பாரம்பரிய விளையாட்டுகளை கற்று தருவோம்!| Dinamalar

பாரம்பரிய விளையாட்டுகளை கற்று தருவோம்!

Added : மே 05, 2017
 பாரம்பரிய விளையாட்டுகளை கற்று தருவோம்!

கண்ணாமூச்சி ரே… ரே…, எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணீர் ஊத்தி, சில்லுக் கோடு, கர கர வண்டி காமாட்சி வண்டி, தட்டாமாலை, தட்டாங்கல்,உருண்டை திரண்டை, கிச்சு கிச்சு தாம்பாளம்,குலை குலையாய் முந்திரிக்கா

-இவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராம மந்தைகளிலும் நகர வீதிகளிலும் சிறுவர் சிறுமியர்கள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது நம் காதுகள் வழியே உள்ளத்தைகிளறிய சப்தங்கள். விளையாட்டுக்கள் மட்டுமல்ல நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு பகுத்து வழங்கியுள்ள வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

பாரம்பரிய விளையாட்டுகள் : தமிழகத்தின் பாரம்பரியதிருவிழாக்கள், பண்டிகைகள், சடங்கு சம்பிரதாயங்கள், உணவு இவற்றோடு மறக்கபட்ட நமது பாரம்பரிய விளையாட்டைப்
பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொழுது போக்கு என்றால் 'டிவி',
விளையாட்டு என்றால் கிரிக்கெட், எனச் சொல்லும் அளவிற்கு இன்றைய சிறுவர்களின் உலகம் இருக்கிறது. வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க பெரியோர்களுக்கு நேரமில்லை. உடலுக்கு வலுவூட்டல், வளைந்து கொடுக்கும் தன்மை, தைரியம், விரைவாக செயலாற்றல், மனசக்தி, அறிவுத்திறன், மேம்பாடு, மனக்கூர்மை, படைப்பாற்றல், நினைவாற்றல் மேம்பாடு உட்பட உடல் மனப்பயிற்சியின் எல்லா அம்சங்
களையும் கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.

சிறப்புகள் : ஒருவர் விளையாட்டில் ஈடுபடும் போது தான் அவரின் பொறுமை, நேர்மை, ஒழுக்கம், கீழ்படிதல் என அனைத்து நற்குணங்களையும் கண்டறிய இயலும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள். ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டு களில் மட்டும் தான் நடுவர், விளையாடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகிய அனைவரிடமும் தாக்கங்கள் ஏற்படும். மேற்கத்திய நாடுகளின் விளையாட்டுகளில் காணப்படாத பல அம்சங்களை பாரம்பரிய விளையாட்டுகளில் காணலாம். குறிப்பாக தாய், தந்தை,பெரியோர்கள், உறவுகள், நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமைந்துள்ளது. தமிழனின் பாரம்பரிய விளை
யாட்டுகள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், கூடி வாழும் இயல்பை வளர்த்துக் கொள்ளவும், வெற்றி தோல்விகளைச் சமமாக நினைக்கவும், கூடி விளையாட வேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர்.

பப்பு கஞ்சி : “அனைவரும் அமுதக்குழந்தைகள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். அந்த அமுதக் குழந்தைக்கு அமுது ஊட்டும் போதே ஒரு விளையாட்டைக் கண்டறிந்தது நமது சிறப்பு. “அ” என்னும் உயிரெழுத்தைகுழந்தைக்கு கற்றுத்தரும் அன்னை தனது குழந்தைக்கு கற்றுத் தரும் முதல் விளையாட்டு பப்பு கஞ்சி. இது 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு. குழந்தை யின் பிஞ்சு விரல்களை தாய் பிடித்து கொண்டு இது சோறு, இது பருப்பு, இது காய்கறி, இது ரசம், இது அப்பளம் என வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை முதலில் அறிமுகப்
படுத்தி பின் அனைத்தையும் நன்றாக பிசைந்து இது அப்பாவுக்கு, இது அக்காவுக்கு, இது தாத்தாவுக்கு, இது மாமாவுக்கு என அனைத்து உறவுகளுக்கும் கொடுத்து இறுதியாக பாப்பாவுக்கு என விளையாட்டின் வழியே உணவையும், உணர்வையும் குழந்தைக்கு தாய் ஊட்டுவதே இந்த விளையாட்டு.பசித்த மற்றவர்களுக்கு உணவளித்த பின்பே நாம் சாப்பிட வேண்டும் என்றும், இருக்கின்ற உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற உயரிய எண்ணங்களை அந்த மழலை மனதில் முதலில் பதியமிடும் விளையாட்டு இது.

பூப்பறிக்க வருகிறோம் : 5 முதல் 10 வரையுள்ளகுழந்தைகள் இரண்டு அணிகளாக பிரிந்து தெரு அல்லது திறந்த வெளிப் பகுதிகளில் விளையாடும் விளையாட்டு பூப்பறிக்க வருகிறோம். தரையின் நடுவே ஒரு கோடு வரைந்த பின் ஆட்டம் தொடங்கும்.

'பூப்பறிக்க வருகிறோம் …
பூப்பறிக்க வருகிறோம்..
யாரை அனுப்ப போறீங்க..
யாரை அனுப்ப போறீங்க.
ராணியை அனுப்ப போகிறோம்..
ராணியை அனுப்ப போகிறோம்.
எந்த பூ வேண்டும்.. எந்த பூ வேண்டும்.
மல்லிகைப் பூ வேண்டும்..
மல்லிகைப் பூ வேண்டும்'.
என்று பாடி முடித்தவுடன் இரண்டு அணிகளிலிருந்தும் ஒருவர் கோட்டின் அருகே வந்து ஒருவரையொருவர் தன் அணி பக்கம் இழுக்க வேண்டும், யார் கோட்டைத் தாண்டு
கிறாறோ அவர் அவுட். இது குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக விளையாடும் விளையாட்டு.
குழந்தைகளை பூக்களாக அறிமுகப்படுத்தும் இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகளின் பதில் சொல்லும் திறன், பாடும் திறன், உடல் வலு, எண்களைப் பற்றிய அறிமுகம் மேம்படுகிறது.

திருடன்-போலீஸ் : கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன் போலீஸ். 5 குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து
விளையாடும் விளையாட்டு. சிறு துண்டு காகிதத்தை எடுத்து சதுரமாக வெட்டி அதில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என எழுதி மடித்து தரையில் போட்ட வுடன் ஆளுக்கொரு சீட்டை எடுப்பர். பின்பு போலீஸ் யார் என்பர் அந்த சீட்டு உள்ளவர் நான் தான் போலீஸ் என்றவுடன் மற்ற நால்வரும் அமைதியாக இருப்பார்கள். போலீஸ் சீட்டு வைத்துஉள்ளவர் திருடன் சீட்டு வைத்து உள்ளவரை கண்டுபிடிக்க வேண்டும். திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றிப் புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபானைகளைக் கையாள்வார்; அதை கூர்ந்து நோக்கி நால்வரில் திருடனைக் கண்டறிய வேண்டும்.
ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக்கணிக்கின்ற சவாலான உளவியல் பயிற்சியைக் கொண்டது இந்த திருடன் போலீஸ் விளையாட்டு. இவ்விளையாட்டின் மூலம் இன்ப துன்பங்கள், கள்ள கபடம் எனப் பல்வேறு மனநிலைகளையும் இளம் பருவத்திலேயே குழந்தைகள் அறிந்து கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டுஉள்ளதாக அறிய முடியும்.

கண்ணாமூச்சி : குழு உணர்வையும் நட்பையும் வளர்க்கும் விதமாக குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் மிகச் சிறந்தது கண்ணாமூச்சி. ஒரு குழுவாக விளையாடும் குழந்தைகள் தங்கள் குழுவில் மூத்த வயதுடையகுழந்தையை தங்களின் தலைவராக தேர்வு செய்கின்றனர். பின் ஆட்டம் தொடங்குகிறது. தலைவர் குழுவிலிருந்து ஒரு குழந்தையை தேர்வு செய்கிறார் அவரை பட்டவர் என அழைக்கின்றனர். பின் தலைவர் அக்குழந்தையின் கண்களை மூடிக் கொள்வர் உடனே மற்ற குழந்தைகள் அனைவரும் ஒளிந்து கொள்வர். அப்போது தலைவர்

கண்ணாமூச்சி ரே ரே
காரே முட்டே ரே ரே
ஒரு முட்டையை தின்றுபுட்டு
ஊளை முட்டையைக் கொண்டு வா!

என்று பாடி அக்குழந்தையின்கண்களைத் திறந்து விடுவார். பின்பு அந்த பட்டவர் ஒளிந்திருக்கும் மற்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பட்ட வராக வரும் அக்குழந்தையின் கண்களில் படாமல் பதுங்கிச் சென்று தலைவரைத் தொடும் குழந்தைகள் பழமாவார்கள்.
இந்த விளையாட்டு குழு உணர்வை வலியுறுத்துவதோடு, எதிரியின் கண்களில் அகப்படாமல் பதுங்கி செல்ல வேண்டும் என்ற ராணுவ உத்தியை சொல்லித் தரும் விளையாட்டாக உள்ளது
கண்ணாமூச்சி.

பிளாஸ்டிக் பூக்களல்ல : இன்றைய குழந்தைகள் பிளாஸ்டிக் பூக்களல்ல. அவர்கள் பட்டாம்பூச்சிகள்; வண்ண மலர்களைச் (பெரியோர்களை) சுற்றியே அவர்கள் உலகம். அந்த வண்ணப் பட்டாம்பூச்சிகளின் எதிர்கால வாழ்வு சிறக்க, தேனை வழங்கும் மலர்களாகபெரியோர்கள் (நாம்) இருப்போம்.நற்குணங்களை விதைக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.

-முனைவர். சி. செல்லப்பாண்டியன்
உதவிப் பேராசிரியர்
வரலாற்றுத் துறை
தேவாங்கர் கலைக் கல்லுாரி
அருப்புக்கோட்டை. 78108 41550

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X