விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை!| Dinamalar

விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை!

Added : மே 10, 2017 | கருத்துகள் (1)
விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை!

வாழும் வரையிலும் நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. வாழ்ந்த பிறகு நம்மை யாரும் மறக்கக் கூடாது என்பதை மனிதர்கள் உணர வேண்டும். உலகில் அன்பு ஒன்றுதான் என்றுமே சிறந்தது. ஆனால் இன்றைய நாளில் மனிதர்கள் அன்பினை ஒதுக்கி வைத்துவிட்டு ஆணவத்தை அலங்காரமாக அணிந்து கொண்டு இன்னல்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றனர்.

'யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்'

என்று திருவள்ளுவர், 'துறவு' என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார். இதன் பொருள் நான், எனது எனும் ஆணவம் அழிப்பவன், தேவருக்கும் எட்டாத உயர்ந்த உலகை அடைவான் என்பதாம்.
ஆனால் இன்றைய அவசர யுகத்தில் சில மனிதர்கள், தான் சிறந்தவன்; மற்றவர்கள் யாரும் தனக்கு நிகரில்லை என்ற எண்ணத்தோடு வாழ்கிறார்கள். எல்லாவற்றிலும் பிடிவாத குணத்தோடும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும் இருக்கிறார்கள்.
இன்றைய மனிதர்களுக்கு குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும், நாள்தோறும் எத்தனையோ வேலை நெருக்கடிகளும், மனஅழுத்தங்களும் இருக்கின்றன. பரபரப்பான வாழ்க்கையில் பம்பரமாக சுழலும் மனிதர்களுக்கு அடுத்தவர்களின் கர்வமான போக்கு மனவருத்தத்தை
ஏற்படுத்துகிறது.நாம் அனைவரும் பள்ளி, கல்லுாரியில் படிக்கும் வரை நல்ல நண்பர்களாகவே வாழ்கிறோம். நண்பர்கள் அனைவரும் ஒத்த கருத்துடனும், ஒரே சிந்தனையுடனும் ஈருடல் ஓருயிரென வாழ்கிறோம். நண்பனின் துன்பத்தை நம் வெற்றியாகவும் நினைத்து மகிழ்ந்து அத்தனை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் பணிபுரியும் இடங்களில் மட்டும் மனிதர்களுக்கு இடையே முரண்பாடுகள் தென்படுகின்றன. ஒவ்வொருவரும் தான் மற்றவரை விட உயர்ந்தவர்கள் என்றும், அடுத்தவர்கள் நம்மைவிட சாதாரணமானவர்கள் என்றும் மதிப்பிட்டு அவர்கள் மனதை காயப்படுத்துகிறார்கள்.அன்பு செலுத்தி பாருங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் உறவினர்களைகூட தினந்தோறும் பார்ப்பதோ, பேசுவதோ கிடையாது. நாள் முழுவதும் பணிபுரியும் இடத்தில்தான் சக நண்பர்களுடன் பயணிக்கிறார்கள். அப்படிப்பட்ட இடம் இனிமையான சூழலுடன் இருந்தால், யுகம்கூட நாளாக ஓடிவிடும். கசப்பான சூழலுடன் இருந்தால் நாட்கள்கூட யுகமாக மாறிவிடும்.இளமை காலத்தில் வெகுளித்தனமாக இருப்பவர்கள்கூட, வயது கூடும்போது மன வியாதியை தேடிச்சென்று பெற்று திருப்தி அடைகின்றனர். வீடுகளில் மாமியார்கள் என்றால் மருமகளிடம் ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என்றோ, பணிபுரியும் இடத்தில் சீனியர்கள், ஜூனியரிடம் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதோ கட்டாயமில்லை. அன்பு செலுத்தி பாருங்கள், ஆதரவு காட்டி பாருங்கள். அதன் பலன் பல மடங்காக பெருகும்.மாமியாரை நம்பித்தானே மருமகள்களை ஒப்படைக்கின்றனர். உங்கள் மகள் அவளது கணவன் வீட்டில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, உங்கள் மருமகளை அப்படி நடத்துங்கள். அலுவலகத்தில் உங்களை உங்கள் மேலதிகாரி எப்படியெல்லாம் காயப்படுத்தினாரோ, அதை நீங்கள் அடுத்தவருக்கு செய்யாதீர்கள். உங்களுடன் பணிபுரிபவரை மற்றவர்களிடம் குறையாக சொல்லாதீர்கள். தனியாக இருக்கும்போது அவர்கள் குறைகளை அன்பாக சொல்லி திருத்துங்கள்.
மனிதர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது நல்லதுதான். ஆனால் அது தலைக்கனமாக மாறக்கூடாது. ஒரு செயலை தன்னால் செய்ய முடியும் என்று நினைப்பது ஆரோக்கியமான சிந்தனை, தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைப்பது ஆபத்தான சிந்தனை. அதுபோன்ற எண்ணங்களை ஒருபோதும் வளர்க்காதீர்கள்.

தாய், தந்தையே ஆசான்கள் : விட்டுக்கொடுப்பதையும், தியாகத்தையும் நம் அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டில், ஒரு மாம்பழம் மட்டுமே உண்ணக் கிடைத்தால் தனக்கு மாம்பழம் பிடிக்காது என்றுக்கூறி, அதை தன் பிள்ளைகளுக்கு
பிரித்துக்கொடுப்பவர்தான் அம்மா.மன்னிக்கும் மனப்பான்மையை நம் தந்தையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து இன்றுவரை நாம் செய்கின்ற தவறான
செயல்களைகூட மன்னிப்பது தந்தையின் குணம். அவரவர் பார்வையில் அவர்கள் செய்யும் செயல் சரியாகதான் தெரியும். ஆனால் உண்மை நிலையை உணரவேண்டும். 9 என்ற எண்ணை கீழிருந்து பார்த்தால் 9ஆக தெரியும், மேலிருந்து பார்த்தால் 6 ஆக தெரியும். நாம் பார்க்கும் விதத்தில்தான் எல்லாமே உள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே : உங்கள் கோபத்தை உங்கள் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு மவுனமாக சென்றுவிட்டால், உங்களை பார்த்து பயந்ததாக அர்த்தமில்லை. அவர் மீது தவறு உள்ளது என்றும் அர்த்தமில்லை. அவருக்கு உங்கள் அன்பு அவ்வளவு முக்கியமானது.
நீங்கள் அவருக்கு அவ்வளவு உயர்வானவர் என்று அர்த்தம். இன்று வரை படைப்பிலேயே சிறந்த படைப்பு மனிதன்தான். இந்த வாழ்க்கை என்பது வாழ்வதற்காகதான். அகந்தையை விட்டுவிடுங்கள்.ஒருநாள் ஒரு மனிதன் சாலையில் நடந்துசென்றபோது, பலத்த மழையால் பாதையெல்லாம் சகதியாக இருந்தது. அதில் நடந்ததால் அவனது செருப்பு பிய்ந்துவிட்டது. செருப்பை துாக்கி எறிய மனமின்றி, அதே தெருவில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு எடுத்துச்சென்றான். அதை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினான். உடனே நண்பன், 'அதற்கென, இது உன் வீடு மாதிரி. தாராளமாக வைத்துவிட்டு போ. நான் பார்த்துக்ெகாள்கிறேன்' என்றான்.
சில நாட்கள் கழித்து செருப்பு கொடுக்க நண்பரின் வீட்டிற்கு வந்தவரின் தந்தை இறந்துவிட்டதால் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது கடும் மழை பெய்தது. அதற்கு மேல் அப்பாவின் பிணத்தை துாக்கிச்செல்ல வழியில்லை. அந்த தெருவில் உள்ள அதே நண்பனின் வீட்டிற்கு சென்று 'மழை அதிகமாக பெய்வதால், சிறிது நேரம் என் அப்பாவின் பிணத்தை உன் வீட்டில் வைத்துக்கொள்கிறாயா' என கேட்க, நண்பன் கடும் கோபத்துடன் திட்டி கதவை மூடிவிட்டான்.

பெரிய சந்தோஷம் எது : ஒரு பிய்ந்த செருப்புக்கு இருக்கும் மரியாதை கூட மனிதனுக்கு கிடையாது. அதற்குள் நமக்கு ஏன் இந்த ஆணவமும், அகம்பாவமும் வேண்டும். உங்கள் உறவுகள் மேம்பட நானே சிறந்தவன் என்ற அகந்தையை விட்டு ஒழியுங்கள். நீங்கள் செய்தது தவறு என்று தெரிந்தால், மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். மற்றவர்கள் செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு வழங்க தயங்காதீர்கள்.எப்போதும் நம் அருகில் உள்ளவர்களது சின்னசின்ன சந்தோஷங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள். அவர்களது வெற்றிகளை மனம் விட்டு பாராட்டுங்கள். எங்கேயோ உள்ள ஒரு நபர் செய்த சாதனையை பாராட்டும் உங்கள் மனது, நாள் முழுவதும் உங்களுடனேயே வாழ்கிறவரை ஏன் பாராட்ட தயங்குகிறது. சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் என்பதை மறக்காதீர்கள். இந்த உலகில் அன்பும், நட்பும் நமக்கு அணிகலன்களாக இருந்தால் நம் வாழ்க்கை மேம்படும். தடுமாறும்போது தட்டிக்கொடுக்கவும், தடம் மாறும்போது தட்டிக்கேட்கவும்தான் நம்முடன் நண்பர்கள் இருக்கிறார்கள்.
மற்றவர்களிடம் இறுக்கத்தை காட்டுவதை விட்டுவிட்டு நெருக்கத்தை கூட்டிப் பாருங்கள். நினைத்தது எல்லாம் நிறைவேறும்!

எஸ். ராஜசேகரன்
முதுகலை ஆசிரியர்
வத்திராயிருப்பு.
94429 84083We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X