''பழனிசாமி அணியினர் நாடகமாடுகின்றனர். இந்த ஓரங்க நாடகத்தில் இருந்து விடுதலை பெற, சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, வெளியேற வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட, பன்னீர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தமிழக அரசு உறக்க நிலையில் உள்ளது. அதற்கு வழிகாட்ட, இந்த பயணத்தை துவக்கி உள்ளோம். ஜெ., காண்பித்த லட்சிய பாதையில் இருந்து, தடம் மாறியவர்களை, மீண்டும் கொண்டு செல்ல, புனித பயணத்தை துவக்கி உள்ளோம்.தமிழக அரசு, இன்று பினாமி அரசாக
உள்ளது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாகக் கூறினர். அதற்கேற்ப, அவர்கள் செயல் இல்லை. இன்னமும் பொதுச்செயலராக சசிகலா, துணை பொதுச்செயலராக தினகரன் உள்ளனர். இந்த நிலை இருக்கும் போது, அவர்களை ஒதுக்கி வைத்தீர்கள் என்று எப்படி கூற முடியும். இதை நம்ப, மக்கள் ஏமாளிகள் அல்ல. இந்த ஓரங்க நாடகத்தில் இருந்து, முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்றால், சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து, கட்சியை விடுவிக்க வேண்டும். முதலில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., கூறிய பாதையில் வருவர் என, நம்பினோம். ஆனால், அதற்கான அறிகுறி தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் முதலில் வருமா;
சட்டசபை தேர்தல் வருமா என பட்டிமன்றம் நடக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும்,
எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைகளை, மக்களிடம் ஏந்திச் செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்றால், எப்படி நடப்போம் என வாக்குறுதி அளிப்போம். முதலில், சட்டசபை தேர்தல் வரவும்
வாய்ப்புள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
பேனர்கள் அகற்றம் : சென்னை அடுத்த கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பன்னீர்செல்வத்தை வரவேற்று, சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, கொட்டிவாக்கம் வரை, பன்னீர் அணியினர், 'டிஜிட்டல்' பேனர்கள் வைத்திருந்தனர்; கொடி, தோரணம் கட்டியிருந்தனர்.போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை, அனுமதி பெறவில்லை எனக் கூறி அகற்றினர். இதற்கு, பன்னீர் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நமது நிருபர் -