திருப்பூர், திருப்பூரில், 'பேஸ்புக்' அறிமுகத்தால், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, ஏப்., 27ல் மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். 29ம் தேதி இரவு, சிறுமி வீடு திரும்பினாள். போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்:
சில மாதங்களுக்கு முன், 'பேஸ்புக்'கில், திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான, 21 வயது வாலிபனுடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி
சென்றுள்ளான்.
புதுச்சேரி லாட்ஜில் தங்குவதற்கு, சிறுமியின், 1 சவரன் செயினை அடகு வைத்து, 19 ஆயிரம் பெற்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை
செய்துள்ளான்.
மறுநாள், அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்.
அழுது கொண்டிருந்த சிறுமியிடம், 'உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்' என தெரிவித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், 27, என்பவனும், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளான்.
அவனிடம் இருந்து தப்பிய சிறுமி, ஒருவழியாக திருப்பூர் வந்தாள். திருப்பூரில் பதுங்கியிருந்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பிரபாகரனை பிடிக்க, போலீசார், புதுச்சேரி விரைந்துள்ளனர்.