மிஞ்சும் சொற்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

மிஞ்சும் சொற்கள்

Added : மே 03, 2017 | கருத்துகள் (1)
மிஞ்சும் சொற்கள் Ramanujar Download

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்து கொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர்.

கடந்த நூற்றியெட்டு தினங்க ளாக இந்தத் தொடரின் மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கி புரிந்து
கொள்ள ஒரு சிறு முயற்சி செய்தோம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தனது இருப்புக்கும் தேவைக்கும் நியாயம் உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வ
மானது. பெரியோரைப் பணிவோம்.
அது பெருமானைப் பணிவதினும் பெரிது.
பின்பழகிய பெருமாள் ஜீயர் (இவர் பராசர பட்டரின் சீடர் நஞ்சீயர் வழி வந்த நம்பிள்ளையின் சீடர்) இயற்றிய 'ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம்' என்ற நுாலே வைணவ ஆசாரியர்களைப் பற்றிப் பேசுகிற மூத்த பிரதி. ராமானுஜரின் காலத்துக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பு வட மொழியில் எழுதப்பட்ட 'பிரபன்னாமிருதம்' என்றொரு நூல் இருக்கிறது. இதன் மணிப்பிரவாள மொழிபெயர்ப்பு இன்றும் கிடைக்கிறது. மற்றொரு வடமொழி நூலான 'திவ்யசூரி சரிதம்', வடிவழகிய நம்பி தாசர் இயற்றிய 'எம்பெருமானார் வைபவம்', பிள்ளை உலகாசிரியரின் 'ஸ்ரீ ராமானுஜர் திவ்ய சரிதை' போன்ற புராதனமான பிரதிகளின் அடிப்
படையில் பின்னாளில் பலபேர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் குமாரவாடி ராமானுஜாசார்யார் எழுதிய 'பகவத் ராமானுஜர்' என்ற நூல், இந்தத் தலைமுறை வாசகர்களுக்காகவே எழுதப்பட்ட மிகச்
சுருக்கமான, மிக மிக எளிமையான, நேரடியான உரைநடை நுால். இவை தவிர, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசாரியார் பல பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கும் 'கோயிலொழுகு' என்னும் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வரலாற்று ஆவணத் தொகுப்பிலும் ராமானுஜரைக் குறித்த தகவல்கள் நிறைய உள்ளன.
மேற்படி ஆசிரியர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இம்மூலப் பிரதிகள் இல்லாமல் இந்தப் 'பொலிக பொலிக' இல்லை.
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தில் சோழர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ராமானுஜர், ராஜேந்திர சோழன் காலத்தில் பிறந்து, நூற்று இருபது வருடங்கள் வாழ்ந்தவர். தம் காலத்தில் எட்டு மன்னர்கள் மாறியதைக் கண்டவர். நூற்று இருபது ஆண்டுகள் என்பது கணிசமான காலப்பரப்பு. நடந்த ஒவ்
வொரு சம்பவத்துக்குமான துல்லியமான காலக் கணக்கைக் கண்டடைவது பெரும் சிக்கலாக இருந்தது. 'ஆறாயிரப்படி' முதலான நுால்களுக்கு ராமானுஜரின் சிறப்புகளைச் சொல்வதே நோக்கம். அதனாலேயே இந்நூல்கள் விவரிக்கும் சில குறிப்பிட்ட சம்பவங்களை சரித்திரத்தில் பொருத்திப் பார்த்தால் குழப்பம் வரும்.
உதாரணமாக, ராமானுஜரின் டெல்லி பயணம். ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும் 1101- - 1104 காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்டது விஜய
பாலா என்கிற மன்னன். சரித்திரம் பொதுவாக ஒப்புக்கொண்ட தகவல் இது. 1105ல் மகி பாலா என்கிற மன்னன் பட்டத்துக்கு வருகிறான். இடைப்பட்ட காலத்தில் (இது மிகச் சிறியதாகவே இருக்க வேண்டும்) யாராவது முகம்மதிய மன்னன் வந்து போயிருக்கலாம். அல்லது வந்தவன் மதமாற்றம் கண்டிருக்கலாம். ஒருவேளை வடக்கே ராமானுஜர் வேறெங்காவதும் சென்றிருக்கக்கூடும். டெல்லி என்ற பொதுவான அடையாளம் யாராலேனும் முன்மொழியப்பட்டு அதுவே பின்பற்றப்பட்டிருக்கலாம்.
கடைசிச் சாத்தியம், மேற்படி விஜய பாலாவின் காலத்திலேயே சுற்றுவட்டாரத்தில் யாராவது தளபதி அல்லது குறுநில மன்னன் முஸ்லிமாக இருந்திருக்கலாம்.
சரித்திரப்படி அந்தக் காலக்கட்டத்தில் அங்கே சுல்தானியர் ஆட்சி இல்லை.
அப்படி இருக்க, ராமானுஜரின் வரலாற்றில் வருகிற அந்த சுல்தான் யார்? அவனது மகள் யார்? திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையின்மீது மாளாக்காதல் கொண்டு அவனோடு இரண்டறக் கலந்த அவள் பெயர்தான் என்ன? கிட்டத்தட்ட ஆண்டாளுக்குச் சமமான ஆகிருதியாக விளங்கும் அந்தப் பெண்ணைப் பற்றிய மேலதிக விவரங்கள் நமக்குக் கிடைப்பதில்லை.
இதைப் போலவே இன்னொரு சம்பவம். திருவரங்கம் கோயில் ஊழியர்கள் சிலர் திட்டமிட்டு ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததும், அவர் அம்
முயற்சியில் இருந்து தப்பியது பற்றியும் பார்த்தோம். அதற்குப் பிறகும் ஒரு சில சம்பவங்கள் அதே போல நடந்ததை அடுத்து, ராமானுஜர் சில காலம் திருவரங்
கத்தை விட்டு விலகி திருவெள்ளறையில் வசித்ததாக கிருஷ்ணமாசாரியார் தொகுத்த 'கோயிலொழுகு' குறிப்பிடுகிறது. கோயிலொழுகு தவிர வேறெந்தப் பிரதியிலும் இக்குறிப்பு இல்லை.
வாசகர்கள் இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். ராமானுஜரின் சரிதத்தை எழுதிய அத்தனை ஆசிரியர்களும் தவறாமல் குறிப்பிட்டிருக்கும் 'கிருமி கண்ட சோழன்' என்ற பெயரை நான் இத்தொடரில் பயன்படுத்தவில்லை. அந்தக் காலக்கட்டத்து மன்னன் குலோத்துங்கனுக்கு அப்பெயர் இல்லை என்பதே அதன் காரணம். வரலாற்று ஆய்வாளர் நீலகண்ட சாஸ்திரியின் கணிப்பின்படி 'கிருமி கண்ட சோழன்' என்ற பெயர் இடைக்கால சோழர்களின் கடைசி மன்னர்களான ஆதி ராஜேந்திரன் அல்லது வீர ராஜேந்திரனுடையதாக இருக்க வேண்டும் (கி.பி. 1063 - 1070). ஆனால் தில்லை கோவிந்தராஜ பெருமாளைக் கடலில் வீசியவன் இரண்டாம் குலோத்துங்கன். அவனது காலம்தான் ராமானுஜரின் சரித்திரத்தில் குறிப்பிடப்படுகிறது என்றால் அவன் கிருமி கண்ட சோழன் அல்லன்.
இன்னும் தீவிரமான, தெளிவான ஆய்வுகள் தேவைப்படும் இயல் இது. ஆனால், இந்தத் தொடரின் நோக்கம், ராமானுஜரின் வாழ்வின் ஊடாக அவரது செயல்பாடு
களையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதே என்பதால் சரித்திரப் பொருத்தங்களைக் காட்டிலும் சம்பவங்களின் தேர்வில் அதிக கவனம் செலுத்தினேன். வாசிப்பு வசதிக்காக ஒரு நாவலின் மொழியை இதில் கையாண்டேன். அதனாலேயே தேவைப்பட்ட இடங்களில் காலத்தை முன்னும் பின்னும் புரட்டிப் போட்டு எழுதினேன்.
இத்தொடருக்கான ஆய்வில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர்கள் இரண்டு பேர். வைணவ அறிஞரும் என் சகோதரருமான சௌரி வரதராஜன் மற்றும் ஸ்ரீரங்கம் கேசவன் ஸ்ரீநிவாசன். இவ்விருவர் துணையின்றி இது சாத்தியமாகியிருக்காது. ராமானுஜரை இந்தத் தலைமுறை வாசகர்களுக்கு விரிவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படியொரு தொடரை எழுதும் வாய்ப்பளித்த தினமலர் நாளிதழுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

writerpara@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X