பாராட்டு பெற்று தந்த 'ஒத்தப்பனை' - அசத்தும் சங்கரபாண்டியன்| Dinamalar

பாராட்டு பெற்று தந்த 'ஒத்தப்பனை' - அசத்தும் சங்கரபாண்டியன்

Added : மே 10, 2017
பாராட்டு பெற்று தந்த 'ஒத்தப்பனை' - அசத்தும் சங்கரபாண்டியன்

'தெக்கத்திப் பொண்ணு' மூலம் தமிழகத்து பெண்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் பேசும் யதார்த்த மதுரை தமிழுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளம். 'களத்து வீடு' சீரியலில் கலக்கி எடுத்தவர் சிரிப்பு, அழுகை என நவரச நடிப்பைக் காட்டுவதிலும் கில்லி. எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனித்துவத்தைக் காட்டும் மதுரை நாயகர் 'போஸ்' சங்கரபாண்டியன் தினமலர் வாசகர்களுக்கு மனம் திறந்த போது...நான் பிறந்து வளர்ந்து, படித்தது மதுரையில் தான். என் பள்ளி தமிழ் ஆசிரியர் கணேசன். நாடகம், பேச்சு போட்டிகளில் என்னை பங்கேற்க வைத்தார்.பிறகு தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் படித்தேன். பெயருக்குத்தான் படிப்பு தவிர, மற்ற நேரங்களில் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவது தான் வேலை. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மற்றவர்களை போல் நடித்துக் காட்டுவேன். அப்ப கதை எழுதுவதும் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மூலம் நிறைய வீதி நாடகங்களில் நடித்திருக்கிறேன். பிறகு தியாகி விஸ்வநாததாஸ் கலைக்குழுவை துவங்கி, சமூக விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றினேன். படிப்பு முடிந்ததும் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். 'ஆடிய காலும்; பாடிய வாயும் சும்மா இருக்காது,' என்பார்களே, அதுபோல் அங்கு என்னால் வேலை செய்ய முடியவில்லை. மீண்டும் தாயகம் திரும்பி குறும்படம் எடுக்கலாம் என முடிவு எடுத்தேன். நண்பர்களுடன் 'ஒத்தப்பனை' குறும்படத்தை எடுத்தேன். சென்னையில் நடந்த குறும்படப் போட்டியில் 350 படங்களுக்கு மேல் பங்கேற்க என் படம் முதலிடம் வென்றது. சிறந்த நடிப்புக்கான விருதை இயக்குனர் பாரதிராஜாவிடம் பெற்றேன். பிறகு பாரதிராஜா அவர் இயக்கிய 'தெக்கத்திப் பொண்ணு' என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.என் கதாபாத்திரத்திற்கு போஸ் என்ற பெயரையும் அவர் தான் சூட்டினார். அந்த கதாபாத்திரம் என்னை கிராமங்களுக்கு கொண்டு சென்றது. எங்கு சென்றாலும் போஸ், போஸ் என என்னை சூழ்ந்து கொண்டு, அவர்கள் வீட்டுப் பிள்ளை போல் விசாரித்தனர். பின் 'களத்துவீடு' சீரியலில் ஹீரோவாக நடித்தேன். தற்போது 'சரவணன் மீனாட்சி' சீரியலில் சரவணனுக்கு அண்ணனாக சங்கரபாண்டியன் என்ற என் பெயரிலே நடிக்கிறேன். ஆனாலும் போஸ் என்ற பெயரே எனது அடையாளமாக மாறி விட்டது. யதார்த்த நடிப்பு தான் என் பிளஸ்பாயின்ட். அது தான் ரசிகர்களிடம் என்னை நெருக்கமாக கொண்டு சென்றது. தற்போது பிறமொழி சீரியல்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. மற்றபடி கதைகளுக்கு இங்கு பஞ்சமில்லை. ரசிகர்களின் ரசனை ஒன்று தான், அதனால் வித்தியாசமான சீரியல்கள், மண்சார்ந்த சீரியல்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விரைவில் சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளேன். அதில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது, என்றார்.வாழ்த்த: 80989 87039We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X