ஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம் இன்று உலக ஆஸ்துமா தினம்| Dinamalar

ஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம் இன்று உலக ஆஸ்துமா தினம்

Added : மே 01, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம் இன்று உலக ஆஸ்துமா தினம்உலக அளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்இறக்கின்றனர். 2025ல் மேலும் 10 கோடி பேர் இந்நோயினால்பாதிக்கப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்துமா பாதித்தவர்களில் 10ல் ஒருவர் இந்தியர்.
ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. கிரேக்க மொழியில் ஆஸ்துமா என்றால் திணறுவது அல்லது தவிப்பது என்று பொருள். சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு, மூச்சு விடுவதில்
சிக்கலை உருவாக்கும். 'பிராங்கைல் டியூப்' எனப்படும் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்குஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. ஆஸ்துமா பாதித்தவர்களின் மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும். உப்பிய தசைகள்
மூச்சுக்குழாயை சுருக்கி அதன்துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். வழக்கத்திற்கு மாறாக 'பிராங்கைல் டியூப்ஸ்' அதிக சளியை சுரக்கும். இந்த சளிகளும் கட்டிகள் போல மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். இதனால் மூச்சு
விடுவதில் சிரமம் ஏற்படும்.

எது ஆஸ்துமா

இந்தாண்டின் உலக ஆஸ்துமா தினத்திற்கான கருப்பொருள், 'சிறந்த காற்று, சிறந்த சுவாசம்'என்பது தான். இந்தியாவில் 10 முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் உள்ளன. ஆஸ்துமா நோய்க்கு முற்றிலும் தீர்வு இல்லாவிட்டாலும் அதை கட்டுப்படுத்த முடியும். அதனை ரத்தப் பரிசோதனை மூலம்
கண்டறிவது கடினம். முழுமை யான பரிசோதனை மற்றும் 'ஸ்பைரோமெட்ரி' மூலம்ஆஸ்துமாவை கண்டறியலாம்.இந்தியாவில் 30 சதவீதம் பேருக்கும், ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் வெளிநாட்டினர் அதை ஒப்புக்கொண்டு, சிகிச்சை பெற்று, நீண்ட காலம் வாழ்கிறார்கள். நாம்தாம் ஆஸ்துமா பாதித்ததை மறைக்கிறோம். அதே நேரம் அனைத்து வகை மூச்சு இளைப்பும் ஆஸ்துமா இல்லை. மூச்சு இளைப்பு, மார்பை இறுக்கி பிடித்தல் போன்ற தன்மை, இருமல், சளி, தும்மல்
போன்றவை தொடர்வது ஆஸ்துமாவின் அறிகுறியாகும். மூக்கு சளி, தும்மலோடு பத்து ஆண்டுகளாக கஷ்டபடும் ஒருவரை பரிசோதனை செய்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருக்க வாய்ப்புண்டு.
ஆஸ்துமா சளி, இருமல் மூலம் வெளிப்பட்டு, இளைப்பாக மாறுகிறது. இருமலோடு மூச்சு விடும் போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த
முடியாத 'சி.ஓ.பி.டி' என்ற நிலையை எட்டிவிடும்.


அலட்சியப்படுத்தாதீர்நுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில்நுரையீரல் ரத்தக் குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு,
இருதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இருரதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இருதயம் தன் செயல்திறனை இழந்து விடும். மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கி, வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய, நிமிர முடியாமல் அவதிப் படுவர். அவர் அசைய வேண்டுமென்றால் துணைக்கு ஒருவர் வேண்டும். 'நெபுலைசர்' போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.
அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும்.தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அலட்சியப்படுத்துபவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.

சுகாதாரம் தேவை
உணவில் சுகாதாரம் மிக அவசியம். தரையில் விழுந்த உணவை எடுத்து சாப்பிட்டால் 'அஸ்கரியஸ்' என்ற கிருமி, அந்த உணவு வழியாக உடலுக்குள்
சென்றுவிடும். அது உடலுக்குள்ளே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். பின் மூச்சுக்குழாய் சென்று, அங்கு உள்ள திசுக்களை சேதமாக்கும். அங்கு நச்சு பொருட்களை
உருவாக்கி மூச்சுக்குழாயை, மூச்சு விடமுடியாத அளவுக்கு சுருக்கி விடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை 'லாப்ளர் சிண்ட்ரோம்' என்று கூறுகிறோம்.வேறு நோய்களுக்கு சாப்பிடும் மாத்திரைகளின் ஒவ்வாமையாலும் மூச்சுக்குழாய் திடீரென சுருங்கி, அதிக நீர் சுரந்து இருமல், மூச்சு இளைப்பை உருவாக்கும். இதனை, 'டிரக் இன்டியூஸ்
ஆஸ்துமா' என்கிறோம். தீவிரமான மன அழுத்தமும் ஆஸ்துமாவை உருவாக்கும். அதனை 'சைக்கோஜெனிக்' ஆஸ்துமா என்கிறோம்.
சிலர் எல்லை மீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வர். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள்
உருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும். இதனை 'உடற்பயிற்சியால் உருவாகும்ஆஸ்துமா' என்கிறோம்.
'ஆஸ்பர்சில்லோசிஸ்' என்ற காளான் பூச்சிகளால் ரத்தத்தில் 'ஈஸ்னோபில்' எண்ணிக்கைஅதிகரிக்கும். அதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி ஜூரம், மூச்சு இழுப்பு, இருமல், மார்பு வலி, எடை குறைவு, நிமோனியா போன்றவை எல்லாம் தோன்றும். இதனை 'அக்யூட் ஈஸ்னோபீலிக் சிண்ட்ரோம்' என்கிறோம்.
இவர்களுக்கு சளியில் ரத்தம் இருக்கும். அதனால் காசநோய் என்று நினைத்து விடக்கூடாது.


கட்டுப்பாட்டில் வைப்பது எப்படிசுற்றுப்புறத்தில் உள்ள மாசினை அப்புறப்படுத்துங்கள். யாரையும் வீட்டினுள் புகைப்பிடிக்க அனு
மதிக்கக் கூடாது. ஆஸ்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்து
களாகும். அதனை அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அலர்ஜி ஏற்பட துாசி, புகை, பெயின்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவர்த்தி சுருள்கள், பருவகால மாற்றங்கள், மனச்சோர்வு, மன அழுத்தம், குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள்
போன்றவை காரணமாக உள்ளன.ஆஸ்துமா தாக்குதல்எப்போது வரும், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மூச்சு விடுவதில் சிரமம், இளைப்பு, மூச்சை வெளி விடும்போது நெஞ்சில் கபம்
கட்டுதல் போன்றவை ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளாகும். இதன் முதல் தாக்குதல் நுரையீரல் தொற்றுடன் துவங்கலாம்.சாதாரண ஜலதோஷம் கூடஆஸ்துமாவை துாண்டும். அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான
வாய்ப்புகள் அதிகம்.ஐம்பது நாடுகளில் உள்ள, ஐந்து லட்சம் குழந்தைகளின் உணவு மற்றும் உடல் நலம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்தபோது, ஒவ்வாமையால் ஏற்படும்
ஆஸ்துமாவுக்கு மோசமான உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. துரித உணவுகளை கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் உடையவர்களுக்கு ஆஸ்துமா
மட்டுமின்றி, கண் அரிப்பு, கண்ணில் இருந்து நீர் வழிதல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

தீர்வு

* மருத்துவர் ஆலோசனைப்படி 'இன்ஹெலர் தெரபி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், ஓட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* படுக்கை அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, போர்வை ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
* வீட்டில் துாசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மட் அணிய வேண்டும் அல்லது துணியை கட்டிக் கொள்ள வேண்டும்.
* தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் துாசு அதிகம் இருந்தால் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும்.
*சிகரெட் பிடிக்க கூடாது. சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.
*வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை தனி அறையில்
வைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம். ஏற்கனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நகரமயமாக்கலின் காரணமாக நோய்கள் பல்கிப் பெருகி
உள்ளன. இதில் ஆஸ்துமா முக்கிய இடத்தில் உள்ளது. மூச்சுவிட விடாமல், துாக்கத்தை கெடுக்கும் ஆஸ்துமா குறித்து விழிப்புடன் செயல்பட்டால், அது இருந்த சுவடே தெரியாமல் போக்கி விடலாம்.
டாக்டர் எம். பழனியப்பன் நுரையீரல் சிகிச்சை நிபுணர் மதுரை. 94425 24147

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X