வது எப்படி?

கவலைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்
1. தீர்க்க முடியாதது. கடைசி வரைக்கும் அனுபவிக்க வேண்டியது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. மற்றவர்களின் விமர்சனம், ஏளனம், பொறாமை போன்றவற்றை அலட்சியப்படுத்த வேண்டும்.
3. காலத்தால் சமூகச்சூழலால் தீர்க்கப்பட வேண்டியவை. அதுவரை காத்திருக்க வேண்டும். உதாரணமாக, பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை.
4. உடனடியாக தீர்வு காண வேண்டியவை (நோய்கள், சிறு சிறு சச்சரவுகள்).இதைத்தவிர, கற்பனை கவலைகளும் உண்டு.
நாய் கடித்துவிட்டால், கடிபட்டவன் தொப்புளைச் சுற்றி ஊசிகள் போட வேண்டும் என்று ஒரு பெரியவர் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.

உடனே ஒருவன், தொப்புளிலேயே நாய் கடிச்சிட்டா எங்க ஊசி போடணும்' என்று கேட்க பெரியவர் ஆடிப்போனார்.எனவே வருவதை எதிர்கொள்வோம். கவலையை விட்டுத்தள்ளுங்க!

-முனைவர் இளசை சுந்தரம், மதுரை
98430 62817வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-மே-201718:59:56 IST Report Abuse
A.George Alphonse If we follow Lord Buddha's teachings we don't get these tention and worries forever.He said the main causes for humen suffering is Desire. If we kill the desire we can achieve everything in our lives.We should not get Asai for every thing.If we kill the Asai we don't get tention or worries for ever and lead our lives happily forever.
Rate this:
Share this comment
Cancel
P.Subramanian - Chennai,இந்தியா
01-மே-201713:48:38 IST Report Abuse
P.Subramanian அன்புடையீர், வணக்கம். வலையில் மீன் சிக்கலாம். மனதில் கவலை சிக்கவிடக் கூடாது. கவலையை மறக்க அன்றே கண்ணதாசன்" உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதியைத் தேடு " எழுதி வைத்தார். கவலையை விட்டுத் தள்ளுங்கள் கட்டுரை அருமை. பாராட்டுக்கள். தினமலர் ஆசிரியருக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X